என் மலர்tooltip icon

    ஈரோடு

    • மாசி தேர் திருவிழா மிக சிறப்பாக கொடியேற்றத்துடன் நடைபெறுவது வழக்கம்.
    • மாசி தேர் திருவிழா இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது.

    பவானி:

    பவானி நகர மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வருகிறது செல்லாண்டி அம்மன், மாரியம்மன் கோவில். இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி தேர் திருவிழா மிக சிறப்பாக கொடியேற்றத்துடன் நடைபெறுவது வழக்கம்.

    செல்லியாண்டி அம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடை பெற்று 12 ஆண்டுகளுக்கு மேல் முடிவடைந்த நிலையில் தமிழக அரசு இந்து அறநிலைத்துறை அனுமதி பெற்று கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் 2 கோவிலிலும் கும்பாபிஷேக பணிகள் தொடக்க விழா பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செல்லியாண்டி அம்மன் கோவில் வளாகத்தில் செல்லியாண்டி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் திருவிழா நடத்துவது பற்றி கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

    அப்போது கட்டளைதாரர்கள், ஊர் பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டு கோவில் திருப்பணி நடைபெறும் காரணத்தால் மாசி திருவிழா நடத்த வேண்டாம் என ஒரு மனதாக முடிவு செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து பவானி நகரத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடி உடலில் சேறு பூசி பல்வேறு வகையான வேடங்களில் அணிந்து சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் மாசி தேர் திருவிழா இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து பவானி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள எல்லையம்மன் கோவில், வர்ணபுரம் சமயபுரம் மாரியம்மன் கோவில், மேற்குத்தெரு மாரியம்மன் கோவில் செல்லியாண்டி அம்மன், மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் உள்ள மூலவருக்கு பக்தர்கள் மற்றும் கட்டளை தாரர்கள் கும்பாபிஷேக விழா குழுவினர் முன்னிலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.

    பவானி நகரில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி செல்லியாண்டி அம்மன் மற்றும் மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த மாசி திருவிழா ரத்து செய்யப்பட்டதால் தொடர்ந்து பவானி நகரம் களை இழந்து காணப்பட்டது.

    • வனத்துறையினர் சென்று பார்த்தபோது 13 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று பாறைகளுக்கு இடையில் விழுந்து இறந்துள்ளதை கண்டனர்.
    • மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் யானை, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் வறண்டு விட்டன. இதனால் வன விலங்குகள் கிராமத்துக்குள் நுழையும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

    இந்நிலையில் சத்தியமங்கலம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கொண்டப்ப நாயக்கன் பாளையம் காப்பு காட்டில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது அங்கிருந்து ஒரு பகுதியில் துர்நாற்றம் வீசியது. வனத்துறையினர் சென்று பார்த்தபோது 13 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று பாறைகளுக்கு இடையில் விழுந்து இறந்துள்ளதை கண்டனர்.

    பின்னர் வனத்துறை சார்பில் மருத்துவக் குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.

    அப்போது குடல் புழு நோயால் ஈரல் முழுவதும் பாதிக்கப்பட்டு யானை இறந்தது தெரிய வந்தது. பின்னர் இறந்த யானையை அங்கேயே மற்ற விலங்குகளுக்கு உணவாக விட்டு சென்று விட்டனர்.

    • ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் சரக்கு வாகனம் ஒன்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த வெள்ளோடு அருகே உள்ள நல்லகவுண்டன் பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக பெருந்துறை டி.எஸ்.பி.க்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனைத்தொடர்ந்து பெருந்துறை டி.எஸ்.பி. கோபாலகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் இன்ஸ்பெக்டர் ராஜகண்ணா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ருத்ராஜ், வீரமணிகண்டன் மற்றும் தனிப்பிரிவு போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வீட்டில் 800 கிலோ குட்கா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இந்த வீட்டின் உரிமையாளர் பிரசாத் என்பதும், காய்கறி வியாபாரம் செய்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் வீட்டில் சோதனை செய்ததில் ரூ.3.40 லட்சம் ரொக்க பணம், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் சரக்கு வாகனம் ஒன்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தற்போது பிரசாத் தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர் பிடிப்பட்டால் தான் எங்கிருந்து குட்கா கொண்டு வரப்படுகிறது. அதை யாருக்கு விற்க கொண்டு செல்கிறார்கள் என்ற விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    • விபத்து குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • விசாரணையில் தூக்க கலக்கத்தில் டிரைவர் நவாஸ் காரை, லாரி மீது மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிய வந்தது.

