என் மலர்tooltip icon

    சென்னை

    • இந்தியாவில் பதிவு செய்த பெண் தொழிலாளர்களில் 42 விழுக்காடு தமிழகத்தை சேர்ந்தவர்கள்.
    • தொழிற்சாலையில் அதிகளவில் பெண்கள் பணிபுரியும் மாநிலங்களில் தமிழகமே முதலிடத்தில் உள்ளது.

    சென்னை:

    சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * இந்தியாவின் உற்பத்தி துறையின் மொத்த உற்பத்தியில் 11.9 சதவீதம் தமிழ்நாட்டின் பங்களிப்பு உள்ளது.

    * பதிவு செய்யப்பட்ட குறு, சிறு, தொழில்கள் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு 3-ம் இடத்தில் உள்ளது.

    * பிற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் குறைவு

    * தொழில் முதலீடுகளுக்கு தமிழகத்தின் மீது உலக நாடுகள் நம்பிக்கை வைத்துள்ளன. தமிழகத்தின் மீதும் சென்னை மீதும் உலக நிறுவனங்கள் வைத்த மதிப்பின் வெளிப்பாட்டால் கண்காட்சியில் பங்கேற்பபோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    * கடந்தாண்டு நடந்த கண்காட்சியில் 435 நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில் இந்தாண்டு 468 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

    * தமிழ்நாட்டில் உள்ள தொழில் முனைவோரில் பெண்களின் அளவு 30 விழுக்காடு. தொழிற்சாலையில் அதிகளவில் பெண்கள் பணிபுரியும் மாநிலங்களில் தமிழகமே முதலிடத்தில் உள்ளது.

    * இந்தியாவில் பதிவு செய்த பெண் தொழிலாளர்களில் 42 விழுக்காடு தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

    * தொழில் வளர்ச்சி, தொழிலாளர் நலனுக்கு தி.மு.க. அரசு முக்கியமான பணிகளை செய்துள்ளது.

    * MSME-க்கு என தனிப்பட்ட பாலிசி, 4 ஆண்டில் மின் மானியம், ஊதிய மானியம் என ரூ.1000 கோடிக்கு மு மேல் மானியம் தரப்பட்டது.

    * தொடர்ந்து ஏற்றுமதி விகிதம் அதிகரித்து வரும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்றார்.

    இன்று தொடங்கிய ACMEE 2025 சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சி வருகிற 23-ந்தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • சாகித்ய அகாடமி விருது பெரும் எழுத்தாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
    • புதிய தலைமுறை எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களை ஊக்குவிக்கும்.

    சென்னை:

    'பால சாகித்ய புரஸ்கார்' விருதுக்கு தேர்வாகியுள்ள எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் மற்றும் 'யுவ புரஸ்கார்' விருதுக்கு தேர்வாகியுள்ள எழுத்தாளர் லட்சுமிஹருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சிறந்த தமிழ் நாவல் "ஒற்றை சிறகு ஓவியா" படைப்புக்காக 2025-ஆம் ஆண்டுக்கான பால சாஹித்ய விருதுக்குத் தேர்வாகியுள்ள விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் மற்றும் தனது அற்புதமான தமிழ் சிறுகதை தொகுப்பான "கூத்தொன்று கூடிற்று மற்றும் பிற கதைகள்" என்ற படைப்புக்காக 2025-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி யுவ விருதுக்கு தேர்வாகியுள்ள லட்சுமிஹர் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!

    இந்த மதிப்புமிக்க விருதுகள் தமிழ் இலக்கியத்துக்கு அவர்கள் வழங்கி வரும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்கு சான்றாக விளங்கி, புதிய தலைமுறை எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களை ஊக்குவிக்கும் என்று கூறியுள்ளார். 



    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
    • அசோக் நகர், எம்இஎஸ் சாலையின் ஒரு பகுதி, ஸ்ரீராம் நகர், சிட்லபாக்கம் கணேஷ் நகர், 100 அடி சாலை, தனலட்சுமி தெரு.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (20.06.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    அடையாறு: பெசன்ட் நகர் கங்கை தெரு, அப்பர் தெரு, புலி வரதாச்சாரியார் தெரு, கடற்கரை சாலை, ருக்குமணி சாலை, அஷ்டலட்சுமி கார்டன், ஓடைக்குப்பம், தீடீர் நகர், திருமுருகன் தெரு, வைகை தெரு, காவேரி தெரு, கொட்டிவாக்கம் குப்பம், பாலகிருஷ்ணா சாலை 2-வது வார்டு தெரு, ஈசிஆர் மெயின் ரோடு, திருவள்ளுவர் நகர் 1 முதல் 8-வது மெயின் ரோடு சாலை, 1 முதல் 54-வது குறுக்குத் தெரு, ஐஓபி, பகத் சிங் சாலை 1 முதல் 6-வது தெரு, ஆர்.டி.ஓ. அலுவலகம், ஷிவானி குடியிருப்புகள்.

