என் மலர்tooltip icon

    சென்னை

    • கடந்த டிசம்பரில் மாணவி புகார் அளித்த நிலையில் 5 மாதங்களில் தீர்ப்பு வெளியாக உள்ளது.
    • கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது பிப்ரவரி மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி இரவு, அதே பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவி, சக மாணவருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர், இருவரையும் மிரட்டி மாணவரை அங்கிருந்து விரட்டி விட்டு மாணவியை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

    பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அடையாறு பகுதியில் சாலையோர உணவகம் நடத்தி வந்த கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் (வயது 37) என்பவரை கைது செய்தனர்.

    ஐகோர்ட்டு உத்தரவின்படி, இந்த வழக்கை 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு விசாரித்தது. இந்த விசாரணையின்போது, ஞானசேகரன் ஏற்கனவே திருட்டு, ஆள் கடத்தல், வீடு புகுந்து கொள்ளையடித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல்களும் வெளியாகின. இதைத்தொடர்ந்து, அந்த வழக்குகளையும் போலீசார் தூசி தட்டி எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.

    பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் விசாரணையை முடித்த சிறப்பு புலனாய்வு குழு ஞானசேகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. தற்போது இந்த வழக்கு சென்னை மகளிர் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

    மேலும் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என தமிழக டி.ஜி.பி., ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தார்.

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே.28ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை மகளிர் நீதிமன்றம் அிறவித்துள்ளது. கடந்த டிசம்பரில் மாணவி புகார் அளித்த நிலையில் 5 மாதங்களில் தீர்ப்பு வெளியாக உள்ளது.

    • மருத்துவர் அய்யா அவர்களால் கண்டெடுக்கப்பட்டு, பட்டைத் தீட்டப்பட்ட வைரம்.
    • காடுவெட்டி குரு ஏழாம் ஆண்டு நினைவு நாளில் அவரது உழைப்பையும், தியாகத்தையும் போற்றுவோம்.

    காடுவெட்டி குருவின் 7ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மாவீரன் ஜெ.குரு நமது போற்றுதலுக்குரியவர்; அவரது நோக்கத்தை நிறைவேற்ற உழைப்பதே அவருக்கு செலுத்தும் உண்மையான மரியாதை!

    ஒரே சொல்லின் மூலம் லட்சக்கணக்கானவர்களை உணர்ச்சிப் பெருக்குக்கு உள்ளாக்க முடியும் என்றால், அந்த சொல் மாவீரன் ஜெ.குரு என்பதாகத் தான் இருக்க முடியும்.

    அவர் மருத்துவர் அய்யா அவர்களால் கண்டெடுக்கப்பட்டு, பட்டைத் தீட்டப்பட்ட வைரம். என் மீது எல்லையில்லான அன்பு காட்டிய எனது மூத்த சகோதரன். அவர் நமது போற்றுதலுக்குரியவர்.

    அவரது ஏழாம் ஆண்டு நினைவு நாளில் அவரது உழைப்பையும், தியாகத்தையும் போற்றுவோம்.

    மாவீரன் இல்லாத இந்த ஏழு ஆண்டுகளும் வெறுமையாகத் தான் கழிந்தன. அவரது நினைவுகள் மட்டும் தான் ஆறுதலைத் தந்தன.

    பாட்டாளி மக்கள் கட்சியை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்த வேண்டும் என்பதையே தமது வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டவர் மாவீரன்.

    மாவீரனின் நோக்கத்தை நிறைவேற்ற கடுமையாக உழைக்க இந்த நாளில் உறுதியேற்போம். அது தான் அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தனது தலைமை காஜி பொறுப்பில் நேர்மையோடு அறத்தின் வழியில் பணியாற்றியவர்.
    • தலைமை காஜி மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    தமிழக அரசின் தலைமை காஜி சலாகுத்தீன் முஹம்மது அயூப் (84) நேற்று காலமானார். வயது முப்பு காரணமாக, உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவர் நேற்று இரவு 9 மணியளவில் மரணமடைந்துள்ளார்.

    இவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழ் மாநில தேசிய லீக் கட்சி சம்ஜூதீன் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தலைமை காஜி மறைவுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு அரசு தலைமை காஜி அல்லாமா முஃப்தி Dr.முஹம்மது ஸலாஹுத்தீன் அய்யூபி காதிரி அஜ்ஹரி அவர்கள் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

    தனது தலைமை காஜி பொறுப்பில் நேர்மையோடு அறத்தின் வழியில் பணியாற்றியவர். அரசு வழங்கிய சைரன் வைத்த கார், அரசு ஒதுக்கிய வீடு, அரசு வழங்கிய தலைமை அலுவலகம் எனத் தனது பொறுப்புக்காக அரசு வழங்கிய சலுகைகளைப் பெறாமல் சேவையாற்றியவர்.

    அனைவரின் நன்மதிப்பைப் பெற்ற தலைமை காஜி அல்லாமா முஃப்தி Dr.முஹம்மது ஸலாஹுத்தீன் அய்யூபி காதிரி அஜ்ஹரி அவர்களைப் பிரிந்து வாடும் அவர்தம் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாகர்கோவிலில் இருந்து ஜூன் 11-ந் தேதி புறப்பட்டு தாம்பரம் வரும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலும் வழக்கம் போல் இயக்கப்படும்.
    • நாகர்கோவில்-வள்ளியூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, வள்ளியூரில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தாம்பரத்தில் இருந்து வருகிற ஜூன் 10-ந்தேதி இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (20691), நெல்லை-நாகர்கோவில் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, நெல்லையில் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு தற்போது ரத்து செய்யப்பட்டு வழக்கம் போல் நாகர்கோவில் வரையே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதே போல, நாகர்கோவிலில் இருந்து ஜூன் 11-ந் தேதி புறப்பட்டு தாம்பரம் வரும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலும் வழக்கம் போல் இயக்கப்படும்.

    நாகர்கோவிலில் இருந்து ஜூன் 11-ந்தேதி காலை 8 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16321) நாகர்கோவில்-வள்ளியூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, வள்ளியூரில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த ரெயில் வழக்கம் போல் நாகர்கோவிலில் இருந்தே புறப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு.
    • கோவை குற்றாலத்தில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 8 நாட்கள் முன்னதாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள்து. இதனால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதன் எதிரொலியால், நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை மிக அதி கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கோவை குற்றாலத்தில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது வெள்ளம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை இந்த தடை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னை அமைந்தகரையில் உள்ள வணிக வளாகத்தின் 3-வது மாடியில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த இந்திரஜித் சிங் (33 வயது என்ற இளைஞர், ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

    இவர் நேற்று மாலை, அமைந்தகரையில் உள்ள பிரபல மால் (வணிக வளாகம்) சென்றுள்ளார். அங்கு, 3-வது மாடியில் உள்ள கடைக்கு சென்று அவர் பொருட்களை வாங்கிவிட்டு, பில் போடுவதற்காக காத்திருந்துள்ளார்.

    இந்த நிலையில், திடீரென இந்திரஜித் சிங், தனது காலணியை கழற்றி வைத்துவிட்டு, ஓடிச்சென்று மாலின் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக்கொண்டார்.

    இந்த சம்பவத்தை நேரில் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இந்திரஜித் சிங்கை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    சம்பவம் குறித்து அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கழுத்தில் கால் வைத்தபடி சீட்டு பேரம் பேசி தொகுதிகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சியின் மேலுள்ள அச்சத்திலிருந்து இன்னும் திமுக விடைபெறவில்லை.
    • உண்மையான கேள்வி என்னவென்றால் - நீங்கள் நீதிக்கு பயப்படுகிறீர்களா என்பது தான்!

    புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "எதிர்க்கட்சி தலைவர் அரசியல் பண்ணத்தான் செய்வார். ED-க்கும் மோடிக்கும் பயப்பட மாட்டோம் என்று தொடர்ந்து பலமுறை சொல்லிக்கொண்டு வருகிறேன். தொடர்ந்து குரல் கொடுப்போம்" என்று கூறினார்.

    உதயநிதி ஸ்டாலினின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.

    இதுகுறித்து நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    "மோடிக்கும் பயமில்லை, ED-க்கும் பயமில்லை" என்று வழக்கம் போல எதுகை மோனையில் வீரவசனம் பேசிவிட்டு தப்பிவிடலாம் என்று நினைக்கிறார் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்.

    தவறு ஏதும் செய்யவில்லை என்றால், வழியில் ஏதும் பயமில்லை என்றால், எதற்காக திரு. உதயநிதி அவர்களின் கூட்டாளிகளான ரத்தீஷும், ஆகாஷ் பாஸ்கரனும் இன்று வரை தலைமறைவாக உள்ளார்கள் என்று அவர் விளக்கம் கொடுப்பாரா?

    மார்ச் 2011-ல் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான சீட்டுப் பேரத்தின் போது, CBI கோபாலபுரத்து வீட்டின் மேல் மாடியில் சோதனை செய்ய, கீழே பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட நிகழ்வுக்கு செல்வோமா?

    அன்று பயம் காட்டி பேரம் செய்தது அம்மையார் திருமதி. சோனியா காந்தி அவர்களின் வழிகாட்டுதலில் இயங்கிய காங்கிரஸ் அரசாங்கம் தான், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களோ, பாஜக-வோ அல்ல!

    அன்று அரண்டு போன திமுக தலைவர்கள், இன்று வரை தங்களுக்கு எதிராக நடக்கும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எல்லாம் மிரட்டுவதற்கு செய்யும் அரசியல் என்றே தொடர்ச்சியாக தவறாக தோற்றம் கொடுத்து வருகிறார்கள்.

    அதற்குக் காரணம், கழுத்தில் கால் வைத்தபடி சீட்டு பேரம் பேசி தொகுதிகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சியின் மேலுள்ள அச்சத்திலிருந்து இன்னும் திமுக விடைபெறவில்லை என்றே தெரிகிறது. அன்று திரு. உதயநிதி அவர்கள் அரசியலில் நுழையவில்லை என்றாலும், அந்த வரலாறு அவரை இன்னும் சுடுகிறது போல.

    கேள்வி, நீங்கள் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு பயப்படுகிறீர்களா என்பது அல்ல!

    அவர் என்றுமே அரசியல் காழ்ப்புகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட உலகத் தலைவர்! நாட்டைக் காப்பதையும், வளர்ச்சிப் பாதையில் வழிநடத்துவதையும், நம் பழம்பெரும் நாகரிகத்தை மீட்டெடுப்பதையும் மட்டுமே உயிர் மூச்சாக நினைத்துச் செயல்பட்டு வரும் உன்னதத் தலைவர்! அப்படிப்பட்ட நிலையில், திமுகவை பிரதமர் அச்சுறுத்தப் பார்க்கிறார் என்பதெல்லாம் நகைப்புக்குரிய சுயவிளம்பரம் மட்டுமே…

    ஆக, உண்மையான கேள்வி என்னவென்றால் - நீங்கள் நீதிக்கு பயப்படுகிறீர்களா என்பது தான்!

    அந்த நீதியானது நிச்சயம் இறுதியில் உங்கள் எண்ணத்தை எல்லாம் தூளாக்கி, திமுகவுக்குத் தக்கப் பாடம் கற்பிக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை!

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இஸ்லாமிய சமூகத்தினரின் பேரன்பையும் பெருமதிப்பையும் பெற்றிருந்த அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
    • தலைமை காஜி மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    தமிழக அரசின் தலைமை காஜி சலாகுத்தீன் முஹம்மது அயூப் (84) நேற்று காலமானார். வயது முப்பு காரணமாக, உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவர் நேற்று இரவு 9 மணியளவில் மரணமடைந்துள்ளார்.

    இவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழ் மாநில தேசிய லீக் கட்சி சம்ஜூதீன் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தலைமை காஜி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் அவர் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாகுத்தீன் முஹம்மது அயூப் சாகிபு மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். கற்றறிந்த பேராசிரியரான அவர், தனது சமூகச் சேவைகளுக்காக என்றென்றும் நினைவுகூரப்படுவார்.

    தன்னுடைய பண்பால் இஸ்லாமிய சமூகத்தினரின் பேரன்பையும் பெருமதிப்பையும் பெற்றிருந்த அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

    நான் ஆயிரம் விளக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலந்தொட்டு, என் மீது பேரன்பு செலுத்தியவர் அவர். மூப்பெய்திய போதும், நான் பங்கெடுக்கும் இப்தார் நிகழ்வுகள் அனைத்திலும் தன்னுடைய உடல்நலன் ஒத்துழைக்கும் வரையில் பங்கேற்பேன் என்று சொல்லிய அவரை இன்று இழந்து வாடுகிறோம்.

    அவரது பிரிவால் வாடும் இஸ்லாமிய மக்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தம்பி STR போகப் போகும் தூரம் எனக்குத் தெரிகிறது.
    • நான் chief minister ஆகுறதுக்கு ஒண்ணும் வரல என்றார்.

    சென்னை:

    சென்னையில் நடைபெற்று வரும் தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:

    தம்பி STR போகப் போகும் தூரம் எனக்குத் தெரிகிறது. உங்களுக்குப் புரிகிறது. உங்களுக்கு கடமை இருக்கிறது. இந்தக் கூட்டத்தை வழிநடத்தும் தலைவன் நீங்கள். அந்த ரெஸ்பான்சிபிளிடி உடன் நீங்கள் நடந்து கொள்வீர்கள். இது சுமை அல்ல, சுகம்.

    நான் chief minister ஆகுறதுக்கு ஒண்ணும் வரல. எம்.எல்.ஏ, எம்.பி எல்லாம் எனக்கு புரியாது.

    ஆனா 40 வருஷமா ஒரு எம்.எல்.ஏ. ஒரு தொகுதிக்கு என்ன பண்ணுவாரோ, அதை நாங்கள் சமயத்துக்கு மெதுவாக பண்ணிக்கிட்டே இருக்கோம். ஏனென்றால் நாங்கள் தனி மனிதர்கள்.

    இங்கிருந்து என் கூட உழைத்த தம்பிகள் எல்லாம் பெரிய மனிதர்களாக சமுதாயத்தில் நடந்து கொண்டிருப்பது எனக்குப் பெருமை.

    கலைஞர் டயலாக் சொன்னதுபோல், பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில், படமெடுத்தாடும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன. ஆகாரத்திற்காக அழுக்கை சாப்பிட்டு தடாகத்தை சுத்தும் செய்யும் மீன், அதை போல நானும் என தெரிவித்தார்.

    • தங்க நாணயங்களை வாங்கியவர்கள் நகைக் கடன் பெற முடியாத சூழல் உருவாகி உள்ளது.
    • நகைக் கடன் பெறுவதில் பழைய நடைமுறையே தொடரும் என்று அறிவிக்க வேண்டும்.

    ஏழை, நடுத்தர மக்களின் ஆபத்பாந்தவனாக விளங்கும் நகைக்கடன் பெறும் வழிமுறைகளைத் திருத்தி, புதிதாக 9 விதிமுறைகள் வெளியிட்டிருப்பதை ரிசர்வ் வங்கி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    உலகிலேயே தங்கத்தை அதிகமாக நுகரும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் இருப்பது இந்தியா தான். இந்தியர்கள், தங்கத்தைத் தங்கள் சொத்தின் ஒரு பகுதியாகக் கருதுகின்றனர். தங்கம் என்பது திருமணம் போன்ற இன்ன பிற விசேஷ நிகழ்ச்சிகளின்போது மட்டுமே ஆபரணமாக அணியப்படுகிறது.

