என் மலர்
சென்னை
- யாருடன் வேண்டுமானாலும் நாங்கள் கூட்டணி வைப்போம்.
- திமுக ஆட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறக்கூடாது என்ற அடிப்படையில் பா.ஜ.க.வுடன் கூட்டணி.
சென்னை:
தமிழக சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* திருச்சி உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
* குடிநீரில் கழிவுநீர் கலக்கவில்லை, அதனால் உயிரிழப்பு ஏற்படவில்லை என அமைச்சர் கூறுகிறார்.
* குடிநீரில் கழிவுநீர் வருவதாக மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
* புகார் வந்த உடன் குடிநீரில் கழிவு நீர் கலப்பு விவகாரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது.
* திருவிழாவில் வழங்கிய மோர், குளிர்பானத்தால் தான் பிரச்சனை என அமைச்சர் கூறுகிறார்.
* கோவில் திருவிழாவுக்கு பலரும் சென்ற நிலையில் உறையூர் மக்களுக்கு மட்டும் பாதிப்பு ஏன்? குளிர்பானம் தான் பிரச்சனை என்றால் பல பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு ஏன் பாதிப்பு இல்லை.
* அதிமுக- பாஜக கூட்டணியை பார்த்து மு.க.ஸ்டாலின் பதறுவது ஏன்? பயப்படுவது ஏன்?
* யாருடன் வேண்டுமானாலும் நாங்கள் கூட்டணி வைப்போம்.
* திமுக ஆட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறக்கூடாது என்ற அடிப்படையில் பா.ஜ.க.வுடன் கூட்டணி.
* மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் நீட் தேர்வுக்கு அறிவிக்கை வெளியானது.
* நீட் தேர்வை கொண்டு வந்தது மத்தியில் காங்கிரஸ் இருந்தபோது தான்.
* நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க., தடுத்து நிறுத்த முயற்சித்தது அ.தி.மு.க.
* இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்திருந்தால் நீட் ரத்தாகி இருக்கும் என முதலமைச்சர் கூறுகிறார்.
* மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது ஏன் நீட் தேர்வை தடுக்கவில்லை.
* பா.ஜ.க.வுடன் திமுக கூட்டணி வைத்த போது இனித்தது, இப்போது கசக்கிறதா? என்றார்.
- தமிழ்நாட்டில் பல குடும்பங்கள் 100 வேலைத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் வேலையை மட்டுமே தங்களின் வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கின்றன.
- 2024-25-ம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.3,850 கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு 2025-26-ம் ஆண்டில் 12 கோடி மனித நாள் வேலைகளும், அதற்கான நிதியும் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு சராசரியாக 50 நாட்களாவது வேலை வழங்க வேண்டும் என்றால் குறைந்தது 43 கோடி மனிதநாட்கள் வேலை தேவைப்படும் நிலையில், அதில் சுமார் நான்கில் ஒரு பங்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டிருப்பது போதுமானது அல்ல. 2023-24-ம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு மொத்தம் 41 கோடி மனித நாள்கள் வேலை வழங்கப்பட்டது. அவற்றில் 40.87 கோடி மனித நாள் வேலை மக்களுக்கு வழங்கப்பட்டது.
ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணி வழங்கப்படும் நாள்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு வெறும் 20 கோடி மனித நாள்கள் மட்டுமே மத்திய அரசு வேலை வழங்கியது.
தமிழ்நாட்டில் பல குடும்பங்கள் 100 வேலைத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் வேலையை மட்டுமே தங்களின் வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு இருக்கும் போது ஆண்டுக்கு வெறும் 16 நாட்களுக்கு மட்டும் வேலை வழங்குவதன் மூலம் ஏழை மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்க முடியாது; வறுமையையும் போக்க முடியாது.
தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பயன் பெறும் குடும்பங்களுக்கு குறைந்தது 50 நாள்கள் வேலைவழங்க 43 கோடி மனித நாள்கள் வேலை தேவைப்படுவதால், அந்த அளவுக்கு வேலை நாட்களை தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டும். 2024-25-ம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.3,850 கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கூடலூர் தொகுதியில் சிறிய ஐடி பார்க் அமைத்து தருமாறு அதிமுக MLA ஜெயசீலன் கோரிக்கை
- இப்படி பேச வேண்டாம். பாசிட்டிவாக பேசுங்கள் என சபாநாயகர் அப்பாவு அறிவுரை
சட்டப்பேரவையில் இன்று கேள்வி, பதில் நேரத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் ஜெயசீலன், "எனது கூடலூர் சட்டமன்ற தொகுதியில் வேலைவாய்ப்பை உருவாக்கி தருவதற்கான நிறுவனங்கள் கிடையாது. ஆகவே எனது தொகுதியில் சிறிய தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைத்து தருமாறு அரசு முன்வர வேண்டும்
எனது துறையில் உள்ள சிக்கல்களை நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். எனது துறைக்கு குறைவான நிதியே ஒதுக்கப்படுகிறது. எல்லா தகவல் தொழில்நுட்ப பூங்காவும் எனது துறையில் செயல்படுவதில்லை. அதில் சிறிய பங்கு தான் எனது துறையின் கீழ் வருகிறது. மற்றவை தொழில்துறையின் கீழ் தான் வருகிறது. யாரிடம் நிதியும், திறனும், அதிகாரமும் இருக்கிறோ அவரிடம் கேட்டால் அவர் செய்து தருவார் என்று கருதுகிறேன். என்னிடம் கேட்காதீர்கள். என்னிடம் எந்த அதிகாரமும் இல்லை" என்று தெரிவித்தார்.
உடனே குறுக்கிட்டு பேசிய சபாநாயகர் அப்பாவு, "இப்படி பேச வேண்டாம். பாசிட்டிவாக பதில் கூறினால் நன்றாக இருக்கும்" என்று அறிவுரை கூறினார்.
- போதைப்பொருள் விற்பனை மூலம் சம்பாதித்த பணத்தை இயக்குனர் அமீர் உள்ளிட்டோரின் வங்கிக் கணக்குகளில் ஜாபர் சாதிக் செலுத்தியுள்ளார்.
- சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக ஜாபர் சாதிக் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளார்.
சென்னை:
போதைப்பொருள் கடத்தியதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஜாபக் சாதிக் கைது செய்யப்பட்டார். இவர் திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். இதனை தொடர்ந்து சட்டவிரோத பரிமாற்ற வழக்கு தொடர்பாக ஜாபக் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலிக் ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள்.
இதனிடையே, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமின் வழங்கக்கோரி ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதனை தொடர்ந்து இம்மனு மீதான விசாரணையில், "போதைப்பொருள் விற்பனை மூலம் சம்பாதித்த பணத்தை இயக்குனர் அமீர் உள்ளிட்டோரின் வங்கிக் கணக்குகளில் ஜாபர் சாதிக் செலுத்தியுள்ளார். மேலும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக ஜாபர் சாதிக் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளார். ஜாபர் சாதிக் திமுகவின் நிர்வாகியாக இருந்ததால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால் ஜாமின் வழங்கக்கூடாது" என்று அமலாக்கத்துறை தெரிவித்தது. இதனை தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது.
இந்த நிலையில், இன்று ஜாமின் மனு மீது நீதிபதி சுந்தரமோகன் தீர்ப்பளித்துள்ளார். தீர்ப்பின் போது, டெல்லியின் முன்னாள் முதல்வர் மணீஷ் சிசோடியாவின் தீர்ப்பை முன் உதாரணமாக வைத்து ஜாபர் சாதிக் மற்றும் முகமது சலீமுக்கு முன் ஜாமின் வழங்குவதாக நீதிபதி தெரிவித்தார்.
- ராம்குமார் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
- நடிகர் பிரபு தான் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர்.
