என் மலர்tooltip icon

    சென்னை

    • மெட்ரோ ரெயில் இருக்கை விவகார் தொடர்பாக பொதுநல வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
    • அபராதம் விதிப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உத்தரவு.

    சென்னை மெட்ரோ ரெயில்களில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இருக்கைகள் அவர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய, மெட்ரோ ரெயில் நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் சில அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

    வழக்கறிஞர் வி.பி.ஆர். மேனன் தாக்கல் செய்த பொது நல வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மெட்ரோ ரெயில்களில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு எனத் தனியாக இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலும் இளைஞர்களும் மற்ற பயணிகளும் அந்த இருக்கைகளை ஆக்கிரமித்துக் கொள்வதாகப் புகார்கள் எழுந்தன.

    இது தொடர்பாகத் தொடரப்பட்ட பொதுநல வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, மெட்ரோ ரயில்களில் அதிகாரிகள் அவ்வப்போது 'திடீர் சோதனை' நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

    முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய பயணிகளுக்கான இருக்கைகளில் மற்றவர்கள் அமர்ந்திருக்கிறார்களா என்பதை அவர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும், தகுதியற்ற நபர்கள் அந்த இருக்கைகளில் அமர்ந்து கொண்டு, முதியோர்களுக்கோ அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கோ இடம் தர மறுத்தால், அவர்கள் மீது அபராதம் விதிப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், முன்னுரிமை இருக்கைகள் யாருக்கானவை என்பது குறித்த அறிவிப்புகளை ரெயில்களுக்குள்ளும், நிலையங்களிலும் தெளிவாகத் தெரியும்படி வைக்க வேண்டும். ஒலிபெருக்கி மூலமாகவும் பயணிகளுக்குத் தொடர்ந்து அறிவுறுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரெயிலில் இருக்கும் பாதுகாப்பு ஊழியர்கள், ஒவ்வொரு நிறுத்தத்திலும் முதியோர்கள் ஏறும் போது அவர்களுக்கு இருக்கைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், உடல் ரீதியான சவால்களைக் கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது ஒரு நாகரீகமான சமூகத்தின் கடமை என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

    மேலும், மெட்ரோ நிர்வாகம் இதனைச் சரியாகக் கண்காணிக்கத் தவறினால், சட்டப்படியான நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

    • முதல் பஸ் காலை 10 மணிக்கும் கடைசி பஸ் இரவு 8.30 மணிக்கும் புறப்படும்.
    • இந்தப் பஸ்களின் வழித்தடத்தில் உள்ள எந்தப் பஸ் நிறுத்தத்தில் வேண்டுமானாலும் ஏறி, பயணச்சீட்டு பெற்று பயணிக்கலாம்.

    சென்னை:

    சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பல் கூறி இருப்பதாவது:-

    சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில், சென்னை உலா' என்ற சுற்றுலா பஸ் சேவை கடந்த 14-ந் தேதி தொடங்கப்பட்டது. முக்கிய சுற்றுலாத் தலங்கள், பாரம்பரிய நினைவுச் சின்னங்களை பார்க்க ஏதுவாக இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக 1980-ம் ஆண்டு காலகட்டத்தில் இயக்கப்பட்ட பஸ்களைப் போன்று 5 பஸ்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    சென்ட்ரலில் இருந்து புறப்படும் இந்த பஸ்கள் பூங்கா ரெயில் நிலையம், எழும்பூர் ரெயில் நிலையம், எழும்பூர் அருங்காட்சியகம், வள்ளுவர் கோட்டம் செம்மொழிப் பூங்கா, லஸ் கார்னர், சாந்தோம், கலங்கரை விளக்கம், விவேகானந்தர் இல்லம், கண்ணகி சிலை மெரினா கடற்கரை, போர் நினைவுச் சின்னம், தலைமைச் செயலகம், சென்னை உயர்நீதிமன்றம், பல்லவன் இல்லம் வழியாகச் சென்று மீண்டும் சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்தடையும்.