    பவானி:

    வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தாராபட வீடு அருகே உள்ள செங்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் கமாதீன் (வயது 65). இவரது மனைவி சுபைதா (62), பேரன் அபுதாகிர் (9), பேத்தி ஆஷிகா (13) ஆகிய 4 பேரும் ஊட்டி செல்வதற்காக நேற்று இரவு காரில் கிளம்பி உள்ளனர்.

    காரை அதே பகுதியைச் சேர்ந்த நவாஸ் (34) என்பவர் ஒட்டி வந்தார். இன்று அதிகாலை 4.45 மணி அளவில் கார் ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த லட்சுமி நகர் பவிஸ் பார்க் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

    அதிகாலை என்பதால் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். அந்தப் பகுதியில் கண்டெய்னர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது கார் கண்டெய்னர் லாரியின் பின்பகுதியில் எதிர்பாராத விதமாக மோதியது. காரில் இருந்த அனைவரும் அலறினர்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் விபத்து குறித்து பவானி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதில் சம்பவ இடத்திலேயே கமாதீன் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். மேலும் விபத்தில் சுபைதா, ஆஷிகா, அபுதாகிர், டிரைவர் நவாஸ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். கார் லாரியின் மீது மோதிய வேகத்தில் அப்பளம் போல் நொறுங்கியது.

    பின்னர் அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த 4 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அபுதாகீர் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தூக்க கலக்கத்தில் டிரைவர் நவாஸ் காரை, லாரி மீது மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிய வந்தது.

    • ஈரோடு பன்னீர்செல்வம் பார்கில் உள்ள ஜவுளி சந்தை தினசரி கடை அடைக்கப்பட்டு இருந்தது.
    • பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

    ஈரோடு:

    சிறு, குறு தொழில்கள் தங்களது வணிக கடன்களை விரைந்து வசூல் செய்வதற்கு ஏதுவாக மத்திய அரசு வருமான வரி சட்டத்தில் கொண்டு வந்துள்ள செக்சன் 43 பி (எச்) மாற்றமானது வருகிற மார்ச் மாதம் 31-ந் தேதி அமலாகிறது.

    இதன்படி தங்கள் இருப்பு நிலை குறிப்பு (பேலன்ஸ் ஷீட்) கணக்கில் இருக்கும் வணிக கடன் நிலுவைகள் 45 நாட்களுக்கு மேலே சென்றிருந்தால் அவை வருமானமாக கருதப்படும். அவற்றுக்கு வருமான வரி செலுத்த வேண்டும் என சட்ட மாறுதல் செய்யப்பட்டுள்ளது.

    ஜவுளி சார்ந்த தொழிலில் துணிகளை கொள்முதல் செய்து பிராசசிங், டையிங், பிரிண்டிங், ஸ்டிச்சிங் என்ன பல நிலைகளை கடந்து விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.

    அதற்கு ஏற்ப 45 நாட்களுக்குள் அல்லது அதற்கு மேலான நாட்களின் கடன் தொகையை நேர் செய்வார்கள். தற்போதைய புதிய சட்ட திருத்தத்தால் அந்த தொகைக்கு வருமான வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால் இத்தொழில் கடுமையாக பாதிப்படையும்.

    இந்த சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் அல்லது ஒரு ஆண்டுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று ஒரு நாள் ஜவுளி வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.


    அதன்படி இன்று ஈரோட்டில் ஜவுளி கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் திருவெங்கடாச்சாமி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு போன்ற பகுதியில் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் மற்றும் அதனை சார்ந்த குடோன்கள் அடைக்கப்பட்டிருந்தன. கடைகள் முன்பு வேலை நிறுத்தத்திற்கான வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

    இன்று ஒரு நாள் கடை அடைப்பு போராட்டம் காரணமாக சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஜவுளி வணிகர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் இன்று ஒரு நாள் உற்பத்தி நிறுத்தம் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை ஈரோடு, பவானி, சித்தோடு, பி.பி.அக்ரஹாரம், பள்ளிபாளையம் என 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இன்று ஒரு நாள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தங்களது உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக இன்று ஒரு லட்சம் விசைத்தறியாளர்கள் பணிக்கு செல்லவில்லை. இதனால் இன்று ஒரு நாள் மட்டும் ரூ.7 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக விசைத்தறியாளர்கள் தெரிவித்தனர்.

