என் மலர்tooltip icon

    சென்னை

    • தங்க நாணயங்களை வாங்கியவர்கள் நகைக் கடன் பெற முடியாத சூழல் உருவாகி உள்ளது.
    • நகைக் கடன் பெறுவதில் பழைய நடைமுறையே தொடரும் என்று அறிவிக்க வேண்டும்.

    ஏழை, நடுத்தர மக்களின் ஆபத்பாந்தவனாக விளங்கும் நகைக்கடன் பெறும் வழிமுறைகளைத் திருத்தி, புதிதாக 9 விதிமுறைகள் வெளியிட்டிருப்பதை ரிசர்வ் வங்கி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    உலகிலேயே தங்கத்தை அதிகமாக நுகரும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் இருப்பது இந்தியா தான். இந்தியர்கள், தங்கத்தைத் தங்கள் சொத்தின் ஒரு பகுதியாகக் கருதுகின்றனர். தங்கம் என்பது திருமணம் போன்ற இன்ன பிற விசேஷ நிகழ்ச்சிகளின்போது மட்டுமே ஆபரணமாக அணியப்படுகிறது.

    மற்றபடி, தங்க நகைகளை ஏழை, நடுத்தர மக்கள், வாகனம், நிலம், வீடு போன்ற அசையும் மற்றும் அசையா சொத்துகள் வாங்குவதற்கும், கல்வி, விவசாயம், மருத்துவம் போன்ற அத்தியாவசியச் செலவுகளுக்கும் வங்கிகளில் அடமானம் வைத்துத்தான் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய விதிகளில், தங்க நகையை அடமானம் வைப்பவர்கள், அதற்கான உரிமையாளர்கள் தாங்கள்தான் என்பதற்கான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட தங்க நாணயங்கள் மட்டுமே அடமானத்துக்கு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

    நகைகளை வாங்கியதற்கான ரசீது இல்லாதவர்கள், அதற்குப் பதிலாக வேறு ஆவணங்களையோ, உறுதிமொழிச் சான்றையோ அளித்துக் கடன் பெறலாம் என்றும், அவற்றில் சந்தேகம் இருந்தால் கடன் வழங்கக் கூடாது என்றும் சொல்லியிருப்பதால், நகைக்கடன் மறுக்கப்படும் சூழல் உருவாகும்.

    ஏனெனில், பல குடும்பங்களில் இன்றும் பாட்டியின் நகைகளே தாய்க்கும் அவரது மகளுக்கும் மருமகளுக்கும் கொடுக்கப்பட்டு வரும் நடைமுறை, பல தலைமுறைகளாக இருந்து வருகிறது. அப்படியிருக்கையில், அவற்றிற்கான ரசீதையோ, ஆவணத்தையோ அவர்கள் எங்குபோய்ப் பெற முடியும்?

    மேலும், ஒரு பக்கம் தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு எகிறிக்கொண்டிருக்க, மறுபக்கம் தங்கத்தை அடமானம் வைத்துப் பெறப்படும் தொகையோ குறைந்துகொண்டே போனால், மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்பது ரிசர்வ் வங்கிக்குத் தெரியாதா?

    ரிசர்வ் வாங்கியின் புதிய விதிகளில், கடன் தொகை வழங்கும் அளவானது தங்கத்தின் மொத்த மதிப்பில் இருந்து 75 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு கடன் தொகையையும் குறைத்தால், பணம் அதிகம் தேவைப்படுவோர் அதிக வட்டி வசூலிக்கும் தனியார் நிதி நிறுவனங்களையும், கந்து வட்டிக் கும்பலையுமே நாடிர் சென்று தங்க நகைகளை அடகு வைக்கும் சூழல் ஏற்படும். இதனால் ஏழை எளிய நடுத்தர மக்கள், மீளாத் துயருக்கு ஆளாக நேரிடும்.

    ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளில் இத்தகைய நடைமுறைச் சிக்கல்கள் ஒரு புறம் இருக்க. வங்கிகளால் விற்பனை செய்யப்படும் தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் பெற முடியும் என்பது போன்ற புதிய விதி, மக்களை மேலும் இன்னலுக்கு உள்ளாக்கும்.

    இந்தப் புதிய விதியால், வேறு ஆதாரங்களில் இருந்து தங்க நாணயங்களை வாங்கியவர்கள் நகைக் கடன் பெற முடியாத சூழல் உருவாகி உள்ளது.

    மேலும், ஏற்கெனவே நகைக்கடன் பெற்றவர்கள் அதற்கு வட்டித் தொகை மட்டுமே செலுத்தி அதை அப்படியே புதுப்பித்துக் கொள்ள முடியாது என்றும், அடகு வைத்த நகையை முழுவதுமாக மீட்டு, அடுத்த நாள் தான் மீண்டும் அடகு வைத்துக் கடன் பெற முடியும் என்ற புதிய நிபந்தனையால் மக்கள் இன்னும் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாவர்.

    எனவே, ரிசர்வ் வங்கி வெளியீட்டுள்ள புதிய வரைவு விதிகளை முழுவதுமாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் நகைக் கடன் பெறுவதில் பழைய நடைமுறையே தொடரும் என்று அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 8 நாட்கள் முன்னதாக தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.
    • மத்திய கிழக்கு அரபி கடலில் உருவான காற்றழத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

    தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * 8 நாட்கள் முன்னதாக தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.

    * மத்திய கிழக்கு அரபி கடலில் உருவான காற்றழத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

    * தூத்துக்குடி, பாம்பனில் 3ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    * நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் அதி கனமழை கொட்டும். இதனால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    * கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழை (ஆரஞ்ச் அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ளது.

    * நீலகிரி, கோவையில் 27ஆம் தேதி மிக கனமழை (ஆரஞ்ச் அலர்ட்) பெய்யும்.

    * கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது இந்தாண்டு மே வரையிலான காலத்தில் 92 சதவீதம் கூடுதலாக மழைப்பொழிவு பதிவு.

    இவ்வாறு அனுஜா தெரிவித்துள்ளார்.

    • சென்னை சென்ட்ரல்-நாகர்கோவில் இடையே இயங்கும் வாராந்திர விரைவு ரெயிலில் நாளை முதல் ஒரு குளிர்சாதன மூன்றடுக்கு பெட்டி கூடுதலாக இணைக்கப்பட உள்ளது.
    • சென்ட்ரல்-ஆலப்புழை விரைவு ரெயிலில் இன்று முதல் ஜூன் 25-ந்தேதி வரையும் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை சென்ட்ரல்-நாகர்கோவில் இடையே இயங்கும் வாராந்திர விரைவு ரெயிலில் (எண்.12689/12690) நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஒரு குளிர்சாதன மூன்றடுக்கு பெட்டி கூடுதலாக இணைக்கப்பட உள்ளது.

    அதேபோல் சென்ட்ரல்-பகத் கோத்தி இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு விரைவு ரெயிலில் (எண்.06157/06158) 28-ந்தேதி முதல் 2 படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும், ஈரோடு-ராஜஸ்தான் மாநிலம் பார்மர் இடையே இயங்கும் விரைவு ரெயிலில் (எண்.06097/06098) 27-ந்தேதி முதல் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு பெட்டியும், 4 படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும் கூடுதலாக இணைக்கப்பட உள்ளன.

    மேலும் வெள்ளிக்கிழமை முதல் போத்தனூர்-பீகார் மாநிலம் பாரவுனி இடையே இயங்கும் விரைவு ரெயிலில் (எண்.06055/06056) 3 படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும், கோவை-தன்பாத் இடையே இயங்கும் விரைவு ரெயிலில் (எண்.06063/06064) ஒரு இரண்டடுக்கு குளிர்சாதனப் பெட்டியும், 2 குளிர்சாதன மூன்றடுக்கு பெட்டிகளும், 4 படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன.

