என் மலர்tooltip icon

    ஈரோடு

    அரசு போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தில் பங்கேற்காமல் கோபியில் ஹெல்மெட் அணிந்து பஸ்ஸை இயக்கிய டிரைவர் இன்று கண்டக்டர் பற்றாக்குறை காரணமாக கண்டக்டராக பணி புரிந்தார்.

    கோபி:

    ஈரோடு மாவட்டத்திலும் அரசு போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் இன்று 5-வது நாளாக தொடர்கிறது.

    போராட்டத்தில் பங்கேற்காமல் இயக்கப்படும் அரசு பஸ்கள் மீது சில இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

    எனவே போராட்டத்தில் பங்கேற்காமல் பஸ்களை இயக்கும் டிரைவர்கள் பாதுகாப்பாக இயக்கி வருகிறார்கள்.

    கோபி அரசு போக்குவரத்து பணிமனையில் பணிபுரியும் அண்ணா தொழிற்சங்க டிரைவரான எஸ்.எஸ். சிவக்குமார் ஹெல்மெட் அணிந்து பணியில் ஈடுபட்டார்.

    கோவையில் இருந்து கோபிக்கு வந்த பஸ்சில் அவர் ஹெல்மெட் அணிந்து வந்ததை பயணிகள் வித்தியாசமாக பார்த்தனர்.

    இந்த நிலையில் இன்று அவர் கண்டக்டராக மாறினார். ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக கண்டக்டர் பற்றாக்குறை ஏற்பட்டது.

    எனவே வேலைக்கு வந்திருந்த டிரைவர் எஸ்.எஸ். சிவக்குமார் இன்று ஈரோடு- சத்தியமங்கலம் செல்லும் பஸ்சில் கண்டக்டர் வேலை பார்த்தார்.

    கோபி பஸ் நிலையத்தில் கண்டக்டர் பையை தோளில் தொங்கவிட்டபடி எஸ்.எஸ் சிவக்குமார் பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்ததை பார்த்த மக்கள் அவரை பற்றி பரபரப்பாக பேசிக் கொண்டனர்.

    அந்த பஸ்சில் தற்காலிக ஊழியர் ஒருவர் டிரைவராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews

    போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் இன்று 3-வது நாளாக நீடிப்பதால் ஈரோடு மாவட்டத்தில் அரசு பஸ்கள் 86 சதவீதம் ஓடவில்லை.

    ஈரோடு:

    ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். நேற்று முன்தினம் மாலை முதலே வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்தனர்.

    நேற்று 2-வது நாளாக போராட்டம் தீவிரம் அடைந்தது. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 833 அரசு பஸ்கள் உள்ளன. இதில் 750 பஸ்கள் நேற்று இயங்கவில்லை. இதனால் மக்கள் அவதி அடைந்தனர்.

    இன்றும் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் 3-வது நாளாக நீடித்தது. மாவட்டத்தில் இன்று 833 பஸ்களில் 112 பஸ்கள் அதாவது 14 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    மக்கள் பாதிக்காத வகையில் பஸ்களை இயக்க மாவட்ட போக்குவரத்து கழகம் மாற்று ஏற்பாடுகளை செய்து வருகிறது. அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள், தற்காலிக ஓட்டுனர்களை கொண்டு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    குறைந்த அளவே அரசு பஸ்கள் இயக்கப்பட்டதால் இன்றும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் பஸ்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர்.

    ஈரோடு பஸ் நிலையத்தில் இன்றும் காலை பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் பணியாளர்கள் என பலர் பஸ்கள் கிடைக்காமல் காத்திருந்தனர். பலர் தனியார் பஸ்களில் பயணம் செய்தனர்.

    அரசு பஸ்கள் ஸ்டிரைக்கை தொடர்ந்து ஈரோட்டில் தனியார் பஸ்களின் சேவை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இன்று தனியார் பஸ்கள் ஈரோட்டில் இருந்து பல்வேறு பகுதிக்கு அதிக எண்ணிக்கையில் இயக்கப்பட்டன.

    ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து சேலம், கோவைக்கு அதிகளவில் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கல்லூரி மாணவர்கள், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பஸ்சின் படிக்கட்டில் தொங்கி கொண்டு பயணம் செய்வதை காண முடிந்தது.

    86 சதவீத பஸ்கள் இயக்கப்படாதால் சென்னிமலை ரோட்டில் அரசு பஸ் டெப்போவில் பஸ்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அங்கு தாலுகா இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சேகர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதே போல் ஈரோடு பஸ் நிலையத்தில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் அதிவிரைவு படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    போராட்டம் குறித்து ஈரோடு போக்குவரத்து தொழில் சங்கத்தினர் கூறும் போது, ‘‘எங்கள் நியாயமான கோரிக்கைகளை அரசு ஏற்காததால் தான் நாங்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தள்ளப்பட்டோம்.

    ஈரோடு மாவட்டத்தில் இன்று 3-வது நாளாக எங்கள் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. எங்கள் போராட்டம் குறித்து உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. எங்கள் தரப்பு கோரிக்கைகளையும், வாதத்தையும் வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் எடுத்து கூறி முறையிடுவோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த நான் பஸ்சை இயக்கியதால் யாரும் தாக்கி விடக்கூடாது என்பதற்காகவே ஹெல்மெட் அணிந்திருந்தேன் என்று டிரைவர் சிவக்குமார் கூறினார்.

    கோபி:

    தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஈரோடு மாவட்டத்திலும் இந்த போராட்டம் நீடித்து வருகிறது.

    கோபி போக்குவரத்துக் கழக பணிமனையில் 80 அரசு பஸ்கள் உள்ளன. இன்று மொத்தம் 50 பஸ்கள் இயக்கப்பட்டன.

    இந்த பஸ்கள் சத்தியமங்கலம், ஈரோடு, கோவை, பவானி, திருப்பூர், மதுரை, புளியம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டன. பயணிகளும் அதிக அளவில் பஸ்களில் செல்ல வந்திருந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை 8.45 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்ட அரசு பஸ் கோபி பஸ் நிலையத்துக்குள் வந்தது. அந்த பஸ்சின் டிரைவர் எஸ்.எஸ்.சிவக்குமார் ஹெல்மெட் அணிந்திருந்தார்.

    அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த அவர் நேற்று முதல் கோவைக்கு பஸ் இயக்கி வருகிறார். ஹெல்மெட் அணிந்தபடி பஸ் இயக்கியது ஏன்? என்று சிவக்குமாரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் போராட்டத்துக்கு நடுவே நான் பஸ்சை இயக்கி வருகிறேன். எனவே என்னை யாரும் தாக்கி விடக்கூடாது என்பதற்காகவே நான் ஹெல்மெட் அணிந்தபடி பஸ்சை இயக்கி வந்தேன்.

    நான் ஹெல்மெட் அணிந்து வந்ததை மக்கள் வித்தியாசமாக பார்த்தனர். கோவை பஸ் நிலையம், கருமத்தம்பட்டி அருகே உள்ள சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் மக்கள் என்னை செல்போனில் படம் பிடித்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #tamilnews

    அந்தியூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான இ.எம்.ஆர்.ராஜா அரசு பஸ்சை இயக்கிய தகவல் அறிந்த தி.மு.க. தொழிற்சங்கத்தினர் பஸ் நிலையத்தில் எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்டனர்.
    அந்தியூர்:

    தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் முன் அறிவிப்பின்றி கடந்த 2 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தியூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான இ.எம்.ஆர்.ராஜா நேற்று பிற்பகல் 3 மணி அளவில் திடீரென அந்தியூர் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு வந்தார். அங்கு ஏராளமான பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

    வழக்கமாக வெள்ளை வேட்டி சட்டையுடன் வரும் அவர் காக்கி பேண்ட், வெள்ளை சட்டையுடன் வந்திருந்தார். அவர் நேராக கிளை மேலாளர் அறைக்கு சென்று அவரிடம் ‘பொது மக்களுக்காக நான் பஸ் ஓட்டப்போகிறேன்’ என்று கூறினார். தன்னிடம் இருந்த கனரக வாகன ஓட்டுனர் உரிமத்தை கிளைமேலாளரிடம் எம்.எல்.ஏ. காண்பித்து ஒப்புதல் பெற்றார்.