    வேளச்சேரி: பைபாஸ் 100 அடி ரோடு லட்சுமி நகர் 1 முதல் 6வது தெரு, ராஜு காந்தி தெரு, எம்ஜிஆர் நகர் 1 முதல் 7வது தெரு, வெங்கடேஷ்வரா நகர் 1 முதல் 2வது தெரு, புவனேஸ்வரி நகர், நாதன் சுப்ரமணி காலனி, விஜிபி செல்வா நகர், பெத்தேல் அவென்யூ, முத்துகிருஷ்ணன் தெரு.

    தாம்பரம்: இரும்பிலியூர் சுந்தானந்த பாரதி தெரு, மோதிலால் நகர், லட்சுமி நகர், கணபதி புரம், சர்மா தெரு, முருகேசன் தெரு, அசோக் நகர், எம்இஎஸ் சாலையின் ஒரு பகுதி, ஸ்ரீராம் நகர், சிட்லபாக்கம் கணேஷ் நகர், 100 அடி சாலை, தனலட்சுமி தெரு.

    பல்லாவரம்: கீழ்கட்டளை ஜெயின் கிரீன் ஏக்கர்ஸ் அபார்ட்மென்ட் குரூப் ஹவுஸ், லத்தீப் காலனி 1 முதல் 3வது தெரு, காமராஜ் நகர், தர்கா லைன் அண்ட் ரோடு, ரேணுகா நகர், கேஎச் ஹவுசிங், வேம்புலி நகர், என்எஸ்கே நகர், ஜிபி மாதவன் தெரு.

    சோழிங்கநல்லூர்: சங்கராபுரம், கன்னி கோவில், சீதளபாக்கம் மெயின் ரோடு, ஹவுசிங் போர்டு, வெள்ளக்கல், பொன்னியம்மன் காவடி, காந்தி தெரு, நன்மங்கலம் பகுதி.

    • தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது.
    • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

    சென்னை:

    தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் தொடர்ந்து நீடிக்கிறது. கடந்த 11-ந்தேதியில் இருந்து விலை அதிகரிக்கத் தொடங்கி, கடந்த 13-ந்தேதி ஒரு சவரன் ரூ.74,360 என்ற வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. அதற்கு மறுநாளும் விலை அதிகரித்து, மேலும் புதிய உச்சத்தை பதிவு செய்தது. இதனையடுத்து கடந்த 16, 17-ந்தேதிகளில் விலை குறைந்து காணப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் விலை அதிகரித்து காணப்பட்டது.

    நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 250-க்கும், ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் மீண்டும் ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்தை தொட்டது.

    இந்த நிலையில், தங்கம் விலை இன்றும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,265-க்கும் சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,120-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 122 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    18-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,000

    17-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,600

    16-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,440

    15-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,560

    14-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,560

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    18-06-2025- ஒரு கிராம் ரூ.122

    17-06-2025- ஒரு கிராம் ரூ.120

    16-06-2025- ஒரு கிராம் ரூ.120

    15-06-2025- ஒரு கிராம் ரூ.120

    14-06-2025- ஒரு கிராம் ரூ.120

    • மேற்கு காற்று வலுவடைந்திருப்பதால், கடல் காற்று உள்ளே நுழைவதில் தாமதம் ஏற்படுகிறது.
    • நேற்று சென்னை மீனம்பாக்கம், மதுரை விமான நிலையத்தில் 101.84 டிகிரி வெயில் பதிவானது.

    சென்னை:

    தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும், தற்போது பருவமழை குஜராத் உள்ளிட்ட சில பகுதிகளில் தீவிரம் அடைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு இருந்தாலும், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது.

    அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் இனி வரும் நாட்களில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேற்கு காற்று வலுவடைந்திருப்பதால், கடல் காற்று உள்ளே நுழைவதில் தாமதம் ஏற்படுகிறது. இதன் காரணமாக வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

    அதிலும் இன்று (வியாழக்கிழமை) இயல்பைவிட 2 டிகிரி வரை வெப்பம் உயரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில் நேற்று சென்னை மீனம்பாக்கம், மதுரை விமான நிலையத்தில் 101.84 டிகிரி (38.8 செல்சியஸ்) வெயில் பதிவானது.

    இதன் தொடர்ச்சியாக வரும் நாட்களிலும் பகலில் வெயில், மாலை அல்லது இரவு நேரங்களில் வெப்பச்சலனத்தால் மழை என்ற சூழ்நிலையே காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இம்மாதம் நிறைவு பெறும் வரையில் இதே வானிலை தான் நிகழக்கூடும்.

    • கீழடியிலும், சென்னையிலும் ஒலித்திருப்பது முதல் கட்ட முழக்கம்.
    • வரலாற்றுப் பெருமை மிக்க அந்த ஆய்வு முடிவுகளை திராவிட மாடல் அரசு வெளியிட்டது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

    நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

    பாண்டிய மன்னரின் படைகள்தான் மறுபடியும் அணிவகுத்ததோ, பட்டாளச் சிப்பாய்கள்தான் களம் புகுந்தனரோ என விழிகள் வியந்து பார்க்கின்ற வகையில் மதுரை விரகனூர் சாலையில் ஜூன் 18-ஆம் நாள் தி.மு.கழக மாணவரணியினர் அன்னைத் தமிழின் பெருமை காத்திடக் களமிறங்கினர். தமிழர்களின் பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் கீழடி அகழாய்வுகள் குறித்த அறிவியல்பூர்வமான ஆய்வறிக்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசு திட்டமிட்டுப் புறக்கணித்து, திருப்பி அனுப்பியதற்கான எதிர்வினைதான் கழக மாணவரணியின் மாபெரும் ஆர்ப்பாட்ட அணிவகுப்பு.

    மாணவரணிச் செயலாளர் சகோதரர் இராஜீவ்காந்தியும் மாணவரணியின் துணைச் செயலாளர்களும் ஒருங்கிணைந்து, மாணவர்கள் - இளைஞர்கள் - இளம்பெண்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து, 'கீழடி தமிழர் தாய்மடி' என்ற முழக்கத்துடன் புறநானூற்று வீரர்கள் போல ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டாக உணர்ச்சிமிகு குரலெழுப்பி, தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் செவிப்பறை கிழியச் செய்திருப்பதை, கழகத்தின் தலைவர் என்ற முறையிலும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற வகையிலும் பாராட்டி மகிழ்கிறேன்.

    கீழடியில் நடந்த அகழாய்வுகள், தமிழர்களின் நாகரிகம் தனித்துவமான நாகரிகம் என்பதையும், தமிழர்களின் பண்பாடு மிகவும் தொன்மையானது என்பதையும் ஆதாரப்பூர்வமாக மெய்ப்பித்த அகழாய்வாகும். நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 2016 செப்டம்பர் 29 அன்று தனது சமூக வலைத்தளப்பக்கத்தில், "கீழடியில் உள்ள கட்டடங்களும், கிடைத்திருக்கும் பழங்காலப் பொருள்களும் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கி, கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரை இங்கு வாழ்விடங்கள் இருந்ததற்கான சான்றுகளாக உள்ளன. கட்டடங்கள் சதுரம், செவ்வகம், நீள்சதுர வடிவங்களில் உள்ளன. கட்டடங்கள் தெற்கு வடக்காகக் கட்டப்பட்டுள்ளன. அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கருப்பு-சிகப்பு நிறத்திலான மண் பானைகள் கிடைத்துள்ளன. சுடு செங்கற்களால் உற்பத்தி செய்யப்பட்ட தட்டுகள், குவளைகள் கிடைத்துள்ளன. தந்தம், செம்பு, இரும்பு ஆகியவை பயன்பாட்டில் இருந்திருக்கின்றன. அகழாய்வில் மொத்தம் 5,300 பொருள்கள் இதுவரை கிடைத்துள்ளன. இதன் மூலம் சங்க காலத் தமிழகம் நகர்ப்புற நாகரிகத்தை கொண்டதல்ல என்ற கருத்து தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

    இந்த அகழாய்வில் கிடைத்த தமிழ் பிராமி எழுத்துகள் கொண்ட பானை ஓடுகளும் மற்றும் தொல்பொருட்களும் தமிழர் நாகரிகத்தின் தொன்மையைப் பறைசாற்றுகின்றன. சிந்துசமவெளி நாகரிகத்தைப் போல இங்கும் ஒரு நகர்ப்புற நாகரிகம் இருந்ததற்கான தடயங்கள் ஏராளமாகக் கிடைத்துள்ளன. இதுவரை தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கீழடியில் நடைபெற்றிருக்கும் ஆய்வுதான் மிகச் சிறப்பானது. புதிய தமிழ்ச் சொற்களும் இங்கு கிடைத்துள்ளன" என்று பதிவிட்டு மகிழ்ந்ததுடன், "ஹரப்பாவை ஒத்த தமிழர் நாகரிகத்திற்கான கீழடி சான்றுகளை உடனடியாகக் காப்பாற்றவும், பாதுகாக்கவும் தவறினால், அவை முடங்கிப் போகும் பேராபத்து உருவாகும்" என்ற எச்சரிக்கையையும் விடுத்திருக்கிறார்.

    மூத்த மொழியாம் தமிழுக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுத்தந்த முத்தமிழறிஞர் கலைஞர், 2016-ஆம் ஆண்டிலேயே கீழடி ஆய்வுகளின் பெருமையை உலகத்தவர் அறிந்து கொள்ளும் வகையில் பதிவிட்டிருப்பதன் மூலம், வரலாற்றில் தமிழுக்கும் தமிழர்களுக்கும் உள்ள தனித்துவமான முக்கியத்துவத்தை உணர்த்தியிருக்கிறார். அதேவேளையில், நாம் கவனமாக இருக்க வேண்டும் என்று அப்போதே எச்சரித்தும் இருக்கிறார்.

    நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் எச்சரித்தது போலவே, தமிழ் என்றால் கசப்புடனும், தமிழர்கள் என்றால் வெறுப்புடனும் பார்க்கக்கூடிய ஒன்றிய பா.ஜ.க. அரசு, கீழடி அகழாய்வுகளில் வெளிப்பட்ட தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை மறைக்கவும் புதைக்கவும் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

    2013-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இந்தியத் தொல்லியல் துறையால் வைகை ஆற்றங்கரையில் தள ஆய்வு நடத்தப்பட்டு, கீழடி ஒரு முக்கிய குடியிருப்புத் தளம் என அடையாளம் காணப்பட்டது. அதன் பின்னர் அகழாய்வு தொடர்ந்த நிலையில் ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. அரசு, 2015-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 3 கட்டங்களோடு கீழடி அகழாய்வை நிறுத்திக் கொண்டது. மீதமிருந்த 7 கட்டங்களையும் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மேற்கொண்டது.