    தாம்பரம்-செங்கோட்டை இடையே இயங்கும் விரைவு ரெயில் (எண்.20681/20682) வெள்ளிக்கிழமை முதல் ஜூன் 19-ந்தேதி வரையும், தாம்பரம்-நாகர்கோவில் விரைவு ரெயிலில் (எண்.20657/20658) நாளை முதல் ஜூன் 17-ந்தேதி வரையும் ஒரு படுக்கை வசதி கொண்ட பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படும்.

    அதேபோல் சென்ட்ரல்-திருவனந்தபுரம் விரைவு ரெயில் (எண்.12695/12696) 27-ந்தேதி முதல் ஜூன் 27-ந்தேதி வரையும், சென்ட்ரல்-ஆலப்புழை விரைவு ரெயிலில் (எண்.22639/22640) இன்று (சனிக்கிழமை) முதல் ஜூன் 25-ந்தேதி வரையும் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆர்.எக்ஸ் ஸ்டூடியோ இன்க் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் இணைய தளம் வாயிலாக கையெழுத்தானது.
    • ஒப்பந்தத்தின் மூலமாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பன்முகப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

    சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சுகாதார தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனமான அமெரிக்காவின் ஆர்.எக்ஸ் ஸ்டூடியோ இன்க் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் இணைய தளம் வாயிலாக கையெழுத்தானது.

    இதன் வாயிலாக திருச்சி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, பாரதிதாசன் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் உள்ள மருந்தாகவியல் தொழில்நுட்பத் துறையில் தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் துல்லியமான மருத்துவ ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவதற்கான ஒரு ஆராய்ச்சி முன்னேற்ற மையம் நிறுவப்பட உள்ளது.

    இந்த ஒப்பந்தத்தின் மூலமாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பன்முகப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

    மேலும், இப்பயிற்சியின் வாயிலாக ஆராய்ச்சி மேம்பாட்டை எளிதாக்கும் வகையில் ஆர்.எக்ஸ் ஸ்டூடியோ நிறுவனத்தின் உயர்தொழில்நுட்ப அதிநவீன டிஜிட்டல் தளத்தை பயன்படுத்த முடியும்.

    இதன் தொடர்ச்சியாக வருகிற 30-ந்தேதி இணையதள வாயிலாக தொடக்க விழா மற்றும் பன்முக பயிற்சி நடைபெற உள்ளது.

    • திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தென்மேற்கு பருவமழை, கேரளாவில் இன்று தொடங்கி உள்ளது. தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை இன்று அநேக பகுதிகளில் பரவியுள்ளது.

    நேற்று தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று காலை 5.30 மணி அளவில், மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று காலை 8.30 மணி அளவில், அதே பகுதிகளில், ரத்னகிரிக்கு வடக்கு-வடமேற்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் நிலவுகிறது. இது மெதுவாக கிழக்கு திசையில் நகர்ந்து, தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளில், இன்று நண்பகல் ரத்னகிரி மற்றும் தபோலிக்கு இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக்கூடும்.

    மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ந்தேதி வாக்கில் உருவாகக்கூடும்.

    தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை மற்றும் நாளை மறுதினம் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை முதல் வரும் 28-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    • ஒரு லட்சத்து 25 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில் மாணவ-மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து வருகின்றனர்.
    • கலைக்கல்லூரியில் சேருவதற்கு விண்ணப்பிக்க வருகிற 27-ந்தேதி கடைசி நாளாகும்.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைக்கல்லூரிகள், தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர ஆர்வமாக உள்ளனர். 176 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கடந்த 8-ந்தேதி தொடங்கியது.

    ஒரு லட்சத்து 25 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில் மாணவ-மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து வருகின்றனர். நேற்று வரை ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 263 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த எண்ணிக்கை இன்று 2 லட்சத்தை கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பட்டப்படிப்புகளில் சேர்ந்து போட்டித் தேர்வு மூலம் அரசு பணியில் சேரலாம் என்ற எதிர்பார்ப்புடன் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.