    அதைத்தொடர்ந்து அங்கு நின்ற பவானி செல்லும் பஸ்சின் டிரைவர் இருக்கையில் அமர்ந்து சிரமமின்றி பஸ்சை இயக்கினார். பஸ் நிலையத்துக்கு பஸ்சை அவர் ஓட்டி சென்றதும், அங்கு பவானிக்கு செல்ல காத்திருந்த பயணிகள் அந்த பஸ்சில் திபுதிபு என ஏறினார்கள். பஸ் கண்டக்டராக சரவணன் இருந்தார்.

    எம்.எல்.ஏ. பஸ்சை இயக்கிய தகவல் அறிந்து பயணிகள் ஆச்சரியம் அடைந்தனர். அந்த பஸ்சில் 40 பேர் பயணம் செய்தனர். பல இடங்களில் பயணிகளை ஏற்றி இறக்கி விட்டு 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பவானி சென்றார். அங்கிருந்து 28 பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் அந்தியூர் வந்தார். மொத்தம் அவர் 36 கிலோ மீட்டர் தூரத்துக்கு பஸ்சை ஓட்டினார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பஸ்சை இயக்கிய தகவல் அந்த பகுதியில் பரவியது.

    அந்தியூர் பஸ் நிலையத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏ. ஓட்டிய பஸ் வந்ததும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. தொழிற்சங்கத்தினர் திரண்டு வந்து மறியல் செய்தனர். போலீசாரின் கோரிக்கையை ஏற்று எம்.எல்.ஏ. அங்கிருந்து சென்றார். இதைத்தொடர்ந்து போராட்டத்தை தி.மு.க.வினர் கைவிட்டனர்.

    கடம்பூர் அருகே பழைய கிணற்று தண்ணீரிரை குடித்த பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதில் மூதாட்டி ஒருவர் இறந்தார்.

    சத்தியமங்கலம்:

    கடம்பூரை அடுத்த அட்டணை மலை கிராமத்தில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 20 நாட்களுக்கும் மேலாக இவ்வூரில் உள்ள ஆழ்துளை கிணறு மோட்டார் பழுது ஏற்பட்டுள்ளது.

    இதனை சரி செய்ய ஊராட்சி நிர்வாகத்தினர் முன் வராததால் பொதுமக்கள் ஊரில் உள்ள பழைமையான பொது கிணற்றில் தண்ணீரை எடுத்து குடித்துள்ளனர்.

    இதனால் இந்த ஊரை சேர்ந்த அரப்புளியம்மாள் (வயது 70) முருகன் (55) சுமதி (25) துரைசாமி (55) பழனிச்சாமி (45) அன்பரசு (16) சுதாகர் (12) சாந்தி(30) தருண்(2) ரசித் (3) அபீஸ் வரி (7) முரளி (4) ராமர் (50) செல்லம்மாள் (62) குப்புசாமி (60) உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோருக்கு வயிற்று போக்கு-வாந்தி ஏற்பட்டது.

    இதில் பல பேர் சத்தி தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று தேறியுள்ளனர். இதில் செல்லம்மாள் என்பவருக்கு அதிகபடியான வயிற்று போக்கு ஏற்பட்டதால் நேற்று மாலை பசுவனா புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு பின் வீடு திரும்பியுள்ளார்.

    எங்களுக்கு குடிநீர் மோட்டார் பழுது ஏற்பட்ட தால் பழைய கிணற்று நீரை குடித்தோம். அதனால் எங்கள் ஊரில் உள்ள பெரும்பாலானோருக்கு வயிற்று போக்கு ஏற்பட்டு அவதிப்பட்டுள்ளனர்.

