என் மலர்tooltip icon

    சென்னை

    • சென்னை அருகே மாமல்லபுரத்தில் வரும் 11ம் தேதி சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெறுகிறது.
    • மாநாட்டிற்கான ஏற்பாடுகளை பாமகவினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.

    சென்னை அருகே மாமல்லபுரத்தில் வரும் 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பாமக சார்பில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா நடைபெறுகிறது.

    சித்திரை முழு நிலவு மாநாட்டை ஒட்டி அன்புமணி ராமதாசை முன்னிலைப்படுத்தும் வகையில் இருந்த பாடலும், அடுத்ததாக அய்யா என்று சொல்லும் போதே ஆயிரம் கோடி மகிழ்ச்சியடா என்ற பாடலையும் பா.ம.க வெளியிட்டது.

    பின்னர், சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டுக்கான இலட்சினையை (LOGO) பாமக வெளியிட்டுள்ளது

    மாநாட்டிற்கான ஏற்பாடுகளை பாமகவினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், வரும் 11ம் தேதி ஞாயிறு அன்று ECR, OMR சாலைகளை பொது மக்கள் பயன்படுத்த வேண்டாம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

    இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

    • நாடு முழுவதும் 259 இடங்களில் போர்க்கால ஒத்திகை நடைபெறுகிறது.
    • தமிழகத்தில் இன்று சென்னை துறைமுகம், கல்பாக்கத்தில் ஒத்திகை.

    பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கம் நடத்திய தாக்குதலைத்தொடர்ந்து, அந்த நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா வேகப்படுத்தியுள்ளது.

    நாடு முழுவதும் 259 இடங்களில் போர்க்கால ஒத்திகை நடைபெறுகிறது. சில வடமாநிலங்களில் ஏற்கனவே இந்த பயிற்சி தொடங்கிவிட்டது.

    அதன்படி, தமிழகத்தில் இன்று சென்னை துறைமுகம், கல்பாக்கத்தில் ஒத்திகை நடைபெறும் என்றும் இது இன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை ஒத்திகை நடைபெறும் எனவும் மாநில பேரிடர் மேலாண்மை தெரிவித்தது.

    இந்நிலையில், சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையம், புதுச்சேரி ஆகிய இடங்களில் போர்க்கால ஒத்திகை தொடங்கியுள்ளது.

    ஒத்திகையின்போது சி.ஐ.எஸ்.எஃப் பாதுகாப்புப் படை வீரர்கள் துப்பாக்கிகளை ஏந்தி அணிவகுப்பு நடத்தினர்.

    இதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையம் தாக்கப்படும் சூழலில் நிலைமையைச் சமாளிப்பது குறித்து ஒத்திகை நடத்தப்படுகிறது.

    மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேரிடர் மேலாண்மை ஆணைய வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

    புதுச்சேரி அருகே லாஸ்பேட்டையிலும் போர் சூழலில் பாதுகாப்பு ஒத்திவை நடைபெற்று வருகிறது.

    • இந்தியாவிற்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு.
    • பெருமைமிக்க இந்தியா தனது ஆயுதப் படைகளுடன் ஒற்றுமையாக நிற்கிறது.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய ராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர்.

    முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இதற்கு அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இந்தியாவிற்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவின் ராணுவ நவடிக்கையை பாராட்டுகிறேன். பெருமைமிக்க இந்தியா தனது ஆயுதப் படைகளுடன் ஒற்றுமையாக நிற்கிறது. கோழைத்தனமான பயங்கரவாதச் செயல்களால் பிளவுபடாத, ஒரு வலிமையான தேசத்தின் உறுதியான பதில் இது.

    மத்திய அரசு எடுத்த தீர்க்கமான ராணுவ நடவடிக்கையை பாராட்டுகிறேன் ஜெய்ஹிந்த்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வருகிற சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு புதிய நிர்வாகிகள் கட்சியினரோடு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
    • புதிய நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.

    அந்த வகையில் தே.மு.தி.க.வும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று இருந்த தே.மு.தி.க. மேல்-சபை எம்.பி. பதவி தொடர்பாக அ.தி.மு.க.வுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கூட்டணியில் இருந்து சற்று விலகியே இருந்து வருகிறது.

    இதனால் வருகிற சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள தே.மு.தி.க. மாநாட்டில் முடிவு செய்யப்படும் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார். இதனால் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. நீடிக்குமா? இல்லை தி.மு.க. கூட்டணி அல்லது விஜய் கட்சியுடன் கூட்டணி அமைக்குமா? என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற தே.மு.தி.க. பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் பலர் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.

