என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நடிகர் ராஜேஷ் மறைவு தமிழ்த்திரைத்துறைக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பு- சீமான்
- ராஜேஷ் அவர்களின் திடீர் மறைவு பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது.
- சிறப்பான நடிப்பினால் சின்னத்திரை நெடுந்தொடர்கள் பல வெற்றித்தொடர்களாகப் பெரும்புகழ் பெற்றன.
நடிகர் ராஜேஷ் மறைவு தொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
தமிழ்த்திரை மற்றும் சின்னத்திரை மூத்த நடிகர், பின்குரல் கலைஞர், எழுத்தாளர், மிகச்சிறந்த வாசிப்பாளர், வலையொளியாளர் என பன்முகத்திறன் பெற்ற படைப்பாளி, மனிதநேயமிக்க மாண்பாளர் அன்பிற்கினிய அண்ணன் இராஜேஷ் அவர்களின் திடீர் மறைவு பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது.
கன்னிப்பருவத்திலே, அந்த 7 நாட்கள், அச்சமில்லை அச்சமில்லை, பயணங்கள் முடிவதில்லை, மகாநதி, இருவர், விருமாண்டி உள்ளிட்ட பல திரைக்காவியங்களில் தன்னுடைய தனித்துவமிக்க குணச்சித்திர நடிப்பின் மூலம் தனிமுத்திரை பதித்த அண்ணன் இராஜேஷ் அவர்களின் மறைவு தமிழ்த்திரைத்துறைக்கு ஏற்பட்டுள்ள ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது சிறப்பான நடிப்பினால் சின்னத்திரை நெடுந்தொடர்கள் பல வெற்றித்தொடர்களாகப் பெரும்புகழ் பெற்றன.
ஓம் சரவணபவ வலையொளி மூலம் உடல்நலனைப் பாதுகாப்பது குறித்து பல அரிய தகவல்களை இறுதிநாள்வரை, தொடர்ச்சியாகப் பொதுமக்களுக்கு வழங்கி வழிகாட்டிய பெருமகன்.
தனிப்பட்ட முறையில் என்மீது பெரும் பாசமுடைய அண்ணன் ராஜேஷ் அவர்கள், அவரிடமிருந்த கிடைத்தற்கரிய சிறந்த புத்தகங்களை எனக்கனுப்பி தந்து படிக்க பரிந்துரைத்த பேரன்புக்காரர். நாங்கள் முன்வைக்கும் அரசியல் கருத்துகள் மிகச்சரியானது என்பதை பல தருணங்களில், பல மேடைகளில் தயக்கமின்றி வெளிப்படுத்திய பெருந்தகை!
அண்ணன் ராஜேஷ் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும், வலையொளி பின்தொடர்பாளர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.
தலைச்சிறந்த குணச்சித்திரத் திரைக்கலைஞர் அண்ணன் இராஜேஷ் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






