search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student harassment"

    பழைய வண்ணாரப்பேட்டையில் ஜவுளிக்கடையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர் கைது செய்யப்பட்டார்.

    ராயபுரம்:

    பழைய வண்ணாரப் பேட்டை எம்.சி. ரோட்டில் ரெடிமேட் ஜவுளிக்கடை உள்ளது. இங்கு தண்டையார்பேட்டையை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளி விடுமுறையையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்தார்.

    அவரிடம் கடை ஊழியரான கொருக்குப் பேட்டை கண்ணன் தெருவை சேர்ந்த செல்லத்துரை (44). அடிக்கடி பேசி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை வேலை முடிந்ததும் மாணவி புறப்பட தயார் ஆனார். அப்போது ஊழியர் செல்லத்துரை கடையின் குடோனில் இருக்கும் துணிகளை எடுத்து தந்து விட்டு செல்லுமாறு கூறினார்.

    இதையடுத்து மாணவி, குடோனுக்கு சென்றார். அப்போது பின் தொடர்ந்து வந்த செல்லதுரை, திடீரென மாணவியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அலறினார். சத்தம் கேட்டு வந்த கடை ஊழியர்கள் செல்லத்துரையை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவரை பழைய வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். செல்லத் துரையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே 10-ம் வகுப்பு மாணவியிடம் தவறாக நடந்ததாக கூறி பள்ளியில் ஆசிரியரை தாக்கி சிறைவைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தில் அரசு உயர் நிலைபள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சிறுமதுரை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இன்னும் சில நாட்களில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடைபெற இருப்பதால் இந்த பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு தற்போது சிறப்பு வகுப்புகள் நடந்து வருகிறது.

    நேற்று மாலை மாணவ- மாணவிகளுக்கு மாலைநேர சிறப்பு வகுப்பு நடந்தது. அப்போது மாணவி ஒருவரிடம் ஆங்கில ஆசிரியர் கிருஷ்ணன் (வயது 35) பேசி கொண்டிருந்தார்.

    இந்த நேரத்தில் சிறுமதுரை பகுதியை சேர்ந்த சில வாலிபர்கள் அந்த பள்ளிக்குள் புகுந்தனர். மாணவியிடம் ஆசிரியர் தவறாக நடக்க முயன்றதாக கூறி அந்த வாலிபர்கள் ஆசிரியரை சரமாரியாக தாக்கினர்.

    பின்னர் அந்த ஆசிரியரை பள்ளியின் ஒரு அறையில் வைத்து பூட்டி சிறைவைத்தனர். இது பற்றி தகவல் அறிந்த ஊர் பொதுமக்கள் பள்ளி முன்பு திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த ஆசிரியர் கிருஷ்ணனை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்ல முயன்றனர். அவர்களை வெளியில் செல்ல விடாமல் பள்ளி முன்பு திரண்டு நின்ற பொதுமக்கள் பள்ளியின் நுழைவு வாசலை பூட்டினர். பின்னர் போலீஸ் வாகனங்களையும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் மற்றும் பொது மக்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அவரிடம் போராட்டக்காரர்கள் கூறும்போது, பள்ளியில் இருந்து ஆசிரியரை கைது செய்து விலங்கு மாட்டிதான் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்ல வேண்டும். வேனில் ஏற்றி செல்லக்கூடாது என்றனர்.

    இந்த பிரச்சனை தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் செய்யுங்கள். அதன் பின்னர் இந்த ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது ஆசிரியரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்ல வேண்டும். வழி விடுங்கள். உங்களது போராட்டத்தையும் கைவிடுங்கள் என்றார்.

    இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் தங்களது போராட்டத்தை இரவு 11 மணிக்கு கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதனை தொடர்ந்து ஆசிரியரை போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் அந்த மாணவியின் தந்தை திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் அந்த மாணவியை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
    ஊத்துக்கோட்டை அருகே உறவினர் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் விவசாயிக்கு ஆயுள் தண்டனை வழங்கி திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள குருவாயல் கிராமத்தை சேர்ந்தவர் மாணாவாரி ஆனந்தன் (46). விவசாயி. இவர் அதே பகுதியை சேர்ந்த உறவினர் மகளான 4-ம் வகுப்பு மாணவிக்கு கடந்த 10.4.2017-ம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணாவாரி ஆனந்தனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருவள்ளூர் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி பரணீதரன் தீர்ப்பு அளித்தார். அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் மாணாவாரி ஆனந்தனுக்கு ஆயுள் தண்டனையும், மேலும் 1ஆண்டு காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதத் தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரித்தார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில் அரசு வக்கீல் தனலட்சுமி வாதாடினார்.

    கோர்ட்டு தீர்ப்பினை தொடர்ந்து ஊத்துக்கோட்டை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா குற்றவாளி மாணாவாரி ஆனந்தனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தார்.
    விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நென்மேனியைச் சேர்ந்த 9 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

    அதே பகுதியைச் சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 37), கூலி தொழிலாளி. இவர் சைகை மூலமாக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து சாத்தூர் அனைத்து மகளிர் போலீசில் மாணவியின் தாயார் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து ராஜபாண்டி கைது செய்யப்பட்டார்.
    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாலியல் புகாரில் சிக்கிய தலைமை பேராசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். #StudentHarassment #ProfessorDismissed
    நெல்லை:

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உள்ள தொடர்பியல் துறை தலைவராக பேராசிரியர் கோவிந்த ராஜ் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் மீது ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவி ஒருவர் பாலியல் புகார் கூறினார்.

    இது தொடர்பாக ஓய்வு பெற்ற டி.ஜி.பி., ஓய்வு பெற்ற பல்கலைக்கழக பதிவாளர், மூத்த பேராசிரியர்கள் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்தினார்கள். இதில் ஆராய்ச்சி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்கள் நடந்தது தெரிய வந்தது.

    இது தொடர்பாக அந்த குழுவினர் பல்கலைக்கழகத்திற்கு அறிக்கை தாக்கல் செய்தனர். இதுபோல பல்கலைக்கழக ஆங்கில துறையில் பணிபுரிந்த துணை பேராசிரியர்கள் பூவலிங்கம், ரமேஷ், உதவி பேராசிரியர் ஜெனிதா ஆகிய 3 பேர்களும் வகுப்புகளுக்கு ஒழுங்காக சென்று பாடம் நடத்தாமலும், துறை தலைவரின் கூட்டங்களில் பங்கேற்காமல் இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

    இது தொடர்பாகவும் ஓய்வு பெற்ற டி.ஜி.பி., ஓய்வு பெற்ற பதிவாளர் மற்றும் மூத்த பேராசிரியர்கள் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்தினார்கள். இதில் 3 பேராசிரியர்களும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதுகுறித்தும் ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் பல்கலைக்கழகத்திற்கு அறிக்கை தாக்கல் செய்தனர்.

    இந்த நிலையில் நேற்று நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக்குழு கூட்டம் துணைவேந்தர் பாஸ்கர் தலைமையில் நடந்தது. அப்போது ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் சமர்ப்பித்த அறிக்கைகளும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

    பூவலிங்கம், ஜெனிதா, ரமேஷ்

    இதில் பாலியல் புகார் கூறப்பட்ட தலைமை பேராசிரியர் கோவிந்தராஜுக்கு கட்டாய ஓய்வு கொடுத்து பணி நீக்கம் செய்வது என்றும், மற்ற 3 பேராசிரியர்களையும் பணிநீக்கம் செய்வது என்றும் ஆட்சிமன்ற குழுவில் முடிவு செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர், பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ் பாபு ஆகியோர், 4 பேராசிரியர்களையும் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டனர். பல்கலைக்கழகத்தில் 4 பேராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது கல்லூரி பேராசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #StudentHarassment #ProfessorDismissed
    திருச்சியில் இன்று 2-ம் வகுப்பு மாணவிக்கு அ.தி.மு.க. செயலாளர் பாலியல் தொந்தரவு அளித்ததை கண்டித்து தனியார் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருச்சி:

    திருச்சி ஆழ்வார்தோப்பு இதாயத் நகரை சேர்ந்தவர் ரசூல் முகமது. தனியார் இன்சூரன்சு நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது 7 வயது மகள் தென்னூர் காயிதே மில்லத் நகரில் உள்ள தனியார் தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இதற்கிடையே கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு மாணவி படிக்கும் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது.

