என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • பஸ் நிலையம் முழுவதும் சுற்றி பயணிகள் அருகே சென்று மிரட்டினார்.
    • மனநல சிகிச்சை அளிக்க டாக்டர்கள், சமூக ஆர்வலர்கள் முன்வர வேண்டும்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பஸ் நிலையத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் வாயில் எலியை கவ்வியபடி நடனமாடினார். நீண்ட நேரம் அவர் எலியை வாயில் இருந்து எடுக்காமல் பஸ் நிலையம் முழுவதும் சுற்றி பயணிகள் அருகே சென்று மிரட்டினார்.

    இதை அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்ததுடன் சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதுகுறித்து கடை வியாபாரிகள் தெரிவிக்கையில், இந்த வாலிபரின் பெயர் முத்துப்பாண்டி என்றும் கடந்த சில வருடங்களாகவே இவர் நத்தம் பஸ் நிலையத்தில் சுற்றி வருவதாகவும் கூறினர்.

    வியாபாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டு விட்டு இங்கேயே உள்ளார் என்றும், இவரது குடும்பத்தினர் எங்கு உள்ளார்கள்? என தெரியவில்லை எனவும் கூறினர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னார்வலர்கள் இவரை திருப்பத்தூரில் உள்ள மன நல மருத்துவ மையத்துக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கிருந்து மீண்டும் தப்பி ஓடி வந்து விட்டார். எனவே இவருக்கு மீண்டும் மன நல சிகிச்சை அளிக்க டாக்டர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முன்வர வேண்டும்.

    பிதாமகன் படத்தில் வரும் விக்ரம் போல இவர் செய்யும் ஒவ்வொரு செயலும் வித்தியாசமாகவும், பொதுமக்களை மிரட்டும் வகையிலும் உள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • கற்றாழை அமெரிக்காவை பூர்விகமாக கொண்டுள்ளது.
    • தாமரை பூ வடிவில் இருப்பது அதன் மற்றொரு சிறப்பம்சமாகும்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் பருவகால சூழலுக்கு ஏற்றவாறு பல வகைகளில் பல்வேறு வண்ணங்களில் பூக்கள் பூத்து குலுங்குவது வழக்கம். இந்நிலையில் தோட்டக்கலைத்துறை ஆராய்ச்சி நிலையம் மற்றும் நகர் பகுதிகளில் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூத்து குலுங்கும் யூக்கா அலோய்போலியா என்ற கற்றாழை வகை பூக்கள் பூக்க தொடங்கியுள்ளன.

    இந்த கற்றாழை அமெரிக்காவை பூர்விகமாக கொண்டுள்ளது. இந்த கற்றாழை மலர்கள் குளிர்ந்த வெப்பமும், தண்ணீர் அதிகமாக உள்ள பகுதிகளிலும் வளரும் தன்மை வாய்ந்தவை. இவ்வகை கற்றாழை செடிகளில் பூக்கும் பூக்கள் சுமார் 5 அடி முதல் 12 அடி உயரம் வரை வளரும் தன்மை கொண்டுள்ளது.


     தற்போது கொடைக்கானலில் நிலவி வரும் குளிர்ந்த சூழலில் இந்த அரிய வகை (யூக்கா அலோய்போலியா) கற்றாழை பூக்கள் கொத்து கொத்தாக தோட்டக்கலைத்துறை ஆராய்ச்சி நிலைய வளாகத்திலும், தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் நகர்ப்பகுதிகளிலில் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக பூத்து குலுங்குகின்றன. இவை பார்ப்பதற்கு தாமரை பூ வடிவில் இருப்பது அதன் மற்றொரு சிறப்பம்சமாகும். பொதுவாக மண் அரிப்பை தடுக்கும் விதமாக இவ்வகை கற்றாழை செடிகள் மலைகளின் சரிவான பகுதிகளில் வளர்க்கப்பட்டு வருகிறது.

    • கடந்த சில நாட்களாக சாரல் மழையுடன் இதமான சீதோசனம் நிலவி வருகிறது.
    • நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரியும், ஏரிச்சாலையில் குதிரை மற்றும் சைக்கிள் சவாரி செய்து மகிழ்ந்தனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    தற்போது வெயிலின் தாக்கம் குறைந்த நிலையில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக சாரல் மழையுடன் இதமான சீதோசனம் நிலவி வருகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் வந்திருந்தனர். குறிப்பாக கேரளாவில் இருந்து அதிக சுற்றுலா வாகனங்கள் வந்தது. இதனால் நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    இயற்கை எழில் சூழ்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள பைன்பாரஸ்ட், மோயர்பாயிண்ட், தூண்பாறை, குணாகுகை, தொப்பி தூக்கி பாறை, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. மேலும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரியும், ஏரிச்சாலையில் குதிரை மற்றும் சைக்கிள் சவாரி செய்து மகிழ்ந்தனர்.

