search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொத்தடிமையில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு புதுவாழ்வு- செங்கல் சூளை நடத்துகிறார்கள்
    X

    கொத்தடிமையில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு புதுவாழ்வு- செங்கல் சூளை நடத்துகிறார்கள்

    • செங்கல் சூளையை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
    • கொத்தடிமையில் இருந்து மீட்கப்பட்ட நாங்கள் புதிய தொழில் தொடங்கி உள்ளோம்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் செங்கல்சூளை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொத்தடிமையாக பணிபுரிந்து மீட்கப்பட்டவர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்களின் ஒத்துழைப்புடன் அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் கடந்த ஆண்டு திருத்தணி அருகே வீரகநல்லூர் பகுதியில் கொத்தடிமை முறையில் இருந்து மீட்கப்பட்ட 80 குடும்பங்களைச் சேர்ந்த 300 பேர் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக, சிறகுகள் செங்கல் சூளை ஆரம்பிக்கப்பட்டது.

    அது தற்போது வெற்றிகரமாக நடந்து வருகிறது. இதனால் அங்கு வேலைபார்த்து வருபவர்களின் வாழ்க்கை நிலை உயர்ந்து வருகிறது.

    இந்த நிலையில் திருவள்ளூர் வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும், கொத்தடிமை தொழில் முறையில் இருந்து மீட்கப்பட்ட 40 குடும்பங்கள் பயன்பெறும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக "சிறகுகள் செங்கல் சூளை-2" கடம்பத்தூர் ஒன்றியம் பிஞ்சிவாக்கம் பகுதியில் தொடங்கப்பட்டு உள்ளது.

    இந்த செங்கல் சூளையை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    இதில் 54 மீட்டெடுக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களுக்கு ரூ.4.5 லட்சம் மதிப்பீட்டில் 27 மீன் பிடிக்கும் வலைகள் மற்றும் செங்கல் சூளைக்கு தேவையான பொருட்கள், தலா ரூ.10 ஆயிரம் காசோலைகளை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் பயிற்சி கலெக்டர் கேத்ரின் சரண்யா, மகளிர் திட்ட அலுவலர் மலர்விழி, வளர்ச்சி அலுவலர் லதா, ஒன்றிய குழு தலைவர் சுஜாதா சுதாகர், ஊராட்சி மன்ற தலைவர் உமா மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இதுதொடர்பாக தொழிலாளர்கள் கூறும்போது, 'கொத்தடிமையில் இருந்து மீட்கப்பட்ட நாங்கள் புதிய தொழில் தொடங்கி உள்ளோம். இதற்கு உதவிய மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி. நாங்கள் இந்த செங்கல் சூளையை சிறப்பாக நடத்தி எங்களது வாழ்வில் முன்னேறுவோம்' என்றனர்.

    Next Story
    ×