    மேலும் ஜவுளி வணிகர்களின் இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஈரோடு கனி மார்க்கெட் ஜவுளி சந்தையும் இன்று அடைக்கப்பட்டிருந்தது.

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்கில் உள்ள ஜவுளி சந்தை தினசரி கடை அடைக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பான பேனரும் கடையின் முன்பு வைக்கப்பட்டு இருந்தது. ஜவுளி வணிகர்களின் கடையடைப்பு போராட்டத்திற்கு 20-க்கும் மேற்பட்ட சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

    • லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதாக தோட்ட உரிமையாளர் கிரி தெரிவித்தார்.
    • யானைக்காக வெட்டப்பட்ட அகழிகளை மேலும் ஆழப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை, மான்கள் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள் வறண்டு காட்சியளிக்கின்றன.

    இதனால் உணவு, குடிநீரை தேடி யானை கூட்டங்கள் வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விவசாய விளை நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள வாழை, தென்னைகளை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் இந்த பகுதியில் விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் இரவு நேரங்களில் தங்களது தோட்டங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நள்ளிரவு 2 மணியளவில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய 5 காட்டுயானைகள் கூட்டம் தாளவாடி அடுத்த மல்லன்குழி என்ற பகுதியில் உள்ள கிரி என்பவரின் விவசாய தோட்டத்துக்குள் புகுந்தது. பின்னர் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த 500-க்கும் மேற்பட்ட வாழைக்கன்றுகளை யானை கூட்டம் மிதித்து சேதப்படுத்தியது. அப்போது தோட்ட காவலில் இருந்த விவசாயிகள் யானைகள் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தார்.

    பின்னர் அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானைகள் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றன. எனினும் யானை கூட்டங்கள் மிதித்து சேதப்படுத்தியதில் 500-க்கும் மேற்பட்ட வாழைக்கன்றுகள் கடும் சேதம் அடைந்தன. இதனால் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதாக தோட்ட உரிமையாளர் கிரி தெரிவித்தார். தனக்கு அரசு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    கடந்த சில நாட்களாகவே தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் யானை கூட்டங்கள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது. எனவே இரவு நேரத்தில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். யானைக்காக வெட்டப்பட்ட அகழிகளை மேலும் ஆழப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வணிகர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக விசைத்தறிகளை ஒருநாள் நிறுத்தி போராட்டத்தில் பங்கேற்க போவதாக விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
    • சிறு, குறு தொழில்களுக்கு மட்டுமன்றி கார்ப்பரேட், பிரைவேட் உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் சட்டத்தை ஒரே சீராக அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

    ஈரோடு:

    சிறு, குறு தொழில்கள் தங்களது வணிக கடன்களை விரைந்து வசூல் செய்வதற்கு ஏதுவாக மத்திய அரசு வருமானவரி சட்டத்தில் கொண்டு வந்துள்ள மாற்றம் அந்த துறையினருக்கு பாதகமாக இருப்பதாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    மார்ச் 31-ந்தேதி முதல் அமலுக்கு வரும் புதிய சட்ட திருத்தத்தின்படி இருப்பு நிலை குறிப்பு கணக்கில் இருக்கும் வணிக கடன் நிலுவைகள் 45 நாட்களுக்கு மேலே சென்று இருந்தால் அவை வருமானமாக கருதப்பட்டு வருமான வரி செலுத்த வேண்டும் என சட்ட மாறுதல் செய்யப்பட்டுள்ளது.

    இது சிறு, குறு தொழில்களை பாதிக்கும் என்பதால் அந்த துறையினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே இந்த சட்டத்தை ஓராண்டுக்கு தள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு கிளாத் மெர்சன்ட்ஸ் அசோசியேசன் சார்பில் நாளை (புதன்கிழமை) ஜவுளி வணிகர்கள் ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளனர். இதில் ஈரோடு பகுதியில் உள்ள 5 ஆயிரம் கடைகள் அடைக்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் வணிகர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக விசைத்தறிகளை ஒருநாள் நிறுத்தி போராட்டத்தில் பங்கேற்க போவதாக விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

    இதன்படி ஈரோடு, பள்ளிபாளையம், வெண்ணந்தூர், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் சுமார் 50 ஆயிரம் விசைத்தறிகள் நாளை ஒரு நாள் நிறுத்தப்படும் என்றும், இதனால் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை இழப்பும், சுமார் ரூ.7 கோடி மதிப்பிலான துணி உற்பத்தியும் பாதிக்கப்படும் என அவர்கள் கூறினர்.

