search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூதாட்டி மரணம்"

    • முதியவர்களின் வீடுகளுக்கு அதிகாரிகள் நேரில் சென்று தபால் வாக்குப்பதிவினை பெற்றனர்.
    • வாழ்நாளின் இறுதிக்கட்டத்திலும் தனது ஜனநாயக கடமையை தாயம்மாள் செய்து முடித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அவிநாசி:

    பாராளுமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்குப்பதிவு வசதியை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியுள்ளது.

    இதையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மாற்றுத்திறனாளிகள், முதியவர்களின் வீடுகளுக்கு அதிகாரிகள் நேரில் சென்று தபால் வாக்குப்பதிவினை பெற்றனர்.

    அவிநாசி பேரூராட்சிக்கு உட்பட்ட 13-வது வார்டு கங்கவார் வீதியில் வசித்து வரும் வடிவேல் என்பவரின் மனைவி தாயம்மாள் (வயது 94) என்பவரது வீட்டிற்கும் நேற்று முன்தினம் அதிகாரிகள் சென்றனர். அதிகாரிகள் கொண்டு வந்த தபால் வாக்குப்பதிவு பெட்டியில் தாயம்மாள் தனது வாக்கினை செலுத்தினார். இந்நிலையில் நேற்று தாயம்மாள் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். வாழ்நாளின் இறுதிக்கட்டத்திலும் தனது ஜனநாயக கடமையை தாயம்மாள் செய்து முடித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் தாராகவுரி இறந்தார்.
    • நாய் எஜமானியை பிரிய முடியாமல் பாசத்துடன் உடலை சுற்றி சுற்றி வந்த காட்சிகள் காண்போரை கண் கலங்க வைத்தது.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள சிம்ம தீர்த்தம் பகுதியில் வசித்து வந்தவர் தாராகவுரி (வயது 85).

    பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட இவர் சுதந்திரத்திற்கு பிறகு குஜராத் மாநிலத்தில் குடியேறினார். பின்னர் மும்பையில் ஆசிரியையாக பணியாற்றினார். திருமணமாகாத இவர் சில ஆண்டுகள் சென்னையில் வசித்து வந்தார்.

    வயது முதிர்வு காரணமாக தனித்து வசிக்க இயலாத நிலையில், திருவண்ணாமலையில் உள்ள உறவினர் வீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக தங்கி இருந்தார்.

    இவர் தனிமையில் இருந்ததால் தனது பாதுகாப்பிற்காக நோபு என்ற நாய் ஒன்றை வளர்த்து வந்தார். தினமும் அதற்கு உணவு வைத்து அதனுடன் விளையாடி வந்தார்.

    இந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் தாராகவுரி இறந்தார். தனது எஜமானி இறந்ததை அறியாமல் அந்த நாய் சுற்றி சுற்றி வந்து மூதாட்டியின் உடல் மீது படுத்துக்கொண்டு அவரை எழுப்ப முயன்றது.

    அவரது உடலை அடக்கம் செய்ய யாரும் இல்லாததால் சமூக சேவகர் மணிமாறன் உதவியை நாடினர். இதையடுத்து சமூக சேவகர் மணிமாறன் தாராகவுரியின் உறவினர்கள் தெரிவித்த சம்பிரதாயங்களின் அடிப்படையில் சடங்குகளை செய்தார்.

    தகனம் செய்ய கொண்டு செல்ல முயன்ற போது நாய் உடலை எடுக்க விடவில்லை. பின்னர் வாகனத்தில் உடலை ஏற்றியபோது அந்த வாகனத்தில் நாயும் ஏறிக்கொண்டது. அப்போதும் அந்த பெண்ணின் உடல் அருகே நின்று வாலை ஆட்டிக் கொண்டே தவித்தது.

    மேலும் சுடுகாடு வரை உடன் வந்த வளர்ப்பு நாய் இறுதிச் சடங்குகள் முடியும் வரை அங்கேயே பரிதவிப்புடன் இருந்தது. இதையடுத்து மூதாட்டியின் உடல் கிரிவலப் பாதையில் உள்ள சுடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    நாய் எஜமானியை பிரிய முடியாமல் பாசத்துடன் உடலை சுற்றி சுற்றி வந்த காட்சிகள் காண்போரை கண் கலங்க வைத்தது.

    மூதாட்டியின் உறவினர்கள் நாயை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

    • 113 வயது வரை காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட எந்த பாதிப்பிற்கும் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றதில்லை.
    • அனைவரிடமும் பாசமாக இருப்பார். யாரிடமும் கோபப்படமாட்டார்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி தெற்கு தெருவை சேர்ந்தவர் அந்தோணி. இவரது மனைவி முப்பிடாதி என்ற ஏசம்மாள் (வயது113). இவர்களுக்கு 8 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

    மேலும் மருமகள்கள், மருமன்கள், பேரப்பிள்ளைகள், கொள்ளுபேரன், பேத்திகள் என இவர்களின் மொத்த குடும்ப உறுப்பினர்கள் 68 பேர் ஆகும். இதில் பல்வேறு காரணங்களால் 8 பேர் உயிரிழந்தனர். தற்போது 60 பேர் உள்ளனர்.

    முப்பிடாதி கடந்த 1910-ம் ஆண்டு பிறந்தவர். இந்நிலையில் தனது 113-வது வயதில் மரணம் அடைந்தார். இது குறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், முப்பிடாதி தனது வாழ்நாளான 113 வயது வரை காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட எந்த பாதிப்பிற்கும் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றதில்லை. நோய்களுக்கு வென்னீர் குடிப்பது நெற்றியில் பத்து போடுவது என இயற்கை வைத்தியம் பார்த்துக்கொள்வார். அளவான நவதானிய உணவுகளை மட்டும் சாப்பிட்டு வந்தார். இவருக்கு ஆங்கில மருத்துவ முறையான அலோபதி என்றாலே என்ன வென்று தெரியாது.