    இந்த பள்ளியின் செயலாளரும், அ.தி.மு.க. வட்ட செயலாளருமான செக்கடி சலீம் என்பவர், அந்த மாணவியை தனது மடியில் அமர வைத்துள்ளார். அப்போது அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. உடனே அவரிடம் இருந்து விடுபட்ட மாணவி பயந்து போய் யாரிடமும் இதுபற்றி கூறவில்லை.

    இந்த நிலையில் நேற்று அந்த மாணவி பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தின் போது நடந்த பாலியல் தொந்தரவு குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த பெற்றோர் அப்பகுதி பொது மக்களை திரட்டிக் கொண்டு தனியார் பள்ளியை இன்று காலை திடீரென முற்றுகையிட்டனர்.

    மேலும் 2-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த அ.தி.மு.க. பிரமுகரை கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்த தகவல் அறிந்ததும் ஸ்ரீரங்கம் உதவி போலீஸ் கமி‌ஷனர் ராமச்சந்திரன், தில்லை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே பாலியல் புகார் கூறப்பட்ட அ.தி.மு.க. வட்ட செயலாளர் செக்கடி சலீமை தில்லை நகர் போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொதுமக்கள் நடத்திய இந்த திடீர் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    காட்பாடி 7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    காட்பாடி அருகேயுள்ள குழந்தைகள் இல்லத்தில் சமூக பணியாளராக பணிபுரிந்து வரும் ரஞ்சிதா, விருதம்பட்டு போலீசில் புகார் மனு அளித்தார்.

    அதில், ‘‘எங்களது குழந்தைகள் இல்லத்தில் வாலாஜா தாலுகா ஒழுகூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுமி தங்கி காட்பாடியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக மாணவி மன அழுத்தத்துடன் காணப்பட்டார். வழக்கத்தைவிட அதிகமாக கோபம் கொண்டார்.

    இதையடுத்து மாணவியை அருகேயுள்ள மனநல மருத்துவரிடம் சிகிச்சைக்கு அழைத்து சென்றோம். சிகிச்சையின்போது, மாணவி கடந்த ஏப்ரல் மாதம் பள்ளி விடுமுறை நாளில் காங்கேயநல்லூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    அங்கு வைத்து அருகேயுள்ள வீட்டிற்கு வந்த வேலூர் கஸ்பாவை சேர்ந்த சேகர் (62) என்பவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

    அதன்காரணமாக மாணவி மன அழுத்தத்துடன் காணப்பட்டுள்ளார். மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சேகர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

    மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் சேகர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கைதான தலைமை ஆசிரியரை சஸ்பெண்டு செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

    நெல்லை:

    நெல்லை டவுனில் பாரதியார் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு ஜூலியட் ரவிச்சந்திரன் (வயது 48) என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் 8, 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவிகள், தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து மாணவிகளின் பெற்றோர்கள் நெல்லை மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்தனர்.

    அவர் அதுகுறித்து விசாரணை நடத்துமாறு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தேவ் ஆனந்த்துக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அவருடைய தலைமையில் நெல்லை கல்வி மாவட்ட அலுவலர் ரேணுகா, குழந்தை பாதுகாப்பு அலுவலர்கள் கார்த்திகா, பாலமுருகன், பரிமளா ஆகியோர் கொண்ட குழுவினர் அந்த பள்ளிக் கூடத்தில் விசாரணை நடத்தினர். 

    மாணவிகளிடமும், ஆசிரியர்களிடமும் தனித் தனியாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் தலைமை ஆசிரியர் ஜூலியட் ரவிச்சந்திரன், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி ஆன‌து. இதுபற்றிய தகவல் கலெக்டர் ஷில்பாவிடமும் தெரிவிக்கப்பட்டது. அவருடைய உத்தரவின் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தேவ்ஆனந்த் நெல்லை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி வழக்குப்பதிவு செய்து, ஜூலியட் ரவிச்சந்திரனை கைது செய்தார். அவர் மீது ‘போக்சோ’ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் ஜூலியட் ரவிச்சந்திரனை போலீசார் நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

    இதனிடையே கைதான தலைமை ஆசிரியர் ஜூலியட் ரவிச்சந்திரனை ‘சஸ்பெண்டு’ செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல் உத்தரவிட்டார்.