    சிறு, குறு தொழில்களுக்கு மட்டுமன்றி கார்ப்பரேட், பிரைவேட் உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் இந்த சட்டத்தை ஒரே சீராக அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

    • பிரதமர் என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார்.
    • மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் கருப்பு கொடி காட்ட போவதாக அறிவித்து இருந்தனர்.

    ஈரோடு:

    பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நடைபெறும் என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார்.

    பிரதமர் நரேந்திர மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் கருப்பு கொடி காட்ட போவதாக அறிவித்து இருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

    அதன்படி ஈரோடு மாவட்டம் சென்னிமலை கிழக்கு புது வீதியில் வசிக்கும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் பிரதமர் நரேந்திர மோடி பல்லடம் வருகை எதிர்ப்பு தெரிவித்து விவசாய அமைப்புகளுடன் சேர்ந்து கருப்பு கொடி காட்டப்போவதாக அறிவித்திருந்தார்.

    தமிழகம் கடுமையான மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதற்கு, இன்று வரை ஒரு ரூபாய் கூட மத்திய அரசு இழப்பீடு வழங்காமல் இருப்பதை கண்டித்தும், ராமேஸ்வரம் மீனவர்கள் சட்ட விரோதமாக இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதன் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை கண்டித்தும், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மறைமுகமாக துணை நிற்பதை கண்டித்தும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டப்போவதாக அறிவித்திருந்தார்.

    இந்நிலையில் இன்று காலை சென்னிமலையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகிலனை கைது செய்தனர்.

    • போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன.
    • தமிழக- கர்நாடக இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக ஆசனூரில் இருந்து கர்நாடகா மாநிலம் கொள்ளேகால் செல்லும் சாலை அமைந்துள்ளது.

    இந்நிலையில் இன்று காலை மாவள்ளம் பிரிவு அருகே சாலை ஓரத்தில் இருந்த தைய மரம் சாலையில் முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன.

    தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ஆசனூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் வனத்துறையினர் 2 மணி நேரத்திற்கு பிறகு மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். பின்னர் போக்குவரத்து சீரானது. இதனால் தமிழக- கர்நாடக இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • தோட்டத்தில் மக்காச்சோளம், மஞ்சள், வெற்றிலை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்.
    • எலத்தூர் பேரூராட்சி மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனையுடன் கூறினார்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி வரதராஜன். இவர் 4 ஏக்கர் விவசாய தோட்டத்தில் மக்காச்சோளம், மஞ்சள், வெற்றிலை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்.

    கடந்த சில நாட்களாக தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம், வெற்றிலை உள்ளிட்ட பயிர்களை பன்றிகள் மிகவும் கடுமையாக சேதப்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து விவசாயி வரதராஜன் கூறுகையில் எலத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் சிலர் இறைச்சிக்காக பன்றி வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பன்றிகளை பட்டியில் அடைத்து வளர்க்காமல் திறந்தவெளியில் நூற்றுக்கணக்கான பன்றிகளை வளர்ப்பதால் தோட்ட த்து பகுதிகளில் புகுந்து அறுவடைக்கு தயாராக உள்ள மக்காச்சோளம், கரும்பு பயிர்களை சேதம் செய்ததால் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    விவசாயிகள் நாங்கள் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்து பயிர்களை வளர்த்தால் ஒரே நாளில் இந்த பன்றிகள் மிகுந்த சேதத்தை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து எலத்தூர் பேரூராட்சி மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனையுடன் கூறினார்.

    எனவே இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து பயிர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வெயிலின் தாக்கம் கடந்த 2 நாட்களாக 101 டிகிரிக்கு மேல் பதிவாகி கொளுத்தி வருகிறது.
    • குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் முடிந்த அளவு வெளியே வர வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வந்த வெயிலின் தாக்கம் கடந்த 2 நாட்களாக 101 டிகிரிக்கு மேல் பதிவாகி கொளுத்தி வருகிறது.

