என் மலர்
ஈரோடு
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கரட்டடி பாளையத்தை சேர்ந்தவர் அருள் (வயது 41). இவர் அவினாசியில் கட்டிட வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு இவர் வேலை முடிந்து பஸ்சில் கோபி வந்தார். நள்ளிரவு 11 மணியளவில் கோபி காலேஜ் பிரிவில் ரோட்டோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரை அழைத்து செல்ல மகன் கோகுல் வந்தார். தந்தையும் மகனும் வீட்டுக்கு செல்ல நடந்து சென்றனர். நள்ளிரவு 11 மணியளவில் கோபியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர்.
இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென ரோட்டில் நடந்து சென்ற அருள் மீது வேகமாக மோதி அங்கு ரோட்டோரம் நின்று கொண்டிருந்த ஒரு மினி டோர் ஆட்டோ மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அருள் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த நல்லகவுண்டன் பாளையத்தை சேர்ந்த தீபன் (17), வினோத்குமார் (17), மணிகண்டன் (18) ஆகியோரும் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அருள் மற்றும் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபர் தீபன் உள்பட 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
இந்த பரிதாப சம்பவம் குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள சீனாபுரம் கிழக்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 76). விவசாயியான இவர் தீவிர அ.தி.மு.க. தொண்டர். அப்பகுதியில் அ.தி.மு.க. கிளை செயலாளராகவும் முன்னாள் கவுன்சிலராகவும் இருந்து உள்ளார்.
மேலும் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் முதன்முதலாக கட்சி ஆரம்பித்தபோது அவரது ராமாபுரம் வீட்டிலேயே ஈஸ்வரன் தங்கி இருந்து கட்சி பணிகளை கவனித்து வந்தாராம். 2 மாதத்துக்கு பிறகு இதை அறிந்த எம்.ஜி.ஆர். அவரை அழைத்து அறிவுரை கூறி செலவுக்கு பணம் கொடுத்து ஊருக்கு அனுப்பி வைத்தாராம்.
ஊருக்கு வந்த ஈஸ்வரன் தீவிர கட்சி பணியில் ஈடுபட்டு வந்தார். தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க.வுக்காக பாடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் சென்னை ஆர்.கே.நகர் இடைதேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்ததையொட்டி ஈஸ்வரன் மிகவும் வேதனையில் இருந்தார்.
இந்த நிலையில் வீட்டில் இருந்த அவர் திடீரென விஷத்தை எடுத்து குடித்து கட்டிலில் படுத்து கொண்டார். சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார்.
தற்கொலை செய்து கொண்ட ஈஸ்வரனுக்கு பவளக்கொடி (72) என்ற மனைவியும், 4 மகள்களும், 1 மகனும் உள்ளனர்.
இறந்த ஈஸ்வரன் உடலுக்கு அ.தி.மு.க. கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். #tamilnews
ஈரோடு:
அந்தியூர் அடுத்த அம்மன் பாளையத்தில் உள்ள சாணார் தோட்டத்தில் 16 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கபட்டு கர்நாடக மாநிலத்துக்கு கடத்திய வழக்கில் அந்தியூர் சிந்தகவுண்டன் பாளையம், எட்டிக்குட்டை பாளையத்தை சேர்ந்த பிரகாஷ்(வயது 32) என்பரை போலீசார் கைது செய்து ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்ததால் பிரகாசை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீசார் பரிந்துரை செய்தனர்.