    பேராசிரியர்கள் மீதான பாலியல் புகாரில் மாணவி ஆடியோ உரையாடலை ஒப்படைத்ததையடுத்து, போலீஸ் சூப்பிரண்டு வனிதா பேராசிரியர்களை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளார். #ChennaiStudentharassment #AgriCollege
    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை அரசு வேளாண்மை கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வரும் சென்னை பெருங்குடியை சேர்ந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் உதவி பேராசிரியர் தங்க பாண்டியன் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    பாலியல் தொல்லைக்கு விடுதி காப்பாளர்களாக உள்ள பேராசிரியைகள் புனிதா, மைதிலி ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் குற்றம்சாட்டிய மாணவி, பேராசிரியைகள் பேசியதாக ஆடியோவை வெளியிட்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

    இந்த நிலையில், பாலியல் புகார் குறித்து மாணவியின் தோழிகள் 4 பேரை விசாரணைக்கு ஆஜராக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா உத்தரவிட்டுள்ளார். உதவி பேராசிரியர் மற்றும் பேராசிரியைகளின் ஆடியோ பதிவுகளையும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதாவிடம் மாணவி ஒப்படைத்துள்ளார்.

    இதில், 10-க்கும் மேற்பட்ட உரையாடல் பதிவுகள் இருந்தன. முதலில் சி.டி.க்களில் பதிவு செய்த ஆடியோவை வழங்குவதாக மாணவி கூறினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆடியோவின் ஒரிஜினல் பதிவுகளையும், பேராசிரியைகளின் உரையாடல்களை பதிவு செய்த செல்போனையும் ஒப்படைக்க உத்தரவிட்டார்.



    அதன்படி, உரையாடலை பதிவு செய்த செல்போன், தன்னிடம் இருந்த அத்தனை ஆவணங்களையும் மாணவி ஒப்படைத்துள்ளார். இதனை வைத்து உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் மற்றும் பேராசிரியைகள் புனிதா, மைதிலி ஆகியோரையும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

    விசாரணை வளையத்திற்குள் பேராசிரியைகள் கொண்டுவரப்படுவதால் மாணவியின் பாலியல் தொல்லை புகாரில் பரபரப்பு தகவல்கள் வெளியாக கூடும் என தெரிகிறது. ஒரு வேளை விசாரணைக்கு ஆஜராக உதவி பேராசிரியரும், பேராசிரியர்களும் மறுத்தால் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    இதற்கிடையே, மாணவியின் பாலியல் புகாரில் வேளாண் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் மற்றும் பேராசிரியைகளிடம் பணம் கேட்டு மர்மநபர்கள் மிரட்டுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

    பணம் கொடுக்கவில்லையெனில் பிரச்சினையை பெரிதுப்படுத்திவிடுவோம் என்று மிரட்டி பணம் கேட்டு அடிப்பணிய வைக்க முயற்சி நடப்பதாக கல்லூரி முதல்வர் புகார் கூறியுள்ளார். #ChennaiStudentharassment #AgriCollege

     

    பேராசிரியர்கள் மீதான பாலியல் புகார் தொடர்பாக மாணவியின் தோழிகள் 4 பேரிடம் விசாரிக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா முடிவு செய்துள்ளார். #ChennaiStudentharassment #AgriCollege
    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை அரசு வேளாண்மை கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வரும் சென்னை பெருங்குடியை சேர்ந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் உதவி பேராசிரியர் தங்க பாண்டியன் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

    பாலியல் தொல்லைக்கு விடுதி வார்டன்களாக உள்ள கல்லூரி பேராசிரியைகள் புனிதா, மைதிலி ஆகியோர் உடந்தையாக இருந்ததாக மாணவி குற்றச்சாட்டினார். பேராசிரியைகள் பேசியதாக ஆடியோவையும் மாணவி வெளியிட்டார்.