    கலைக்கல்லூரியில் சேருவதற்கு விண்ணப்பிக்க வருகிற 27-ந்தேதி கடைசி நாளாகும். விருப்பமுள்ளவர்கள் www.tngasa.in எனும் இணையதளம் வழியாக வேகமாக விண்ணப்பிக்க வேண்டும். இணைய தள வசதியில்லாதவர்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

    இதற்கான கட்டணம், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வளைதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 044- 24343106, 24342911 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டும் விளக்கம் பெறலாம் என்று கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது.

    • தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை திமுக அரசே ரத்து செய்திருப்பதும் விவசாயிகள் மத்தியில் பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
    • நெல்கொள்முதல் செய்ததில் எழுந்திருக்கும் முறைகேடு புகார் தொடர்பாக முறையான விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உணவுத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக கூறி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.

    விவசாயிகள் விளைவிக்கும் நெல்லை அரசே கொள்முதல் செய்துவந்த நிலையில், நடப்பாண்டு திடீரென தனியார் நிறுவனத்திற்கு அனுமதியை வழங்கி அதற்காக 170 கோடி ரூபாய் வரை முன்பணமாக திமுக அரசு கொடுத்திருப்பதாகவும் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.

    தற்போது எவ்வித காரணமும் தெரிவிக்கப்படாமல் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை திமுக அரசே ரத்து செய்திருப்பதும் விவசாயிகள் மத்தியில் பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. எனவே, விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு உரிய தொகையை உடனடியாக வழங்குவதோடு, நெல்கொள்முதல் செய்ததில் எழுந்திருக்கும் முறைகேடு புகார் தொடர்பாக முறையான விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உணவுத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்ற ஆண்டு நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது வருந்ததக்க விஷயம்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களை மத்திய அரசிடம் கேட்டு பெற்றால் அவருக்கு பெருமை தான்.

    சென்னை:

    சி.பா.ஆதித்தனாரின் 44-வது நினைவு நாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்ற ஆண்டு நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது வருந்ததக்க விஷயம்.

    இந்த முறை நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களை மத்திய அரசிடம் கேட்டு பெற்றால் அவருக்கு பெருமை தான்.

    மத்திய அரசுடன் இணக்கமான உறவு வைத்துக்கொண்டு நிதிகளை பெற்று மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கேரள முதல்-மந்திரியும் எனது அன்புத் தோழருமான பினராயி விஜயன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
    • நமது இரு மாநிலங்களும் இணைந்து நின்று நமது பண்பாட்டு உறவுகளையும் பொதுவான இலக்குகளையும் போற்றுவோம்!

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

    கேரள முதல்-மந்திரியும் எனது அன்புத் தோழருமான பினராயி விஜயன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள். முற்போக்கான அரசு நிர்வாகத்தின் மீதான தங்களது அர்ப்பணிப்பும், கூட்டாட்சியியல் மற்றும் மதச்சார்பின்மை மீதான நமது உறுதிப்பாடும் தமிழ்நாடு-கேரள உறவினை வலுப்படுத்துகின்றன. நமது இரு மாநிலங்களும் இணைந்து நின்று நமது பண்பாட்டு உறவுகளையும் பொதுவான இலக்குகளையும் போற்றுவோம்! தாங்கள் நீண்டகாலம் உடல்நலத்தோடும் மகிழ்ச்சியோடும் திகழ விழைகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • புதிய மணல் குவாரிகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
    • தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு கட்டுமானப் பணிகள் முக்கியம் என்பதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாற்றுக் கருத்து இல்லை.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்ட மணல் குவாரிகளை புதிதாக திறக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ்நாட்டில் ஆறுகள், மலைகள், சமவெளிகள் என அனைத்து நிலைகளிலும் இயற்கை வளங்கள் கொள்ளை அடிக்கப்படுவதாகவும், அதற்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் வல்லுனர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், புதிய மணல் குவாரிகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

