search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக எம்எல்ஏ"

    • போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் உள்பட 200 பேரை போலீசார் கைது செய்து, பின்னர் விடுதலை செய்தனர்.
    • கடந்த 28-ந்தேதி மட்டும் வாய்க்கால் வெட்டும் பணி திடீரென நிறுத்தப்பட்டது.

    புவனகிரி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் 2-வது சுரங்கத்தின் விரிவாக்கத்திற்காக சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கற்றாழை, கரி வெட்டி, மேல்வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாய விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.

    வளையமாதேவியில் பரவனாறு வாய்க்கால் அமைக்கும் பணியை என்.எல்.சி. நிறுவனம் தொடங்கியது. இதற்காக அங்கு பயிரிடப்பட்ட நெற் பயிர்களை பொக்லைன் எந்திரம் மூலம் அழித்து பணிகளை தொடங்கினார்கள்.

    இதனால் விவசாயிகள் ஆத்திரம் அடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விளைநிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் அழிக்கப்படுவதை கண்டித்து பா.ம.க. சார்பில் அந்த கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் என்.எல்.சி. அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதில் வன்முறை வெடித்தது. போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் உள்பட 200 பேரை போலீசார் கைது செய்து, பின்னர் விடுதலை செய்தனர்.

    கடந்த 28-ந்தேதி மட்டும் வாய்க்கால் வெட்டும் பணி திடீரென நிறுத்தப்பட்டது. பா.ம.க. போராட்டம் நடத்தியதால் பணி நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் பணி மீண்டும் தொடங்கியது. விளைநிலங்களுக்கு செல்லாமல் மேல் வளையமாதேவியில் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் கரைகளை சமன்செய்யும் பணியிலும், பாலத்தின் அருகில் கால்வாய் வெட்டும் பணியிலும் என்.எல்.சி. நிறுவனம் ஈடுபட்டது.

    4-வது நாளான நேற்று பணிகள் நடைபெற்றது. விடிய விடிய இந்த பணி நடந்தது. இன்று 5-வது நாளாக வாய்க்கால் வெட்டும் பணி நடைபெற்று வருகிறது. 1,500 மீட்டர் அகலத்தில் சுமார் 1 ½ கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த பணிகள் நடந்து வருகிறது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    வளையமாதேவியில் விளை நிலங்களில் வாய்க்கால் வெட்டும் பணியை கண்டித்து இன்று உண்ணாவிரதம் இருக்கப் போவதாக புவனகிரி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அருண் மொழிதேவன் அறிவித்து இருந்தார். இதற்காக போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தார். ஆனால், போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

    வளையமாதேவியில் உண்ணாவிரதம் இருக்க போலீசார் அனுமதி அளிக்காததால் புவனகிரியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அருண் மொழிதேவன் எம்.எல்.ஏ. அறிவித்தார்.

    அதன்படி இன்று காலை புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு அருண் மொழிதேவன் எம்.எல்.ஏ. உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

    இதில் ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். அங்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • பவானிசாகர் தனித்தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பண்ணாரி என்பவர் வெற்றி பெற்றார்.
    • பொதுமக்கள் அரசின் திட்டங்கள், அடிப்படை வசதிகள், ரேசன் கார்டு, உதவித் தொகை உள்ளிட்டவை பெற பண்ணாரி எம்.எல்.ஏ.வை தினமும் சந்தித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் கடந்த தேர்தலில் கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் (தனி), பவானி, பெருந்துறை ஆகிய 4 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அ.தி.மு.க. கூட்டணியில் மொடக்குறிச்சி தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 8 தொகுதிகளில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி 5 தொகுதிகளிலும், தி.மு.க. கூட்டணி 3 தொகுதியிலும் வெற்றி பெற்றது.

    இதில் பவானிசாகர் தனித்தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பண்ணாரி என்பவர் வெற்றி பெற்றார். இந்த தொகுதி கிராமங்கள் நிறைந்த பகுதியாகும். இதனால் இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அரசின் திட்டங்கள், அடிப்படை வசதிகள், ரேசன் கார்டு, உதவித் தொகை உள்ளிட்டவை பெற பண்ணாரி எம்.எல்.ஏ.வை தினமும் சந்தித்து வருகின்றனர். இவர் பொதுமக்கள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வான தன்னை யாரும் மதிப்பதில்லை என்று பரபரப்பு புகார் தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து பண்ணாரி எம்.எல்.ஏ.விடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    பவானிசாகர் தொகுதியில் கடந்த 2 தேர்தல்களிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. 2011 தேர்தலில் எங்கள் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. மேலும் இத்தொகுதியில் அதிக முறை அ.தி.மு.க. வெற்றி பெற்று உள்ளது. இந்நிலையில் இந்த தொகுதியில் இதுவரை நடக்காத ஒன்று கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. எனது தொகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக எந்த திட்டபணிகளும் முறையாக நடைபெறவில்லை.

    நான் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்று 2 ஆண்டுகள் முடிந்து விட்டன. இந்த காலத்தில் பொதுமக்களின் கோரிக்கையான பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட அரசின் உதவி கேட்டு என்னிடம் வந்த 2 ஆயிரம் மனுக்களை பரிந்துரை செய்து வருவாய்த்துறைக்கு அனுப்பி உள்ளேன். ஆனால் நான் பரிந்துரைக்கும் மனுக்களை வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை. என்னையும், என் பரிந்துரைகளையும் அதிகாரிகள் புறக்கணிக்கிறார்கள்.

    நேரில் சென்று கேட்டால் கூட இதோ செய்து விடுகிறேன் என்று கூறுவார்கள் ஆனால் செய்ய மாட்டார்கள். பொதுவாக என்னை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளமாட்டார்கள். பெயரளவுக்கு மட்டும் தான் நான் எம்.எல்.ஏ.வாக உள்ளேன். வி.ஏ.ஓ. முதல் தாசில்தார் வரை என்னை யாரும் மதிப்பதில்லை. மேலும் போலீசார், ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் என்னை புறக்கணிக்கிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. என்ற முறையில் எனது உத்தரவுகள் மதிக்கப்படவில்லை. இதற்கு முக்கிய காரணம் நான் அருந்ததியினர் வகுப்பை சார்ந்தவன் என்பது தான்.

    இதனால் என்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு என்னால் எந்த நன்மையும் செய்ய முடியவில்லை. எனக்கு முன் இந்த பதவியில் இருந்தவர்களுக்கு இந்த பிரச்சனை இருந்திருக்காது. அதற்கு அ.தி.மு.க. ஆட்சி தான் காரணம். அரசு விழாக்களுக்கு அழைக்க தவறினால் விசயம் வெளியே தெரிந்து விடும் என்பதால் அரசு விழாக்களுக்கு எனக்கு அழைப்பு வருகிறது.

    அதிகாரிகள் என்னை மக்கள் பிரதிநிதியாக பார்க்கவில்லை. சாதி ரீதியாக தான் பார்க்கிறார்கள்.

    தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர் நம்மை என்ன செய்து விடுவார் என்று அதிகாரிகள் இருப்பதை பார்த்து இருக்கிறேன். என்னிடம் அதிகாரிகள் நடந்து கொள்ளும் விதம் குறித்து பலமுறை கலெக்டரிடம் முறையிட்டு உள்ளேன். இந்த விவகாரத்தில் இதுவரை நான் கட்சி தலைமைக்கு கொண்டு செல்லவில்லை. மக்கள் விண்ணப்பித்த மனுக்கள் மீது 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டத்தை நடத்த உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெருந்துறை பகுதியில் இன்று காலை போலீசார் பல்வேறு இடங்களில் பஸ்களில் யாராவது படிகளில் நின்று பயணம் செய்கிறார்களா? என்று தீவிரமாக கண்காணித்தனர்.
    • படிக்கட்டுகளில் பயணம் செய்ய அனுமதித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பஸ் டிரைவர், கண்டக்டர்களையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

    பெருந்துறை:

    திருப்பூரில் இருந்து தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் விஜயமங்கலத்தில் இருந்து பெருந்துறை நோக்கி வந்த போது பஸ்சின் பின்புறமாக பெருந்துறை அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெயக்குமார் தனது காரில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அந்த பஸ்சின் பின்புற படிக்கட்டில் கல்லூரி மாணவர்கள் சிலர் நின்று கொண்டு தொங்கியபடி, ஆபத்தான முறையில் பயணித்ததை கண்டார். இதை கண்டதும் அதிர்ச்சி அடைந்த ஜெயக்குமார் எம்.எல்.ஏ. அந்த பஸ்சை விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே தடுத்து நிறுத்தினார்.

    இதைத்தொடர்ந்து அந்த பஸ்சின் டிரைவர் மற்றும் கண்டக்டரை அழைத்து அவர் அறிவுரை கூறினார்.

    மேலும் அவர் கூறுகையில் 'படிக்கட்டுகளில் நின்று தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்களை, ஏன் பஸ்சில் ஏற அனுமதித்தீர்கள்? திருப்பங்களில், பஸ்சில் தொங்கி கொண்டு வரும் மாணவர்களின் கால்கள், ரோட்டில் உரசியபடி வருவது, உங்களுக்கு தெரியுமா? பொறுப்பற்ற முறையில், நீங்கள் தொடர்ந்து மாணவர்களை பஸ்சில் பயணம் செய்ய அனுமதித்தால், உங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் பரிந்துரை செய்வேன்,' என எச்சரிக்கை விடுத்தார். மேலும் பெற்றோர் ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டு கல்லூரிகளுக்கு அனுப்புகிறார்கள். எனவே அவர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லுங்கள் என்றார்.

    இதையடுத்து, பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் அனைவரும், பஸ்சின் உட்புறத்திற்கு சென்றனர். பின்னர் அந்த பஸ் ஈரோட்டை நோக்கி புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால், விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் பெருந்துறை பகுதியில் இன்று காலை போலீசார் பல்வேறு இடங்களில் பஸ்களில் யாராவது படிகளில் நின்று பயணம் செய்கிறார்களா? என்று தீவிரமாக கண்காணித்தனர். மேலும் படிக்கட்டுகளில் பயணம் செய்ய அனுமதித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பஸ் டிரைவர், கண்டக்டர்களையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

    • பொங்கல் விழா கடந்த 21-ந்தேதி பொங்கல் சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
    • திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார் கலந்து கொண்டு, தலையில் தீர்த்தக்குடம் ஏந்தி, பக்தி பரவசத்துடன் நடனமாடியபடி சென்றார்.

    திருப்பூர்:

    திருப்பூர் அங்கேரிபாளையத்தில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் பொங்கல் விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பொங்கல் விழா கடந்த 21-ந்தேதி பொங்கல் சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    விழாவையொட்டி அவினாசி அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது.

    இதில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார் கலந்து கொண்டு, தலையில் தீர்த்தக்குடம் ஏந்தி, பக்தி பரவசத்துடன் நடனமாடியபடி சென்றார். இதில் பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னையில் காவலரை வெட்டிய ரவுடி ஆனந்தன் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், அவரது வீட்டுக்கு சென்ற அதிமுக எம்.எல்.ஏ ரவி, ஆனந்தன் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
    சென்னை:

    சென்னையில் ரோந்து பணிக்குச் சென்ற காவலர் ராஜவேலுவை தாக்கிய ஆனந்தன் என்ற ரவுடி கடந்த 3ஆம் தேதி அடையாறு அருகே என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். பரபரப்பை ஏற்படுத்திய இந்த என்கவுண்டர் ரவுடிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.


    அ.தி.மு.க எம்.எல்.ஏ ரவி

    இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள ரவுடி ஆனந்தன் இல்லத்தில் இறுதி காரிய நிகழ்ச்சி நடந்தது. அதில், விருகம்பாக்கம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ ரவி கலந்து கொண்டு ஆனந்த் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். அத்துடன், ஆனந்தனின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அ.தி.மு.க எம்.எல்.ஏ ரவியின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
    ×