என் மலர்tooltip icon

    சென்னை

    • பெண்கள் வாழத் தகுதியற்ற மாநிலமாக தமிழகம் உருமாறியுள்ளது.
    • மு.க.ஸ்டாலின் தனது துருப்பிடித்துப் போன இரும்புக்கரத்தைப் பழுது பார்க்க வேண்டிய நேரமிது.

    பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி கொலை செய்யப்பட்டதுடன், மேலும் ஒரு சிறுமி கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. தங்கள் பிள்ளையை இழந்து தவிக்கும் அக்குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இச்சம்பவத்தில் பிடிபட்டுள்ள கொலையாளி குடிபோதையில் இருந்தான் என வெளியாகியுள்ள தகவல், போதைப் பொருட்களின் பிடியில் தமிழகம் சிக்கி சீரழிந்து கிடப்பதையும், பெண்கள் வாழத் தகுதியற்ற மாநிலமாக தமிழகம் உருமாறியுள்ளது என்பதையும் நமக்கு மீண்டுமொருமுறை உணர்த்துகிறது. இதுதான் திமுக-வின் விடியல் ஆட்சியா?

    தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால் தானே குற்றங்கள் குறையும்? சட்டம் ஒழுங்கு செம்மையாக இருந்தால் தானே குற்றவாளிகளுக்கு பயமிருக்கும்?

    இதுபோன்ற சம்பவங்களைக் காணும் ஒவ்வொரு குடும்பமும், "நாளை நம் குடும்பப் பெண்களுக்கும் இதே நிலைமைதானோ" என்ற பயத்தில் தான் தமிழகத்தில் வாழ்கிறார்கள் என்பது வெட்கக்கேடானது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது துருப்பிடித்துப் போன இரும்புக்கரத்தைப் பழுது பார்க்க வேண்டிய நேரமிது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வைகோவின் இரண்டாவது சகோதரியான சரோஜா இன்று காலமானார்.
    • சரோஜா இன்று வயது மூப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார்.

    மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சகோதரி சென்னையில் காலமானார்.

    வைகோவின் இரண்டாவது சகோதரியான சரோஜா இன்று வயது மூப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார்.

    அவரது உடலுக்கு வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    • தேடல் உள்ள நடிப்புக் கலைஞர்களில் அதிகம் வாசிப்பதையும் வாசித்ததைச் சிந்திப்பதையும் வழக்கமாகக்கொண்டவர்.
    • அவரை இழந்து வேதனைப்படும் குடும்பத்தாருக்கு என் ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    நடிகர் ராஜேஷ் மறைவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    தேடல் உள்ள நடிப்புக் கலைஞர்களில் அதிகம் வாசிப்பதையும் வாசித்ததைச் சிந்திப்பதையும் வழக்கமாகக்கொண்டவர் அன்பு நண்பர் ராஜேஷ்.

    தன் வாழ்வின் இறுதிவரை உற்சாகமும் செயல்பாடும் குறையாமல் வாழ்ந்த அவரது மறைவு பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அவரை இழந்து வேதனைப்படும் குடும்பத்தாருக்கு என் ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 10 மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
    • புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், இன்றும் நாளையும் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து, மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று தொடங்கியது.

    காலை, மாலை என இரு வேளைகளில் தலா 10 மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

    2 நாட்கள் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி, பூத் கமிட்டி பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்களுடன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

    மொத்தம் 82-ல் முதலில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பூத் கமிட்டி பணிகள் தாமதம் தொடர்பாகவும் அவர் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது, விரைந்து பூத் கமிட்டி அமைத்து முடிக்க வேண்டும் என்றும் ஜூன் மாதத்திற்குள் பணிகளை முடிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

    பூத் கமிட்டி தான் மிகப்பெரிய கட்டமைப்பு. அதை சரியான முறையில் செய்ய வேண்டும் என்று இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

    • ராஜேஷ் அவர்களின் திடீர் மறைவு பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது.
    • சிறப்பான நடிப்பினால் சின்னத்திரை நெடுந்தொடர்கள் பல வெற்றித்தொடர்களாகப் பெரும்புகழ் பெற்றன.

    நடிகர் ராஜேஷ் மறைவு தொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்த்திரை மற்றும் சின்னத்திரை மூத்த நடிகர், பின்குரல் கலைஞர், எழுத்தாளர், மிகச்சிறந்த வாசிப்பாளர், வலையொளியாளர் என பன்முகத்திறன் பெற்ற படைப்பாளி, மனிதநேயமிக்க மாண்பாளர் அன்பிற்கினிய அண்ணன் இராஜேஷ் அவர்களின் திடீர் மறைவு பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது.

    கன்னிப்பருவத்திலே, அந்த 7 நாட்கள், அச்சமில்லை அச்சமில்லை, பயணங்கள் முடிவதில்லை, மகாநதி, இருவர், விருமாண்டி உள்ளிட்ட பல திரைக்காவியங்களில் தன்னுடைய தனித்துவமிக்க குணச்சித்திர நடிப்பின் மூலம் தனிமுத்திரை பதித்த அண்ணன் இராஜேஷ் அவர்களின் மறைவு தமிழ்த்திரைத்துறைக்கு ஏற்பட்டுள்ள ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது சிறப்பான நடிப்பினால் சின்னத்திரை நெடுந்தொடர்கள் பல வெற்றித்தொடர்களாகப் பெரும்புகழ் பெற்றன.