    பிரையண்ட் பூங்காவிலும் சுற்றுலா பயணிகள் அதிக அளவு வந்திருந்தனர். அவர்கள் பூக்களின் அழகை கண்டு ரசித்தனர். மேல்மலை பகுதியான மன்னவனூருக்கும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். அங்கு எழும்பள்ளம் ஏரியில் பரிசல் சவாரியும் மேல்பரப்பில் ஜிப்லைன் உள்ளிட்ட சாகச பயணங்களிலும் ஈடுபட்டனர். அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்ததால் ஓட்டல் உரிமையாளர்கள், வியாபாரிகள் உள்பட சுற்றுலா தொழிலை நம்பி உள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதுண்டு.
    • நகரின் முக்கிய பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தினந்தோறு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழாக்கள் மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதுண்டு.

    இந்நிலையில் பக்தர்கள் வரும் முக்கிய பகுதியான அடிவாரம், கிரிவீதி, சன்னதிவீதி உள்ளிட்ட பகுதிகளில்அ திகளவு ஆக்கிரமிப்பு கடைகள் இருந்தன. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமம் அடைவதாகவும், குறிப்பாக அலகு குத்தி வரும் பக்தர்கள் பாதிக்கப்படுவதாகவும், புகார்கள் எழுந்தன.

    இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்ட நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் மற்றும் தேவஸ்தானத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    அதன்பின் படிப்படியாக நடைபாதை கடைகள் அகற்றப்பட்டதுடன் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் வருவதும் தடுக்கப்பட்டது. இதனால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன் வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறி தொடர் போராட்டங்கள் நடைபெற்றன.

    கடந்த வாரம் பழனி நகர்மன்ற தலைவர் தலைமையில் அனைத்து கவுன்சிலர்களும் தேவஸ்தான அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக வருகிற 13-ந் தேதி பழனியில் கடையடைப்பு போராட்டம் நடத்துவது என நகர்மன்றம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பழனி நகர மக்களின் பொது வழிப்பாதை உரிமைகளை பாதுகாத்திடவும், பழனி நகராட்சியின் உரிமைகளை முடக்கும் தேவஸ்தானத்தை கண்டித்தும், நீதியரசர் கவனத்தை ஈர்த்திடும் வகையில் இந்த போராட்டம் நடைபெறும் என நகரின் முக்கிய பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

    விரைவில் உலக முருக பக்தர்கள் பேரவை மாநாடு நடைபெற உள்ள நிலையில் தேவஸ்தானத்திற்கும், நகராட்சிக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த போராட்ட சூழல் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வினோத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    • வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் மேட்டுப்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மேட்டுப்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் வினோத் (வயது30). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    கருத்து வேறுபாடு காரணமாக மனைவி தனது குழந்தைகளுடன் பிரிந்து சென்று விட்டார். இதனால் வினோத் தனது தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்தார்.

    நேற்று இரவு தனது வீட்டில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது உள்ளே புகுந்த ஒரு கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வினோத்தை சரமாரியாக வெட்டினர்.

    அடுப்பறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அவரது தாய் தனது மகனின் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்ப்பதற்குள் அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டனர்.

    ரத்த வெள்ளத்தில் இருந்த வினோத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் எஸ்.பி.பிரதீப், புறநகர் டி.எஸ்.பி. உதயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தாலுகா இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையில் போலீசார் வினோத்தின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது. கொலை செய்யப்பட்ட வினோத் கடந்த 8.5.2020ந் தேதி திண்டுக்கல் பாரதிபுரத்தை சேர்ந்த சுள்ளான் ரமேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர் சிறையில் இருந்து ஜாமீனில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் வெளியே வந்தார். எனவே பழிக்கு பழியாக சுள்ளான் ரமேசின் ஆதரவாளர்கள் இந்த கொலையை செய்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த கொலை தொடர்பாக சூர்யா (19) உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர். இதில் மற்ற 4 பேரும் 17 வயதுக்கு குறைவான சிறுவர்கள் ஆவர். வீடு புகுந்து பழிக்கு பழியாக வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம்

    மேட்டுப்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
    • போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    பழனி:

    தமிழ்க்கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

    தைப்பூசம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் என வருடம் முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும் பழனிக்கு வார விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    குறிப்பாக கேரளாவில் இருந்து ஏராளமானோர் சாமி தரிசனத்திற்காக பழனிக்கு வருகின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் மற்றும் முகூர்த்தநாள் என்பதால் பழனி அடிவார பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் பல்வேறு விஷேசங்கள் நடைபெற்றது.

