என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 28ம் தேதி தீர்ப்பு
- கடந்த டிசம்பரில் மாணவி புகார் அளித்த நிலையில் 5 மாதங்களில் தீர்ப்பு வெளியாக உள்ளது.
- கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது பிப்ரவரி மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி இரவு, அதே பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவி, சக மாணவருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர், இருவரையும் மிரட்டி மாணவரை அங்கிருந்து விரட்டி விட்டு மாணவியை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அடையாறு பகுதியில் சாலையோர உணவகம் நடத்தி வந்த கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் (வயது 37) என்பவரை கைது செய்தனர்.
ஐகோர்ட்டு உத்தரவின்படி, இந்த வழக்கை 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு விசாரித்தது. இந்த விசாரணையின்போது, ஞானசேகரன் ஏற்கனவே திருட்டு, ஆள் கடத்தல், வீடு புகுந்து கொள்ளையடித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல்களும் வெளியாகின. இதைத்தொடர்ந்து, அந்த வழக்குகளையும் போலீசார் தூசி தட்டி எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.
பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் விசாரணையை முடித்த சிறப்பு புலனாய்வு குழு ஞானசேகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. தற்போது இந்த வழக்கு சென்னை மகளிர் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
மேலும் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என தமிழக டி.ஜி.பி., ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே.28ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை மகளிர் நீதிமன்றம் அிறவித்துள்ளது. கடந்த டிசம்பரில் மாணவி புகார் அளித்த நிலையில் 5 மாதங்களில் தீர்ப்பு வெளியாக உள்ளது.