    ஓம் சரவணபவ வலையொளி மூலம் உடல்நலனைப் பாதுகாப்பது குறித்து பல அரிய தகவல்களை இறுதிநாள்வரை, தொடர்ச்சியாகப் பொதுமக்களுக்கு வழங்கி வழிகாட்டிய பெருமகன்.

    தனிப்பட்ட முறையில் என்மீது பெரும் பாசமுடைய அண்ணன் ராஜேஷ் அவர்கள், அவரிடமிருந்த கிடைத்தற்கரிய சிறந்த புத்தகங்களை எனக்கனுப்பி தந்து படிக்க பரிந்துரைத்த பேரன்புக்காரர். நாங்கள் முன்வைக்கும் அரசியல் கருத்துகள் மிகச்சரியானது என்பதை பல தருணங்களில், பல மேடைகளில் தயக்கமின்றி வெளிப்படுத்திய பெருந்தகை!

    அண்ணன் ராஜேஷ் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும், வலையொளி பின்தொடர்பாளர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.

    தலைச்சிறந்த குணச்சித்திரத் திரைக்கலைஞர் அண்ணன் இராஜேஷ் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மூர்க்க போக்கிரி குண்டர்களுக்கு ஒரு முகவரியை ஏற்படுத்தக் கூடாது.
    • Thugs & Pindaris அவர்களுக்கென்று நல்ல கொள்கையோ, கோட்பாடோ, ஒழுக்கமோ, பண்போ கிடையாது.

    புதிய தமிழக தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    Thug Life" எனும் பெயரில் புதிய திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளதாக தெரிகிறது. மிகவும் தவறான பொருள் கொண்ட Thug" எனும் பெயர் நடிகர் கமல்ஹாசன் அவர்களால் பெருமிதப்படுத்தப்பட முயற்சிக்கப்படுகிறது. அப்பெயர் கிஞ்சிற்றும் பிரபல்யப்படுத்துவதற்கோ, பெருமைப்படுத்துவதற்கோ உரியதல்ல. ஏனெனில் Thuge என்றால் பொறுக்கிகள் மூர்க்கர்கள் போக்கிரிகள் என்று வரலாற்று ஆசிரியர்களால் சித்தரிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய வரலாற்றை ஆழமாகப் படித்தவர்கள் 18 மற்றும் 19.ஆம் நூற்றாண்டுகளில் Thugs & Pindaris என்ற மூர்க்கப் போக்கிரிக் கூட்டம் எந்த அளவிற்கு ஒட்டுமொத்த இந்தியச் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக இருந்தார்கள் என்பதை நன்கு அறிவார்கள். Thugs & Pindaris என்பவர்கள் ஒளரங்கசீப்பின் ஆட்சிக்குப் பிறகு இந்திய அளவில் நிலவிய நிலையற்ற தன்மையைப் பயன்படுத்திக்கொண்டு மத்திய இந்தியாவில் துவங்கி இந்தியாவெங்கும் பரவிய வழிப்பறி கொள்ளை கூட்டம் ஆகும். அவர்கள் மத ரீதியாகவோ, இன மொழி ரீதியாகவோ அடையாளப்படுத்த முடியாத நாடோடி கும்பலாவர். அவர்களுக்கென்று நல்ல கொள்கையோ, கோட்பாடோ, ஒழுக்கமோ, பண்போ கிடையாது.

    வழிப்போக்கர்களோடு வழிப்போக்கர்களாக அண்டிப் பழகி அவர்களை மயிரக்கம் இன்றி கொலை செய்துவிட்டு அவர்களின் உடைமைகளைக் கொள்ளை அடிப்பது தான் அவர்களின் வாழ்வியல் முறை. அதில் பல குழுக்கள் கூட்டம் கூட்டமாக குதிரைகளில் வந்து மத்திய மற்றும் உத்திரப் பிரதேச சாம்பல் பள்ளத்தாக்குகளில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவங்களைப் போல கொள்ளையடித்தும் செல்வார்கள்.

    ஏறக்குறைய நூறாண்டுகளுக்கு மேலாக இவர்களின் அட்டகாசங்கள் இந்தியாவெங்கும் கோலோச்சியது. பின் அவர்கள் கடுமையான போருக்குப் பின்னரே ஒடுக்கப்பட்டார்கள். எனினும் அவர்களின் மிச்சச் சொச்சங்களாக சமூகத்தில் பரவியும். பதுங்கியும் விடக்கும் மூர்க்க போக்கிரித்தனம் கொண்டவர்களின் அடாவடி செயல்களை இச்சமூகம் இன்னும் எதிர்கொண்டு தான் வருகிறது.

    அதன் வெளிப்பாடுகளாகவே தனித்து வீடுகளில் வசிக்கும் வயதானவர்களைக் குறி வைத்து கொலை செய்து, நகை உடையைகளைக் கொள்ளையடித்துச் செல்வது, கல்லூரி பல்கலைக்கழக வளாகங்களில் நுழைந்து பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது, அதிகாரிகளையே கொன்றுவிட்டு கனிமக் கொள்ளைகளில் ஈடுபடுவது, நில மோசடிகளில் ஈடுபடுவது. கெளரவ சாதியக் கொலைகள் செய்வது, அரசாங்கத் துறைகளைக் கைப்பற்றிக் கொண்டு ரவுடி ராஜ்ஜியம் செய்வது எல்லாமே அவர்களின் மிச்ச சொச்சங்கள் தான். அம்மூங்கப் போக்கிரி வழிப்பறி குண்டர்களின் அட்டகாசங்களை ஒழிக்கவே காவல்துறையே உருவாக்கப்பட்டது.

    Thugs & Pindars இந்தியச் சமூகத்தையே அச்சுறுத்திய, இன்றும் அச்சுறுத்தி வருகிற ஒரு சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ஒரு தவறான வாழ்வியல் முறை. அது போன்ற நெறியற்றவர்களின் வாழ்வியலைப் பெருமைப்படுத்தும் விதமாக அவர்களுக்கு ஒரு அடையானத்தை ஏற்படுத்தித் தரும் வகையில் திரைப்படங்களுக்கு பெயரிடுவது கூட சமூகத்திற்கும் நல்லதல்ல. நாட்டுக்கும் நல்லதல்ல!

    எனவே, மூர்க்க போக்கிரி குண்டர்களுக்கு ஒரு முகவரியை ஏற்படுத்தும் விதத்தில் தனது திரைப்படத்திற்கு Thug life" எனும் பெயரைத் தவிர்க்க வேண்டும் என நடிகர் கமலை வலியுறுத்துகிறேன்.

    • பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
    • ராமதாஸ் கடுமையாக விமர்சித்த நிலையில் அன்புமணி கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.

    திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

    இந்த நிலையில் கட்சி நிர்வாகிகள் யாரும் தன்னை சந்திக்க வரவேண்டாம் என அன்புமணி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    இந்நிலையில், ராமதாஸின் சரமாரி குற்றச்சாட்டுக்கு மத்தியில் பாமக நிர்வாகிகளுடன் நாளை அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்துவதாக கூறப்பட்டுள்ளது.

    அதன்படி, சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள பனையூர் அலுவலகத்தில் நாளை முதல் ஞாயிறு வரை பாமக மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளை பாமக தலைவர் அன்புமணி சந்திக்கிறார்.

    மாவட்டம் தோறும் புதிய உறுப்பினர் அட்டைகளை அன்புமணி வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    ராமதாஸ் கடுமையாக விமர்சித்த நிலையில் அன்புமணி கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.

    • கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து தரத்தை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை ஆகும்.
    • பாலங்கள், சாலைகள் ஆகியவற்றின் தரம் குறித்து தொடர்ந்து புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    நாமக்கல் அருகே முதல்வரால் திறக்கப்பட்ட நாளிலேயே விரிசல் விழுந்த பாலம்: ரூ.320 கோடி திட்டத்தில் நடந்த ஊழல் குறித்து விசாரணை தேவை!

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் நகரில் நெரிசலை குறைத்திடும் வகையில் 3.40 கி.மீ தொலைவுக்கு கட்டப்பட்டுள்ள பாலத்தின் பல இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டிருப்பதும், சுற்றுச்சுவரின் கற்கள் பெயர்ந்து விழுவதும் அங்குள்ள மக்களிடம் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

    ரூ.320 கோடியில் கட்டப்பட்டுள்ள அந்த மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தான் திறந்து வைத்த நிலையில், அதற்கு முன்பாகவே பாலம் சேதமடைந்திருப்பது கட்டுமானப் பணிகளின் தரமற்றத் தன்மையைத் தான் காட்டுகின்றன.

    பள்ளிப்பாளையம் பாலம் சென்னை - கன்னியாகுமரி தொழில்தடத் திட்டத்தின் கீழ், ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன் கட்டப்பட்டுள்ளது. பன்னாட்டு வங்கிகளின் நிதியுதவியுடன் பாலம் கட்டப்பட்டும் போது கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து தரத்தை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை ஆகும்.

    அவ்வாறு ஆய்வுகள் செய்யப்பட்டிருந்தால் பாலம் சேதமடைந்திருக்க வாய்ப்பில்லை. இந்த கோணத்தில் பார்க்கும் போது பாலத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டது முதலே அதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருக்கக் கூடும் என்று பள்ளிப்பாளையம் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அவற்றை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.

    திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கட்டப்பட்ட பாலங்கள், சாலைகள் ஆகியவற்றின் தரம் குறித்து தொடர்ந்து புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.15.90 கோடியில் கட்டப்பட்ட பாலம் அடுத்த 3 மாதங்களில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அணையிலிருந்து ஒரே நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டது தான் இதற்குக் காரணம் என்று கூறி அரசு தப்பிவிட்டது.