    மேலும் பஸ்நிலையம், அடிவாரம், படிப்பாதை, யானைப்பாதை, ரோப்கார் நிலையம், மின்இழுவை நிலையம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    மலைக்கோவிலில் திரண்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். முகூர்த்த நாள் என்பதால் அடிவாரம் திருமண மண்டபங்களில் நடைபெற்ற விஷேசசத்திற்கு ஏராளமான வாகனங்கள் வந்தன.

    மேலும் பக்தர்களின் வாகனங்களும் அதிகரித்ததால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் இதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    • பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபர்களை தேடி வந்தனர்.
    • போலீசார் அவர்களிடமிருந்த கஞ்சா மற்றும் அதனை புகைக்க பயன்படுத்திய புகையிலை உறிஞ்சி ஆகியவற்றை கைப்பற்றினர்.

    பழனி:

    பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலுக்கு சொந்தமான சிறுவர் பூங்காவில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கஞ்சா புகைத்தபடி வாலிபர்கள் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோவில் 2 வாலிபர்கள் போதை அதிகரிக்கவே அவர்களை மற்றவர்கள் தூக்கிச் செல்வது போலவும், அதற்கேற்றபடி சினிமா பாடலும் இடம் பெற்றிருந்தது.

    இந்த வீடியோ வைரலான நிலையில் இதுகுறித்து பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபர்களை தேடி வந்தனர். அப்போது கஞ்சா போதையில் வீடியோ பதிவிட்டது பாலசமுத்திரத்தை சேர்ந்த சிவக்குமார், மகாபிரபு, கார்த்திக், பாலசுப்பிரமணியன், ராம்குமார், மதன்குமார் ஆகியோர் என தெரியவரவே அவர்களை கைது செய்தனர்.

    இவர்கள் அதே பகுதியில் நடந்த கோவில் திருவிழாவிலும் சாமி வேடமணிந்து ரீல்ஸ் பதிவிட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த கஞ்சா மற்றும் அதனை புகைக்க பயன்படுத்திய புகையிலை உறிஞ்சி ஆகியவற்றை கைப்பற்றினர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள பாலசமுத்திரத்தை சேர்ந்த மணிகண்டன் மற்றும் மதி, கஞ்சா விற்பனை செய்த பாலசமுத்திரத்தை சேர்ந்த பாஸ்கர், முத்துராஜா ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

    பழனி மற்றும் சுற்றுப்புற பகுதியில் இதுபோல குடிபோதை மற்றும் கஞ்சா போதையில் ரீல்ஸ் வெளியிடுவதற்காக சுற்றித்திரியும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அடிவாரம் பகுதியிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தேவஸ்தானம் சார்பில் மேற்கொள்ளப்பட்டது.
    • நகராட்சியின் 33 கவுன்சிலர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனியில் பக்தர்களுக்கு இடையூறாக பல்வேறு இடங்களில் கடைகள் உள்ளதாகவும் இதனால் பெரும் பாதிப்பு ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்து வந்தன.

    இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிரி வீதி பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டு அதில் தடுப்புகள் ஊன்றப்பட்டு வாகனங்கள் வர முடியாத அளவுக்கு தடை ஏற்படுத்தப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து சன்னதி வீதி, அடிவாரம் பகுதியிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தேவஸ்தானம் சார்பில் மேற்கொள்ளப்பட்டது.

    சாலையோர கடைகள் மற்றும் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் அகற்றப்பட்டதால் தங்களுக்கு வருவாய் குறைந்து விட்டது. கிரி வீதி வழியாக வரும் வாகனங்கள் தடுக்கப்பட்டதால் அதன் முலம் கிடைக்கும் வருவாயும் நின்று விட்டது என நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசாரமாக தெரிவித்தனர்.