    நேற்று மாலைதான் நட மாடும் மருந்துவ குழுவினர் மாத்திரைகள் வழங்கி விட்டு பவுடரை இரைத்து சென்றனர். இந்த ஊரை சேர்ந்த மாதி (65) என்பவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு இறந்துள்ளார்.

    கடந்த 20 நாட்களாக அவதிப்படுகிறோம். 2 நடமாடும் மருந்துவ குழு உள்ளன. இவர்கள் யாரும் ஊர் பக்கமே வரவில்லை. குடிநீர் மோட்டார் பழுதை உடனே சரி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் வேதனையோடு தெரிவித்தனர். 

    ஈரோடு, சத்தியமங்கலம், கோபி, பெருந்துறை, அந்தியூர், பு.புளியம்பட்டி, பவானி, கொடுமுடி உள்பட மாவட்டம் முழுவதும் பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை. 20 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.
    ஈரோடு:

    அரசு பஸ் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இந்த ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை 13 சங்கங்கள் ஏற்க மறுத்து வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தது.

    இதையொட்டி நேற்று இரவில் இருந்தே வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்து விட்டனர்.

    ஈரோடு மாவட்டத்திலும் ஈரோடு, சத்தியமங்கலம், கோபி, பெருந்துறை, அந்தியூர், பு.புளியம்பட்டி, பவானி, கொடுமுடி உள்பட மாவட்டம் முழுவதும் பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை. 20 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. மேலும் அரசு டவுன் பஸ்களும் பல இயக்கப்படவில்லை. இன்று காலையில் ஒன்றிரண்டு பஸ்கள் மட்டுமே ஓடியது.

    இந்த பஸ்களில் வழக்கத்தைவிட பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்தது. குறைவாக இயக்கப்பட்ட பஸ்களில் ஒப்பந்த டிரைவர்கள்-கண்டக்டர்களை வைத்து இயக்கி வருகிறார்கள்.

    அரசு பஸ்கள் ஓடாவிட்டாலும் தனியார் பஸ்கள் ஓடியது. அரசு பஸ்கள் இயங்காததையொட்டி சில தனியார் பஸ்களில் கட்டணம் அதிக அளவில் வசூலிக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது.

    வழக்கம்போல் அரசு பஸ்களில் வெளியூர்களுக்கு வேலைக்கு போகும் தொழிலாளர்கள் மற்றும் வெளியூர்களுக்கு பள்ளி-கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் படிக்கும் மாணவ- மாணவிகள் இன்று காலை பெரிதும் அவதிப்பட்டனர்.

    பஸ்கள் ஓடாததால் இந்த பஸ்கள் ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள டெப்போவில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பஸ்கள் ஓடாததையொட்டி ஈரோடு பஸ் நிலையம் இன்று காலை முதல் வெறிச்சோடி காணப்பட்டது.
    சீனிவாசபுரம் அருகே குடிபோதையில் நண்பனை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
    பவானி:

    பவானி மீனாட்சி கல்யாண மண்டபம் சாலை பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் அன்பு (வயது 30). அதே பகுதியை சேர்ந்த முத்துச்சாமி மகன் கார்த்தி,

    சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகன் சசி (31). இவர்கள் மூவரும் நண்பவர்கள் இவர்கள் மூவருக்கும் குடி பழக்கம் இருந்துள்ளது. கடந்த 2015 பிப்ரவரி 8-ம் தேதி இரவு 10 மணியளவில் குடிபோதையில் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் அது அவர்களுக்கு கொஞ்ச நேரம் மட்டுமே நீடித்தது.

    திடீரென அவர்களுக்குள் வாய்தகராறு ஏற்பட்டு அடிதடியில் ஆரம்பித்து பிறகு அது கொலையில் முடிந்தது. கார்த்தியை இருவரும் அடித்து உதைத்தனர். கார்த்தியை அன்புராஜ் கத்தியால் குத்தினார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பு, சசி இருவருரையும் கைது செய்தனர்.

