என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஒரு மாணவர் கூட இல்லாத அரசு பள்ளிக்கு 2 ஆசிரியர்கள் பெற்றோர்கள் போராட்டம்
- கடந்த 2022-23ம் கல்வி ஆண்டில் 8 மாணவர்கள் படித்தனர்.
- உதவி ஆசிரியர் தனக்கு பணி மாறுதல் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்.
குஜிலியம்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள வடுகம்பாடி ஊராட்சி பண்ணைப்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கடந்த 1962ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் அதிக மாணவர்கள் எண்ணிக்கையுடன் செயல்பட்டு வந்த இந்த பள்ளி பின்னர் படிப்படியாக தரம் குறையத் தொடங்கியது.
கடந்த 2022-23ம் கல்வி ஆண்டில் 8 மாணவர்கள் படித்தனர். கடந்த ஆண்டு இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக இந்திரா என்பவர் பொறுப்பேற்றார். இவர் 8 ஆண்டுகளாக இடை நிலை ஆசிரியர் பணியில் உள்ளார். கிராமத்தில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் மக்கள் சார்பில் எல்.இ.டி. டி.வி. ஒன்று இந்த பள்ளியில் வாங்கி வைக்கப்பட்டது. மேலும் முன்னாள் மாணவர்கள் சார்பில் டேபிள், சேர், பீரோ, கரும்பலகை மற்றும் பள்ளிக்கு தேவையான பொருட்கள் போன்றவையும் வாங்கி கொடுக்கப்பட்டன.
தலைமை ஆசிரியர் இந்திரா வருகைக்கு பின் அவரது நடவடிக்கை மற்றும் செயல்பாடுகள் பிடிக்காததால் மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் புகார் தெரிவிக்க ஆரம்பித்தனர்.
மாணவர்களை தரக்குறைவாக பேசியதால் தலைமை ஆசிரியரை மாற்ற வேண்டும் என பெற்றோர்கள் கல்வி அதிகாரியிடம் புகார் அளித்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கடந்த ஆண்டு படித்த 5 மாணவர்களையும் பெற்றோர்கள் வேறு பள்ளியில் சேர்த்து விட்டனர்.
நடப்பு கல்வியாண்டில் இந்த பள்ளியில் ஒருமாணவர் கூட இல்லை. ஆனால் தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் என 2 பேர் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். உதவி ஆசிரியர் தனக்கு பணி மாறுதல் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார். இந்நிலையில் மாணவர்களே இல்லாத பள்ளிக்கு 2 ஆசிரியர்கள் எதற்கு? என்றும், தலைமை ஆசிரியரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து வட்டார கல்வி அலுவலர் தெரிவிக்கையில், தலைமை ஆசிரியரை மாற்ற வலியுறுத்தி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள்தான் முடிவு எடுக்க வேண்டும் என்றார்.
பண்ணைப்பட்டி ஊர் முக்கிய நிர்வாகி தெரிவிக்கையில், கிராமப்புற மாணவர்களுக்காக தொடங்கப்பட்ட இந்த பள்ளி தற்போது தலைமை ஆசிரியரின் அடாவடியால் முற்றிலும் அதன் நோக்கம் செயல்படாமல் முடங்கிப் போய் உள்ளது. எனவே அவரை மாற்றினால் குழந்தைகள் பள்ளியில் சேர்வார்கள். இல்லையெனில் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றார். இச்சம்பவத்தால் பண்ணைப்பட்டி கிராமத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.