இதையடுத்து பிரகாசை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் பிரபாகர் உத்தரவிட்டார். xஇதையடுத்து பிரகாஷ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். #tamilnews
ஈரோடு:
ஈரோடு, சூரம்பட்டி வலசு, சங்குநகர் சாலை சேர்ந்தவர் வெங்கடேஷ்(வயது 50). கூலி தொழிலாளி. வெங்கடேஷ் நேற்று இரவு வேலையை முடித்து கொண்டு ஈரோடு பஸ் நிலையத்தில் சூரம்பட்டி வலசுக்கு செல்லும் பஸ்சுக்காக நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு டவுன் பஸ் ரேக்கில் ஒரு தனியார் பஸ்சை நிறுத்துவதற்காக டிரைவர் பின்னோக்கி இயக்கினார் . வெங்கடேஷ் பஸ் வருவதை கவனிக்காமல் சென்றார். இதனால் பஸ் வெங்கடேஷ் மீது மோதியது.இதில் பலத்த காயம் அடைந்த அவர் உயிருக்காக போராடினார்.
இது குறித்து ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வெங்கடேஷை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி வெங்கடேஷ் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் அளித்த பேட்டியில் கூறியதாவது.-
நடந்து முடிந்த ஆர்.கே.நகர் தேர்தலில் பணம் வெற்றி பெற்றுள்ளது. மத்திய, மாநில அரசுக்கு எதிரான பிரசாரமும் தினகரன் வெற்றி பெற ஒரு காரணமாக அமைந்தது.
தினகரன் வெற்றி பெற்றது அவர் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க தலைவர் என்பதற்காக இல்லை. தினகரன் வெற்றி பெற்றால் இந்த ஆட்சியை எப்படியாவது கலைத்து விடுவார் என்பதற்காக தான். மேலும் பாரதிய ஜனதாவுடன் தி.மு.க கைகோர்த்துவிடும் என்று சிலர் பொய்யான பிரசாரம் செய்தனர். இதுவும் தினகரன் பெற்றி பெற ஒரு காரணமாக இருந்தது.
அ.தி.மு.க.வினர் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தனர். ஆனால் அவை இன்று வரை வெறும் அறிவிப்புகளாகவே உள்ளது. உதாரணமாக அத்திகடவு-அவினாசி திட்டம் ரூ.250 கோடி மதிப்பில் நிறைவேற்றப்படும் என்றனர். ஆனால் அந்த திட்டம் என்னவாயிற்று?
இதே போல் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி பற்றி பேசினார்கள். அதுவும் அப்படியே தான் இருக்கிறது. ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டம் இப்படி பல்வேறு அறிவிப்புகள் பற்றி கூறி கொண்டே செல்லலாம்.
தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாதந்தோறும் வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
இதையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள விவசாய பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் தங்களது குறைகளை மனுக்களாக கொண்டு வந்தனர்.
அப்போது கீழ்பவானி சங்க தலைவர் நல்லசாமி கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் விடும் பிரச்சினை தொடர்பாக பேசும்போது மற்றொரு விவசாய பிரதிநிதி குறுக்கிட்டு பேசினார். இதனால் இருவருக்குமிடையே சிறிதுநேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே கலெக்டர் பிரபாகர் தலையிட்டு சமாதானம் செய்து வைத்தார்.
இதை தொடர்ந்து அவர் கூறும்போது, கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தையில் அதிக வசூல் செய்யப்படுவதாகவும், அடிப்படை வசதியின்றி மக்கள் தவிப்பதாகவும், விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பிரபாகர் கூறினார்.
ஈரோடு:
பவானி அடுத்த ஜி.டி.நாயுடு காலனியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி வசந்தா. இவர்களது மகள் மேரி (வயது 21). இவர் வளையங்காரம் பாளையம் பகுதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக நர்சாக பணி புரிந்தார். இவர் கடந்த 5-11-2017 அன்று மர்மமான முறையில் இறந்தார்.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்தவர்கள் மேரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர். ஆனால் மேரியின் தாய் வசந்தா தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக கூறினார்.
இது தொடர்பாக ஏற்கனவே கலெக்டரிடம் மனு கொடுத்து இருந்தார். தனது மகள் மர்ம மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
இந்த நிலையில் மேரியின் தாய் வசந்தா மற்றும் உறவினர்கள் இன்று ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் தனது மகள் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று மேரியின் தாய் வசந்தா கூறியுள்ளார்.