சென்னை:
'ஜகஜால கில்லாடி' திரைப்படத் தயாரிப்புக்காக பேரன் துஷ்யந்தின் நிறுவனம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாதது தொடர்பான வழக்கில் நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதனை தொடர்ந்து சிவாஜி வீட்டில் எந்த பங்கும் இல்லாத நிலையில் அந்த வீட்டை ஜப்தி செய்யுமாறு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், ராம்குமார் தரப்பில், சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் நடிகர் பிரபுவுக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, அன்னை இல்லம் தனக்கு சொந்தமானது என்பதால் இல்லத்தை ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்யக்கோரி நடிகர் பிரபு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது, ராம்குமார் தரப்புக்கும் தனக்கு எந்த தொடர்பும் இல்லை. ஆகவே அன்னை இல்லத்தை ஜப்தி செய்யும் உத்தரவு தவறானது என்று பிரபு தரப்பில் வாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அன்னை இல்லம் வீட்டில் தனக்கு எந்த பங்கும், உரிமையும் இல்லை என ராம்குமார் தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
அதனை தொடர்ந்து, அன்னை இல்லம் வீட்டில் தனக்கு எந்த பங்கும் இல்லை. எதிர்காலத்தில் எந்தவித உரிமையும் கோரமாட்டேன் என்று ராம்குமார் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று பிரபு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது, நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நடிகர் பிரபு தான் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர். இதனால் வில்லங்கப் பதிவில் நீதிமன்ற ஜப்தி உத்தரவை நீக்க பதிவுத்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமே வாக்காளர்களும், வாக்குச்சாவடி முகவர்களும் தான்.
- தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோயம்புத்தூரில் குரும்பப்பாளையம் எஸ்.என்.எஸ். கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.
சென்னை:
தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக வெற்றிக் கழகத் தோழர்களுக்கு வணக்கம்!
தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்தப் பேரன்பையும் பேராதரவையும் பெற்ற நம் வெற்றித் தலைவர் அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கிய நாள் முதலே நமக்கான வெற்றிப் பாதை விரிவடைந்துகொண்டே வருகிறது. நம் செல்வாக்கு வளர்ந்துகொண்டே வருகிறது. இதை நமது கொடி அறிமுக விழா, வெற்றிக் கொள்கைத் திருவிழா, இரண்டாம் ஆண்டுத் தொடக்க விழா மற்றும் இதர மக்கள் பணிகள் வாயிலாகத் தொடர்ந்து கண்டு வருகின்றோம்.
தமிழக மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் நடவடிக்கையின் அடுத்தக் கட்டமாக, நமது கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம், வரும் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோயம்புத்தூரில் குரும்பப்பாளையம் எஸ்.என்.எஸ். கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதை நம் வெற்றித் தலைவர் அவர்களின் ஒப்புதலின் பேரில் உங்களுடன் பெருமகிழ்ச்சியோடு பகிர்ந்துகொள்கிறேன்.
இந்த இரண்டு நாள் கருத்தரங்கில் முதல் நாளில் 10 கழக மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும், இரண்டாம் நாளில் 13 கழக மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும் பங்கேற்பார்கள்.
இந்தக் கருத்தரங்கில், நம் வெற்றித் தலைவர் அவர்கள் கலந்துகொண்டு, தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான செயல்பாடுகள் குறித்தும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணிகள் குறித்தும், அது தொடர்பாகக் கழகம் சார்ந்து நாம் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் குறித்தும் விளக்கவுரை ஆற்ற உள்ளார் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமே வாக்காளர்களும், வாக்குச்சாவடி முகவர்களும் தான். எனவே தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச் சாவடி தொடர்பான பணிகளுக்கு முதுகெலும்பாகத் திகழும் வாக்குச்சாவடி முகவர்கள் மட்டும், நம் வெற்றித் தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுகிறேன்.
ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற உள்ள நம் வெற்றித் தலைவர் அவர்களின் கரங்களுக்கு வலுச் சேர்ப்போம். வாகை சூடுவோம்!
- தினந்தோறும் விலை உயர்ந்து இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது.
- ஆறாவது நாளாக மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை கடந்த 9-ந் தேதியில் இருந்து 'கிடுகிடு'வென உயர்ந்து வந்து, கடந்த 12-ந் தேதி ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்து 160-க்கு விற்பனை ஆனது. இது அப்போது இதுவரை இல்லாத உச்சமாக பார்க்கப்பட்டது.