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 10, 10.30, 11, 11.30, பகல் 12, 12.20, 12.50, 1.20, 1.50, பிற்பகல் 2.20, 2.50, மாலை 3.20, 3.50, 4.10, 4.35, 5, 5,40, 6.20, 7 இரவு 7.50, 8.30 ஆகிய நேரங்களில் பஸ்கள் புறப்படும்.

    முதல் பஸ் காலை 10 மணிக்கும் கடைசி பஸ் இரவு 8.30 மணிக்கும் புறப்படும். இந்தப் பஸ்களில் ரூ.50 கட்டண டிக்கெட் எடுத்துக்கொண்டு நாள் முழுவதும் எந்த இடத்திலும் ஏறி இறங்கிக்கொள்ளலாம்.

    இந்தப் பஸ்கள் வார நாள்களான திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படும். வார இறுதி மற்றும் மற்றும் அரசு அரசு விடுமுறை நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படும்.

    இந்தப் பஸ்களின் வழித்தடத்தில் உள்ள எந்தப் பஸ் நிறுத்தத்தில் வேண்டுமானாலும் ஏறி, பயணச்சீட்டு பெற்று பயணிக்கலாம். ஒரு பயணச்சீட்டை பயன்படுத்தி 5 பஸ்களிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் பயணிக்கலாம்.

    இவ்வாறு சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

    • கறிக்கோழி விவசாயிகள் கடந்த சில வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • கோழி வளர்ப்பு பெரு நிறுவனங்களின் தூண்டுதலில் இந்த கைது நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டிருக்கிறது.

    உரிமைகளுக்காக போராடிய கறிக்கோழி விவசாயிகளை சிறையில் அடைப்பதா? உழவர்களின் முதல் எதிரியே திமுக தான் என்று பாமக தலைவர் அன்புமணி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கறிக்கோழி வளர்ப்புக்கான கூலியை கிலோவுக்கு ரூ.20 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று அறவழியில் போராடிய கோழிப்பண்ணை விவசாயிகள் சங்கத் தலைவர் ஈசன் முருகசாமி உள்ளிட்ட 10 நிர்வாகிகளை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. உரிமைக்காக போராடிய விவசாயிகளை திமுக அரசு சிறையில் அடைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.

    கறிக்கோழி வளர்ப்பை பெரு நிறுவனங்கள் மேற்கொண்டு வந்தாலும், அவர்களுக்காக கறிக்கோழிகளை வளர்த்து தருபவர்கள் உழவர்கள் தான். இதற்காக அவர்களுக்கு கிலோவுக்கு ரூ.6.50 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. கடந்த 13 ஆண்டுகளாக இந்த ஊதியம் உயர்த்தப்படாத நிலையில், கறிக்கோழி வளர்ப்புக் கூலியை கிலோவுக்கு ரூ.20 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரி கறிக்கோழி விவசாயிகள் கடந்த சில வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக நாளை மறுநாள் 21-ஆம் தேதி முத்தரப்பு பேச்சுகள் நடத்தப்படவுள்ளன. அதற்கு முன்பாகவே கறிக்கோழி விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கவே, கோழி வளர்ப்பு பெரு நிறுவனங்களின் தூண்டுதலில் இந்த கைது நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டிருக்கிறது.

    உழவர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக, பெரு நிறுவனங்களின் கையாளாக மாறி அவர்களை ஒடுக்கி வருகிறது. மேல்மா பகுதியில் சிப்காட் வளாகத்திற்காக நிலம் கையகப்படுத்துவதைக் கண்டித்து போராட்டம் நடத்திய உழவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த திமுக அரசிடமிருந்து வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. இத்தகைய நடவடிக்கைகளால் உழவர்களின் முதல் எதிரியாக திமுக அரசு உருவெடுத்திருக்கிறது.

    கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் கோழிப்பண்ணை விவசாயிகள் சங்கத் தலைவர் ஈசன் முருகசாமி உள்ளிட்டோரை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். கறிக்கோழி வளர்ப்புக்கு கிலோவுக்கு ரூ.20 கூலி வழங்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை கோழி வளர்ப்பு பெரு நிறுவனங்கள் ஏற்றுக் கொள்வதை திமுக அரசு உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு ரூ.140 கோடிக்கு மது விற்பனை கூடுதலாக நடைபெற்றது.
    • போகி பண்டிகை மற்றும் பொங்கல் பண்டிகை ஆகிய 2 நாளுக்கான விற்பனை மட்டும் ரூ.519 கோடியாக உயர்ந்தது.

    பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் கடந்த 14-ந்தேதி முதல் நேற்று 18-ந்தேதி வரை நடைபெற்றது. 5 நாட்கள் தொடர்ந்து விடுமுறை விடப்பட்டதால் பொங்கலை உற்சாகமாக மக்கள் கொண்டாடினர்.

    அதே நேரத்தில் டாஸ்மாக் கடைகளிலும் மது விற்பனை அமோகமாக நடந்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த வருடம் மது விற்பனை அதிகமாக நடைபெற்றதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்த ஆண்டு சுமார் ரூ.850 கோடிக்கு மது விற்பனை நடந்து உள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு ரூ.140 கோடிக்கு மது விற்பனை கூடுதலாக நடைபெற்றது.

    இந்த ஆண்டு மக்கள் கையில் பணப்புழக்கம் அதிகமாக இருந்ததால் மது விற்பனையும் கூடியுள்ளது. போகி பண்டிகை மற்றும் பொங்கல் பண்டிகை ஆகிய 2 நாளுக்கான விற்பனை மட்டும் ரூ.519 கோடியாக உயர்ந்தது.

    16-ந்தேதி மதுக்கடைகள் அடைக்கப்பட்டதால் 15-ந் தேதியே அதிக அளவு மதுபானங்கள் வாங்கி குவித்தனர். இதுவரையில் இல்லாத விற்பனையாக இது பார்க்கப்படுகிறது.

    காணும் பொங்கலான 17-ந்தேதி மதுவிற்பனை படுஜோராக நடந்துள்ளது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, விழுப்புரம் மண்டலங்களின் மதுபானங்கள் தேவையான அளவு குவிக்கப்பட்டு இருந்தது.

    நகரப் பகுதிகளை காட்டிலும் கிராமப்புறங்களில் மது விற்பனை கணிசமாக கூடி இருந்தது. இதற்குக் காரணம் நகர்ப்புறங்களில் இருந்து மக்கள் கிராமங்களில் பொங்கல் கொண்டாட சென்றது தான். அதனால் கிராமங்களில் உள்ள மதுக்கடைகளில் இரவு வரை மது விற்பனை களை கட்டியது.

    நேற்று (ஞாயிற்றுக் கிழமை) விற்பனை குறைந்ததாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்தனர். 4 நாட்களில் கையில் இருந்த பணம் முழுவதும் செலவாகி விட்டதால் நேற்று வழக்கமான அளவே விற்பனை நடந்து உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

    புதிய ரக மதுபானங்களும் அதிக அளவில் கடைகளில் குவிக்கப்பட்டிருந்ததால் தேவையான மது வகைகளை வாங்கி அருந்தினர்.

    குறைந்த ரக மதுபானங்கள் அதிக அளவில் விற்பனையானது. பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக மதுபானம் இடம் பெற்று இருந்ததால் ஓட்டல்களில் உள்ள மது பார்களிலும் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.

    • டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் இன்று மீண்டும் விசாரணைக்காக ஆஜரானார்.
    • தாமதத்திற்கு வளைவுகள் தான் காரணம் என்பதற்கான ஆதாரத்தை விஜயிடம் சி.பி.ஐ. கேட்டுள்ளது.

    கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி அன்று மேற்கொண்ட பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கை ஓய்வுபெற்ற சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி அஜஸ் ரத்தோகி கண்காணிப்பில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    இந்த வழக்கு தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள், சட்டம்- ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. விஜய்க்கும் சம்மன் அனுப்பி அவரிடமும் கடந்த 12-ந்தேதி அன்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் அன்றைய தினம் காலை 11.30 மணியளவில் ஆஜரான விஜய்யிடம் பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகளுடன் 6 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தப்பட்டது.

    அவரிடம் அடுத்த நாளும் (அதாவது, 13-ந்தேதி) விசாரணை நடத்துவதற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், பொங்கல் பண்டிகை காரணமாக விஜய் தரப்பில் விசாரணையை வேறு தேதிக்கு மாற்றும்படி சி.பி.ஐ. அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

    அதனையேற்று, பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் 19-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சி.பி.ஐ. தரப்பில் சம்மன் வழங்கப்பட்டது.

    இந்தநிலையில் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் இன்று மீண்டும் விசாரணைக்காக ஆஜரானார். விசாரணைக்காக விஜய் ஆஜரான நிலையில் சி.பி.ஐ. தலைமை அலுவலகம், சிஜிஓ காம்பிளக்ஸ் சாலையில் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    கரூர் துயரம் தொடர்பான இன்றைய சி.பி.ஐ. விசாரணையில், பிரசாரத்திற்கு ஏன் தாமதமாக சென்றீர்கள்? என கேள்வி எழுப்பியது.

    சாலையில் வளைவுகள் நிறைய இருந்ததால் கரூர் செல்ல 7 மணி நேரம் தாமதம் என த.வெ.க. தலைவர் விஜய் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தாமதத்திற்கு வளைவுகள் தான் காரணம் என்பதற்கான ஆதாரத்தை விஜயிடம் சி.பி.ஐ. கேட்டுள்ளது. கூட்டம் அதிகமாக இருந்தபோதிலும் பிரசார வாகனம் தொடர்ந்து முன்னேறியது ஏன்? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய சி.பி.ஐ. எழுப்பி உள்ளது.

    இந்த கேள்விகளுக்கு விஜய் அளித்த பதிலின் அடிப்படையில்தான் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

    பிப்ரவரி முதல் அல்லது 2-வது வாரத்தில் முதல்கட்ட குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.

    • அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் இணைவது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளின் தலைவர்களை மேடையேற்ற பா.ஜ.க. தயாராகி வருகிறது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு சந்தித்தார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் இணைவது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    வரும் 23-ந்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். இந்தப் பொதுக்கூட்டத்தில் என்.டி.ஏ கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளின் தலைவர்களை மேடையேற்ற பா.ஜ.க. தயாராகி வருகிறது. அதற்குள் கூட்டணியை இறுதி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது.

    இந்நிலையில் தனியரசு, எடப்பாடி பழனிசாமியை சந்தித்து உள்ளார்.

    கடந்த நவம்பர் மாதம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக தனியரசு பேசி இருந்த நிலையில் தற்போது எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 4 வழி மேம்பாலம் மற்றும் முனைய கட்டுமானத்திற்கான நிதியை இந்திய விமான ஆணையம் ஒதுக்கீடு செய்யும்.
    • அடையாறு ஆற்றின் வழியாக சென்று முனையத்தின் நுழைவு பகுதியை அடையும்.

    சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் வகையில் செயற்கைக்கோள் முனையம் கட்டுமானம் மற்றும் அதற்கான உயர்மட்ட மேம்பால பணிகளை விரைந்து செயல்படுத்தும் வகையில் இந்திய விமான நிலைய ஆணையம் நீர்வளத் துறையிடம் ஒரு ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்து உள்ளது.

    புதிய திட்டமான சாட்டிலைட் முனையத்திற்கு இணைப்பு வழங்க கூடுதல் நிலம் வழங்க முடியாது என தமிழக அரசு தெரிவித்ததை தொடர்ந்து தற்போதைய நிலத்திலேயே உயர்மட்ட மேம்பாலம் கட்ட இந்திய விமான நிலைய ஆணையம் புதிய திட்டத்தை உருவாக்கி உள்ளது.

    தேசிய நெடுஞ்சாலை தொடங்கும் இந்த மேம்பாலம் தண்டலம் பகுதியில் உள்ள மாதவ் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு அருகில் தொடங்கி அடையாறு ஆற்றின் வழியாக சென்று முனையத்தின் நுழைவு பகுதியை அடையும்.

    அடையாறு ஆற்றின் குறுக்கே கட்டப்படும் தூண்கள் மழைக்காலங்களில் அல்லது வெள்ள காலத்தில் நீரோட்டத்தை தடுக்குமா என்பதை ஆய்வு செய்யுமாறு மாநில அரசு கேட்டிருந்தது.

    இது குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் நீர்வள மையம் ஆய்வு செய்து சமர்ப்பித்த அறிக்கையை தற்போது இந்திய விமான ஆணையம் நீர்வளத் துறையிடம் ஒப்படைத்து உள்ளது.

    நீர்வளத்துறை மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி கிடைத்தவுடன் இந்த 4 வழி மேம்பாலம் மற்றும் முனைய கட்டுமானத்திற்கான நிதியை இந்திய விமான ஆணையம் ஒதுக்கீடு செய்யும்.

    பரந்தூர் விமான நிலையம் பயன்பாட்டுக்கு வர இன்னும் 4, 5 ஆண்டுகள் ஆகும் என்பதால் தற்போதைய சென்னை விமான நிலையத்தில் நெரிசலை குறைக்க இந்த சாட்டிலைட் முனையம் திட்டம் மிகவும் அவசியமானது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    இந்தத் திட்டம் 8 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவர திட்டமிடப்பட்டது. நீண்ட காலமாக தாமதமடைந்து வந்தது. 2024-ல் இதனை மீண்டும் இந்திய விமான நிலையம் கையில் எடுத்த பிறகு தற்போது வேகம் பெற்றுள்ளது.

    • மதுரை, கோவை - தென் இந்தியாவின் முக்கிய வளர்ச்சி மையங்கள் ஓசூர் - தொழில், லாஜிஸ்டிக்ஸ், வேலைவாய்ப்பின் முதுகெலும்பு.
    • ஏன் இந்த பாரபட்சம், மோடி? ஏன் தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது?

    விருதுநகர் மக்களவை காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    மதுரை மெட்ரோ ❌ No

    கோவை மெட்ரோ ❌No

    இப்போது ஓசூர் விமான நிலையமும் ❌No

    ஒன்றுக்கொன்று தமிழ்நாட்டின் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள் மறுக்கப்படுகின்றன. இந்த மாற்று அணுகுமுறை ஏன்?

    ஜிடிபி, ஏற்றுமதி, எம்.எஸ்.எம்.இ., வேலைவாய்ப்பு -

    இந்தியாவின் வளர்ச்சிக்கு தமிழ்நாடு முக்கிய பங்காற்றுகிறது.

    ஆனால் மத்திய திட்டங்களில் மட்டும் புறக்கணிப்பா?

    மதுரை, கோவை - தென் இந்தியாவின் முக்கிய வளர்ச்சி மையங்கள் ஓசூர் - தொழில், லாஜிஸ்டிக்ஸ், வேலைவாய்ப்பின் முதுகெலும்பு.

    இந்த திட்டங்களை மறுப்பது கோடிக்கணக்கான மக்களின் வாய்ப்புகளை மறுப்பதுதான்.

    அரசியல் ஒத்துழைப்பின் அடிப்படையிலா வளர்ச்சி?

    கூட்டாட்சி என்பது பேச்சுக்காக மட்டுமா, நடைமுறையில்லையா?

    தமிழ்நாடு சலுகை கேட்கவில்லை.

    தன் உரிமையான பங்கையே கேட்கிறது.

    வளர்ச்சியில் பாகுபாடு ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதது.

    ஏன் இந்த பாரபட்சம், மோடி?

    ஏன் தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது?

    மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    உங்களுக்கும் மக்கள் No சொல்லுவார்கள் 2026 யில்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 43 நீர்த்தேக்கங்களை உருவாக்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.
    • புதிய நீர்த்தேக்கம் மூலம் நாளொன்றுக்கு 170 மில்லியன் லிட்டர் குடிநீரை வழங்க முடியும்.

    சென்னை அடுத்த நெம்மேலியில் நீர்வளத்துறை சார்பில் 342 கோடி ரூபாய் செலவில் புதிதாக மாமல்லன் நீர்த்தேக்கம் அமைகிறது. சென்னையின் 6-வது நீர்த்தேக்கமான மாமல்லன் நீர்த்தேக்கத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    மாமல்லன் நீர்த்தேக்கத்திற்கு அடிக்கல் நாட்டிய பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * காற்றும் நீரும் இந்த பூமியில் இருப்பதால் தான் உயிரினங்கள் உருவாகி வாழ்கிறோம்.

    * நீரின்றி அமையாது உலகு என உலகப் பொதுமறையில் எடுத்துக்கூறினார் வள்ளுவர்.

    * இயற்கையோடு இணைந்தது தான் தமிழர் வாழ்வு. அதை ஒட்டியே திராவிட மாடல் அரசு நடைபெறுகிறது.

    * தி.மு.க. ஆட்சியில் அணைகள் கட்டப்படவில்லை என பொய் சொல்கிறார்கள்.

    * 1967 - 2011 தி.மு.க. ஆட்சி கால கட்டங்களில் 43 அணைகள் கட்டப்பட்டுள்ளன.

    * 43 நீர்த்தேக்கங்களை உருவாக்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.

    * மேட்டூர் அணை முழுவதும் நிரம்பி குறித்த நேரத்தில் திறந்து வைத்திருக்கிறோம்.

    * காவிரி டெல்டா பகுதிகளில் ரூ.459 கோடியில் தூர்வாரும் பணிகள் நடைபெற்றன.

    * 121 தடுப்பணைகள், 63 அணைக்கட்டுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    * ரூ.342.60 கோடி மதிப்பீட்டில் தற்போது புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படுகிறது.

    * புதிய நீர்த்தேக்கம் மூலம் நாளொன்றுக்கு 170 மில்லியன் லிட்டர் குடிநீரை வழங்க முடியும்.

    * 13 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு இந்த நீர்த்தேக்கம் பயன்படும்.

    * 34 கி.மீ. நீள கரையுடன் மாமல்லன் நீர்த்தேக்கம் அமைக்கப்பட உள்ளது.

    * சென்னையைச் சுற்றி செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் ஏரிகள் ஏற்கனவே உள்ளன.

    * நிதி மேலாண்மை போல் நீர் மேலாண்மையும் மிக மிக முக்கியம்.

    * தலைநகர் சென்னைக்காக தி.மு.க. அரசு எத்தனையோ திட்டங்களை செய்து கொடுத்திருக்கிறது.

    * சென்னையின் முகமே மாறக்கூடிய வகையில் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சட்டசபையில் தேசிய கீதம் இசைக்கும் நிகழ்வில் ஆளுநர் கூறியுள்ளதுபோல் இதுவரை மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.
    • சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த கூட்டத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் கூடும் சட்டசபை கூட்டத் தொடரின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றுவது வழக்கம். அதன் பின்னர் அந்த உரையை சபாநாயகர் தமிழில் வாசிப்பதும் வழக்கமாக உள்ளது.

    ஆனால் கடந்த 2023-ம் ஆண்டில், அரசு கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி அப்படியே படிக்காமல், சில திருத்தங்களை மேற்கொண்டு வாசித்தார். எனவே பேரவை விதிப்படி அந்த உரையை ரத்து செய்துவிட்டு, ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்தார். அரசு கொடுத்திருந்த ஆளுநர் உரை, அவைக்குறிப்பில் பதிவு செய்யப்பட்டது.

    ஆனால் 2024 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் ஆளுநர் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காமல் புறக்கணித்தார். அதற்கு, தான் கேட்டுக்கொண்டபடி தேசிய கீதத்தை அவை நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இசைக்கவில்லை என்ற காரணத்தை கூறினார்.

    இந்தநிலையில் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் 20-ந் தேதி (அதாவது நாளை) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது என்றும் அன்றைக்கு நடக்கும் முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துவார் என்றும் சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். சட்டசபையில் தேசிய கீதம் இசைக்கும் நிகழ்வில் ஆளுநர் கூறியுள்ளதுபோல் இதுவரை மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.

    உரை நிகழ்த்துவதற்காக சட்டசபைக்கு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, மரபுப்படி வரவேற்பு அளிக்கப்படும். அவரை அவைக்குள் சபாநாயகர் மற்றும் சட்டசபை செயலாளர் அழைத்து வருவார்கள். சபாநாயகர் இருக்கையில் ஆளுநர் அமர்வார். அருகில் உள்ள இருக்கையில் சபாநாயகர் உட்காருவார்.

    அனைவரும் எழுந்து நிற்கும் நிலையில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். அதன்பின்னர் ஆளுநர் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்துவார். அந்த உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசிப்பார். உரையை சபாநாயகர் வாசித்து முடிந்ததும் தேசிய கீதம் இசைக்கப்படும். அதோடு அன்றைய அவை நிகழ்ச்சிகள் முடிவுக்கு வரும்.

    அதன்பின்னர் சபாநாயகர் அறையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? அதில் என்னென்ன அலுவல்களை எடுக்க வேண்டும்? போன்றவை குறித்து முடிவு செய்யப்படும். அதை சபாநாயகர் அப்பாவு அறிவிப்பார்.

    சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த கூட்டத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆளும் கட்சி மீதும் அரசு மீதும் என்னென்ன குற்றச்சாட்டுகளை வைக்கலாம்? என்பதை அ.தி.மு.க., பா.ஜ.க. போன்ற கட்சிகள் பட்டியல் போட்டு கொண்டு வரும். அதற்கு பதில் அளிக்கும் விதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்பட அரசு தரப்பினரும் தயாராகி வருவார்கள். எனவே இந்த சட்டசபை கூட்டத்தொடரில் அரசியல் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

    • நேற்றைய நிலவரப்படி 13.03 லட்சம் பேர் தங்கள் பெயர்களை சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்.
    • பிப்ரவரி 17-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கூறினர்.

    தமிழகத்தில் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருந்தனர். இந்தநிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திய தேர்தல் கமிஷன் எஸ்.ஐ.ஆர். என்று அழைக்கப்படும் தீவிர வாக்காளர் திருத்த பணிகளில் ஈடுபட்டது.

    இதனை தொடர்ந்து கடந்த மாதம் 19-ந்தேதி தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 97 லட்சத்து 37 ஆயிரத்து 832 பேர் நீக்கப்பட்டு, 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 755 வாக்காளர்கள் இருந்தனர். அதில் 66 லட்சம் பேர் இடம் மாறி சென்றவர்களாக காட்டப்பட்டு இருந்தது.

    வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இடம் பெறாதவர்களின் பெயர்களை சேர்ப்பதற்காக இந்திய தேர்தல் கமிஷன் கடந்த மாதம் (டிசம்பர்) 27, 28 மற்றும் ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்களை நடத்தியது.

    தமிழகத்தில் தி.மு.க.விற்கு 68 ஆயிரத்து 260, அ.தி.மு.க.விற்கு 67 ஆயிரத்து 286, பா.ஜ.க.விற்கு 61 ஆயிரத்து 438, காங்கிரசிற்கு 30 ஆயிரத்து 843 தேர்தல் முகவர்கள் உள்ளனர். அரசியல் கட்சிகளின் தேர்தல் முகவர்கள் சம்பந்தப்பட்ட வாக்காளர்களிடம் சென்று, படிவம் 6-ஐ பூர்த்தி செய்து வாங்கி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் சமர்ப்பித்தனர்.

    விடுபட்டவர்கள், புதியவர்கள் வாக்காளராக சேர்வதற்கு ஒரு மாத காலம் அதாவது ஜனவரி 18-ந் தேதி (நேற்று) வரை இந்திய தேர்தல் கமிஷன் அவகாசம் அளித்திருந்தது. ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை அளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது.

    இதில் கடந்த 16-ந் தேதி வரை 18 வயது நிரம்பிய தகுதியுடைய 12 லட்சத்து 80 ஆயிரத்து 668 பேர் படிவம் 6, 6ஏ மற்றும் இறந்த 32 ஆயிரத்து 388 பேரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு அவர்களின் குடும்பத்தினர் படிவம் 7-ஐ அளித்துள்ளனர்.

    நேற்றைய நிலவரப்படி 13.03 லட்சம் பேர் தங்கள் பெயர்களை சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். தொடர்ந்து வருகிற பிப்ரவரி 17-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கூறினர்.

    இந்நிலையில், தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30ம் தேதி வரை மேலும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்றுடன் அவகாசம் முடிவடைந்த நிலையில் மேலும் 12 நாட்களுக்கு அவகாசத்தை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    • பொங்கல் பண்டிகை காரணமாக விஜய் தரப்பில் விசாரணையை வேறு தேதிக்கு மாற்றும்படி சி.பி.ஐ. அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
    • சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று மாலை விஜய் டெல்லி புறப்பட்டு சென்றார்.

    சென்னை:

    கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி அன்று மேற்கொண்ட பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கை ஓய்வுபெற்ற சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி அஜஸ் ரத்தோகி கண்காணிப்பில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    இந்த வழக்கு தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள், சட்டம்- ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. விஜய்க்கும் சம்மன் அனுப்பி அவரிடமும் கடந்த 12-ந்தேதி அன்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் அன்றைய தினம் காலை 11.30 மணியளவில் ஆஜரான விஜய்யிடம் பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகளுடன் 6 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தப்பட்டது.

    அவரிடம் அடுத்த நாளும் (அதாவது, 13-ந்தேதி) விசாரணை நடத்துவதற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், பொங்கல் பண்டிகை காரணமாக விஜய் தரப்பில் விசாரணையை வேறு தேதிக்கு மாற்றும்படி சி.பி.ஐ. அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

    அதனையேற்று, பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் 19-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சி.பி.ஐ. தரப்பில் சம்மன் வழங்கப்பட்டது.

    இதையடுத்து சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று மாலை விஜய் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி விமான நிலையத்தை இரவு 7.15 மணிக்கு விமானம் சென்றடைந்தது. பின்னர் கார் மூலமாக டெல்லி சர்தார் படேல் சாலையில் உள்ள நட்சத்திர விடுதிக்கு அவர் சென்றார். அங்கு அவர் இரவு தங்கினார்.

    இந்தநிலையில் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் இன்று மீண்டும் விசாரணைக்காக ஆஜரானார். விசாரணைக்காக விஜய் ஆஜரான நிலையில் சி.பி.ஐ. தலைமை அலுவலகம், சிஜிஓ காம்பிளக்ஸ் சாலையில் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    ×