    ஆற்று மணல் கொள்ளையை நியாயப்படுத்தவும், மூடி மறைக்கவும் கட்டுமானப் பணிகள் என்ற போர்வையை தமிழக அரசு பயன்படுத்துகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு கட்டுமானப் பணிகள் முக்கியம் என்பதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாற்றுக் கருத்து இல்லை. அரசு நினைத்தால் வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதியை அதிகரிப்பது, செயற்கை மணல் உற்பத்தி ஆகியவற்றின் மூலம் தமிழகத்தின் மணல் தேவையை எளிதாக பூர்த்தி செய்யலாம்.

    எனவே, தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்ட புதிய மணல் குவாரிகளை திறக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து ஆற்று மணலை இறக்குமதி செய்வது, செயற்கை மணல் உற்பத்தியை அதிகரித்து, விலையை குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் கட்டுமானப் பணிகளுக்கான மணல் தேவையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு 8 நாட்களுக்கு முன்னதாக இன்று தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது.
    • மேற்கு தொடர்ச்சி மலை இருக்கும் குமரி, தென்காசி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பொழியும் இருக்கும்.

    தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு 8 நாட்களுக்கு முன்னதாக இன்று தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது.

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 1-ந்தேதி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு 8 நாட்களுக்கு முன்னதாக இன்று தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது.

    தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் பல மாவட்டங்களில் மழை பெய்யும். இது ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கும். மேற்கு தொடர்ச்சி மலை இருக்கும் குமரி, தென்காசி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பொழியும் இருக்கும்.

    கேரளாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இதையடுத்து தமிழ்நாட்டின் பல பகுதிகள் மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.

    • கிராமங்களில் வரைபட அனுமதிக் கட்டணம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டதும் இதற்கு ஒரு காரணம் என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
    • பஞ்சாயத்துப் பகுதிகளுக்கு வீட்டு வரி, தண்ணீர் வரிகளை உயர்த்தி இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    சென்னை :

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    ஆட்சிக்கு வந்த 48 மாதங்களில், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் உள்ள வீடுகள், கடைகளுக்கு இரண்டு முறைகளுக்கு மேல் சொத்து வரியை உயர்த்தியதுடன், இனி ஆண்டுதோறும் 6 சதவீத வரி உயர்வையும் அறிவித்த அலங்கோல ஸ்டாலின் மாடல் அரசு, இந்த ஆண்டு (2025-2026) முதல் தமிழகத்தில் அனைத்து பஞ்சாயத்துகளிலும் உள்ள ஓலைக் குடிசைகள், ஓடு / ஆஸ்பெட்டாஸ் வீடுகள், கான்கிரீட் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் சொத்து வரியை உயர்த்தியதுடன், புதிய வரியை வசூலிக்க அதிகாரிகளை வற்புறுத்தி வருகிறது.

    2021-ஆம் ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்த விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில், சொத்துவரி, குடிநீர் கட்டணங்கள், கழிவுநீர் அகற்றல் கட்டணம் மற்றும் மின் கட்டணங்கள் ஆண்டுதோறும் 6 சதவீதம் உயர்த்தப்படுகின்றன. மேலும், உணவுப் பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலைகள் பலமடங்கு உயர்வு. பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருட்கள் நடமாட்டம், மணல் கொள்ளை, டாஸ்மாக் கொள்ளை என்று அனைத்துத் துறைகளிலும் கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன் என்று அதிகரித்து வரும் ஊழல், இதன் காரணமாக இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. இதுதான் 48 மாதகால அலங்கோல ஸ்டாலின் மாடல் தி.மு.க. ஆட்சியின் வேதனைகளை தமிழக மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.