    தேவஸ்தான நிர்வாகம் நேரடியாக நகராட்சி உரிமைகளில் தலையிடுவதால் அதனை கண்டித்து போராட்டம் நடத்த வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இன்று நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் தேவஸ்தான அலுவலகத்தின் முன் போராட்டம் நடைபெற்றது. துணைத் தலைவர் கந்தசாமி, கவுன்சிலர் முருகானந்தம் முன்னிலை வகித்தனர்.

    மேலும் நகராட்சியின் 33 கவுன்சிலர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். கடைகள் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் மக்களின் வாழ்வாதாரம் பற்றி கவலைப்படாமல் தேவதஸ்தானம் செயல்படுவதாகவும் இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் கோவில் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • வீட்டின் அருகே உள்ள நத்தம் புறம்போக்கு இடத்திற்கு பட்டா கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
    • காயம் அடைந்த ராஜ்குமார் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள பிள்ளையார் நத்தத்தை சேர்ந்தவர் குகன் (வயது 32). இவர் அணைப்பட்டி சாலையில் உள்ள பேரூராட்சி வளாகத்தில் ரப்பர் ஸ்டாம்ப் செய்து தரும் கடை நடத்தி வருகிறார்.

    இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிள்ளையார் நத்தம் கிராம நிர்வாக அலுவலராக உள்ள ராஜ்குமார் என்பவரிடம் தனது வீட்டின் அருகே உள்ள நத்தம் புறம்போக்கு இடத்திற்கு பட்டா கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

    இந்த இடத்திற்கு பட்டா வழங்குவதில் ஆட்சேபனை இருப்பதாக ராஜ்குமார் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த குகன் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் வைத்து ராஜ்குமாரை கன்னத்தில் அறைந்தார். இதில் காயம் அடைந்த ராஜ்குமார் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குகனை கைது செய்தனர். பின்னர் நிலக்கோட்டை கோர்ட்டில் ஆஜர் படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.

    • வெடி பொருட்களுடன் கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் மதுரை வீரன் புகார் அளித்தார்.
    • சிதறிய வெடி பொருட்களை மறைவாக வைத்திருந்தது தெரிய வந்தது.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்குட்பட்ட செம்பரான்குளம் பாண்டியன் பாறை என்ற இடத்தில் வனக்காப்பாளர்கள் மதுரைவீரன், சிவக்குமார் வேட்டை தடுப்பு காவலர் காமராஜ் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.

    அப்போது அங்கு 15 ஜெலட்டின் குச்சிகள், 23 டெட்டனேட்டர்கள், 18 என்.இ.டி. டெட்டனேட்டர் ஆகியவை கிடைத்தன. கைப்பற்றப்பட்ட வெடி பொருட்களுடன் கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் மதுரை வீரன் புகார் அளித்தார்.

    அதன் பேரில் மாவட்ட எஸ்.பி. பிரதீப், டி.எஸ்.பி. மதுமதி, இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், நக்சல் ஒழிப்பு போலீசார், ஒட்டன்சத்திரம் ரேஞ்சர் ஆறுமுகம் தலைமையிலான வனக்குழுவினர் ஆகியோர் சம்மந்தப்பட்ட பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    போலீசார் விசாரணையில் தனியார் எஸ்டேட் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு சாலை வசதி ஏற்படுத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாறைகள் வெடி வைத்து தகர்ப்பதற்காக இந்த வெடி பொருட்கள் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது. அப்போது பணியில் இருந்த கம்ப்ரசர் வாகனம் விபத்துக்குள்ளாகவே கோவிந்தராஜ் என்பவர் படுகாயமடைந்தார்.

    இதனால் சிதறிய வெடி பொருட்களை மறைவாக வைத்திருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வெடி பொருட்களை பதுக்கிய கோபிசெட்டி பாளையத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் (52), வெடிபொருட்களை வழங்கிய திண்டுக்கல்லைச் சேர்ந்த வேல்முருகன் (52), சரவணன் (27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இது குறித்து மாவட்ட எஸ்.பி. பிரதீப் தெரிவிக்கையில், செம்பரான்குளம் பகுதியில் சாலை அமைக்கும் பணிக்காக இந்த வெடி பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஒருவர் காயமடையவே வெடி பொருட்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே நக்சல்,பயங்கரவாத நடமாட்டம் குறித்த எவ்வித அறிகுறிகளும் இல்லை என்றார்.