    அப்போதைய இன்ஸ்பெக்டர் சண்முகம் விசாரனை செய்ததில் அவர்கள் மூட்டை தூக்கும் குத்தூசியால் குத்தி கார்த்தியை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டனர்.

    அதன் அடிப்படையில் பவானி நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டு விசாரனை நடந்து வந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நான்காவது கூடுதல் நீதிபதி ஆனந்த் கொலையாளி அன்புக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

    இதனை தொடர்ந்து கொலையாளி அன்பு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சசி என்பவர் ஏற்கெனவே இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    தாளவாடி அருகே சோளத்தட்டு ஏற்றி சென்ற டிராக்டர் மின் கம்பம் மீது உரசியதில் தீ பற்றி எரிய தொடங்கியது.
    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ளது தர்மாபுரம். இங்கிருந்து தொட்டகாஜனூருக்கு சிவப்பா என்பவர் டிராக்டரில் சோளத்தட்டு ஏற்றி சென்று கொண்டிருந்தார்.

    தாளவாடி அருகே சூசைபுரம் பிரிவில் வந்த போது ரோட்டில் குறுக்கே சென்ற மின் கம்பி சோளத்தட்டு மீது உரசியது. இதில் சோளத் தட்டு தீப்பிடித்து மள...மள...வென எரிந்தது.

    இதை கண்டவர்கள் டிரைவரிடம் சொன்னதால் உஷாரான சிவப்பா டிராக்டரை நிறுத்தி கீழே குதித்தார்.

    அவரும் அவருக்கு உதவியாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் அங்கு ஓடி வந்தனர். இதனிடையே டிராக்டரும் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    மேலும் தீப்பிடித்து எரியாமல் இருக்க வேகம் வேகமாக டிராக்டரில் எரிந்து கொண்டிருந்த சோளத்தட்டுகளை நடுரோட்டில் கொட்டினர்.

    டிராக்டரில் பிடித்த தீயையும் அணைத்தனர். சுமார் 40 நிமிடம் போராடி டிராக்டரில் பிடித்த தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

    இந்த திடீர் தீ விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தாளவாடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சத்தியமங்கலம் வனப்பகுதியில் இரண்டாவது நாளாக இன்று வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப் பகுதியில் ஆண்டுக்கு 2 தடவை வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும். நேற்று முதல் சத்தி புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது. சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என்.பாளையம், தலமலை, ஆசனூர், கேர்மாளம் மற்றும் தாளவாடி ஆகிய வனச்சரகங்களை சேர்ந்த 230 வனத்துறை ஊழியர்கள் இந்த பணியில் ஈபட்டு வருகிறார்கள்.

    இவர்கள் 5 பேர் கொண்ட குழுக்களாக பிரிந்து காட்டுக்குள் புகுந்து வனவிலங்குகளின் கால்தடம், அதன் எச்சத்தை அளவீடு செய்கிறார்கள். நீர்நிலைகளில் பதிவாகி உள்ள கால்தடத்தை வைத்தும் கணக்கிட்டு வருகிறார்கள். ஜி.பி.எஸ். கருவி, ரேஞ்ச் வைண்டர், காம்பஸ் உதவி மற்றும் முதன் முதலாக ஆண்ராய்டு மொபைல் செயலி மூலம் வனவிலங்குகளின் கணக்கெடுப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    நேற்று காலை 6 மணிக்கு வனத்துக்குள் நுழைந்த வனக்குழுவினர் மாலை 6 மணிக்கு வெளியே வந்தனர். இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) 2-வது நாளாக வனக்குழு படையினர் அடர்ந்த காட்டுக்குள் புகுந்தனர்.