அதனை தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்த வண்ணம் காணப்படுகிறது. தினந்தோறும் விலை உயர்ந்து இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,015-க்கும் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,120-க்கும் விற்பனையாகிறது.
ஆறாவது நாளாக மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 111 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
20-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,560
19-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,560
18-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,560
17-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,360
16-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,520
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
20-04-2025- ஒரு கிராம் ரூ.110
19-04-2025- ஒரு கிராம் ரூ.110
18-04-2025- ஒரு கிராம் ரூ.110
17-04-2025- ஒரு கிராம் ரூ.110
16-04-2025- ஒரு கிராம் ரூ.110
- சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் பிரபு சங்கர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
- பயோமெட்ரிக் மூலம் பதிவு செய்யும் ஊழியர்களின் வருகை மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.
சென்னை:
சென்னை மாநகர போக்குவரத்துக்கழக ஊழியர்கள் இன்று முதல் கட்டாயமாக பயோமெட்ரிக் மூலம் வருகைப்பதிவு செய்ய வேண்டும் என்று மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் தங்களின் வருகையை பயோமெட்ரிக் மூலம் தவறாமல் பதிவு செய்ய வேண்டும் என ஏற்கனவே கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி தெரிவிக்கப்பட்டது. மாநகர போக்குவரத்துக் கழகத்தின் தலைமை அலுவலகம், அனைத்து பணிமனைகள், தொழிற்கூடங்கள் உள்ளிட்டவற்றில் பணிபுரியும் டிரைவர், கண்டக்டர், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர் பயோமெட்ரிக் மூலமாகவே வருகையை பதிவு செய்ய வேண்டும் என மீண்டும் அறிவுறுத்தப்படுகிறது.
அதன்படி, இன்று (திங்கட்கிழமை) முதல் பயோமெட்ரிக் மூலம் பதிவு செய்யும் ஊழியர்களின் வருகை மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிஎஸ்கே-ஐதராபாத் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று தொடங்குகிறது.
- ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என சி.எஸ்.கே. நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை:
நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதும் லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரும் 25-ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
சேப்பாக்கத்தில் நடக்கும் 5-வது ஆட்டம் இதுவாகும். இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று தொடங்குகிறது.
இன்று காலை 10.15 மணியில் இருந்து www.chennaisuperkings.com என்ற இணைய தளத்தின் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். ரூ.1,700, ரூ.2,500, ரூ.3,500, ரூ.4,000, ரூ.7,500 ஆகிய விலைகளில் டிக்கெட் விற்கப்படுகிறது.
ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்ற 8 போட்டிகளில் 2 வெற்றி, 6 தோல்வி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
- கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்ததால் 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி.
- தி.மு.க. அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
திருச்சி மாவட்டத்தில் கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு திமுக அரசின் அலட்சியப் போக்கே காரணம் என ஓ. பன்னீர்செல்வம் கண்டனத்துடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசுக்கு உள்ளது. இந்த அடிப்படைத் தேவையைக்கூட பூர்த்தி செய்ய இயலாத அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட உறையூர் பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்ததன் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்து இருப்பதாகவும், 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் வந்துள்ள செய்தி பேரதிர்ச்சியை அளிக்கிறது.
மேற்படி பகுதியில், குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக மாநகராட்சி மன்ற உறுப்பினர் முதல் உயர் அதிகாரிகள் வரை அப்பகுதி மக்கள் பலமுறை எடுத்துக் கூறியும், அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படாததன் காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், மூன்று பேரின் உயிரிழப்பை இந்த அரசு தடுத்து இருக்க முடியும் என்பதோடு, முப்பதுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும் தவிர்த்திருக்க முடியும். இந்தப் பிரச்சனைக்கு தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கே காரணம் என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது ஒருபுறம் என்றால், மறுபுறம் அதே திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் ஒன்றியம், மருதண்டாகுறிச்சி பஞ்சாயத்திற்குட்பட்ட ஏகிரிமங்கலம் கிராமத்தில் வசிக்கும் மக்கள் கடந்த ஒரு வார காலமாக வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.