    ரூ.320 கோடியில் கட்டப்பட்ட பாலம் திறக்கப்படுவதற்கு முன்பே சேதமடைவது இயல்பானது அல்ல. பாலத்தைக் கட்டுவதில் நடந்த ஊழலும், அதன் காரணமாக நடந்த தரமற்ற கட்டுமானப் பணிகளும் இதற்குக் காரணமாக இருக்க முடியும்.

    எனவே, பள்ளிப்பாளையம் பாலத்தைக் கட்டுவதில் நடந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டும். பள்ளிப்பாளையம் மேம்பாலம் போக்குவரத்திற்கு திறக்கப்பட்டுள்ள நிலையில், அது போக்குவரத்திற்கு உகந்தது தானா? என்பது குறித்த பாதுகாப்பு தர ஆய்வுகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேட்டி அளித்தார்.
    • சென்னை பனையூர் இல்லத்திற்கு தன்னை சந்திக்க யாரும் வரவேண்டாம்.

    திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

    இந்த நிலையில் கட்சி நிர்வாகிகள் யாரும் தன்னை சந்திக்க வரவேண்டாம் என அன்புமணி வேண்டுகோள் விடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை பனையூர் இல்லத்திற்கு தன்னை சந்திக்க யாரும் வரவேண்டாம் என அன்புமணி தெரிவித்துள்ளார்.

    அன்புமணி மீது அவரது தந்தை ராமதாஸ் குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில் பா.ம.க. தலைவர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • இரு ஆண்டும் முறையாக வருமான வரி தாக்கல் செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • வழக்கின் விசாரணையை ஜூன் 18-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    சென்னை:

    மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, ஒவ்வொரு நிதியாண்டும் அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடை குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு அறிக்கை தாக்கல் செய்தால் மட்டுமே அந்த நன்கொடைக்கு வருமான வரி விலக்கு வழங்கப்படும்.

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த 2018-2019, 2019-2020 ஆகிய நிதி ஆண்டுகளில் நன்கொடை குறித்த அறிக்கை தாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த இரு நிதியாண்டுகளுக்கும் வருமான வரிவிலக்கு வழங்க மறுத்த வருமான வரித்துறை முறையே 66.76 லட்சம் ரூபாயும், 1.07 கோடி ரூபாயும் செலுத்தும் படி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    இதன் காரணமாக 2018-19 மற்றும் 2019-20 நிதி ஆண்டுகளில் பெற்ற நன்கொடை குறித்து தாமதமாக அளித்த அறிக்கையை ஏற்க கோரி தேர்தல் ஆணையத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது.

    ஆனால் சட்டப்படி தாமதத்தை ஏற்க முடியாது எனக்கூறி விண்ணப்பத்தை நிராகரித்து தேர்தல் ஆணையம் மே 13-ந்தேதி உத்தரவு பிறப்பித்தது.

    இந்த உத்தரவை ரத்து செய்து நன்கொடை குறித்த அறிக்கையை ஏற்க உத்தர விட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

    அந்த மனுவில், 2018-19 ம் ஆண்டு எந்த அலுவலகத்தில் அறிக்கை தாக்கல் செய்வது என்ற குழப்பம் காரணமாக தாமதம் ஏற்பட்டதாகவும், 2019-20 ம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக தாமதம் ஏற்பட்டதாகவும் இரு ஆண்டும் முறையாக வருமான வரி தாக்கல் செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் செந்தில்குமார் ராமமூர்த்தி, தமிழ்செல்வி அடங்கிய அமர்வு, தேர்தல் ஆணையம் மனுவுக்கு பதில் அளிக்கும் படி உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜூன் 18-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    • பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 19 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பிலான 50 புதிய வாகனங்களின் சேவைகளை தொடங்கி வைத்தார்.
    • திருவொற்றியூர் மண்டலம், பட்டினத்தார் சாலையில் 9.78 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய வணிக வளாகக் கட்டிடம்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மொத்தம் ரூ.571.92 கோடி மதிப்பிலான 49 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 16 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 50 வாகனங்களின் சேவைகளை தொடங்கி வைத்தார்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 30 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் 11 முடிவுற்ற பணிகள், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் 188 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில் 3 முடிவுற்ற பணிகள் நகராட்சி நிருவாக இயக்குநரகத்தின் சார்பில் 102 கோடியே 59 லட்சம் ரூபாய் செலவில் 19 முடிவுற்ற பணிகள், பேரூராட்சிகள் ஆணையரகத்தின் சார்பில் 77 கோடியே 7 லட்சம் ரூபாய் செலவில் 14 முடிவுற்ற பணிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 60 கோடியே 58 லட்சம் ரூபாய் செலவில் 2 முடிவுற்ற கூட்டுக் குடிநீர் திட்டங்கள் ஆகியவற்றை திறந்து வைத்து, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 59 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 9 புதிய திட்டப்பணிகள்.