    இதைத்தொடர்ந்து, பாலியல் புகார் கூறிய மாணவி கல்லூரி விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த பாலியல் புகார் தொடர்பாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.



    இந்த நிலையில் சஸ்பெண்டு செய்யப்பட்ட உதவி பேராசிரியர் தரப்பில் இருந்து தனக்கு பணம் கொடுப்பதாகவும், வழக்கை திரும்ப பெறுமாறும் மிரட்டல் வருவதாக மாணவி புதிய புகார் கூறினார்.

    போலீசாரின் விசாரணை ஒருதலைபட்சமாக உள்ளது. என் மீது குற்றம் சுமத்த வேண்டும் என்ற நோக்கத்தில் போலீசார் செயல்படுவதால் கோர்ட்டு உதவியை நாடலாம் என்ற முடிவில் உள்ளேன் என்றார்.

    மாணவியிடம் உதவி பேராசிரியர் மற்றும் பேராசிரியைகள் பேசிய ஆடியோ சி.டி.க்களை போலீசார் கேட்டுள்ளனர். அதனை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதாவிடம் மாணவி ஒப்படைக்க இருக்கிறார்.

    இதற்கிடையே, பாலியல் புகார் தொடர்பாக மாணவியின் தோழிகள் 4 பேரிடம் விசாரிக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா முடிவு செய்துள்ளார். தோழிகளை விசாரணைக்கு அழைத்தும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.

    விசாரணையில் தோழிகள் கூறுவதை வைத்து புகாரின் உண்மை தன்மையை உறுதிப்படுத்திய பிறகு உதவி பேராசிரியர், பேராசிரியைகள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்வது அல்லது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    மேலும், கல்லூரியில் இன்று நடந்த தேர்வை மாணவி போலீஸ் பாதுகாப்புடன் வந்து எழுதினார். கம்யூனிஸ்டு கட்சியினரும் மாணவிக்கு உரிய பாதுகாப்பு வழங்கினர்.

    இதுபற்றி, வேளாண் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் கூறியதாவது:-

    பேராசிரியைகள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சக மாணவ-மாணவிகள் மீண்டும் போராட்டம் நடத்த என்னிடம் அனுமதி கேட்டு உள்ளனர்.

    இன்று தேர்வு நடந்ததால் மதியத்திற்கு மேல் போராட்டம் நடத்த அனுமதி வழங்கியுள்ளேன் என்றார். பாலியல் புகாரில் தங்கள் மீதான நியாயத்தை வெளிப்படுத்தாமல் மாணவிக்கு எதிராக சக மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  #ChennaiStudentharassment #AgriCollege
    உதவி பேராசிரியர் மீது பாலியல் தொல்லை புகார் அளித்த மாணவி ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் விசாரணைக்கு அழைத்தபோது வரவில்லை.#ChennaiStudentharassment #AgriCollege
    வாணாபுரம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே வாழவச்சனூரில் உள்ள அரசு வேளாண்மை கல்லூரியில் சென்னையை சேர்ந்த மாணவி ஒருவர் படித்து வருகிறார். விடுதியில் தங்கி படிக்கும் தனக்கு, உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், மேலும் பாலியல் தொல்லைக்கு ஆதரவாக விடுதி காப்பாளர்களாக உள்ள கல்லூரி பேராசிரியைகள் ஆகியோர் செயல்பட்டதாகவும் புகார் கூறினார்.

    இதற்கிடையில் புகார் கூறப்பட்ட உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் மற்றும் விடுதி காப்பாளர்களான பேராசிரியைகள் மாணவிக்கு எதிராக வாணாபுரம் போலீசில் புகார் அளித்தனர். புகாரில் மாணவியின் பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யாக ஜோடிக்கப்பட்டவை. எங்கள் பெயர்களுக்கு களங்கம் ஏற்படுத்தவே, இதுபோன்ற புகார்களை கூறி உள்ளார். கல்லூரியில் சக மாணவ, மாணவிகளுடைய ஐ.டி. கார்டுகள், பென்சில், பேனா மற்றும் ரப்பர் போன்ற பொருட்களை மாணவி திருடியுள்ளார். இதுபோன்று பல திருட்டு சம்பவங்களில் மாணவி ஈடுபட்டுள்ளார். கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக பொய் புகார் தெரிவித்த மாணவி மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளனர்.

