search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thiruvennainallur teacher attack"

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே 10-ம் வகுப்பு மாணவியிடம் தவறாக நடந்ததாக கூறி பள்ளியில் ஆசிரியரை தாக்கி சிறைவைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தில் அரசு உயர் நிலைபள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சிறுமதுரை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இன்னும் சில நாட்களில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடைபெற இருப்பதால் இந்த பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு தற்போது சிறப்பு வகுப்புகள் நடந்து வருகிறது.

    நேற்று மாலை மாணவ- மாணவிகளுக்கு மாலைநேர சிறப்பு வகுப்பு நடந்தது. அப்போது மாணவி ஒருவரிடம் ஆங்கில ஆசிரியர் கிருஷ்ணன் (வயது 35) பேசி கொண்டிருந்தார்.

    இந்த நேரத்தில் சிறுமதுரை பகுதியை சேர்ந்த சில வாலிபர்கள் அந்த பள்ளிக்குள் புகுந்தனர். மாணவியிடம் ஆசிரியர் தவறாக நடக்க முயன்றதாக கூறி அந்த வாலிபர்கள் ஆசிரியரை சரமாரியாக தாக்கினர்.

    பின்னர் அந்த ஆசிரியரை பள்ளியின் ஒரு அறையில் வைத்து பூட்டி சிறைவைத்தனர். இது பற்றி தகவல் அறிந்த ஊர் பொதுமக்கள் பள்ளி முன்பு திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த ஆசிரியர் கிருஷ்ணனை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்ல முயன்றனர். அவர்களை வெளியில் செல்ல விடாமல் பள்ளி முன்பு திரண்டு நின்ற பொதுமக்கள் பள்ளியின் நுழைவு வாசலை பூட்டினர். பின்னர் போலீஸ் வாகனங்களையும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் மற்றும் பொது மக்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அவரிடம் போராட்டக்காரர்கள் கூறும்போது, பள்ளியில் இருந்து ஆசிரியரை கைது செய்து விலங்கு மாட்டிதான் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்ல வேண்டும். வேனில் ஏற்றி செல்லக்கூடாது என்றனர்.

    இந்த பிரச்சனை தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் செய்யுங்கள். அதன் பின்னர் இந்த ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது ஆசிரியரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்ல வேண்டும். வழி விடுங்கள். உங்களது போராட்டத்தையும் கைவிடுங்கள் என்றார்.

    இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் தங்களது போராட்டத்தை இரவு 11 மணிக்கு கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதனை தொடர்ந்து ஆசிரியரை போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் அந்த மாணவியின் தந்தை திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் அந்த மாணவியை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
    ×