    நகராட்சி நிருவாகத் துறை சார்பில் 15 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2 புதிய திட்டப் பணிகள், பேரூராட்சிகள் ஆணையரகத்தின் சார்பில் 18 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 5 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 19 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பிலான 50 புதிய வாகனங்களின் சேவைகளை தொடங்கி வைத்தார்.

    பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மணலி மண்டலம், மாத்தூர், எம்.எம்.டி.ஏ., 59வது தெருவில் சென்னை தொடக்கப் பள்ளிக்கு புதியதாக பள்ளிக்கூடம் கட்டிடம் கட்டும் பணி, மாதவரம் மண்டலம், வார்டு-33, பாரதியார் தெரு சென்னை மேனிலை பள்ளியில் கூடுதலாக 2வது தளத்தில் 4 வகுப்பறைகள். 2 கழிப்பறைகள் கட்டும் பணி, திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு-71ல் மாதவரம் நெடுஞ்சாலையில் புதியதாக சென்னை பெண்கள் மேல்நிலை-சென்னை நடுநிலை பள்ளியில் வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டும் பணி.

    கோடம்பாக்கம் மண்டலம், பகுதி-31, வார்டு-132ல் ரங்கராஜபுரத்தில் உள்ள சென்னை தொடக்கப் பள்ளி கட்டிடம் கட்டும் பணி, வளசரவாக்கம் மண்டலம், பகுதி34, வார்டு155-ல் உள்ள ஈஸ்வரன் கோயில் தெருவில் சென்னை ஆரம்ப பள்ளி கட்டும் பணி.

    தண்டையார்பேட்டை மண்டலம் வார்டு-46, பகுதி-11ல் உள்ள கல்யாணபுரம் சென்னை மேல்நிலை பள்ளியில் 40 வகுப்பறைகள் படிக்கட்டு மற்றும் கழிப்பறை கட்டும் பணி, தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-44, பெரம்பூர், புதிய காமராஜர் நகரில் உள்ள சென்னை நடுநிலை பள்ளியில் 20 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் தளங்கள், கழி வறை மற்றும் அங்கான்வாடி-1,2 கட்டும் பணிகள், மணலி மண்டலம், காமராஜர் சாலை மற்றும் மாதவரம் மண்டலம், வேலம்மாள் நகர் ஆகிய இடங்களில் 3.06 கோடி செலவில் 2 புகையில்லா எரிமேடைக் கட்டிடங்கள்.

    அடையாறு மண்டலம், திருவள்ளுவர் நகர், 7வது குறுக்குத் தெருவில் 1.47 கோடி ரூபாய் செலவில் கபடி மைதானம் மற்றும் இறகுப்பந்து மைதானத்துடன் கூடிய உள்விளையாட்டு அரங்கம், பெண்கள் உடற்பயிற்சிக் கூடம் மற்றும் கிரிக்கெட் வீசுகளம், மாதவரம் மண்டலம், புத்தகரம், பரப்பன்குளத்தில் 1.40 கோடி ரூபாய் செலவில் புதிய பூங்கா என மொத்தம் 30.60 கோடி ரூபாய் முடிவுற்ற 11 திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    பெருங்குடி மண்டலம், கொட்டிவாக்கம், பக்கிங்ஹாம் கால்வாய் குறுக்கே கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையை இணைக்கும் வகையில் வெங்கடேசபுரம்-இளங்கோ நகரில் புதிய பாலம், பக்கிங்ஹாம் கால்வாயின் குறுக்கே கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையை இணைக்கும் வகையில் காமராஜர் சாலை.

    வீரமணி சாலை, பாலவாக்கம் பகுதியில் புதிய பாலம், சோழிங்கநல்லூர் மண்டலம், பக்கிங்ஹாம் கால்வாயின் குறுக்கே கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையை இணைக்கும் வகையில் பாண்டியன் தெரு, அண்ணா நகர், துரைப்பாக்கம் பகுதியில் புதிய பாலம், என 21.03 கோடி மதிப்பீட்டில் 3 புதிய பாலங்கள்.

    ராயபுரம் மண்டலம், ஆதித்தனார் சாலை, புதுப்பேட்டை டி-டிப்போவில் 5.40 கோடி மதிப்பீட்டில் நிர்வாக அலுவலகக் கட்டிடம்; திருவொற்றியூர் மண்டலம், பட்டினத்தார் சாலையில் 9.78 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய வணிக வளாகக் கட்டிடம்.

    கோடம்பாக்கம் மண்டலம், ஜாபர்கான் பேட்டை, பிள்ளையார் கோயில் தெரு சென்னை மேல்நிலைப் பள்ளி, தண்டையார்பேட்டை மண்டலம், கண்ணன் தெரு-புத்தா தெரு சென்னை நடுநிலைப் பள்ளி, பெருங்குடி மண்டலம், குப்பம் பிரதான சாலை சென்னை தொடக்கப்பள்ளி கட்டிடங்கள் கட்டும் பணி 13.89 கோடி மதிப்பீட்டிலும் மாதவரம் மண்டலம்.

