search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சியில் 2-ம் வகுப்பு மாணவிக்கு அதிமுக செயலாளர் பாலியல் தொந்தரவு
    X

    திருச்சியில் 2-ம் வகுப்பு மாணவிக்கு அதிமுக செயலாளர் பாலியல் தொந்தரவு

    திருச்சியில் இன்று 2-ம் வகுப்பு மாணவிக்கு அ.தி.மு.க. செயலாளர் பாலியல் தொந்தரவு அளித்ததை கண்டித்து தனியார் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருச்சி:

    திருச்சி ஆழ்வார்தோப்பு இதாயத் நகரை சேர்ந்தவர் ரசூல் முகமது. தனியார் இன்சூரன்சு நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது 7 வயது மகள் தென்னூர் காயிதே மில்லத் நகரில் உள்ள தனியார் தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இதற்கிடையே கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு மாணவி படிக்கும் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது.

    இந்த பள்ளியின் செயலாளரும், அ.தி.மு.க. வட்ட செயலாளருமான செக்கடி சலீம் என்பவர், அந்த மாணவியை தனது மடியில் அமர வைத்துள்ளார். அப்போது அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. உடனே அவரிடம் இருந்து விடுபட்ட மாணவி பயந்து போய் யாரிடமும் இதுபற்றி கூறவில்லை.

    இந்த நிலையில் நேற்று அந்த மாணவி பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தின் போது நடந்த பாலியல் தொந்தரவு குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த பெற்றோர் அப்பகுதி பொது மக்களை திரட்டிக் கொண்டு தனியார் பள்ளியை இன்று காலை திடீரென முற்றுகையிட்டனர்.

    மேலும் 2-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த அ.தி.மு.க. பிரமுகரை கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்த தகவல் அறிந்ததும் ஸ்ரீரங்கம் உதவி போலீஸ் கமி‌ஷனர் ராமச்சந்திரன், தில்லை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே பாலியல் புகார் கூறப்பட்ட அ.தி.மு.க. வட்ட செயலாளர் செக்கடி சலீமை தில்லை நகர் போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொதுமக்கள் நடத்திய இந்த திடீர் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×