    மற்றபடி, தங்க நகைகளை ஏழை, நடுத்தர மக்கள், வாகனம், நிலம், வீடு போன்ற அசையும் மற்றும் அசையா சொத்துகள் வாங்குவதற்கும், கல்வி, விவசாயம், மருத்துவம் போன்ற அத்தியாவசியச் செலவுகளுக்கும் வங்கிகளில் அடமானம் வைத்துத்தான் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய விதிகளில், தங்க நகையை அடமானம் வைப்பவர்கள், அதற்கான உரிமையாளர்கள் தாங்கள்தான் என்பதற்கான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட தங்க நாணயங்கள் மட்டுமே அடமானத்துக்கு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

    நகைகளை வாங்கியதற்கான ரசீது இல்லாதவர்கள், அதற்குப் பதிலாக வேறு ஆவணங்களையோ, உறுதிமொழிச் சான்றையோ அளித்துக் கடன் பெறலாம் என்றும், அவற்றில் சந்தேகம் இருந்தால் கடன் வழங்கக் கூடாது என்றும் சொல்லியிருப்பதால், நகைக்கடன் மறுக்கப்படும் சூழல் உருவாகும்.

    ஏனெனில், பல குடும்பங்களில் இன்றும் பாட்டியின் நகைகளே தாய்க்கும் அவரது மகளுக்கும் மருமகளுக்கும் கொடுக்கப்பட்டு வரும் நடைமுறை, பல தலைமுறைகளாக இருந்து வருகிறது. அப்படியிருக்கையில், அவற்றிற்கான ரசீதையோ, ஆவணத்தையோ அவர்கள் எங்குபோய்ப் பெற முடியும்?

    மேலும், ஒரு பக்கம் தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு எகிறிக்கொண்டிருக்க, மறுபக்கம் தங்கத்தை அடமானம் வைத்துப் பெறப்படும் தொகையோ குறைந்துகொண்டே போனால், மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்பது ரிசர்வ் வங்கிக்குத் தெரியாதா?

    ரிசர்வ் வாங்கியின் புதிய விதிகளில், கடன் தொகை வழங்கும் அளவானது தங்கத்தின் மொத்த மதிப்பில் இருந்து 75 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு கடன் தொகையையும் குறைத்தால், பணம் அதிகம் தேவைப்படுவோர் அதிக வட்டி வசூலிக்கும் தனியார் நிதி நிறுவனங்களையும், கந்து வட்டிக் கும்பலையுமே நாடிர் சென்று தங்க நகைகளை அடகு வைக்கும் சூழல் ஏற்படும். இதனால் ஏழை எளிய நடுத்தர மக்கள், மீளாத் துயருக்கு ஆளாக நேரிடும்.

    ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளில் இத்தகைய நடைமுறைச் சிக்கல்கள் ஒரு புறம் இருக்க. வங்கிகளால் விற்பனை செய்யப்படும் தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் பெற முடியும் என்பது போன்ற புதிய விதி, மக்களை மேலும் இன்னலுக்கு உள்ளாக்கும்.

    இந்தப் புதிய விதியால், வேறு ஆதாரங்களில் இருந்து தங்க நாணயங்களை வாங்கியவர்கள் நகைக் கடன் பெற முடியாத சூழல் உருவாகி உள்ளது.

    மேலும், ஏற்கெனவே நகைக்கடன் பெற்றவர்கள் அதற்கு வட்டித் தொகை மட்டுமே செலுத்தி அதை அப்படியே புதுப்பித்துக் கொள்ள முடியாது என்றும், அடகு வைத்த நகையை முழுவதுமாக மீட்டு, அடுத்த நாள் தான் மீண்டும் அடகு வைத்துக் கடன் பெற முடியும் என்ற புதிய நிபந்தனையால் மக்கள் இன்னும் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாவர்.