    தட்டாங்குளத்தில் 9.50 கோடி மதிப்பீட்டில் மண்டல அலுவலகக் கட்டிடம் கட்டும் பணி என மொத்தம் 59.60 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 9 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் அமுக்கப்பட்ட இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் 6 நீர் தெளிக்கும் வாகனங்கள்; பழுதடைந்த மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களின் கிளைகளை அகற்றி சீர்செய்யும் வகையில், 6 ஹைட்ராலிக் இயந்திரங்கள், அலுவலர்கள் களப்பணிகளை மேற்கொள்ளும் வகையில் 16 ஆய்வு வாகனங்கள்.

    தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் 4 இயந்திரப் பெருக்கி வாகனங்கள், சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லும் வகையில் 4 கல்விச் சுற்றுலா பேருந்துகள் டீசல் மூலம் இயங்கும் 12 சிறிய அளவிலான இயந்திரப் பெருக்கி வாகனங்கள், பேட்டரி மூலம் இயங்கும் 2 சிறியரக இயந்திரப் பெருக்கி வாகனங்கள் என மொத்தம் 19.44 கோடி ரூபாய் மதிப்பிலான 50 புதிய வாகனங்களின் சேவைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பள்ளிக்கரணை விரிவான பாதாள சாக்கடை திட்டம் -மயிலை பாலாஜி நகர், காமகோடி நகர் மற்றும் வள்ளல் பாரி நகர்; முகலிவாக்கம் விரிவான பாதாள சாக்கடை திட்டம்-மணப்பாக்கம் முகலி வாக்கம் பிரதான சாலை கழிவுநீரேற்று நிலையத்தின் பகுதி வெள்ளோட்டம். மடிப்பாக்கம் பகுதிக்கான விரிவான பாதாள சாக்கடை திட்டம்-அண்ணா நகர், ராம் நகர் தெற்கு விரிவாக்க பகுதி மற்றும் தந்தை பெரியார் நகர் என மொத்தம் 188 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 3 முடிவுற்ற விரிவான பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என். நேரு, பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் தா.கார்த்தி கேயன், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர், பேரூராட்சிகள் இயக்குநர் கிரண் குராலா, நகராட்சி நிருவாக இயக்குநர் எஸ்.சிவராசு, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் செயல் இயக்குநர் கவுரவ் குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சொத்து மதிப்பு சான்றிதழ் பெரும்பாலும் நிலத்தின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டே வழங்கப்படுகிறது.
    • கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கும் போது, துறையில் உள்ள மேல் அதிகாரிகளுக்கு முன் தகவல் கடிதம் அளிக்கும் முறை மட்டும் பின்பற்றப்படும்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் சேவைகளில் தற்போதைய நடைமுறைகளை ஆராய்ந்து, அதிலுள்ள முக்கிய விதிமுறைகளை சீர்செய்து, "எளிமை ஆளுமை" திட்டத்தின் கீழ் அனைவரும் சேவைகளை உடனடியாக இணைய வழியில் பெறும் வகையில் மாற்றியமைக்கப்படுகிறது.

    "எளிமை ஆளுமை" திட்டத்தை துரிதப்படுத்த இரு குழுக்கள் அமைக்கப்பட்டு முதல் குழு மூத்த அதிகாரிகளை கொண்டு படிப்படியாக வருகின்ற முன்மொழிவுகளை ஆராய்ந்து ஆலோசித்து, பின்பு இரண்டாவது குழு சட்டத்தை பின்பற்றி எவ்வாறு எளிமைப்படுத்த முடியுமோ அவ்வாறு உத்தரவுகளையிட தலைமைச் செயலாளரின் தலைமையில் இயங்குகிறது.

    வரும் ஆண்டில் பல்வேறு துறைகளில் 150 சேவைகளை இணையவழியில் இம்முயற்சியின் கீழ் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், வணிக நடைமுறைகளை எளிமையாக்குவதன் மூலம் தொழிற்துறை வளர்ச்சிக்கு உதவிட தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் வெள்ளை வகை தொழிற்சாலைகளின் பட்டியலை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது" என்று அறிவிக்கப்பட்டது.

    எளிமை ஆளுமையின் மூலமாக, தற்போது நடைமுறையிலுள்ள நேரடி ஆய்வுகள், ஆவண சரிபார்ப்பு போன்ற முறைகளுக்கு மாற்றாக சுய சான்றிதழ், இணைய வழி-கே.ஒய்.சி., டிஜிட்டல் கையொப்பம் இன்னும் பல வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இதன்மூலமாக பொதுமக்களும் தொழில் நிறுவனங்களும் எளிமையாக்கப்பட்ட சேவைகளை விரைவாக பெற வழிவகை செய்யப்படுகிறது.

    முதற்கட்டமாக, பின்வரும் 10 சேவைகள் எளிமையாக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்கள்:

    1.சுகாதார சான்றிதழ்:

    ஒரு வளாகம் பொதுமக்களின் சுகாதாரத்திற்கு எந்தவிதமான ஆபத்தையும் ஏற்படுத்தாது என்பதனை உறுதி செய்யும் பொருட்டு, சுகாதாரச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

    சுகாதாரச் சான்றிதழ் பெற வேண்டிய கட்டடங்கள் அல்லது வளாகங்கள், வளாகத்தின் சுத்தம், கழிப்பறைகளின் சுத்தம், வளாகத்தில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யாத வகை ஏற்படுத்தல் ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய சுகாதார நடைமுறை முறைபடுத்தலை உறுதி செய்ய வேண்டும்.