    தொல்லியல் பணிகளை மேற்கொண்ட இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணாவை அசாம் மாநிலத்திற்கு இடமாறுதல் செய்து தமிழ்ப் பண்பாட்டின் மீதான வெறுப்புணர்வை பா.ஜ.க. அரசு அப்பட்டமாகக் காட்டியது. எனினும், அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்கள் 2016-இல் கீழடி அகழாய்வு குறித்த தொடக்க அறிக்கையையும், 2017-ஆம் ஆண்டில் இடைநிலை அறிக்கையையும் இந்திய அரசின் தொல்லியல் துறையிடம் வழங்கினார். சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு அவர் மீண்டும் வந்து பணியாற்றினார்.

    கீழடி அகழாய்வின் வாயிலாகத் தமிழர்களின் வைகை ஆற்று நாகரிகம் ஏறத்தாழ 2500 ஆண்டுகள் முதல் 3000 ஆண்டுகள் வரை பழமையானது என்பது தெளிவாகிறது. இது வெறும் கருத்துரீதியான தகவல் அல்ல. கீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்களை வகைப்படுத்தி உள்நாட்டிலும் - உலகளவிலும் உள்ள சிறந்த ஆய்வுக்கூடங்களான புனே, பெங்களூரு, அமெரிக்காவின் புளோரிடா மற்றும் இத்தாலி ஆகியவற்றுக்கு அனுப்பி அங்கு ராயல் டெஸ்டிங், கெமிக்கல் டெஸ்டிங், கார்பன் டேட்டிங் உள்ளிட்ட ஆய்வுகளை மேற்கொண்டு அறிவியல்பூர்வமாக முடிவுகள் பெறப்பட்டு, அதனடிப்படையிலேயே 2023-ஆம் ஆண்டு 982 பக்க இறுதி அறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்கள் சமர்ப்பித்தார். இத்தனை ஆய்வுகள், அறிவியல்பூர்வமான முடிவுகள் கிடைக்கப்பெற்றும், கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிடாமல் காலந்தாழ்த்தி, தமிழரின் பண்பாட்டுப் பெருமையை மறைக்க நினைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு, இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இரண்டாண்டுகள் கடந்த நிலையில், கூடுதல் சான்றுகள் தேவை என்று திருப்பியனுப்பியிருக்கிறது. இது தமிழ்ப் பண்பாட்டின் மீதான பா.ஜ.க. அரசின் அப்பட்டமான தாக்குதல்.

    தரவுகள் எதுவுமில்லாத கற்பனையான சரஸ்வதி நாகரிகத்தை முன்னிறுத்தி, திராவிடப் பண்பாட்டு அடையாளமான சிந்துவெளி நாகரிகத்தை அழிக்க நினைக்கும் பா.ஜ.க., இதுவரை சரஸ்வதி நாகரிகத்தை எந்தவித அறிவியல் சோதனைகள் மூலமாகவும் நிரூபிக்கவில்லை. ஆனால், தமிழர் பண்பாட்டு அடையாளமான கீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள் ஒவ்வொன்றும் உலகத் தரத்திலான அறிவியல்பூர்வமான ஆய்வுக்குட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டும்கூட அதனை ஏற்பதற்குப் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு மனது வரவில்லை. அந்தளவுக்குத் தமிழினத்தின் மீதான வெறுப்பு அந்தக் கட்சியின் கொள்கைகளில் ஊறிக் கிடக்கிறது.

    அகழாய்வுகள் நடத்தப்பட்டபோது அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றது. ஆனால், கீழடி அகழாய்வு முடிவுகளை ஏற்க மறுக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் மொழிவெறி - இனவெறி நடவடிக்கை பற்றி அ.தி.மு.க. இதுவரை வாய் திறக்கவில்லை. அ.தி.மு.க.வை பா.ஜ.கவிடம் அடகுவைத்த பழனிசாமி எப்படி வாய் திறப்பார்? ஏற்கனவே அவருடைய அமைச்சரவையில் இருந்த ஒருவர், தமிழர் நாகரிகமான கீழடியை 'பாரத நாகரிகம்' என்று பா.ஜ.க. மனம்குளிரும் வகையில் விளம்பியவராயிற்றே!

    தமிழ் மொழி – பண்பாடு - தமிழர் பெருமையைப் போற்றிப் பாதுகாப்பதில் எப்போதும் முன்னணியில் நிற்கும் தி.மு.க. ஆட்சியில்தான் கீழடியில் அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டு, அகழாய்வில் கிடைத்த பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. தொன்மை மிக்க தமிழ்ப் பண்பாட்டின் அடையாளங்களை அறிவியல் தொழில்நுட்ப உதவியுடன் இன்றைய தலைமுறையினர் எளிதாகத் தெரிந்துகொள்ளும் வகையில் கீழடி அருங்காட்சியகம் திகழ்கிறது.

    தமிழ்ப் பண்பாட்டின் காலம் 5300 ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மை கொண்டதாக இருப்பதை இரும்பின் தொன்மை என்ற பன்னாட்டுத் தரத்திலான ஆய்வுகள் வாயிலாக நிரூபித்துள்ளோம். வரலாற்றுப் பெருமை மிக்க அந்த ஆய்வு முடிவுகளை திராவிட மாடல் அரசு வெளியிட்டது. தமிழ்நாடு இந்தியாவில்தான் இருக்கிறது. தமிழ்மொழி இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இருக்கிறது. தமிழர்கள் இந்திய குடிமக்களாக வாழ்கிறார்கள். ஆனால், தமிழ்ப் பண்பாட்டின் பெருமைக்குரிய இரும்பின் தொன்மை முடிவுகள் குறித்து ஒரு 'ட்வீட்' போடக்கூட பிரதமர் தொடங்கி பா.ஜ.க. ஆட்சியினருக்கு மனம் வரவில்லை. தமிழ்நாடு பா.ஜ.க.வினரும் தங்கள் இன - மொழி உணர்வைப் பதவிக்காகத் தலைமையிடம் விற்றுவிட்டு, தமிழர்களுக்கு துரோகம் இழைத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில், தமிழ்ப் பண்பாட்டின் பெருமையைக் காக்கவும், அதை நிறுவவும் வேண்டிய பெரும் பொறுப்பு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், தமிழுணர்வுகொண்ட அதன் தோழமை சக்திகளுக்கும் மட்டுமே இருப்பதால்தான், கிளம்பிற்று காண் தமிழர் கூட்டம் என்கிற வகையில் கழக மாணவரணி மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி, கீழடி ஆய்வு முடிவுகளை ஒன்றிய அரசு ஏற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும் - கழக நாடாளுமன்ற மாநிலங்களவைக் குழுத் தலைவருமான திருச்சி சிவா அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆற்றியுள்ள உணர்ச்சிமிகு எழுச்சியுரை, களம் நோக்கி பாயும் ஏவுகணைகளாக மாணவப் பட்டாளத்தை ஆயத்தமாக்கியுள்ளது. மாணவப் பருவத்திலேயே கழகத்தில் ஒப்படைத்துக்கொண்டு, கழக மாணவரணிச் செயலாளராகவும் செயலாற்றியவராயிற்றே அவர்!

    ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்திட உதவிய மதுரை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் சேடப்பட்டி மணிமாறன், மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ., கழக உயர்நிலைச் செயல்திட்டக் குழு உறுப்பினர் பொன்.முத்துராமலிங்கம், ஒருங்கிணைந்த மதுரை மாவட்டக் கழக நிர்வாகிகள், மாணவரணிச் செயலாளர் சகோதரர் இராஜீவ் காந்தியுடன் துணை நின்ற மாநில, மாவட்ட மற்றும் அனைத்து நிலையிலுமான கழக மாணவரணி நிர்வாகிகள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உங்களில் ஒருவனான என் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்!

    தமிழர் நலனையும் தமிழின் பெருமையையும் காப்பதற்குக் கழகம் மேற்கொள்ளும் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக நிற்கும் கொள்கைவழிக் கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சிகளின் சார்பில் சென்னை சைதாப்பேட்டையில், கீழடி ஆய்வறிக்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசு புறக்கணிப்பதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா கி. வீரமணி அவர்கள், கழகத்தின் சார்பில் பங்கேற்று முழக்கமிட்டு உணர்வை வெளிப்படுத்திய தென்சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தங்கபாலு அவர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் முத்தரசன் அவர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் 'எழுச்சித் தமிழர்' தொல்.திருமாவளவன் எம்.பி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் தோழர் கனகராஜ் அவர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணைத் தலைவர் திரு.எம்.அப்துல் ரகுமான் அவர்கள், மனிதநேய மக்கள் கட்சி மாநிலத் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., ம.தி.மு.க கொள்கை விளக்க அணிச் செயலாளர் திரு.வந்தியத்தேவன் அவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

    கீழடியிலும் சென்னையிலும் ஒலித்திருப்பது முதல் கட்ட முழக்கம். இது டெல்லி வரை தொடர்ந்து எதிரொலிக்கும். தமிழரின் பண்பாட்டுப் பெருமையை நிலைநாட்டும் வரை கழகத்தின் போராட்டம் ஓயவே ஓயாது! என்று கூறியுள்ளார். 

    • லாரி மோதி சிறுமி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
    • தன் கண் முன்னே மகளை பறிகொடுத்த தாய் கதறி அழுதார்.

    சென்னை பெரம்பூர் பகுதியில் நேற்று காலை தண்ணீர் லாரி மோதி, ஸ்கூட்டியில் தாயுடன் சென்ற சிறுமி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து நெரிசல் நேரத்தில் லாரி சென்றதை தடுக்கத் தவறிய போக்குவரத்து ஆய்வாளர் சுடலை மணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    மேலும், போக்குவரத்துக் காவல் உதவி ஆணையர் சத்தியமூர்த்தி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • உண்ணாவிரதப் போராட்டம் என்ற பெயரில் அரசின் மீது வீணான அவதூற்றைப் பரப்பியிருக்கிறார்.
    • மா சாகுபடி விவசாயிகள் இடையிலான முரண்பாடுதான் பிரச்சினைக்குக் காரணம்.

    தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    'மா' சாகுபடி விவசாயிகளுக்காக திமுக அரசைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்திருக்கிறது அதிமுக. மா விவசாயிகள் மட்டுமல்ல அனைத்துத் தரப்பு விவசாயிகளின் நலனைக் காப்பாற்றி வருவது திராவிட மாடல் அரசு.

    பழனிசாமி செய்தித் தாள்களைக் கூடப் படிக்காமல் அரைவேக்காட்டுத் தனமாக அறிக்கை விடுகிறார் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கூறியதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார் பழனிசாமி. உண்ணாவிரதப் போராட்டம் என்ற பெயரில் அரசின் மீது வீணான அவதூற்றைப் பரப்பியிருக்கிறார்.

    ஒரு பிரச்சினை எழுந்தால் அதனை உடனடியாகக் கவனித்துத் தீர்வு காணும் நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டு வருகிறது. அப்படிதான் மா சாகுபடி விவசாயிகளின் கோரிக்கை விவகாரத்திலும் தலையிட்டு அரசு நடவடிக்கை எடுத்துவிட்டது. அதன் பிறகும் தன் இருப்பை காட்டிக் கொள்ளப் போராட்டம் அறிவித்து அரசியல் ஆதாயம் தேட முயல்கிறார் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

    கிருஷ்ணகிரி , திண்டுக்கல், தருமபுரி, திருவள்ளூர், தேனி, திருப்பத்தூர், சேலம், வேலூர் மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 1.46 இலட்சம் எக்டரில் மா சாகுபடி மேற்கொள்ளப்பட்டு 9.5 இலட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. வழக்கமாக 5 முதல் 6 மெட்ரிக் டன் அளவிற்கு உற்பத்தியாகும் மா உற்பத்தி இந்த ஆண்டு பருவ நிலையின் சாதகத்தால் 8 மெட்ரிக் டன்னிற்கும் மேலாக அதிகரித்துள்ளது.

    மாம்பழக் கூழ் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் மா சாகுபடி விவசாயிகள் இடையிலான முரண்பாடுதான் பிரச்சினைக்குக் காரணம்.

    இது தொடர்பாகக் கடந்த 16-ம் தேதி வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் தலைமையில், தோட்டக்கலைத் துறை இயக்குநர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தருமபுரி, திருவள் ளூர், தேனி, திருப்பத்தூர், சேலம், வேலூர், மதுரை ஆகிய மாவட்ட தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் மற்றும் மாம்பழக்கூழ் பதப்படுத்தும் நிறுவனங்கள் இடையே ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    மாம்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் கடந்த ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட மாம்பழக்கூழ் கையிருப்பு அதிகம் உள்ளதால், மாம்பழங்களைக் கொள்முதல் செய்யும் தேவை குறைந்துள்ளதாகப் பதப்படுத்தும் நிறுவனங்கள் சார்பில் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    தேவை குறைந்துள்ளதாலும் மா உற்பத்தி அதிகமானதாலும் விவசாயிகளிடமிருந்து உரிய விலைக்கு மா கொள்முதல் செய்ய இயலாத நிலை உள்ளது என்றும் சொன்னார்கள். ஜூன் 20-ம் தேதிக்கு மேல் விவசாயிகளிடமிருந்து மாம்பழங்களைக் கொள்முதல் செய்து கொள்வதாக பதப்படுத்தும் நிறுவனங்கள் அரசு அதிகாரிகளிடம் உறுதி அளித்துள்ளன.

    மா சாகுபடி விவசாயிகளின் நலன் கருதி மாம்பழக்கூழ் தயாரிக்கும் பணிகளை உடனடியாகத் தொடங்கவும், மாம்பழக்கூழ் தயாரிக்க பெங்களூரா ரகத்தினை விவசாயிகளிடம் இருந்து நியாயமான விலையில் கொள்முதல் செய்யவும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள்.

    வேளாண்மை உற்பத்தி ஆணையரும் அரசு செயலாளருமான தட்சிணாமூர்த்தி மாம்பழக் கூழ் நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட செய்தி நேற்றும் இன்றும் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இத்தனைக்கும் பிறகு போராட்டத்தை அதிமுக நடத்துகிறது என்றால் அதற்கு அரசியல் காரணம் தவிர வேறு என்ன இருக்க முடியும்?

    பிரச்சினைக்கு அரசு தீர்வு காணாவிட்டால் அதை எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக் காட்டலாம். ஆனால், தீர்வு கண்ட பிறகும் நடவடிக்கை எடுத்துவிட்ட பிறகும் உண்ணா விரதப் போராட்டத்தை அறிவிப்பது எதற்காக? மாம்பழங்கள் கொள்முதல் செய்யப்படும் எனச் சொல்லப்பட்ட 20-ம் தேதியில் உண்ணாவிரதப் போராட்டத்தை பழனிசாமி அறிவித்தது அரசியல் ஆதாயம் பெறத்தானே!

    'இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என பழனிசாமி அறிக்கையில் பச்சைப் பொய் சொல்வதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

    'மாம்பழக் கூழுக்கான GST வரியை 12 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாகக் குறைக்க வேண்டும்' என திமுக அரசை பழனிசாமி வலியுறுத்துவது எல்லாம் விந்தையிலும் விந்தை.

    அதற்கான அதிகாரத்தை வைத்திருக்கும் ஒன்றிய பாஜகவைப் பற்றி ஒரு வார்த்தை கூடக் குறிப்பிடாமல் அறிக்கை வெளியிடுவதன் மூலம் விவசாயிகளை வஞ்சிக்கும் மோடி அரசைக் காப்பாற்றி தனது அடிமை விசுவாசத்தைக் காட்டியிருக்கிறார்.

    ஒன்றிய அரசு என்றால் கொஞ்சல், மாநில அரசு என்றால் எரிச்சல் என இரட்டை வேடம் போடும் கபட வேடதாரிதான் பழனிசாமி!

    மா விவசாயிகளின் நலனை மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு விவசாயிகளின் நலனைக் காப்பாற்றி வருவது திராவிட மாடல் அரசுதான்.

    வேளாண் துறைக்குத் தனிப் நிதிநிலையை அறிவித்து உழவர் குடி மக்களின் வாழ்வை உயர்த்தப் பாடுபட்டு வரும் திராவிட மாடல் அரசை இந்த அபத்தப் பொய்களால் எல்லாம் அசைத்துக் கூடப் பார்க்க முடியாது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அரசுப் பள்ளிக்கு வருகை தந்துள்ள மாணவச் செல்வங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்.
    • கல்வி அலுவலர்களுக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    தமிழக அரசுப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு வரை மூன்று லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல! அது பெருமையின் அடையாளம்!" எனும் பேருண்மை மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

    அரசுப் பள்ளிக்கு வருகை தந்துள்ள மாணவச் செல்வங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கியுள்ள திட்டங்களின் துணை கொண்டு கல்வியில் வெற்றியடைய வாழ்த்துகள்.

    மிகுந்த உற்சாகத்தோடு மாணவர் சேர்க்கையை மேற்கொண்டு வரும் கல்வி அலுவலர்களுக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். வாழ்த்துகள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கூழ் தொழிற்சாலைகள் தென்மாவட்ட விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக உள்ளது.
    • முதலமைச்சர் ஸ்டாலின் 'விவசாயி' வேடமிட்டு போலியாக திரிவதைக் கண்டு உண்மையான விவசாயிகள் கொதிப்படைந்து போயுள்ளனர்.

    தென் மாவட்ட 'மா' பயிரிடும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமல், விவசாயிகளின் துயரத்தை துச்சமென நினைக்கும் விடியா திமுக ஆட்சியாளர்களைக் கண்டித்து, அதிமுக ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பில் ஜூன் 20ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும், அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நத்தம் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழக தென் மாவட்டங்களில், குறிப்பாக திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 'மா' விவசாயிகள் பயன்பெறும் வகையில், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள மாம்பழக் கூழ் தொழிற்சாலையில் நாளொன்றுக்கு 150 முதல் 250 வாரி வரை, அதாவது 1500 மெட்ரிக் டன் முதல் 2000 மெட்ரிக் டன் வரை மாம்பழக் கூழ் தயாரிக்கப்படுகிறது.

    இப்பகுதியில் அமைந்துள்ள கூழ் தொழிற்சாலைகள் தென்மாவட்ட விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக உள்ளது.

    'மா' உற்பத்தி ரகங்களான காதர் (அல்போன்சார், செந்தூரம், கல்லாமை (ஜோத்தாபுரி), கான, மங்கனப்பள்ளி, கிரேப் மல்கோவா, இமாம்சந்த் காணாப்பாடி குமேனியா, சேலம் குண்டு, நாட்டுக்காய் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    கடந்த 4 ஆண்டுகால நிர்வாகத் திறனற்ற திமுக ஸ்டாலின் மாடல் அரசால், தமிழகத்தின் அனைத்து விவசாயிகளும் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டு வருவதும், நெல்லானாலும், கரும்பானாலும், பயிர் வகைகளானாலும், மஞ்சள் ஆனாலும் உரிய விலை கிடைக்காமல் பெரும் நஷ்டத்தையே அடைந்து வருகின்றனர்.

    பயிர்க் காப்பீடு முதல் வறட்சி மற்றும் வெள்ள காலங்களில் உரிய நிவாரணம் அளிப்பது வரை, எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்காமல் இந்த அரசு விவசாயிகளை வாட்டி வதைத்து வருகின்றது.