    அனைவரிடமும் பாசமாக இருப்பார். யாரிடமும் கோபப்பட மாட்டார். கணவரை இழந்தபிறகும் தனது குடும்பத்தினரால் மகிழ்ச்சியாக வாழ்ந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் அவரது 113-வது பிறந்த நாளை நாங்கள் உற்சாகமாக கொண்டாடினோம். இந்த நிலையில் அவர் மரணம் அடைந்தது வேதனை அளிக்கிறது என்று குடும்பத்தினர் தெரிவித்தனர். 

    • ஆபரேஷனுக்கு செலுத்தப்பட்ட மயக்க மருந்தால் மூதாட்டி நினைவு திரும்பாமலேயே உயிரிழந்தார்.
    • அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து கொடுத்ததால் அவர் இறந்தாரா? என்பது குறித்து மருத்துவ துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் பாண்டியன் குப்பம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பெரியம்மாள் (வயது 60). இவரது இடுப்பு எலும்பில் சவ்வு கிழிந்துள்ளதால், அவருக்கு கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    இதற்காக அவருக்கு மயக்க மருந்து செலுத்தி இருந்த நிலையில் அறுவை சிகிச்சை முடிந்து பல மணி நேரமாகியும் அவர் மயக்கத்தில் இருந்து தெளியவில்லை.

    இதை அடுத்து டாக்டர்கள் பெரியம்மாளை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

    இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து கொடுத்ததால் அவர் இறந்தாரா? என்பது குறித்து மருத்துவ துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மாயக்காள் என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
    • உடனே அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. க.விலக்கு அருகே மாலைப்பட்டி கிராமத்தில் பெய்த கனமழையின்போது அப்பகுதியில் இருந்த ஒருவீட்டின் சுவர் இடிந்துவிழுந்தது.

    இதில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மாயக்காள்(72) என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டியின் உடலை மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • போலீசார் மேற்கொண்ட விசாரணையில் உயிரிழந்த மூதாட்டி மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும், கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் சுற்றித் திரிந்தவர் என்பதும் தெரியவந்தது.
    • இதுகுறித்து ஆசனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து உயிரிழந்த மூதாட்டி யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள ஆசனூர் மலைப்பகுதி தொட்டபுரத்தில் பெருந்துறையை சேர்ந்த சண்முகம் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது.

    இந்த நிலத்தை சுற்றி வன விலங்குகள் நடமாட்டத்தை தடுக்க சோலார் பேட்டரி மின் வேலி அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தலமலை கிராம நிர்வாக அலுவலர் தம்புராஜுக்கு, தொட்டபுரம் மாரியம்மன் கோவில் பூசாரி ராமன் போன் மூலமாக தொடர்பு கொண்டு சண்முகத்தின் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள சோலார் பேட்டரி மின் வேலியில் சிக்கி சுமார் 65 முதல் 70 வயதுடைய மூதாட்டி இறந்து கிடப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.

    அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற கிராம நிர்வாக அலுவலர் தம்புராஜ் ஆசனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    அங்கு சென்ற போலீசார் மேற்கொண்ட விசாரணையில் உயிரிழந்த மூதாட்டி மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும், கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் சுற்றித் திரிந்தவர் என்பதும் தெரியவந்தது.

    மேலும் இதுகுறித்து ஆசனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து உயிரிழந்த மூதாட்டி யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • மூதாட்டி வள்ளியம்மாளுக்கு உடலில் எந்த நோயின் தாக்கமும் இல்லை.
    • 102 வயதிலும் அவர் தனது வேலைகளை தானே செய்து நடமாடி வந்தார்.

    பொன்னேரி:

    சோழவரம் அடுத்த விஜயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கேசவேலு. சென்னை துறைமுகத்தில் ஊழியராக வேலைபார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி வள்ளியம்மாள் (வயது 102). இவர்களுக்கு 4 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர்.

    கேசவேலு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதைத்தொடர்ந்து வள்ளியம்மாள் தனது இளையமகன் பிரவு வீட்டில் வசித்து வந்தார். அவரது வீட்டில் பேரன், பேத்தி கொள்ளுப்பேரன் உள்ளிட்ட 42 குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர்.

    மூதாட்டி வள்ளியம்மாளுக்கு உடலில் எந்த நோயின் தாக்கமும் இல்லை. 102 வயதிலும் அவர் தனது வேலைகளை தானே செய்து நடமாடி வந்தார். அவரை குடும்பத்தினர் கவனித்து வந்தனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு மூதாட்டி வள்ளியம்மாள் வீட்டில் இருந்தபோது திடீரென கால் தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் உடல்நிலையில் முன்னேற்றம் அடையவில்லை.

    இந்த நிலையில் நேற்று மாலை வள்ளியம்மாள் இறந்தார். இதனால் அவரது குடும்பத்தினர் சோகம் அடைந்தனர். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெறுகிறது.

    'இதுகுறித்து குடும்பத்தினர் கூறும்போது 102 வயதில் வள்ளியம்மாள் இறந்து விட்டார். அவர் 5 தலைமுறை கண்டு இருக்கிறார். இது வரை அவரது உடலில் பெரிய அளவில் நோய் பாதிப்பு ஏற்பட்டதில்லை. அவரது வேலைகளை அவரே செய்து வந்தார்' என்றனர்.

    ×