இதற்குக் காரணமும் குடிநீரில் கழிவுநீர் கலப்புதான் என்று கூறப்படுகிறது. ஒரு மனிதனுக்கு 10.5 விழுக்காடு வரை கிருமிகளை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தி இருக்கிறது என்றும், ஆனால் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் உடலில் 15 விழுக்காட்டிற்கும் அதிகமாக கிருமிகள் இருக்கின்றன என்று மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
இதன் விளைவாக, அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். இதுகுறித்து தி.மு.க. அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
பாதுகாக்கப்பட்ட குடிநீரைக்கூட வழங்க இயலாத திறமையற்ற அரசாக தி.மு.க. விளங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் எத்தனை இடங்களில் பாதுகாப்பற்ற குடிநீர் விநியோகிக்கப்படுகிறதோ என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
ஒருபக்கம் சட்டம் ஒழுங்கு சீரழிவால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது என்றால், மறுபக்கம் கழிவுநீர் கலந்த குடிநீரால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
தி.மு.க. அரசின் கவனக் குறைவிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைந்து குணமடைந்து இல்லம் திரும்ப வேண்டும் என்று எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
தமிழக முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, பாதுகாக்கப்பட்ட குடிநீரை விநியோகிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கினால் மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் தலா பத்து இலட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டுமென்றும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அமைச்சர்கள் சாமிநாதன், செந்தில் பாலாஜி, கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
- விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டம் காரணமாக ரூ.1000 கோடி அளவுக்கு இழப்பு.
கோவையில் அமைச்சர்கள் தலைமையில் விசைத்தறி உரிமையாளர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விசைத்தறி உரிமையாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், அமைச்சர்கள் சாமிநாதன், செந்தில் பாலாஜி, கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் முடிவுக்கு வந்தது.
இதைதொடர்ந்து, நாளை பொதுக்குழுவை கூட்டி விசைத்தறியை இயக்குவது குறித்து முடிவெடுப்போம் என விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, 33 நாட்களாக நடந்து வந்த விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டம் காரணமாக ரூ.1000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து முடிந்துள்ளதாகவும், போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாட்டு அரசியல் களத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. வலிவுடன் தழைத்தோங்கி நிற்க பணியாற்றுவோம்.
- முதன்மைச் செயலாளர் சகோதரர் துரை வைகோ அவர்களுக்கும் உறுதுணையாக இருப்பேன்.
ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சமூக ஊடகங்களில் வந்த பதிவுகளால் கழகத்தில் கசப்புணர்வு ஏற்படுகின்ற நிலையும், அதனால் மறுமலர்ச்சி தி.மு.கவின் கட்டுப்பாட்டுக்கு ஊறு நேருகின்ற நிலையும் ஏற்பட்டதற்கு இன்று கழக நிர்வாகக் குழுவில் எனது மனப்பூர்வமான வருத்தத்தை என் உயிர் தலைவர் வைகோ அவர்களிடமும், நிர்வாகக் குழு உறுப்பினர்களிடமும் தெரிவித்துக் கொண்டேன். இது போன்ற சூழல் இனி எதிர்காலத்தில் நிகழாது.
திராவிட ரத்னா தலைவர் வைகோ அவர்களுக்கும், கழகத்தின் எதிர்காலம் முதன்மைச் செயலாளர் சகோதரர் துரை வைகோ அவர்களுக்கும் உறுதுணையாக இருப்பேன் என்று நான் உறுதி அளித்தேன்.
இதனை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு சகோதரர் துரை வைகோ அவர்கள் முதன்மைச் செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து செயல்படுவேன் என்று நிர்வாகக் குழுவில் அறிவித்தது எனக்கும், கழகத் தோழர்களுக்கும் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நானும், முதன்மைச் செயலாளர் சகோதரர் துரை வைகோ அவர்களும் இணைந்த கரங்களாக தலைவர் வைகோ அவர்களுக்கும், கழகத்திற்கும் துணையாக செயல்படுவோம். கழகத்தைக் கட்டிக் காப்போம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டு அரசியல் களத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. வலிவுடன் தழைத்தோங்கி நிற்க பணியாற்றுவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