    உழவன் கணக்குப் பார்த்தால். உழக்குக்கூட மிஞ்சாது என்பதையும், 'விவசாயி சேற்றில் கால் வைக்கவில்லை என்றால், நாம் சோற்றில் கை வைக்க முடியாது' என்பதையும் மறந்துவிட்டு, முதலமைச்சர் ஸ்டாலின் 'விவசாயி' வேடமிட்டு போலியாக திரிவதைக் கண்டு உண்மையான விவசாயிகள் கொதிப்படைந்து போயுள்ளனர்.

    தென் மாவட்ட "மா" விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ. 15-ஐ நிர்ணயித்து, விவசாயிகளிடம் இருந்து மாம்பழங்களை தமிழக அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்றும்; தனியார் மாம்பழக் கூழ் தொழிற்சாலைகள் கிலோ ஒன்றுக்கு ரூ. 15-க்கு மேல் கொள்முதல் செய்த நிலையில், தற்போது 1 கிலோ மாம்பழத்திற்கு ரூ. 5 மட்டுமே விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்கிறார்கள் என்றும், எனவே, 'மா' விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 25,000 முதல் 30,000 வரை மானியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இந்த அரசிடம் வைத்தும், இதுவரை எந்தவித பதிலும் வரவில்லை என்று விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

    எனவே, தென் மாவட்ட 'மா' விவசாயிகளின் நியாமான கோரிக்கைகளை உடனடியாகத் தீர்த்துவைக்க, விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்தி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பில், 20.6.2025 வெள்ளிக் கிழமை காலை 9.30 மணி அளவில், நத்தம் பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழகப் பொருளாளகும். திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னான் அமைச்சருமான திரு. திண்டுக்கல் C. சீனிவாசன், M.L.A. அவர்கள் தலைமையிலும்; கழக துணைப் பொதுச் செயலாளரும், திண்டுக்கள் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. நத்தம் இரா. விசுவநாதன், M.LA.அவர்கள் முன்னிலையிலும் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழக அமைப்புச் செயலாளரும், திண்டுக்கல் மாநகராட்சி முன்னாள் மேயருமான திரு. V. மருதராஜ், கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் டாக்டர் V.P.B. பரமசிவம், Ex. M.L.A., திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழக இணைச் செயலாளர் திருமதி S. தேன்மொழி, MLA., கழக புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர் திரு. R.V.N. கண்ணன் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்; திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், மாநகராட்சி, நகர, பேரூராட்சி மன்ற இந்நாள், முன்னாள் வார்டு உறுப்பினர்கள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    நிர்வாகத் திறனற்ற விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், 'மா விவசாயிகள்', வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சென்னையில் 17,985, குறைந்தபட்சமாக நீலகிரியில் 1,327 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
    • ஆங்கில வழிக் கல்வியில் சுமார் 52 ஆயிரம் பேரும் இணைந்துள்ளனர்.

    தமிழக அரசுப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு வரை மூன்று லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை விவரங்களை அரசு தொடக்கக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

    அதன்படி, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 3 லட்சத்தை (3,12,881) கடந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 17,985, குறைந்தபட்சமாக நீலகிரியில் 1,327 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

    கேஜி வகுப்புகளில் சுமார் 22 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பு தமிழ் வழிக் கல்வியில் சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேரும் ஆங்கில வழிக் கல்வியில் சுமார் 52 ஆயிரம் பேரும் இணைந்துள்ளனர்.

    தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை குறைந்த அளவில் சேர்க்கை நடைபெற்றுள்ள மாவட்டங்களில் மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

    • ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அறிவிக்கப்படாதது பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
    • கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பணிகள் தடைபட்டன.

    மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பா.ம.க. நிறுவனர்-தலைவர் மருத்துவர் ச.இராமதாசு அறிக்கை 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்பதை மத்திய அரசு உறுதிப்படுத்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்!

    உலகின் மக்கள் தொகையில் 150 கோடியை நோக்கி முதல் இடத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், முன்பு அறிவித்திருந்த மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்ற அறிவிப்பு என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பதற்கான அறிவிப்பில் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அறிவிக்கப்படாதது பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

    நாட்டில் பத்தாண்டுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் நடைமுறை, ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலம் முதல் அமலில் உள்ளது. முதல் கணக்கெடுப்பானது 1872 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுதந்திரம் அடைந்தது முதல், இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948 ன் கீழ் இந்தியாவிற்கு எதிரான போர்கள் நடைபெற்ற காலங்களில் கூட இடைவிடாது தொடர்ந்து நடத்தப் பட்ட நிலையில் கடைசியாக, 2011ல் முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    ஆனால் 2021ல் கணக்கெடுப்பை நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பணிகள் தடைபட்டன. இதனால், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்நிலையில், அடுத்த ஆண்டு 2026-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் துவங்கப்படும் என்றும் அது ஜாதி வாரி மக்கள் தொகையாக கணக்கெடுக்கப்படும் என்றும் முன்பு அறிவித்திருந்த மத்திய அரசின் போக்கில் மாற்றம் ஏற்பட்டு தற்போதைய அறிவிப்பின் மூலம் ஜாதிவாரி கணக்கெடுப்பு இல்லை என்பது போல் காணப்படுகின்றது எனவே உடனடியாக மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும் என்று இதன் மூலம் வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×