என் மலர்
திண்டுக்கல்
- யானை இறந்து கிடந்ததை பார்த்த ராமர் அதிலிருந்த 2 தந்தங்களையும் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டார்.
- 5 பேர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குள்ளனம்பட்டி:
பழனி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான பாலசமுத்திரம் கிழக்கு பீட் பகுதியில் கடந்த 16ம் தேதி யானை ஒன்று இறந்து கிடந்தது. அப்போது பண்ணைக்காடு பகுதியை சேர்ந்த ராமர் (வயது 53) என்பவர் அங்கு தேன் சேகரிக்க சென்றார்.
அப்போது யானை இறந்து கிடந்ததை பார்த்த ராமர் அதிலிருந்த 2 தந்தங்களையும் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டார். பின்னர் தந்தங்களை விற்றால் அதிக விலை கிடைக்கும் என நினைத்து இதுகுறித்து கன்னிவாடியை சேர்ந்த சோமசுந்தரம் (49) என்பவரை அணுகினார். பின்னர் பழனி அடுத்துள்ள வயலூரை சேர்ந்த கணேசன் (55) என்பவருடன் சேர்ந்து தந்தத்தை விற்க புரோக்கர்களை தேடினர். அப்போது தந்தம் வாங்க வருவதுபோல வனத்துறையினர் மாறுவேடத்தில் வந்து அவர்கள் 3 பேரையும் பிடித்தனர்.
அவர்களிடம் இருந்து 40 செ.மீ. உயரமுள்ள 2 கிலோ எடைகொண்ட 2 யானை தந்தங்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
இதனிடையே மதுரை மண்டல வன உயிரின கட்டுப்பாட்டு அலுவலகம் சார்பில் யானை இறந்த விவகாரத்தில் மெத்தனமாக செயல்பட்ட வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வனப்பாதுகாவலர் காஞ்சனா தெரிவிக்கையில்,
பழனி வனப்பகுதியில் யானை இறந்த விவகாரத்தில் அதுகுறித்த எந்தவித அறிகுறியே இல்லாமல் தந்தங்கள் கடத்தப்படும் வரை மெத்தனமாக இருந்த பழனி வனச்சரக அலுவலர் கோகுலகண்ணன், பாரஸ்டர் பழனிச்சாமி, ஜெயசீலன், கார்டு சரண்யா, களப்பணியாளர் ஆல்வின் ஆகிய 5 பேர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் உரிய ஆதாரம் இல்லையெனில் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- போலீசார் பெண் வீட்டாருக்கு தகவல் தெரிவித்து அவர்களை வரவழைத்தனர்.
- சினிமா காட்சிகளைப் போல நடந்ததை பார்த்து கல்லூரி மாணவி அதிர்ச்சியடைந்தார்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஓம்சக்தி கோவில் தெருவை சேர்ந்தவர் வசந்த் (வயது 22). இவர் உடுமலைப்பேட்டையில் தனியார் நிதிநிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தார்.
பின்னர் அவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்த போது பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து வசந்த் தனது காதலியை வடமதுரையில் உள்ள கோவிலுக்கு அழைத்து வந்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் பெண்வீட்டார் தங்களை பிரித்து விடுவார்கள் என நினைத்து வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
போலீசார் பெண் வீட்டாருக்கு தகவல் தெரிவித்து அவர்களை வரவழைத்தனர். இதற்குள் காதல் மனைவியுடன் வசந்த் தனது வீட்டிற்கு சென்றார். அப்போது காரில் வந்த ஒரு கும்பல் அவரை வழிமறித்து கைது செய்தனர். மேலும் தங்கள் காரில் அழைத்துச் செல்ல முயன்றனர். சினிமா காட்சிகளைப் போல நடந்ததை பார்த்து கல்லூரி மாணவி அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து மாணவியிடம் காரில் வந்த கும்பல் விசாரித்த போது தங்களுக்கு இப்போதுதான் திருமணம் நடந்து முடிந்துள்ளதாக கூறினார். இதனை தொடர்ந்து வசந்தை வடமதுரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற அவர்கள் தாங்கள் விருதுநகர் குற்றப்பிரிவு போலீசார் என தெரிவித்தனர். வசந்த் விருதுநகரில் ஒரு மோட்டார் சைக்கிளை திருடியதால் அவரை பிடிக்க மப்டியில் தேடி வந்ததாகவும், வடமதுரையில் இருப்பது தெரியவரவே அவரை கைது செய்து காரில் அழைத்துச் செல்வதாகவும் கூறினர்.
