என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீரில் கழிவு நீர்"

    • இன்று 2-வது நாளாக மருத்துவ முகாம் உறையூர் பகுதியில் நடந்து வருகிறது.
    • மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டது.

    திருச்சி:

    திருச்சி உறையூர் மின்னப்பன் தெருவில் நேற்று முன்தினம் அங்குசாமி மனைவி மருதாம்பாள் (வயது 75) கோவிந்தராஜ் மனைவி லதா(52) மற்றும் நான்கு வயது சிறுமி பிரியங்கா ஆகியோர் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்தனர். குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அவர்கள் இறந்ததாக குற்றச்சாட்டப்பட்டது.

    மேலும் மின்னப்பன் தெரு மற்றும் சுற்றுவட்டார தெருக்களை சேர்ந்த 40 பேர் வாந்தி மற்றும் வயிற்று வயிற்றுப்போக்கு ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆனால் மாநகராட்சி நிர்வாகம் குடிநீரில் கழிவுநீர் கலக்கவில்லை என திட்டவட்டமாக மறுத்தது.

    மேலும் வாந்தி-பேதிக்கு அந்த பகுதியில் கடந்த 14-ந் தேதி சித்திரை திருவிழா திருவிழாவில் அன்னதானத்தின் போது வழங்கிய மோர் காரணமாக இருக்கலாம் என விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த பிரச்சனையை தொடர்ந்து அந்த பகுதியில் குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டது.


    லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. பொதுமக்கள் சந்தேகம் எழுப்பிய பகுதிகளில் குழிதோண்டி பார்த்த பின்னரும் கழிவு நீர் குடிநீரில் கலந்ததற்கான தடயம் எதுவும் காணப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே உறையூர் பகுதியில் மாநகராட்சி சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அப்பகுதியில் வசிக்கும் 11 ஆயிரம் பேருக்கு வயிற்றுப்போக்கு தடுப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) 2-வது நாளாக மருத்துவ முகாம் உறையூர் பகுதியில் நடந்து வருகிறது.

    இது தொடர்பாக மாநகராட்சி மேயர் அன்பழகன் இன்று கூறும்போது, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை பணிகளின் போது, குடிநீரில் கழிவு நீர் கலந்து சோழராஜபுரம் உள்ளிட்ட சில பகுதிகளில் பிரச்சனை ஏற்பட்டது. அப்போது யாருக்கும் வாந்தி பேதி வரவில்லை. மாறாக மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டது.

    உறையூர் பகுதியில் குடிநீரில் கழிவு நீர் கலக்கவில்லை. அங்கு தற்போது பாதாள சாக்கடை பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டது. இருப்பினும் சித்திரை திருவிழாவில் அன்னதானத்தின் போது, காலாவதியான குளிர்பானம் வழங்கியதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.

    அதனால் பிரச்சனை ஏற்பட்டதா ? என அறிய ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். குழாய் மூலமாக குடிநீர் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ள உறையூர் பணிக்க தெரு, விண்ணப்ப தெரு, நாடார் தெரு ஆகிய பகுதிகளில் நாளை குடிநீர் சப்ளை குழாய் மூலமாக வழங்க இருக்கிறோம்.

    அப்போது வீடு வீடாக சென்று குடிநீரில் பிரச்சனை உள்ளதா என கண்டறிய ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கிறார்கள். கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் திருச்சி மாநகராட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை என்றார்.

    • கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்ததால் 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி.
    • தி.மு.க. அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

    திருச்சி மாவட்டத்தில் கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு திமுக அரசின் அலட்சியப் போக்கே காரணம் என ஓ. பன்னீர்செல்வம் கண்டனத்துடம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசுக்கு உள்ளது. இந்த அடிப்படைத் தேவையைக்கூட பூர்த்தி செய்ய இயலாத அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது.

    திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட உறையூர் பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்ததன் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்து இருப்பதாகவும், 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் வந்துள்ள செய்தி பேரதிர்ச்சியை அளிக்கிறது.

    மேற்படி பகுதியில், குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக மாநகராட்சி மன்ற உறுப்பினர் முதல் உயர் அதிகாரிகள் வரை அப்பகுதி மக்கள் பலமுறை எடுத்துக் கூறியும், அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படாததன் காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

    புகாரின் அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், மூன்று பேரின் உயிரிழப்பை இந்த அரசு தடுத்து இருக்க முடியும் என்பதோடு, முப்பதுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும் தவிர்த்திருக்க முடியும். இந்தப் பிரச்சனைக்கு தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கே காரணம் என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இது ஒருபுறம் என்றால், மறுபுறம் அதே திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் ஒன்றியம், மருதண்டாகுறிச்சி பஞ்சாயத்திற்குட்பட்ட ஏகிரிமங்கலம் கிராமத்தில் வசிக்கும் மக்கள் கடந்த ஒரு வார காலமாக வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

    இதற்குக் காரணமும் குடிநீரில் கழிவுநீர் கலப்புதான் என்று கூறப்படுகிறது. ஒரு மனிதனுக்கு 10.5 விழுக்காடு வரை கிருமிகளை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தி இருக்கிறது என்றும், ஆனால் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் உடலில் 15 விழுக்காட்டிற்கும் அதிகமாக கிருமிகள் இருக்கின்றன என்று மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

    இதன் விளைவாக, அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். இதுகுறித்து தி.மு.க. அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

    பாதுகாக்கப்பட்ட குடிநீரைக்கூட வழங்க இயலாத திறமையற்ற அரசாக தி.மு.க. விளங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் எத்தனை இடங்களில் பாதுகாப்பற்ற குடிநீர் விநியோகிக்கப்படுகிறதோ என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

    ஒருபக்கம் சட்டம் ஒழுங்கு சீரழிவால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது என்றால், மறுபக்கம் கழிவுநீர் கலந்த குடிநீரால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

    தி.மு.க. அரசின் கவனக் குறைவிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைந்து குணமடைந்து இல்லம் திரும்ப வேண்டும் என்று எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    தமிழக முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, பாதுகாக்கப்பட்ட குடிநீரை விநியோகிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கினால் மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் தலா பத்து இலட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டுமென்றும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    வேலூர் கஸ்பாவில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    வேலூர்:

    வேலூர் கஸ்பா வ.உ.சி. தெருவில் 2 நாட்களுக்கு முன்பு கழிவுநீர் கால்வாய் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. அப்போது வ.உ.சி. தெருவிற்கு குடிநீர் கொண்டு செல்லும் பைப் லைன் உடைந்து விட்டது.

    இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதிகாரிகள் வந்து உடைந்த பைப் மீது ரப்பர் டியூப் சுற்றி விட்டு சென்று விட்டனர்.

    இந்த நிலையில் இன்று காலை வ.உ.சி. தெருவிற்கு மாநகராட்சி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது.

    அப்போது கழிவுநீர் கலந்த குடிநீர் துர்நாற்றம் வீசியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் குடிநீரை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    குடிநீர் பைப் லைன் உடைந்து விட்டது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் அலட்சியத்துடன் இருந்து விட்டனர். இதனால் குடிநீரில் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது.

    மேலும் இந்த குடிநீரை பயன்படுத்தினால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் உடைந்த குடிநீர் குழாய் பைப் லைனை சரி செய்து மீண்டும் குடிநீர் வழங்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். நீண்ட நேரம் மறியலில் ஈடுபட்டும் அதிகாரிகள் யாரும் வராததால் பொதுமக்கள் தாங்களாகவே கலைந்து சென்றனர்.

    ×