    கொடைக்கானலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தடை செய்யப்பட்ட வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் பயங்கரவாத பயிற்சி மேற்கொண்ட நவீன் பிரசாத் என்பவரும் சுட்டு கொலை செய்யப்பட்டார். எனவே வனப்பகுதியில் போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வாகனங்கள் வரமுடியாத அளவுக்கு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டன.
    • வருவாய்த் துறையினர் குடியிருப்பு வாசிகளுடன் கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் உள்ள பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்கள் வரும் பாதையான அடிவாரம், கிரிவீதி, சன்னதிவீதி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு ஆக்கிரமிப்புகள் இருந்தது. இதனையடுத்து பல்வேறு புகார்கள் வந்ததன் பேரில் ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் முக்கிய சாலைகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மேலும் வாகனங்கள் வரமுடியாத அளவுக்கு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டன. இருந்தபோதும் ஒருசில இடங்களில் ஆக்கிரமிப்புகள் நீடித்து வந்தது.

    பழனி மலை அடிவாரத்தில் மேற்கு கிரிவீதியில் அண்ணா செட்டிமடம் என்ற இடம் உள்ளது. பாதவிநாயகர் கோவிலில் இருந்து மின்இழுவை ரெயில்நிலையம் செல்லும் முக்கிய சந்திப்பான இங்கு 100ஆண்டுகளுக்கும் மேலாக பல குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கிரி வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் அண்ணா செட்டிமடம் பகுதியில் குடியிருக்கும் 140 குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்கிவிட்டு, ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இதற்கு அவகாசம் கேட்ட வருவாய்த்துறையினருக்கும் கோர்ட்டு கண்டனம் தெரிவித்தது.

    இதையடுத்து வருவாய்த் துறையினர் குடியிருப்பு வாசிகளுடன் கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து 139குடும்பங்களுக்கு பழனியில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ள தாதநாயக்கன்பட்டியில் தலா 1½ சென்ட் இடம் வழங்கி கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் நேற்று அனைவரும் தங்களது வீடுகளை காலி செய்தனர். தொடர்ந்து கோார்ட்டு உத்தரவின் பேரில் இன்று அதிகாலை முதலே வருவாய்த்துறை, தேவஸ்தான நிர்வாகமும் இணைந்து டி.எஸ்.பி தனஞ்செயன் தலைமையில் ஏராளமான போலீசார் உதவியுடன் 10க்கும் மேற்பட்ட ஜே.சி.பி. வாகனங்களை கொண்டு ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் பழனி மலை அடிவாரத்தில் படிப்பாதை அருகில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த பிரபல தனியார் பஞ்சாமிர்த கடையான சித்தநாதன் பஞ்சாமிர்த கடையும் நீதிமன்ற உத்தரவின் பேரில் இடித்து அகற்றப்பட்டது. குடியிருப்புகளை அகற்றும்போது அங்கு ஏற்கனவே வசித்த குடியிருப்பு வாசிகள் தடுத்து இடையூறு செய்யலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பழனி மலை அடிவாரத்தில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இடித்து அகற்றும்பணி நடைபெற்ற போது பல ஆண்டுகளாக குடியிருந்தவர்கள் சாலை ஓரத்தில் நின்று தாங்கள் வசித்த வீடு இடிபடுவதை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

    • மாலை நேரத்தில் ரம்யமான சூழல் நிலவி வருகிறது.
    • போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

    கோடைகாலம் முடிந்த நிலையில் தற்போது அதிகாலை நேரத்தில் பனி மூட்டமும் அதனைத் தொடர்ந்து சாரல் மழையும், மாலை நேரத்தில் மீண்டும் பனி மூட்டமும் என ரம்யமான சூழல் நிலவி வருகிறது.

    இன்று விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் கேரளா மாநிலத்தில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.

    இதனால் வெள்ளி நீர்வீழ்ச்சி, கோக்கர்ஸ் வாக், குணாகுகை, தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு, பைன்பாரஸ்ட், மோயர்பாயிண்ட் உள்ளிட்ட சுற்றுலா இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரியும், ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரியும் செய்து மகிழ்ந்தனர். மேலும் மேல்மலை கிராமமான மன்னவனூர், பூண்டி, கிளாவரை, பூம்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.

    முயல்பண்ணை, சூழல் சுற்றுலா மையம் ஆகியவற்றிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. காலை நேரத்தில் இதமான வெயில் மற்றும் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவது சுற்றுலாப் பயணிகளை உற்சாகமடைய செய்துள்ளது. தொடர்ந்து அதிக அளவில் வாகனங்கள் வந்ததால் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    சுற்றுலாப் பயணிகள் வருகையால் வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ×