என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பரபரப்பான சூழ்நிலையில் நாளை கூடுகிறது சட்டசபை
    X

    பரபரப்பான சூழ்நிலையில் நாளை கூடுகிறது சட்டசபை

    • சட்டசபையில் தேசிய கீதம் இசைக்கும் நிகழ்வில் ஆளுநர் கூறியுள்ளதுபோல் இதுவரை மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.
    • சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த கூட்டத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் கூடும் சட்டசபை கூட்டத் தொடரின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றுவது வழக்கம். அதன் பின்னர் அந்த உரையை சபாநாயகர் தமிழில் வாசிப்பதும் வழக்கமாக உள்ளது.

    ஆனால் கடந்த 2023-ம் ஆண்டில், அரசு கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி அப்படியே படிக்காமல், சில திருத்தங்களை மேற்கொண்டு வாசித்தார். எனவே பேரவை விதிப்படி அந்த உரையை ரத்து செய்துவிட்டு, ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்தார். அரசு கொடுத்திருந்த ஆளுநர் உரை, அவைக்குறிப்பில் பதிவு செய்யப்பட்டது.

    ஆனால் 2024 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் ஆளுநர் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காமல் புறக்கணித்தார். அதற்கு, தான் கேட்டுக்கொண்டபடி தேசிய கீதத்தை அவை நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இசைக்கவில்லை என்ற காரணத்தை கூறினார்.

    இந்தநிலையில் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் 20-ந் தேதி (அதாவது நாளை) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது என்றும் அன்றைக்கு நடக்கும் முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துவார் என்றும் சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். சட்டசபையில் தேசிய கீதம் இசைக்கும் நிகழ்வில் ஆளுநர் கூறியுள்ளதுபோல் இதுவரை மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.

    உரை நிகழ்த்துவதற்காக சட்டசபைக்கு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, மரபுப்படி வரவேற்பு அளிக்கப்படும். அவரை அவைக்குள் சபாநாயகர் மற்றும் சட்டசபை செயலாளர் அழைத்து வருவார்கள். சபாநாயகர் இருக்கையில் ஆளுநர் அமர்வார். அருகில் உள்ள இருக்கையில் சபாநாயகர் உட்காருவார்.

    அனைவரும் எழுந்து நிற்கும் நிலையில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். அதன்பின்னர் ஆளுநர் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்துவார். அந்த உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசிப்பார். உரையை சபாநாயகர் வாசித்து முடிந்ததும் தேசிய கீதம் இசைக்கப்படும். அதோடு அன்றைய அவை நிகழ்ச்சிகள் முடிவுக்கு வரும்.

    அதன்பின்னர் சபாநாயகர் அறையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? அதில் என்னென்ன அலுவல்களை எடுக்க வேண்டும்? போன்றவை குறித்து முடிவு செய்யப்படும். அதை சபாநாயகர் அப்பாவு அறிவிப்பார்.

    சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த கூட்டத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆளும் கட்சி மீதும் அரசு மீதும் என்னென்ன குற்றச்சாட்டுகளை வைக்கலாம்? என்பதை அ.தி.மு.க., பா.ஜ.க. போன்ற கட்சிகள் பட்டியல் போட்டு கொண்டு வரும். அதற்கு பதில் அளிக்கும் விதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்பட அரசு தரப்பினரும் தயாராகி வருவார்கள். எனவே இந்த சட்டசபை கூட்டத்தொடரில் அரசியல் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

    Next Story
    ×