    தே.மு.தி.க. இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன், பொருளாளராக எல்.கே. சுதீஷ், தலைமை நிலைய செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்தசாரதி ஆகியோர் தேர்வாகி இருக்கிறார்கள். இவர்களுடன் 4 துணைச் செயலாளர்களும் மாநில அளவிலான பொறுப்பில் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    இதேபோன்று மாணவரணி, தொண்டரணி, வழக்கறிஞர் அணி, நெசவாளர் அணி, மீனவர் அணி உள்பட 16 அணிகளுக்கும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு அணியிலும் மாநில அளவில் ஒரு செயலாளர் மற்றும் நான்கு துணைச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இப்படி புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் 110 பேர் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களுடன் பிரேமலதா விஜயகாந்த் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

    வருகிற சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு புதிய நிர்வாகிகள் கட்சியினரோடு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஏற்கனவே பொறுப்பில் உள்ள பழைய நிர்வாகிகள், மூத்த மாவட்ட செயலாளர்கள் ஆகியோரையெல்லாம் அனுசரித்து தே.மு.தி.க.வின் வெற்றிக்காக பாடுபட வேண்டும் என்று இந்த கூட்டத்தில் பேசிய பிரேமலதா வலியுறுத்தி இருக்கிறார். தே.மு.தி.க. பொருளாளரான எல்.கே. சுதீஷ், இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் ஆகியோரும் கூட்டத்தில் பேசினார்கள். அவர்களும் புதிய நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்கள்.

    இளைஞரணி செயலாளரான விஜய பிரபாகரன் பேசும் போது, தே.மு.தி.க. இளைஞர் அணியை பலப்படுத்தும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இருப்பதாகவும் தமிழகம் முழுவதும் விரைவில் இதற்காக சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் கூறினார். புதிய நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் காலை 11 மணியளவில் தொடங்கி 2 மணி நேரம் வரையில் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அடுத்தடுத்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி அறிவுரைகளை வழங்குவதற்கு பொதுச்செயலாளர் பிரேமலதா முடிவு செய்திருப்பதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
    • மேட்டுக்குப்பம், கொளப்பாக்கம், ஏ.ஜி.ஆர்.கார்டன், செல்வலட்சுமி கார்டன், பிருந்தாவன் நகர் உள்ளிட்ட பகுதிகள்.

    சென்னை:

    சென்னையில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னையில் நாளை (08.05.2025) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    அதன்படி ராமாபுரம் பகுதிகளான வள்ளுவர் சாலை, பஜனை கோவில் தெரு, அரசமரம் சந்திப்பு, ஆனந்தம் நகர், பாரதி சாலை, ஹவுஸிங்போர்ட், ஸ்ரீராம்நகர், சபரிநகர், தமிழ்நகர், கிரிநகர், குறிஞ்சிநகர், கங்கையம்மன் கோவில் தெரு, அம்பாள்நகர், ரத்னா காம்ப்ளக்ஸ், பிரகாசம் தெரு, செந்தமிழ்நகர், கோத்தாரிநகர், அன்னை சத்யாநகர், கே.கே.பொன்னுரங்கம் சாலை, கலசாத்தம்மன் கோவில் தெரு, ராயலா நகர், எஸ்.ஆர்.எம்.திருமலைநகர், குரு ஹோம்ஸ், நேரு நகர், பொன்னம்மாள் நகர், ராஜீவ்காந்தி நகர், காமராஜர் சாலை, கங்கை அவென்யூ, சாந்திநகர், மவுண்ட் பூந்தமல்லி சாலை, முகலிவாக்கம் பிரதான சாலை, கமலாநகர், சுபஸ்ரீநகர், எம்.கே.எம்.ஸ்கூல், வெங்கடேஸ்வர அவென்யூ, ராம்நகர், மாரியம்மன் கோவில் தெரு, கிருஷ்ணவேணிநகர், குருசாமிநகர், சி.ஆர்.ஆர்.புரம், காசாகிரான்ட, ஆறுமுகம்நகர், திருநகர், கணேஷ்நகர், மணப்பாக்கம் கிராமம், ராமமூர்த்தி அவென்யூ, ஏ.வி.மல்லிஸ் கார்டன், ட்ரைமாக்ஸ், வி.வி.கோவில் தெரு, பெருமாள் தெரு, ஏ.ஜி.எஸ்.காலனி, மேட்டுக்குப்பம், கொளப்பாக்கம், ஏ.ஜி.ஆர்.கார்டன், செல்வலட்சுமி கார்டன், பிருந்தாவன் நகர்,