    வரும் 8-ந்தேதி வரை இந்த கணக்கெடுப்பு பணி நடைபெறும். நேற்று முதல் எடுத்த கணக்கெடுப்பில் ஏராளமான யானைகள், காட்டெருமைகள் மற்றும் சிறுத்தை, கரடிகளை நேரில் கண்டதாக வனக்குழுவினர் தெரிவித்தனர்.
    பழவகைகளின் விளைச்சல் அதிகரித்து, வரத்தும் சீரானதால் ஆப்பிள், திராட்சை போன்ற பழங்கள் போன்றவை மார்க்கெட்டில் அதிகளவில் குவிந்துள்ளது.
    ஈரோடு:

    கடந்த சில மாதங்களாக ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு, பைன்ஆப்பிள் போன்ற பழங்களின் விளைச்சல் குறைவானதால் அவற்றின் வரத்து குறைந்து காணப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பழவகைகளின் விளைச்சல் அதிகரித்து, வரத்தும் சீரானதால் ஆப்பிள், திராட்சை போன்ற பழங்கள் போன்றவை மார்க்கெட்டில் அதிகளவில் குவிந்துள்ளது.

    இது குறித்து நேதாஜி தினசரி மார்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது.-

    வழக்கமாக ஐப்பசி மாதம் முதல் தை மாதம் வரை மழை, பனி போன்ற காரணத்தால் பழங்கள் வரத்து அதிகரிக்கும். நடப்பாண்டிலும் இதே நிலை தொடர்வதால் சாத்துக்குடி, ஆப்பிள், போன்ற பழ வகைகள் வரத்து அதிகரித்துள்ளது.

    ஈரோடு தினசரி மார்க்கெட்டில் டில்லி மற்றும் சிம்லா ஆப்பிள் கிலோ ரூ.120-க்கும், சாத்துக்குடி ரூ.50 முதல் ரூ.65 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    விதை இல்லாத திராட்சை ரூ.80-க்கும், பன்னீர் திராட்சை ரூ.50-க்கும், கருப்பு திராட்சை ரூ.50-க்கும் கமல ஆரஞ்சு ரூ.60-க்கும், பைன் ஆப்பிள் ரூ.30 முதல் 40 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. ரூ.70-க்கு விற்ற கொய்யா பழம் தற்போது ரூ,50-க்கு விற்கப்படுகிறது. பொங்கல் பண்டிகை வரை இதே நிலை தான் நீடிக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    விளைச்சல் அதிகரித்த காரணத்தால் மார்க்கெட்டிற்கு கொண்டு சென்ற தக்காளியை திம்பம் மலைப்பாதை பகுதியில் உள்ள குரங்குகளுக்கு உணவாக விவசாயிகள் கொட்டி சென்றனர்.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் பகுதியில் தக்காளி விளைச்சல் அதிகரிப்பு காரணமாக எதிர் பார்த்த விலை கிடைக்காததாலும் வாங்வதற்கு ஆளில்லாததாலும் கொண்டுசென்ற தக்காளியை குரங்குகளுக்கு உணவாக கொட்டி சென்றனர்.

    சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அதிக அளவில் தக்காளி பயிரிடப்படுகிறது.

    இங்கு விளையும் தக்காளி சத்தியமங்கலம், கோபி, ஈரோடு, திருப்பூர், கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தினசரி காய்கறி மார்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    இந்த நிலையில் தற்போது தக்காளி அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளதால் விளைச்சல் அதிகரித்த காரணத்தால் கடுமையாக விலை வீழ்ச்சியடைந்துள்ளது. காய்கறி மார்க்கெட்டில் கிலோ ரு.5-க்கு விற்பனையாகும் தக்காளியை வியாபாரிகள் விவசாயிகளிடம் ரு.1.50 முதல் ரு.2 வரை விலை கொடுத்து கொள்முதல் செய்கின்றனர்.