    இந்நெறிமுறை, சுய சான்றிதழ் வடிவில் வழங்கப்படும்.

    இச்சான்றிதழ் தேவைப்படும் வளாகங்களுக்கு கியூ.ஆர்.குறியீட்டுடன் அத்தகைய வளாகங்களின் பொறுப்பாளர்களின் உறுதிமொழியின் அடிப்படையில் உடனடியாக இணையதளத்தில் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சான்றிதழ் பெற 3 மாதங்கள் வரை ஆகும் என்ற நடைமுறையை மாற்றி தற்போது ஒரே நாளில் பெற்றுக்கொள்ளும் வகையில் எளிமையாக்கப்பட்டுள்ளது.

    2. பொது கட்டிட உரிமம்:

    பொது கட்டிட உரிமச் சான்றிதழ் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கட்டிட உறுதித்தன்மை சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள காலம் வரை உரிமம் செல்லுபடியாகும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக உரிமம் பெற 3 முதல் 6 மாதங்கள் வரை ஆகும் என்ற நிலை தற்போது ஒரே நாளில் பெற்றுக்கொள்ளும் வகையில் கியூ.ஆர்.குறியீட்டுடன் இணையதளத்தில் உடனடியாக பெறும் வகையில் எளிமையாக்கப்பட்டுள்ளது.

    3. முதியோர் இல்லங்கள் உரிமம்:

    முதியோர்களை பராமரிக்கும் இல்லங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் முன்வருவதை ஊக்குவிக்க, முழு செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. பதிவு செயல்முறை இப்போது முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, சுய சான்றிதழ் அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளது. சான்றிதழின் காலவரம்பு 3 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டு கியூ.ஆர். குறியீட்டுடன் இணையதளத்தில் உடனடியாக வழங்கப்படுகிறது. முன்னதாக உரிமம் பெற 6 முதல் 8 மாதங்கள் வரை ஆகும் என்ற நடைமுறையை தற்போது ஒரே நாளில் பெற்றுக்கொள்ளும் வகையில் எளிமையாக்கப்பட்டுள்ளது.

    4. பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதிகள் உரிமம்

    பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள், அவற்றின் செயல்பாட்டிற்கு சம்பந்தமில்லாத, சிக்கலான ஆவண நடைமுறைகள் காரணமாகப் பதிவு செய்யப்படாமல் உள்ளன. இந்த அத்தியாவசிய வசதிகளின் செயல்பாட்டை மேம்படுத்தவும், இணக்கத்தை அதிகரிக்கவும் செயல்முறைகளை எளிதாக்கும் வகையிலும், உரிமத்திற்கான கால வரம்பு 3 வருடங்களிலிருந்து 10 வருடங்களாக நீட்டிக்கப்பட்டு கியூ.ஆர். குறியீட்டுடன் இணையதளத்தில் உடனடியாக வழங்கப்படுகிறது. முன்னதாக உரிமம் பெற 6 மாதங்கள் முதல் 1 வருடம் வரை ஆகும் என்ற நடைமுறையை தற்போது ஒரே நாளில் பெற்றுக்கொள்ளும் வகையில் எளிமையாக்கப்பட்டுள்ளது.

    5. மகளிர் இல்லங்கள் உரிமம் :

    மகளிர் இல்லங்களைப் பதிவு செய்யும் செயல்முறை மிகவும் கடினமாகவும், அதிக நேரம் எடுத்துக்கொள்வதாகவும், அலுவலர்கள் அதிக அளவிலான துணை ஆவணங்களைக் கோருவதாகவும் இருந்தது. தற்போது உரிமம் பெறும் முழு செயல்முறையும் முழுமையான டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. இதில் சுய சான்றிதழ் வழங்குவதன் மூலம் உரிமம் தானாகவே உருவாக்கப்படுகிறது. உரிமத்திற்கான கால வரம்பு 3 வருடங்களிலிருந்து 10 வருடங்களாக நீட்டிக்கப்பட்டு கியூ.ஆர். குறியீட்டுடன் இணையதளத்தில் உடனடியாக வழங்கப்படுகிறது. முன்னதாக உரிமம் பெற 6 மாதங்கள் முதல் 1 வருடம் வரை ஆகும் என்ற நிலையை தற்போது ஒரே நாளில் பெற்றுக்கொள்ளும் வகையில் எளிமையாக்கப்பட்டுள்ளது.

    6. சொத்துமதிப்பு சான்றிதழ்:

    சொத்துமதிப்பு சான்றிதழ் பெரும்பாலும் நிலத்தின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டே வழங்கப்படுகிறது. தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் ஒருவரின் நிதிநிலையை உறுதிப்படுத்த வங்கி இருப்புநிலை அறிக்கை, பட்டயக்கணக்கர் சான்றிதழ், வருமானவரி தாக்கல் போன்ற பல்வேறு மாற்று வழிகள் தற்போது உள்ள நிலையில் சொத்துமதிப்பு சான்றிதழ் நீக்கப்படுகிறது.