    மேலூர் பகுதிகளான மீஞ்சூர் நகர், டி.எச்.ரோடு, தேரடி தெரு, சிறுவாக்கம், சூர்யாநகர், பி.டி.ஓ.அலுவலகம், வன்னிப்பாக்கம், சீமாவரம், ஆர்.ஆர்.பாளையம், அரியன்வாயல், புதுப்பேடு, நந்தியம்பாக்கம், மேலூர், பட்டமந்திரி, வள்ளூர், அத்திப்பட்டு, எஸ்.ஆர்.பாளையம், ஜி.ஆர்.பாளையம், கொண்டகரை, பள்ளிபுரம், வழுதிகைமேடு, கரையான்மேடு,

    மயிலாப்பூர் பகுதிகளான சாந்தோம் நெடுஞ்சாலை, டுமிங் குப்பம், அப்பு தெரு, சையத் வாஹான் ஹுசைன் தெரு, என்.எம்.கே.தெரு, குட்சேரி ரோடு, நொச்சிக்குப்பம், சாலை தெரு, முல்லைமா நகர், சீனிவாசபுரம், கிழக்கு வட்டச் சாலை, லாசர் சர்ச் ரோடு, ரோஸரி சர்ச் ரோடு, முத்து தெரு, கச்சேரி ரோடு, பாபநாசம் சாலை, ஆப்ரஹாம் தெரு, நியூ தெரு, சோலையப்பன் தெரு, கேசவபெருமாள் சன்னதி தெரு, வி.சி.கார்டன் தெரு, ஆர்.கே.மடம் சாலை, மந்தைவெளி சாலை 5-வது குறுக்கு தெரு, வெங்கடேச அக்ரகாரம், பிச்சு பிள்ளை தெரு, கிழக்கு மற்றும் வடக்கு மாட தெரு, நல்லப்பன் தெரு, ஆடம் தெரு, குமரகுரு தெரு, திருவள்ளுவர் பேட்டை, ஜெத்நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வழங்கிய 505 வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை அவர் நிறைவேற்றியிருக்கிறார்.
    • தமிழ்நாடு முதலமைச்சரின் சாதனை பயணம் தொடர மீண்டும் வாழ்த்துகிறேன்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. ஆட்சி அமைந்து, இன்று 5-ம் ஆண்டில் காலடி பதித்து மகத்தான சாதனைகளை புரிந்து வருகிற நிலையில் திசையெங்கும் மக்கள் பாராட்டுகிற மகத்தான ஆட்சி புரிகிற முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மனதார பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். 2021 இல் ஆட்சி அமைந்தபோது, 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி கடன் சுமையோடு அ.தி.மு.க. ஆட்சியை தி.மு.க.விடம் விட்டுச் சென்றது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.69 சதவிகிதமாக உயர்ந்து ஒன்றிய பா.ஜ.க. அரசின் வளர்ச்சியான 6.5 சதவிகிதத்தை விட உயர்ந்து சாதனை படைத்திருக்கிறது.

    கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வழங்கிய 505 வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை அவர் நிறைவேற்றியிருக்கிறார். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவவேற்றியதோடு, கொடுக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியிருக்கிறார். அவரது சாதனைகளின் சிகரமாக கலைஞர் மகளிர் உரிமை திட்டம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், புதுமைப் பெண் திட்டம், விடியல் பயணம் ஆகியவற்றில் மிகச் சிறந்த அளவில் மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

    எனவே, தமிழ்நாடு மக்களின் பேராதரவோடு 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் தமிழ்நாட்டில் நல்லாட்சி தொடர முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 4 ஆண்டு சாதனை நிச்சயம் துணை புரியும். நாளை நமதே என்பது நாளுக்கு நாள் உறுதியாகி வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சரின் சாதனை பயணம் தொடர மீண்டும் வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தீவிரவாத அமைப்புகளை குறிவைத்து 9 இடங்களில் இன்று அதிகாலை ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடத்தப்பட்டது.
    • மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பலரும் பாராட்டும், வரவேற்பும் தெரிவித்து வருகின்றனர்.

    சென்னை:

    பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக 3 தீவிரவாத அமைப்புகளை குறிவைத்து 9 இடங்களில் இன்று அதிகாலை 'ஆபரேஷன் சிந்தூர்' நடத்தப்பட்டது. முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பலரும் பாராட்டும், வரவேற்பும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயும் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விஜய் எக்ஸ் தள பக்கத்தில், இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட்! என பதிவிட்டுள்ளார். 

    • 9 பயங்கர முகாம்கள் மீது இந்தியாவின் முப்படைகளும் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளன.
    • நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய அனைத்து நடவடிக்கைகளும் சரியானவை; தேவையானவை.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் கட்டமைப்புகளை அழிக்கும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த 9 பயங்கர முகாம்கள் மீது இந்தியாவின் முப்படைகளும் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளன.

    நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய அனைத்து நடவடிக்கைகளும் சரியானவை; தேவையானவை. இதில் மத்திய அரசுக்கும், முப்படைகளுக்கும் அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

    • பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
    • பயங்கரவாதிகளை ஒழிக்கும் நோக்கம் நிறைவேறும் வரை சண்டை ஓயாது.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்தி உள்ள ஆபரேஷன் சிந்தூரை பலரும் பாராட்டி வருகின்றனர். இதனை தொடர்ந்து மத்திய அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பயங்கரவாதிகளை ஒழிக்கும் நோக்கம் நிறைவேறும் வரை சண்டை ஓயாது. பிரதமர் மோடியுடன் நாட்டு மக்கள் அனைவரும் துணை நிற்பதாக தெரிவித்துள்ளார். 



    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • ஒரு கிராம் வெள்ளி ரூ.111-க்கும், பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை விறுவிறுவென உயர்ந்து வந்து, கடந்த மாதம் 22-ந்தேதி ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்து 320-க்கு விற்பனை ஆனது. இதுவரை இல்லாத உச்சமாக இந்த விலை பார்க்கப்பட்டது. அதன் பின்னர் விலை ஏறுவதும், இறங்குவதுமான நிலையிலேயே நீடித்தது.

    அதனைத்தொடர்ந்து இந்த மாதத்தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை மளமளவென குறைந்து வந்தது. எந்த அளவுக்கு ஏற்றம் கண்டதோ, அதேபோல் சரியத் தொடங்கியது இல்லத்தரசிகளுக்கு சற்று மகிழ்ச்சியை கொடுத்தது.

    அந்த மகிழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தாற்போல், நேற்று மீண்டும் அதிரடியாக தங்கம் விலை உயர்ந்து காணப்பட்டது.

    இதற்கிடையே நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 755-க்கும், ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்து 40-க்கும், விற்பனை ஆனது. நேற்று காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.250-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரமும் உயர்ந்தது. அதையடுத்து நேற்று மாலையிலும் விலை மாற்றம் இருந்தது. அப்போது கிராமுக்கு ரூ.75-ம், சவரனுக்கு ரூ.600-ம் அதிகரித்தது.

    இப்படியாக நேற்று ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.325-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 600-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 100-க்கும், ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. போர் பதற்றம், போர்க்கால ஒத்திகை குறித்த அறிவிப்பு போன்றவற்றால், தங்கம் விலையில் நேற்று அதிரடி மாற்றம் காணப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.9,075-க்கும் சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.72,600-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.111-க்கும், பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    06-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,800

    05-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,200

    04-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,040

    03-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,040

    02-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,040

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    06-05-2025- ஒரு கிராம் ரூ.111

    05-05-2025- ஒரு கிராம் ரூ.108

    04-05-2025- ஒரு கிராம் ரூ.108

    03-05-2025- ஒரு கிராம் ரூ.108

    02-05-2025- ஒரு கிராம் ரூ.109

    • தி.மு.க. அரசின் 4 ஆண்டு சாதனையை மக்களிடம் கொண்டு சேர்க்க தி.மு.க. தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவுறுத்தி இருந்தார்.
    • துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு 4 ஆண்டுகள் இன்றுடன் நிறைவு செய்து ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையொட்டி தி.மு.க. அரசின் 4 ஆண்டு சாதனையை மக்களிடம் கொண்டு சேர்க்க தி.மு.க. தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவுறுத்தி இருந்தார்.

    இந்த நிலையில், முதலமைச்சராக 5-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மெரினாவில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    முதலமைச்சருடன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

    • பிரதமர் மோடியின் விழிப்புடன் கூடிய தலைமையில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது.
    • பிரதமரின் தீர்க்கமான நடவடிக்கை பயங்கரவாதத்தை ஒழித்து மக்களை பாதுகாப்பதற்கான அசைக்க முடியாத உறுதியை காட்டுகிறது.

    சென்னை:

    பஹல்காம் தாக்குதலுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய ராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இதற்கு அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அந்த வகையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில்,

    பிரதமர் மோடியின் விழிப்புடன் கூடிய தலைமையில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. பிரதமரின் தீர்க்கமான நடவடிக்கை பயங்கரவாதத்தை ஒழித்து மக்களை பாதுகாப்பதற்கான அசைக்க முடியாத உறுதியை காட்டுகிறது.

    பயங்கரவாதிகளின் முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்த இந்திய ராணுவத்தை பாராட்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார். 

    ×