சத்தியமங்கலம் வனப்பகுதியில் தற்போது வண்ண பூரணி வனச்சுற்றுலா திட்டத்தின் மூலம் வனத்துறை வாகனத்தில் விடுமுறை தினத்தில் சுற்றுலா பயணிகளை அழைத்து சென்று வனப்பகுதியில் முக்கிய இடங்களை காண்பிக்கும் திட்டம் நடைபெற்று வருகிறது.
திம்பத்தில் இருந்து தலமலை ரோட்டில் செல்லும் சுற்றுலா வாகனத்தில் செல்லும் சுற்றுலா பயணிகள் யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்கு களை கண்டு ரசித்து வருகின்றனர்.
தற்போது பெஜலட்டி மற்றும் ராமர் அணை பஸ் நிறுத்தத்துக்கு இடையே உள்ள சாலையோர வனப் பகுதியில் யானைகள் ரோட்டின் ஓரமாக குட்டிகளுடன் கூட்டம், கூட்டமாக நிற்பதை காண முடிகிறது.
ஒரு சில நேரங்களில் யானைகள் திம்பம்-தலமலை வனச்சாலையில் நடமாடுவதால் இந்த சாலை வழியே பயணிக்கும் மலை கிராம மக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வனவிலங்குகள் நடமாடுவதால் மலை கிராம மக்களை வனச்சாலையில் பயணிக்கும்போது கவனத்துடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பத்திற்குட்பட்ட பகுதிகளில் அதிக அளவில் யானைகள் வசித்து வருகின்றன. உணவு, குடிநீர் மற்றும் தேவைக்கேற்ற சூழல் நிலவுவதைக்கொண்டு யானைகள் கூட்டம் கூட்டமாக இடம் பெயர்ந்து வாழும் தன்மை கொண்டவை.
இந்தாண்டு நன்கு பெய்த பருவ மழை காரணமாக சத்தியமங்கலம் வனப்பகுதி பசுமையாக காணப்படுகிறது. இதனால் யானைகளுக்கு தேவையான உணவு, குடிநீர் தேவை பூர்த்தியாகி அதிக அளவிலான யானைகள் இடம் பெயர்ந்துள்ளன. குறிப்பாக தலமலை வனப்பகுதியில் யானைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் கத்துவார் என்ற பகுதியை சேர்ந்தவர் ராஜ் (வயது 27).
இவர் ஈரோடு, சூளை பாவாயி தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் பஸ் நிறுத்தம் அருகே உள்ள சாயப்பட்டறையில் வேலை பார்த்தார்.இதற்காக அருகில் உள்ள அறையில் அவர் தங்கி இருந்தார்.
அங்கு 2 அறைகள் உள்ளன. ஒரு அறையில் ராஜ், ஒரு பெண், ஒரு குழந்தை, இன்னொரு வாலிபர் ஆகியோர் இருந்தனர். மற்றொரு அறையில் சாயப்பட்டறைகளில் வேலை பார்க்கும் சில வாலிபர்கள் தங்கி இருந்தனர்.
கடந்த புதன்கிழமை முதல் ராஜ் தங்கியிருந்த அறை பூட்டி கிடந்தது. இன்று காலையும் அறை திறக்கப்படவில்லை. அறையில் இருந்து துர்நாற்றமும் வீசியது. இதனால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
எனவே அவர்கள் இது தொடர்பாக வீரப்பன் சத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ராஜ் தங்கி இருந்த அறை கதவை உடைத்து திறந்து உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு ராஜ் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது தலை துண்டாகும் அளவுக்கு கழுத்து அறுக்கப் பட்டிருந்தது. இன்னும் கொஞ்சம் அறுத்திருந்தால் தலை துண்டாகி இருக்கும்.
அவரை கொலை செய்தது யார்? எதற்காக கொலை நடந்தது? என்பதை கண்டறிய போலீசார் துரித நடவடிக்கையில் இறங்கினர்.
சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் வைதேகி வரவழைக்கப்பட்டது. அது ராஜின் பிணத்தை மோப்பம் பிடித்தது. பின்னர் அங்கிருந்து அருகில் உள்ள பஸ் நிறுத்தத்துக்கு வந்தது.
அங்கு வட்டமிட்டது. பின்னர் 2 கி.மீ. தொலைவில் உள்ள செங்குந்தர் நகருக்கு ஓடியது. அங்குள்ள சாயப்பட்டறைக்குள் நுழைந்த மோப்ப நாய் அங்கு வட்டமிட்டது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
எனவே மோப்ப நாயை மீண்டும் கொலை நடந்த இடத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு ராஜின் பிணத்தை மோப்ப நாய் நன்றாக மோப்பம் பிடிக்க வைத்தனர்.
மோப்பம் பிடித்த நாய் அங்கிருந்து முன்பு போல பஸ் நிறுத்தத்துக்கு வந்து வட்டமிட்டு பின்னர் செங்குந்தர் நகர் சாயப்பட்டறைக்கு ஓடியது. அருகில் உள்ள இன்னொரு சாயப்பட்டறை பகுதியிலும் வட்டமிட்டது.
எனவே கொலையாளி அந்த சாயப்பட்டறைகளில் வேலை பார்ப்பவராக இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. எனவே அந்த 2 சாயப்பட்டறைகளிலும் பணிபுரியும் பெண்கள் உள்பட 10 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராஜ் உடன் அறையில் பெண் யார்? வாலிபர் யார்? குழந்தை யாருடையது? என்பது தெரியவில்லை. கள்ளக்காதல் தகராறில் இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு காரணமா? என்பதும் தெரியவில்லை.
இது பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் ஈரோட்டில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது.
கொடுமுடி அருகே கொளாநல்லி என்ற இடத்தில் தண்டவாளத்தில் சம்பவத்தன்று முதியவர் ஒருவர் உடல் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணையில் இறந்து கிடந்தவர் கொடுமுடி அடுத்த வீரப்பகவுண்டன் காட்டூரை சேர்ந்த பழனிசாமி (77) என தெரியவந்தது. பழனிசாமி ரெயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடந்த போது ரெயில் மோதி இறந்தது தெரிய வந்தது.
இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கவுந்தப்பாடி:
கவுந்தப்பாடியில் கோபி ரோட்டில் வெளியூர் சுற்று பயணம் சென்று விட்டு ஒரு சுற்றுலா வேன் வந்து நின்றது. இந்த வேன் சூப்பர் கூல் சோமசுந்தரம் என்பவருக்கு சொந்தமானது.
வேனில் இருந்து பயணிகள் இறங்கி சென்று விட்டனர். டிரைவர் செந்தில் வேனை நிறுத்தி விட்டு டீ குடிக்க சென்று விட்டார்.
அப்போது வேனின் என்ஜின் பகுதியில் இருந்து திடீரென தீ பிடித்தது. பதறிய படி டிரைவர் ஓடி சென்று அணைக்க முயன்றார். ஆனால் தீயை அவரால் அணைக்க முடியவில்லை.
இது பற்றி கோபி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.
எனினும் இந்த தீ விபத்தில் வேனின் என்ஜின், சீட்டுகள் உள்பட வேன் முழுவதும் எரிந்து நாசமாகி விட்டது. இதன் சேத மதிப்பு ரூ.18 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ரோட்டோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா வேன் எரிந்த சம்பவம் கவுந்தப்பாடியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொடுமுடி -கணபதி பாளையம் நால்ரோடு அருகில் உள்ள சின்னம்மாபுரம் என்ற பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி (வயத 70). இவர் 23-ம் தேதி இரவு ஈரோடு கருர் மெயின் ரோட்டின் இடது புறமாக நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் வந்த கார் இவர் மீது மோதியதில் பலத்த அடிபட்டு கீழே விழுந்து விட்டார்.
உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். குப்புசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.