இதைக்கேட்ட கல்லூரி மாணவி கண்ணீர் விட்டு கதறி அழுதார். பின்னர் போலீசார் அவருக்கு ஆறுதல் சொல்லி மீண்டும் ஊருக்குச் செல்லுமாறு கூறி அறிவுரை வழங்கினார். திருமணமான ஒருமணிநேரத்தில் காதல் கணவரை மனைவி கண்முன் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கல்வராயன்மலையில் தொடர்ந்து சாராயம் காய்ச்சப்படுவதாக புகார்கள் வந்தது.
- சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
திண்டுக்கல்:
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 61 பேர் பலியான சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல்லில் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.சீனிவாசன், கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது:-
கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அங்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்தும் கேட்டறிந்தார். ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை செல்லவில்லை.
அந்த மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலையில் தொடர்ந்து சாராயம் காய்ச்சப்படுவதாக புகார்கள் வந்தது. இதில் தி.மு.க.வினரின் தலையீடு இருப்பதால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நான் வனத்துறை அமைச்சராக இருந்தபோது சம்பவ இடத்திற்கு அதிகாரிகளுடன் சென்று சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுத்து நிறுத்தினேன். ஆனால் தி.மு.க. அரசில் அதுபோன்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலீசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளதால் அப்பாவி உயிர்கள் பலியாகி உள்ளது. அதனால்தான் இப்பிரச்சினையில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
மேலும் அரசு ஆஸ்பத்திரிகளில் உயிர்காக்கும் மருந்துகள் தட்டுப்பாடு உள்ளது. இதுகுறித்து நாங்கள் கேள்வி எழுப்பிய போது சுகாதாரத்துறை அமைச்சர் அதனை திசைதிருப்ப முயற்சிக்கிறார். சட்ட பேரவையில் இதுகுறித்து பேச அ.தி.மு.க.விற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் தான் நாங்கள் வெளிநடப்பு செய்தோம். தி.மு.க. கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்டு, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் அரசை கண்டிக்காமல் மவுனம் காத்து வருகின்றனர்.
மக்களுக்கு பயன்தராத கொடுமையான ஆட்சி நடந்து வருகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பணம் கொடுத்து மக்களை அடைத்து வைத்துள்ளனர். இதுபோல் நடக்கும் என்பதால்தான் நாங்கள் தேர்தலில் போட்டியிட வில்லை. பாராளுமன்ற தேர்தலில் பணம் கொடுத்து 40 எம்.பி.களை விலைகொடுத்து வாங்கியதுபோல சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிபெற்று விடலாம் என மு.க.ஸ்டாலின் கனவு காண்கிறார். அது நடக்காது. இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் பேசுகையில், `இது திராவிட மாடல் ஆட்சி அல்ல. சாராய மாடல் ஆட்சி. தகுதியில்லாதவர்கள் அமைச்சர்களாக உள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்சினையை தீர்க்க முடியவில்லை. ஆட்சி, நிர்வாகத்தில் தி.மு.க.வினரின் குடும்ப தலையீடு அதிக அளவில் உள்ளது. விலைமதிப்பற்ற 60 உயிர்கள் பலியான போதும் தி.மு.க. அரசு அதுபற்றி கவலைப்படாமல் அலட்சியமாக உள்ளது. கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையெனில் வருகிற சட்டமன்ற தேர்தலில் இவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மாநாட்டில் பங்கேற்க விரும்பும் உள்நாட்டினருக்கு ரூ.500, வெளிநாட்டினருக்கு ரூ.1000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
- முருக பக்தர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பாளர்களாக கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆகஸ்ட் 24 மற்றும் 25ந் தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலும் உள்ள சமய பெரியோர்கள், ஆன்மீக அன்பர்கள், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டிற்காக வரும் சிறப்பு அழைப்பாளர்கள் வெளிநாட்டு பக்தர்களை தங்க வைப்பதற்காக பழனி மற்றும் திண்டுக்கல்லில் உள்ள தனியார் தங்கும் விடுதிகள், கோவிலுக்கு சொந்தமான தங்கும் விடுதிகளில் உள்ள அனைத்து அறைகளும் ஆகஸ்ட் 23ந் தேதி முதல் 26ந் தேதி வரை முன்பதிவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் மற்றும் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்க பிரத்தியேக இணையதளம் கடந்த மே 28ந் தேதி தொடங்கப்பட்டு தற்போது வரை பதிவுகள் நடைபெற்று வருகின்றன.