    தமிழகத்தில் அதிக வெயிலின் தாக்கத்தில் முதல் மாவட்டமாக ஈரோடு மாவட்டம் உள்ளது. காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் வெயிலின் தாக்கம் மாலை 5 மணி வரை உள்ளது. குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. இந்த நேரத்தில் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் முடிந்த அளவு வெளியே வர வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    வெயிலின் தாக்கம் காரணமாக வீட்டில் மின்விசிறி இயங்கினாலும் வெப்ப காற்று புழுக்கத்தால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கடும் அவதி அடைந்து வருகின்றனர். மதிய நேரங்களில் மக்கள் நடமாட்டம் இன்றி முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றது. வாகன ஓட்டிகள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கரும்பு பால், குளிர்பானங்கள், இளநீர், மோர் போன்றவற்றை விரும்பி பருகி வருகின்றனர்.

    இதனால் இந்த வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பெண்கள் குடை பிடித்தபடி செல்கின்றனர். இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்கள் முகத்தை துணியால் மறைத்து கொண்டு செல்கின்றனர். குறிப்பாக வாகன ஓட்டிகளின் நிலைமை பரிதாபமாக உள்ளது. அனல் காற்றுடன் வெயில் கொளுத்துவதால் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    இது ஒரு புறம் இருக்க ஈரோடு வனப்பகுதிகளான அந்தியூர் பர்கூர் வனப்பகுதி, கடம்பூர் வனப்பகுதிகளில் கடும் வெயிலால் வறட்சி நிலவி வருகிறது. வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள் வறண்டு உள்ளதால் குடிநீருக்காகவும், உணவுகளை தேடியும் யானைகள், வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.

    கோடை வெயில் ஆரம்பிக்கும் முன்பே தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி தாண்டி உள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் ஈரோடு மாநகர் பகுதியில் பல்வேறு பகுதியில் தற்போது மண் பானை விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. பொதுமக்கள் அவற்றை ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர்.

    • கடந்த ஒரு வாரமாக மாநகரின் முக்கிய சாலைகள், கடைவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
    • கே.என்.கே சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் ஓரிரு நாளில் அகற்றப்படும்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கடை வீதிகள் மற்றும் முக்கிய சாலைகளில் செயல்படும் வணிக நிறுவனங்கள், கடைகளில் வாகன பார்க்கிங் வசதி இல்லாமல் உள்ளது. இதனால் இங்கு வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்தி செல்கின்றனர். இதனால் சாலைகளில் பிற வாகனங்கள் செல்ல இடையூறு ஏற்பட்டு வாகன நெரிசலும் ஏற்பட்டு வந்தது.

    மேலும் சாலையோர ஆக்கிரமிப்புகளால் பிரச்சனை நீடித்து வந்தது. இந்நிலையில் ஈரோடு கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர், எஸ்.பி ஆகியோர் உத்தரவின் பேரில் கடந்த ஒரு வாரமாக மாநகரின் முக்கிய சாலைகள், கடைவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

    இதன் காரணமாக தற்போது சாலைகள் ஆக்கிரமிப்பின்றி விஸ்தாரமாக காட்சியளிக்கிறது. மாநகரில் சாலை ஆக்கிரமிப்புகளை தடுக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், முக்கிய சாலைகள், கடைவீதி சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க வாகன பார்க்கிங் வசதி செய்து தரப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இது குறித்து ஈரோடு வடக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரண்யா கூறியதாவது:-ஈரோடு மாநகரில் சாலை ஆக்கிரமிப்புகள் உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் அகற்றப்பட்டு வருகிறது. மேலும் கே.என்.கே சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் ஓரிரு நாளில் அகற்றப்படும்.

    முக்கியசாலைகள், கடைவீதிகளில் சாலை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் வாகனங்களை நிறுத்தி செல்வதாக புகார் வந்தது. அந்த இடங்களில் நோ பார்க்கிங் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு போக்குவரத்து விதிகளின்படி அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.

    சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க முக்கியமான சாலைகள், கடைவீதிகளில் 3 இடங்களில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்கு மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    ×