    எனவே, ரிசர்வ் வங்கி வெளியீட்டுள்ள புதிய வரைவு விதிகளை முழுவதுமாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் நகைக் கடன் பெறுவதில் பழைய நடைமுறையே தொடரும் என்று அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 8 நாட்கள் முன்னதாக தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.
    • மத்திய கிழக்கு அரபி கடலில் உருவான காற்றழத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

    தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * 8 நாட்கள் முன்னதாக தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.

    * மத்திய கிழக்கு அரபி கடலில் உருவான காற்றழத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

    * தூத்துக்குடி, பாம்பனில் 3ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    * நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் அதி கனமழை கொட்டும். இதனால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    * கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழை (ஆரஞ்ச் அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ளது.

    * நீலகிரி, கோவையில் 27ஆம் தேதி மிக கனமழை (ஆரஞ்ச் அலர்ட்) பெய்யும்.

    * கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது இந்தாண்டு மே வரையிலான காலத்தில் 92 சதவீதம் கூடுதலாக மழைப்பொழிவு பதிவு.

    இவ்வாறு அனுஜா தெரிவித்துள்ளார்.

    • சென்னை சென்ட்ரல்-நாகர்கோவில் இடையே இயங்கும் வாராந்திர விரைவு ரெயிலில் நாளை முதல் ஒரு குளிர்சாதன மூன்றடுக்கு பெட்டி கூடுதலாக இணைக்கப்பட உள்ளது.
    • சென்ட்ரல்-ஆலப்புழை விரைவு ரெயிலில் இன்று முதல் ஜூன் 25-ந்தேதி வரையும் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை சென்ட்ரல்-நாகர்கோவில் இடையே இயங்கும் வாராந்திர விரைவு ரெயிலில் (எண்.12689/12690) நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஒரு குளிர்சாதன மூன்றடுக்கு பெட்டி கூடுதலாக இணைக்கப்பட உள்ளது.

    அதேபோல் சென்ட்ரல்-பகத் கோத்தி இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு விரைவு ரெயிலில் (எண்.06157/06158) 28-ந்தேதி முதல் 2 படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும், ஈரோடு-ராஜஸ்தான் மாநிலம் பார்மர் இடையே இயங்கும் விரைவு ரெயிலில் (எண்.06097/06098) 27-ந்தேதி முதல் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு பெட்டியும், 4 படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும் கூடுதலாக இணைக்கப்பட உள்ளன.

    மேலும் வெள்ளிக்கிழமை முதல் போத்தனூர்-பீகார் மாநிலம் பாரவுனி இடையே இயங்கும் விரைவு ரெயிலில் (எண்.06055/06056) 3 படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும், கோவை-தன்பாத் இடையே இயங்கும் விரைவு ரெயிலில் (எண்.06063/06064) ஒரு இரண்டடுக்கு குளிர்சாதனப் பெட்டியும், 2 குளிர்சாதன மூன்றடுக்கு பெட்டிகளும், 4 படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன.

    தாம்பரம்-செங்கோட்டை இடையே இயங்கும் விரைவு ரெயில் (எண்.20681/20682) வெள்ளிக்கிழமை முதல் ஜூன் 19-ந்தேதி வரையும், தாம்பரம்-நாகர்கோவில் விரைவு ரெயிலில் (எண்.20657/20658) நாளை முதல் ஜூன் 17-ந்தேதி வரையும் ஒரு படுக்கை வசதி கொண்ட பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படும்.

    அதேபோல் சென்ட்ரல்-திருவனந்தபுரம் விரைவு ரெயில் (எண்.12695/12696) 27-ந்தேதி முதல் ஜூன் 27-ந்தேதி வரையும், சென்ட்ரல்-ஆலப்புழை விரைவு ரெயிலில் (எண்.22639/22640) இன்று (சனிக்கிழமை) முதல் ஜூன் 25-ந்தேதி வரையும் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×