என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஊரக வேலைத் திட்ட பணி நாட்களை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்
- தமிழ்நாட்டில் பல குடும்பங்கள் 100 வேலைத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் வேலையை மட்டுமே தங்களின் வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கின்றன.
- 2024-25-ம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.3,850 கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு 2025-26-ம் ஆண்டில் 12 கோடி மனித நாள் வேலைகளும், அதற்கான நிதியும் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு சராசரியாக 50 நாட்களாவது வேலை வழங்க வேண்டும் என்றால் குறைந்தது 43 கோடி மனிதநாட்கள் வேலை தேவைப்படும் நிலையில், அதில் சுமார் நான்கில் ஒரு பங்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டிருப்பது போதுமானது அல்ல. 2023-24-ம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு மொத்தம் 41 கோடி மனித நாள்கள் வேலை வழங்கப்பட்டது. அவற்றில் 40.87 கோடி மனித நாள் வேலை மக்களுக்கு வழங்கப்பட்டது.
ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணி வழங்கப்படும் நாள்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு வெறும் 20 கோடி மனித நாள்கள் மட்டுமே மத்திய அரசு வேலை வழங்கியது.
தமிழ்நாட்டில் பல குடும்பங்கள் 100 வேலைத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் வேலையை மட்டுமே தங்களின் வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு இருக்கும் போது ஆண்டுக்கு வெறும் 16 நாட்களுக்கு மட்டும் வேலை வழங்குவதன் மூலம் ஏழை மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்க முடியாது; வறுமையையும் போக்க முடியாது.
தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பயன் பெறும் குடும்பங்களுக்கு குறைந்தது 50 நாள்கள் வேலைவழங்க 43 கோடி மனித நாள்கள் வேலை தேவைப்படுவதால், அந்த அளவுக்கு வேலை நாட்களை தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டும். 2024-25-ம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.3,850 கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