    இந்நிலையில், 2024-2025ஆம் ஆண்டு முதல் பஞ்சாயத்து பகுதிகளில் புதிதாக வீடு கட்டியவர்கள் மற்றும் வீடு கட்ட திட்டமிட்டுள்ளவர்கள், வீட்டின் கட்டுமானப் பரப்பை அளந்து வரி நிர்ணயம் செய்ய ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் புதிய சட்டத்தின்படி ஒரு சதுர அடிக்கு கட்டட வரைபடக் கட்டணமாக சுமார் 37 ரூபாய் செலுத்த வேண்டும்.

    மேலும், 2024-2025ஆம் ஆண்டுவரை ஓலைக் குடிசை ஒன்றுக்கு ரூ. 44ம். ஓடு மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் வீடு ஒன்றுக்கு ரூ.66ம், கான்கிரீட் வீடு ஒன்றுக்கு ரூ.121ம் வீட்டு வரியாக செலுத்தி வந்தனர். மேலும், வீட்டு வரி இரசீதில் வீட்டின் பரப்பளவு குறிப்பிடப்பட்டிருக்கும்.

    தற்போது, உயர்த்தப்பட்ட சொத்து வரியின்படி, 2025-2026 முதல், இனி ஓலைக் குடிசைகளுக்கு அதிகபட்சமாக சதுர அடி ஒன்றுக்கு 40 பைசா முதல் 1 ரூபாய் வரையும், ஓட்டு வீட்டிற்கு சதுர அடி ஒன்றுக்கு 30 பைசா முதல் 60 பைசா வரையும், கான்கிரீட் வீட்டிற்கு சதுர அடி ஒன்றுக்கு 50 பைசா முதல் 1 ரூபாய் வரையும், வீட்டு வரி உயர்த்தப்பட வேண்டும் என்றும், ஏற்கெனவே உள்ள பழைய வீடுகளுக்கும் இந்த வரி உயர்வின்படி புதிய வரியை வசூலிக்க வேண்டும் என்றும் நிர்வாகத் திறமையற்ற ஸ்டாலின் மாடல் அரசு உள்ளாட்சிகளுக்கு உத்தரவு வழங்கியுள்ளது. இதன்படி, இனி ஊராட்சிகளில் அதிகபட்சமாக 500 சதுர அடி கான்கீரிட் வீடுகளுக்கு ரூ.500ம், ஓட்டு வீடுகளுக்கு ரூ.300ம், ஓலை வீடுகளுக்கு ரூ.200ம் வீட்டுவரி வசூலிக்கப்படும்.

    புரட்சித் தலைவர் முதலமைச்சராக இருந்தபோது ஏழை, எளிய மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு குடிசை வீடுகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்கினார். ஆனால், ஸ்டாலின் மாடல் திமுக அரசோ, ஏழை மக்களின் குடிசைகளுக்கு வரியை உயர்த்தி, அவர்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது. இதுதான், இந்த ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியின் சாதனை.

    கடந்த 2024-2025ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள புதிய வரிவிதிப்பு ஆன்லைன் சேவையை இந்த ஸ்டாலின் மாடல் விடியா திமுக அரசு முடக்கி வைத்துள்ளதால், புதிதாக வீடு கட்டிய மக்கள், வரி நிர்ணயத்திற்கு விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கின்றனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. கிராமங்களில் வரைபட அனுமதிக் கட்டணம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டதும் இதற்கு ஒரு காரணம் என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

    கடந்த நான்கு ஆண்டுகளாக மக்களின் வயிற்றில் அடித்து, அலங்கோல கொடுங்கோல் ஆட்சி நடத்தி வரும் ஸ்டாலின் மாடல் அரசு, பஞ்சாயத்துப் பகுதிகளுக்கு வீட்டு வரி, தண்ணீர் வரிகளை உயர்த்தி இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    பஞ்சாயத்துப் பகுதிகளுக்கு உயர்த்தப்பட்ட வீட்டு வரிகளை திரும்பப் பெற வேண்டும் என்று நிர்வாகத் திறமையற்ற முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.

    ×