மாநாட்டில் பங்கேற்க விரும்பும் உள்நாட்டினருக்கு ரூ.500, வெளிநாட்டினருக்கு ரூ.1000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து முருக பக்தர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பாளர்களாக கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பதிவு செய்த பங்கேற்பாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை தவிர மாநாட்டை காண வரும் முருக பக்தர்களுக்கு தனி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முத்தமிழ் முருகன் மாநாட்டை முன்னிட்டு பழனி கோவிலின் புகைப்படங்களை முப்பரிமாண காட்சி மூலம் பக்தர்கள் பார்க்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பழனி மலை, படிப்பாதை, யானைப்பாதை, மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள கோவில்கள், மலைக்கோவிலின் உள் மற்றும் வெளி பிரகாரம், தங்க கோபுரம், ராஜகோபுரம் உள்ளிட்ட சன்னதிகளை முப்பரிமாண காட்சிகளில் பார்க்கும்போது நேரில் கோவிலுக்கு சென்று சுற்றி பார்க்கும் உணர்வை பக்தர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- கள்ளச்சாராயம் குடித்த பலருக்கு கண் பார்வை பறிபோனது.
- ஆய்வகங்களில் எத்தனால் வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது.
திண்டுக்கல்:
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் கள்ளச்சாராய விற்பனை, சட்ட விரோத மது விற்பனை குறித்து போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளச்சாராயம் குடித்த பலருக்கு கண் பார்வை பறிபோனது. இதற்கு காரணம் போதைக்காக பயன்படுத்தப்படும் மெத்தனால், எத்தனால் வேதிப்பொருட்கள் எனத் தெரிய வந்துள்ளது. எனவே இதனை கண்காணிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஆஸ்பத்திரி, கல்லூரிகளில் உள்ள ஆய்வகங்களில் எத்தனால் வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. திண்டுக்கல் நகர் பகுதியில் செயல்படும் ஆஸ்பத்திரிகளில் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர்.
தனியார் ஆஸ்பத்திரிகள், கல்லூரிகளில் உள்ள ஆய்வகங்களில் அளவுக்கு அதிகமாக எத்தனால் வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறதா? என சோதனை நடத்தினர்.
மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள், ஆஸ்பத்திரிகளில் உள்ள ஆயவகங்களில் சோதனை நடத்த உள்ளதாக மது விலக்கு போலீசார் தெரிவித்தனர்.
நகர் முழுவதும் நடைபெற்ற அதிரடி சோதனையில் கள்ளச்சாராயம் எங்கும் விற்பனை செய்யப்படவில்லை. ஆனால் சட்ட விரோதமாக மது விற்பனைக்கு பதுக்கிய 345 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- போஸ்டர் திண்டுக்கல் நகரின் பல்வேறு இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது.
- பேனர் வடிவிலும் வைக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் பிறந்தநாள் விழா நாளை மறுநாள் (22-ந் தேதி) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
கோவில்களில் அன்னதானம், ஏழைகளுக்கு மருத்துவ உதவி, ஆடைகள் வழங்குதல், நோட்டு புத்தகங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையில் திண்டுக்கல்லில் விஜய் ரசிகர்கள் சார்பில் நூதன முறையில் மாலை மலர் போஸ்டர் போன்று சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.
அதில், த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆணைக்கிணங்க திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் தேவா தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.
தனது பொன் விழாவை முன்னிட்டு த.வெ.க. தலைவர் விஜய் பத்திரிகையாளர்கள் சந்திப்பு.
ஆகஸ்ட்டு 15-ந் தேதி திண்டுக்கல்லில் முதல் அரசியல் மாநாடு.
2020 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் அமோக வெற்றி பெற்று விஜய் ஆட்சியை பிடிப்பார் என்று தொண்டர்கள் பேட்டி என்பது உள்ளிட்ட வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த போஸ்டர் திண்டுக்கல் நகரின் பல்வேறு இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் பேனர் வடிவிலும் வைக்கப்பட்டுள்ளது.
- கடந்த 2016-ம் ஆண்டு பெருமாள் கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
- பக்தர்கள் ஏராளமானோர் திரண்டு நெகழ்ச்சியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
தாடிக்கொம்பு:
திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு பேரூராட்சிக்குட்பட்ட டி.அய்யம்பாளையத்தில் விநாயகர், காளியம்மன், பகவதியம்மன் கோவில்கள் உள்ளது. இந்த கோவில்களின் நகைப்பெட்டி ஒரு தரப்பினருக்கு சொந்தமான பெருமாள் கோவிலில் வைத்து வந்தனர்.
இந்த பெருமாள் கோவில் உரிமை சம்மந்தமாக கடந்த 2012-ம் ஆண்டு இரு தரப்பினருக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் ஆர்.டி.ஓ. தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் கடந்த 2016-ம் ஆண்டு பெருமாள் கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
கடந்த 8 ஆண்டுகளாக கோவில் திறக்கப்படாததால் பக்தர்கள் வேதனையடைந்தனர். தற்போது திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் பெருமாள் கோவில் குறிப்பிட்ட சமுதாயத்துக்கு பாத்தியப்பட்டது என்றும் நகைபெட்டியை வைத்து பாதுகாக்கவும், பராமரிக்கவும் திருவிழா காலங்களில் எடுத்து சென்று வழிபடவும் அவர்களுக்கு மட்டும் உரிமை உண்டு என முடிவானது. இதனை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர்.
இதனால் கடந்த 8 ஆண்டுகளாக திறக்கப்படாத கோவிலை திறப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி தாசில்தார் வில்சன் தேவதாஸ் முன்னிலையில் சீல் அகற்றப்பட்டது. அதன் பின்னர் கோவில் திறக்கப்பட்டதால் பக்தர்கள் ஏராளமானோர் திரண்டு நெகழ்ச்சியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
- கடந்த 2022-23ம் கல்வி ஆண்டில் 8 மாணவர்கள் படித்தனர்.
- உதவி ஆசிரியர் தனக்கு பணி மாறுதல் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்.
குஜிலியம்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள வடுகம்பாடி ஊராட்சி பண்ணைப்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கடந்த 1962ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் அதிக மாணவர்கள் எண்ணிக்கையுடன் செயல்பட்டு வந்த இந்த பள்ளி பின்னர் படிப்படியாக தரம் குறையத் தொடங்கியது.
கடந்த 2022-23ம் கல்வி ஆண்டில் 8 மாணவர்கள் படித்தனர். கடந்த ஆண்டு இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக இந்திரா என்பவர் பொறுப்பேற்றார். இவர் 8 ஆண்டுகளாக இடை நிலை ஆசிரியர் பணியில் உள்ளார். கிராமத்தில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் மக்கள் சார்பில் எல்.இ.டி. டி.வி. ஒன்று இந்த பள்ளியில் வாங்கி வைக்கப்பட்டது. மேலும் முன்னாள் மாணவர்கள் சார்பில் டேபிள், சேர், பீரோ, கரும்பலகை மற்றும் பள்ளிக்கு தேவையான பொருட்கள் போன்றவையும் வாங்கி கொடுக்கப்பட்டன.
தலைமை ஆசிரியர் இந்திரா வருகைக்கு பின் அவரது நடவடிக்கை மற்றும் செயல்பாடுகள் பிடிக்காததால் மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் புகார் தெரிவிக்க ஆரம்பித்தனர்.
மாணவர்களை தரக்குறைவாக பேசியதால் தலைமை ஆசிரியரை மாற்ற வேண்டும் என பெற்றோர்கள் கல்வி அதிகாரியிடம் புகார் அளித்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கடந்த ஆண்டு படித்த 5 மாணவர்களையும் பெற்றோர்கள் வேறு பள்ளியில் சேர்த்து விட்டனர்.
நடப்பு கல்வியாண்டில் இந்த பள்ளியில் ஒருமாணவர் கூட இல்லை. ஆனால் தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் என 2 பேர் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். உதவி ஆசிரியர் தனக்கு பணி மாறுதல் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார். இந்நிலையில் மாணவர்களே இல்லாத பள்ளிக்கு 2 ஆசிரியர்கள் எதற்கு? என்றும், தலைமை ஆசிரியரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து வட்டார கல்வி அலுவலர் தெரிவிக்கையில், தலைமை ஆசிரியரை மாற்ற வலியுறுத்தி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள்தான் முடிவு எடுக்க வேண்டும் என்றார்.
பண்ணைப்பட்டி ஊர் முக்கிய நிர்வாகி தெரிவிக்கையில், கிராமப்புற மாணவர்களுக்காக தொடங்கப்பட்ட இந்த பள்ளி தற்போது தலைமை ஆசிரியரின் அடாவடியால் முற்றிலும் அதன் நோக்கம் செயல்படாமல் முடங்கிப் போய் உள்ளது. எனவே அவரை மாற்றினால் குழந்தைகள் பள்ளியில் சேர்வார்கள். இல்லையெனில் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றார். இச்சம்பவத்தால் பண்ணைப்பட்டி கிராமத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
- துரை மணிகண்டன் தலைமையில் காங்கிரசார் ஊர்வலமாக வந்து ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
- ரெயில் நிலையத்துக்குள் செல்ல முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
திண்டுக்கல்:
திரிபுரா மாநிலம், அகர்தலாவில் இருந்து மேற்குவங்கத்தில் உள்ள சியல்டாவை நோக்கி கஞ்சன்ஜங்கா விரைவு ரெயில் சென்றது. ரங்கபானி ரெயில் நிலையம் அருகே நேற்று காலை 9 மணியளவில் சென்று கொண்டிருந்த இந்த ரெயில் மீது சரக்கு ரெயில் பின்பக்கமாக மோதியதில் 9 பேர் பலியாகினர்.
இந்த விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி திண்டுக்கல்லில், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமையில் காங்கிரசார் ஊர்வலமாக வந்து ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது பா.ஜ.க. அரசை கண்டித்தும், விபத்துக்கு பொறுப்பேற்று ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என்றும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். ரெயில் நிலையத்துக்குள் செல்ல முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இந்த போராட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் வேங்கை ராஜா, மாவட்ட துணைத் தலைவர் அப்துல் ரகுமான், கவுன்சிலர் பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். காங்கிரசாரின் முற்றுகை போராட்டத்தை அடுத்து ரெயில் நிலையம் முழுவதும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் ரெயில் நிலையத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
- மத்திய அரசு நீட் தேர்வை விரும்பாத மாநிலங்களுக்கு அதிலிருந்து விலக்களிக்க வேண்டும்.
