என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மாணவியை தூக்கிச்சென்று பாலியல் தொல்லை - வாலிபரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு
- சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்ததும் மர்ம வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
- மாணவியை மர்ம வாலிபர் மிரட்டி தூக்கி செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சி தற்போது வெளியாகி உள்ளது.
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 10-வயது மாணவி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளி முடிந்து மாணவி தனியாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின் தொடர்ந்து வந்த மர்ம வாலிபர் ஒருவர் மாணவியிடம் பேச்சுகொடுத்தார். திடீரென அவர், மாணவியை மிரட்டி தூக்கிச் சென்றார். பின்னர் அருகில் உள்ள மாந்தோப்பிற்கு மாணவியை கடத்தி சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கதறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்ததும் மர்ம வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதைத் தொடர்ந்து மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அப்போது மாணவி தனக்கு நேர்ந்தது குறித்து தெரிவித்து அழுதார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் ஆரம்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அவரை பிடிக்க 4 தனிப்படையும் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் மாணவியை மர்ம வாலிபர் மிரட்டி தூக்கி செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சி தற்போது வெளியாகி உள்ளது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வீடியோவில் மர்ம வாலிபர் மாணவியை தூக்கி செல்வதும், பின்னர் அவர் செல்போனில் பேசியபடி தப்பி செல்வதும் பதிவாகி உள்ளது. இதனை வைத்து குறிப்பிட்ட நேரத்தில் அந்த பகுதியில் இருந்து சென்ற செல்போன் அழைப்புகளை வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.