    7. வெள்ளை வகை தொழிற்சாலைகள் பட்டியல் விரிவாக்கம்:

    வெள்ளை வகையின் கீழ் வகைப்படுத்தப்பட்ட தொழிற்சாலைகள் மாசுபடுத்தாதவை அல்லது குறைந்த மாசுபடுத்தும் தொழிற்சாலைகளாக அங்கீகரிக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் அனுமதிகள் மற்றும் வழக்கமான ஆய்வுகளின் சுமைகளிலிருந்து இந்தத் தொழிற்சாலைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் வெள்ளை வகை பட்டியலில் 37 தொழிற்சாலைகள் மட்டுமே சேர்க்கப்பட்டிருந்தன. பல்வேறு நிலைகளில் மிகுந்த பரிசீலனைக்குப் பிறகு, வெள்ளை வகை தொழிற்சாலைகள் பட்டியல் 37ல் இருந்து 609 ஆக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

    இந்த 609 வகை தொழிற்சாலைகளை தொடங்குவதற்கும் இயங்குவதற்கும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் அனுமதி பெறுவதில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. இந்த விரிவாக்கம் நிலையான தொழில்துறை வளர்ச்சியை பெரிதும் ஊக்குவிக்கும், இதன் மூலம் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.

    8. புன்செய் நிலங்களை விவசாயம் அல்லாத செயல்பாட்டிற்கு பயன்படுத்த தடையின்மை சான்றிதழ்

    புன்செய் நிலத்தை விவசாயம் அல்லாத பிற தேவைகளுக்கு, அதாவது குடியிருப்பு அல்லது வணிக கட்டுமானத்திற்கு பயன்படுத்துவதற்கு, வேளாண்மைத் துறையிடம் தடையின்மை சான்றிதழ் (என்.ஓ.சி.) பெறுவது கட்டாயமாகும். தற்போது முழு செயல்முறையும் இணையவழியில் மாற்றப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களை இணையவழியில் தாங்களாகவே சமர்ப்பிக்கலாம்.

    சம்பந்தப்பட்ட வேளாண் துறை அலுவலர்கள், கோரிக்கையை ஆய்வு செய்து செயலாக்கத்திற்கு உட்படுத்த 21 நாட்கள் கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோரிக்கைகள் 21 நாட்களுக்குள் பரிசீலிக்கப்படாவிட்டால், தடையின்மை சான்றிதழ் விண்ணப்பதாரருக்கு தானாகவே உருவாக்கப்பட்டு வழங்கப்படும்.

    9. நன்னடத்தை சான்றிதழ்

    நன்னடத்தை மற்றும் பின்னணி சரிபார்ப்பு சான்றிதழ் பெற தனிநபர்கள், அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும், பிறகு அவை காவல்துறையின் சரிபார்ப்பிற்காக அனுப்பப்படும். தற்போது அந்த நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டு எந்தவொரு தனிநபர், அரசு துறை, அரசுப் பொதுத்துறை நிறுவனம் அல்லது பிற அமைப்புகள்-நன்னடத்தை சான்றிதழை, இணையவழி மூலமாக விண்ணப்பித்து எளிமையாகவும், துரிதமாகவும் பெறலாம்.

    10. அரசாங்க ஊழியர்கள் கடவுச்சீட்டு பெறுவதற்கான தடையின்மை சான்றிதழ்

    தற்போதைய விதிமுறைகளின்படி, ஒரு அரசு ஊழியர் கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்க உயர் அதிகாரிகளுக்கு முன் தகவல் அளித்தல் / அரசிடம் தடையின்மை சான்றிதழைப் பெறுதல், துறையிடம் இருந்து அடையாள சான்றிதழைச் சமர்ப்பித்தல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பூர்த்தி செய்ய வேண்டும். கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கும் போது, துறையில் உள்ள மேல் அதிகாரிகளுக்கு முன் தகவல் கடிதம் அளிக்கும் முறை மட்டும் பின்பற்றப்படும்.

    இவ்வாறு படிப்படியாக நடப்பு ஆண்டில் மேலும் பல சேவைகளை எளிமையாக்கி, மக்களை மையப்படுத்திய நிர்வாகம், வெளிப்படைத்தன்மையாகவும் துரிதமாகவும் அரசு சேவைகளை இணைய வழியில் வழங்க அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.

    "எளிமை ஆளுமை" திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு முதியோர் இல்லங்களுக்கான உரிமச் சான்றிதழ், பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதிகள் உரிமச் சான்றிதழ், மகளிர் இல்லங்களுக்கான உரிமச் சான்றிதழ், வெள்ளை வகை தொழிற்சாலைகள் பட்டியல் விரிவாக்க சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளர் முருகானந்தம், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி சுப்ரியா சாகு, மனிதவள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் பிரகாஷ், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் திருமதி. ஜெயஸ்ரீ முரளீதரன், டேவிதார், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×