    இந்த புகார் குறித்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    கோவையில் இருந்து வந்த வேளாண்மை பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் சாந்தி மற்றும் அலுவலர்கள் அடங்கிய குழு கல்லூரி முதல்வர், பேராசிரியைகள், மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே, பாலியல் புகாருக்குள்ளான உதவி பேராசிரியர் தங்க பாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் மாணவி விடுதியை விட்டு வெளியேறி விட்டார். இந்த வேளாண்மை கல்லூரியில் தேர்வு நடைபெற்று வருவதினால், பாதிக்கப்பட்ட மாணவி நேற்று காலை போலீஸ் பாதுகாப்புடன் வந்து தேர்வு எழுதினார்.

    நேற்று 2-வது நாளாக வேளாண்மை பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் சாந்தி மற்றும் அலுவலர்கள் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்த கல்லூரிக்கு வந்தனர். அவர்கள் பாதிக்கப்பட்ட மாணவியை விசாரணைக்கு வருமாறு அழைத்தனர். ஆனால் அவர் வர மறுத்துவிட்டார்.

    இதையடுத்து உதவி பேராசிரியர் தங்கபாண்டியன், அவருக்கு உதவியதாக கூறிய பேராசிரியைகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவியின் தோழிகள், மாணவிகள் ஆகியோரிடம் அவர்கள் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.  #ChennaiStudentharassment #AgriCollege
    திருவண்ணாமலை அரசு வேளாண் கல்லூரியில் பயிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார். #ChennaiStudentharassment #AgriCollege #Ramadoss
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருவண்ணாமலை அரசு வேளாண் கல்லூரியில் பயிலும் மாணவிக்கு அதே கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவருக்கு ஆதரவாக செயல்பட்ட இரு பேராசிரியைகள் மாணவியை மிரட்டியிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. கல்வியையும், ஒழுக்கத்தையும் கற்பிக்க வேண்டிய கல்லூரிகள் ஆபத்தான இடமாக மாற்றப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது.

    சென்னையைச் சேர்ந்த மாணவி ஒருவர் திருவண்ணாமலை அரசு வேளாண் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அக்கல்லூரியின் விடுதியில் தங்கி பயின்று வரும் மாணவிக்கு கல்லூரியின் பேராசிரியர் தங்க பாண்டியன் என்பவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்.

    இதற்காக மாணவியின் விடுதி அறைக்கே சென்று அத்துமீறல்களை செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. பேராசிரியரின் இத்தகைய தரம் தாழ்ந்த செயலுக்கு விடுதிக் காப்பாளர்களான பேராசிரியைகள் புனிதா, மைதிலி ஆகிய இருவரும் உடந்தையாக இருந்துள்ளனர். அதுமட்டுமின்றி, பேராசிரியர் தங்க பாண்டியனின் அத்துமீறல்கள் குறித்து புகார் செய்த மாணவியை தொலைத்துக்கட்டி விடுவோம்; பட்டப் படிப்பை முடிக்க முடியாது என்று பேராசிரியைகள் மிரட்டும் ஒலிப்பதிவும் சமூக வலைத் தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    கல்லூரிகளில் இப்படியெல்லாம் கூட நடக்குமா? என்று அஞ்சி நடுங்கும் வகையில் தான் திருவண்ணாமலை வேளாண்மை கல்லூரியில் நடந்துள்ள நிகழ்வுகள் அமைந்துள்ளன. மாணவிகள் தங்கியுள்ள விடுதிக்குள் பேராசிரியர்கள் உள்ளிட்ட எந்த ஆண்களும் சாதாரணமான நேரங்களில் செல்லக்கூடாது என்பது தான் விதியாகும். விடுதிகளில் தங்கியுள்ள மாணவிகளை பாதுகாக்க வேண்டியது காப்பாளர்களின் கடமை ஆகும். ஆனால், திருவண்ணாமலைக் கல்லூரியில் அனைத்தும் தலைகீழாக நடந்து கொண்டிருக்கின்றன.