    இதனால் தக்காளி பயிரிட்ட விவசாயிகள் கடுமையான நஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர். செடியிலிருந்து தக்காளியை பறிப்பதற்கு கூலி கொடுக்க முடியாமல் தவித்து வரும் விவசாயிகள் தாங்களே நேரடியாக கொண்டு விற்பனை செய்யலாம் என முடிவெடித்து சரக்கு ஆட்டோவில் தக்காளியை விற்பனை செய்வதற்காக கோவை மற்றும் திருப்பூர் மார்க்கெட்டிற்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் அங்கு எதிர் பார்த்த விலை கிடைக்காததாலும் தக்காளியை வாங்க ஆளில்லாததாலும் கொண்டுசென்ற தக்காளியை திம்பம் மலைப்பாதை 3-வது கொண்டை ஊசி வளைவு அருகே குரங்குகளுக்கு உணவாக கொட்டி சென்றனர்.
    ஈரோடு உள்படமாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மதுபான கடைகளில் பார்கள் செயல்படாததால் குடிமகன்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 175 டாஸ்மாக் மது பானக்கடைகள் உள்ளன. இதில் ‘பார்’ (குடிப்பதற்கு வசதியாக) வசதி கொண்ட மதுக்கடைகள் 76 உள்ளன,

    “பார்”வசதி கொண்ட கடைகளில் குடிமகன்கள் வந்து மிகவும் சவுகரியமாக உட்கார்ந்து வேண்டிய நொறுக்கு தீனிகளை (சுண்டல், ஆம்லட், ஆப் பாயில், சிக்கன் சில்லி, மீன் வறுவல், கொய்யா, வெள்ளரி) வாங்கி சாப்பிட்டு விட்டு செல்வார்கள்.

    வீடுகளுக்கு மது பாட்டில்களை வாங்கி கொண்டுபோய் குடித்தால் அங்கு ‘அடி’ விழும் என்பதால்பெரும்பாலான மது பிரியர்கள் “பார்” வசதி கொண்ட மதுக்கடைகளையே விரும்புகிறார்கள்.

    தற்போது மதுகடைகளில் உள்ள பார்களின் உரிமத்தை பார் உரிமையாளர்கள் புதுப்பிக்காததால் தமிழ்நாட்டில் ஏராளமான மதுபான பார்கள் மூடப்பட்டு கிடக்கிறது.

    தமிழகம் முழுவதும் 2500-க்கும் மேற்பட்ட பார்கள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டு கிடக்கிறது.

    இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் பார்வசதி கொண்ட 75 கடைகளில் 5 கடைகள் மட்டுமே உரிமத்தை புதுப்பித்து உள்ளன. மீதி உள்ள 71 பார்களின் உரிமையாளர்கள் பார்களை புதுப்பிக்காததால் அவை மூடப்பட்டு கிடக்கிறது.

    இதுபற்றி ஈரோடு மாவட்ட டாஸ்மார்க் பொது மேலாளர் தேவிகாராணி ‘மாலைமலர்’ நிருபரிடம் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 175 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் 76 கடைகளில் பார்வசதி உள்ளது. இதில் 5 பேர் மட்டுமே பார்களை புதுப்பித்துள்ளனர். மீதி உள்ள 71 பார்கள் மூடப்பட்டு கிடக்கின்றன.

    நவம்பர் மாதமே டெண்டர் முடிந்துவிட்டது. டிசம்பர்மாத கடைசிவரை பார்களின் உரிமைதாரர்களுக்கு உரிமைகளை புதுப்பிக்க கெடு விதிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் புதுப்பிக்காததால் பார்கள் மூடப்பட்டு உள்ளது. அரசு நடவடிக்கை என்னவோ அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் அரசு சொல் படி அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு தேவிகாராணி கூறினார்.

    ஈரோடு உள்படமாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மதுபான கடைகளில்பார்கள் செயல்படாததால் குடிமகன்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர்.

    கடைகளில் பாட்டில்களை வாங்கி கொண்டு எங்கேயாவது ஒதுக்குப்புற இடம் உள்ளதா? என நா(தே)டி ஒடுகிறார்கள். இதனால் பெரும்பாலான பொது இடங்கள் திறந்த வெளி “பார்”ஆக மாறிவருகிறது.
    ×