- பழனியில் நீதிமன்ற உத்தரவுப்படி 500க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டுள்ளன.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் இன்று மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
மேற்குவங்க மாநிலத்தில் 2 ரெயில்கள் மோதியதில் 9 பேர் பலியாகி பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரெயில்வே மந்திரி உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற பல்வேறு ரெயில் விபத்துகள் நாட்டில் நடந்துள்ளன. இதற்கு மத்திய அரசின் தவறான நிர்வாகம் மற்றும் அலட்சியப்போக்கே காரணம். விபத்து நடந்த பிறகு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதாக கூறுகின்றனர். பல்வேறு நவீன வசதிகள் வந்துவிட்ட போதிலும் விபத்துகளை தவிர்க்க இந்தியாவில் அதுபோன்ற எந்த வசதியையும் மத்திய அரசு செய்யவில்லை.
நீட் தேர்வு வேண்டாம் என்று முதன்முதலில் தமிழகம் குரல் கொடுத்த நிலையில் தற்போது குஜராத், கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களும் அந்த மனநிலைக்கு வந்துவிட்டன. நீட் தேர்வில் ஏற்படும் குளறுபடி, முறைகேடு ஆகியவை மாணவர்களின் வாழ்க்கை யோடு, எதிர்காலத்தோடு விளையாடுவதாக உள்ளது. எனவே மத்திய அரசு நீட் தேர்வை விரும்பாத மாநிலங்களுக்கு அதிலிருந்து விலக்களிக்க வேண்டும்.
நெல்லையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்த காதல் ஜோடிக்கு பாதுகாப்பு அளித்ததற்காக கட்சி அலுவலகம் போலீசார் முன்னிலையிலேயே தாக்கப்பட்டது. அங்கிருந்த கம்யூனிஸ்ட்டு தொண்டர்கள் தாக்குதலுக்கு உள்ளானார்கள். எனவே தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகு றித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம். உச்சநீதிமன்றமே அறிவுறுத்திய பிறகும் ஆணவ கொலைகள் தொடர்வது கவலையளிக்கிறது. எனவே இதற்கு எதிராக தமிழக சட்டப்பே ரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து சட்டம் இயற்ற வலியுறுத்த உள்ளோம்.
மேட்டூர் அணையிலிருந்து இந்த முறை ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கவில்லை. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடி செய்யமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே தமிழக அரசு காவிரியில் நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக நீர்வளத்துறை அமைச்சர் கர்நாடகா அரசுடன் இதுகுறித்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். அதேபோல் திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மக்காச்சோள பயிர்கள் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதுடன் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக கூறிய எடப்பாடி பழனிசாமி பின்னர் அதிலிருந்து ஜகா வாங்கிவிட்டார். போட்டியிட்டால் கண்டிப்பாக தோல்வி உறுதி என்பதால் புறக்கணித்துவிட்டு வேறு காரணங்களை கூறி வருகிறார்.
பழனியில் நீதிமன்ற உத்தரவுப்படி 500க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டுள்ளன. இதனால் அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசும், பழனி தேவஸ்தானமும் நீதிமன்ற உத்தரவுகளை காரணம் காட்டாமல் அந்த வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- எடப்பாடி பழனிச்சாமியிடம் அப்பகுதி விவசாயிகள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
- விவசாயிகளை வாழ வைக்கும் குளத்தை அழித்து தொழில்பேட்டை அமைக்கும் திட்டத்தை நிறுத்த தமிழக அரசை வலியுறுத்துவேன்.
ரெட்டியார்சத்திரம்:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, மதுரையில் இருந்து கோவை செல்லும் வழியில் ஒட்டன்சத்திரம் தாலுகா கள்ளிமந்தையம் அருகே உள்ள அப்பியம்பட்டி நால்ரோடு கிராமத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.
தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு உணவிற்காக காய்கறிகளை அனுப்பி வரும் ஒட்டன்சத்திரம் பகுதி விவசாயிகளை நசுக்கின்ற திட்டமாக தொழில்பேட்டை அமைக்கும் திட்டத்தை கொத்தையம் கிராமத்தில் தி.மு.க. அரசு கொண்டு வந்து விவசாயிகளையும் விவசாயத்தையும் அழிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அத்திட்டத்தை தடுத்து நிறுத்தவேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமியிடம் அப்பகுதி விவசாயிகள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
பின்னர் அங்கு எடப்பாடி பழனிச்சாமியிடம் கொத்தையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜ் தலைமையில் அ.தி.மு.க. கிளை செயலாளர் வஞ்சிமுத்து மற்றும் கிராம மக்கள் கொத்தையம் கிராமத்தில் குளத்தை அழித்து தொழில்பேட்டை அமைக்க உள்ளதை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர்.
மனுவை பெற்ற எடப்பாடி பழனிச்சாமி விவசாய நிலங்களை அழித்து தொழில்பேட்டை அமைக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டி வருகின்ற 20ம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவேன்.
விவசாயிகளை வாழ வைக்கும் குளத்தை அழித்து தொழில்பேட்டை அமைக்கும் திட்டத்தை நிறுத்த தமிழக அரசை வலியுறுத்துவேன் என்று கிராம மக்களிடம் உறுதி அளித்தார். பின்னர் அங்கிருந்து கோவை புறப்பட்டுச்சென்றார்.
- சதுப்புநிலத்தில் வீடு கட்டியதாக விவசாயிகள் குற்றச்சாட்டு.
- 2000 சதுரடிக்கு மேல் அனுமதியின்றி வீடு கட்டியுள்ளார்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் பேத்துப்பாறை ஓரவிஅருவி அருகே நடிகர் பிரகாஷ்ரா ஜூக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இதில் அனுமதியின்றி வீடு கட்டியதாக கடந்த 2023-ம் ஆண்டு கொடைக்கானலில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் எழுப்பப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை, ஊராட்சி நிர்வாகம் விசாரணை மேற்கொண்டது. இதில் பிரகாஷ்ராஜ் வீடு கட்டுவதற்கு முறையான அனுமதி பெறவில்லை என தெரிய வந்ததால் ஊராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியது.
இதனிடையே தற்போது பிரகாஷ்ராஜ் வீடு அருகே உள்ள வரங்காட்டு ஓடையை ஆக்கிரமித்து சதுப்புநிலத்தில் வீடு கட்டியதாக விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர். பொதுப்பாதையை மறித்து மின் வேலி அமைத்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. 600 சதுரடி அளவிற்கு மட்டுமே வீடு கட்ட வேண்டிய இடத்தில் 2000 சதுரடிக்கு மேல் அனுமதியின்றி வீடு கட்டியுள்ளார். இதன் மூலம் அருகே உள்ள ஓடையும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இதனால் பேத்துப்பாறை, வயல்வெளி, பாரதி அண்ணா நகர், பொதுப்பாதையை பயன்படுத்தும் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். பகலில் திறக்கப்படும் பாதை இரவில் அடைக்கப்படுகிறது. இதனால் வன விலங்குகளில் இருந்து பயிர்களை பாதுகாக்க இரவில் செல்லும் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
எனவே ஓைடயை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், நடிகர் பிரகாஷ்ராஜ் பேத்துப்பாறை பகுதியில் பொதுப்பாதையை மறித்தும், ஓடையை ஆக்கிரமித்தும் வீடு கட்டி உள்ளதாக புகார் அளிக்கும் பட்சத்தில்அது குறித்து அளவீடு செய்து ஆக்கிரமிப்பு குறித்து விசாரிக்கப்படும். மேலும் ஓடை ஆக்கிரமிப்பு செய்திருந்தால் வருவாய்த்துறை மூலம் நோட்டீஸ் வழங்கப்படும் என தெரிவித்தனர்.