    கல்லூரி விடுதியில் மாணவி மீது அவதூறான குற்றச்சாட்டுகளைக் கூறி தனிமைப்படுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி தங்கியிருந்த அறையின் தாழ்ப்பாள்கள் அகற்றப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மாணவியை உளவியல் ரீதியாகக் கொடுமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனும், மாணவிக்கு இழைக்கப்படும் கொடுமைகள் வேறு யாருக்கும் தெரிந்து விடக் கூடாது என்ற நோக்கத்துடனும் இவ்வாறு செய்யப்பட்டிருக்கிறது.

    மாணவி திட்டமிட்டு, பிற மாணவிகளிடமிருந்து பிரிக்கப்பட்டு தாழ்ப்பாள் கூட இல்லாத தனி அறையில் தங்க வைக்கப்பட்டிருந்தார் என்பதைப் பார்க்கும் போது, பேராசிரியர் விடுதிக்கே வந்து பாலியல் தொல்லைக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் என யூகிக்க முடிகிறது. இது குறித்த மாவட்ட நீதிபதியின் விசாரணையில் இக்குற்றச் சாற்றுகள் உண்மை என்பது உறுதியாகியுள்ளது.



    பள்ளிகளையும், கல்லூரிகளையும் கல்விக் கோயில்கள் என்று தான் நான் அழைத்து வருகிறேன். அங்குள்ள ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களுக்கு கடவுளர்களாக இருக்க வேண்டும். கடந்த காலங்களில் அப்படித்தான் இருந்தார்கள். பேராசிரியர்களும், பேராசிரியைகளும் மாணவ, மாணவியருக்கு தாயாகவும், தந்தையாகவும் இருந்து அன்பும், கண்டிப்பும் காட்டி மாணவர்களின் வளர்ச்சிக்கு துணையாக இருந்தனர்.

    ஆனால், இப்போது நிர்மலா தேவி, புனிதா, மைதிலி போன்ற பேராசிரியைகள், தங்க பாண்டியன் போன்ற பேராசிரியர்களின் கீழ்த்தரமான செயல்பாடுகளால் ஆசிரியர் சமுதாயம் மீதான மதிப்பும், மரியாதையும் குறைந்து வருகிறது. அப்பழுக்கற்ற உன்னதமான ஆசிரியர்களையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய நிலைமை மாற்றப்பட வேண்டியது அவசியமாகும்.

    தமிழகத்தில் கல்லூரிகளில் பயிலும் பெண்களின் எண்ணிக்கை இப்போது தான் அதிகரித்து வருகிறது. அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற எண்ணத்தில் மூழ்கியிருந்த நமது மக்கள் இப்போது தான் தங்கள் வீட்டு பெண் பிள்ளைகளை கல்லூரிக்கு அனுப்பத் தொடங்கியுள்ளனர்.

    இத்தகைய சூழலில் கல்லூரி செல்லும் பெண்களுக்கு இத்தகைய ஆபத்துகள் இருப்பதாக அறிந்தால், பெரும்பான்மையான பெற்றோர் தங்களின் பிள்ளைகளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பவே தயங்குவார்கள். அது மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக அமையும். எனவே, பேராசிரியர்கள் என்ற போர்வையில் நடமாடும் சில மனித விலங்குகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கல்வித்துறையில் கடுமையான சீர்திருத்தங்களை கொண்டு வருவதன் மூலம் கல்விக்கூடங்களை பாதுகாப்பு நிறைந்த கல்விக் கோயில்களாக மாற்ற வேண்டும். அப்போது தான் மகளிர் சமுதாயம் கல்வி கற்று முன்னேற்றப் பாதையில் பயணிப்பார்கள். இவற்றைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பான சூழலில் பெண்கள் கல்வி கற்பதை உறுதி செய்ய தமிழக ஆட்சியாளர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #ChennaiStudentharassment #AgriCollege #Ramadoss
    ×