என் மலர்
நீங்கள் தேடியது "மா சாகுபடி"
- உண்ணாவிரதப் போராட்டம் என்ற பெயரில் அரசின் மீது வீணான அவதூற்றைப் பரப்பியிருக்கிறார்.
- மா சாகுபடி விவசாயிகள் இடையிலான முரண்பாடுதான் பிரச்சினைக்குக் காரணம்.
தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
'மா' சாகுபடி விவசாயிகளுக்காக திமுக அரசைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்திருக்கிறது அதிமுக. மா விவசாயிகள் மட்டுமல்ல அனைத்துத் தரப்பு விவசாயிகளின் நலனைக் காப்பாற்றி வருவது திராவிட மாடல் அரசு.
பழனிசாமி செய்தித் தாள்களைக் கூடப் படிக்காமல் அரைவேக்காட்டுத் தனமாக அறிக்கை விடுகிறார் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கூறியதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார் பழனிசாமி. உண்ணாவிரதப் போராட்டம் என்ற பெயரில் அரசின் மீது வீணான அவதூற்றைப் பரப்பியிருக்கிறார்.
ஒரு பிரச்சினை எழுந்தால் அதனை உடனடியாகக் கவனித்துத் தீர்வு காணும் நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டு வருகிறது. அப்படிதான் மா சாகுபடி விவசாயிகளின் கோரிக்கை விவகாரத்திலும் தலையிட்டு அரசு நடவடிக்கை எடுத்துவிட்டது. அதன் பிறகும் தன் இருப்பை காட்டிக் கொள்ளப் போராட்டம் அறிவித்து அரசியல் ஆதாயம் தேட முயல்கிறார் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
கிருஷ்ணகிரி , திண்டுக்கல், தருமபுரி, திருவள்ளூர், தேனி, திருப்பத்தூர், சேலம், வேலூர் மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 1.46 இலட்சம் எக்டரில் மா சாகுபடி மேற்கொள்ளப்பட்டு 9.5 இலட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. வழக்கமாக 5 முதல் 6 மெட்ரிக் டன் அளவிற்கு உற்பத்தியாகும் மா உற்பத்தி இந்த ஆண்டு பருவ நிலையின் சாதகத்தால் 8 மெட்ரிக் டன்னிற்கும் மேலாக அதிகரித்துள்ளது.
மாம்பழக் கூழ் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் மா சாகுபடி விவசாயிகள் இடையிலான முரண்பாடுதான் பிரச்சினைக்குக் காரணம்.
இது தொடர்பாகக் கடந்த 16-ம் தேதி வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் தலைமையில், தோட்டக்கலைத் துறை இயக்குநர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தருமபுரி, திருவள் ளூர், தேனி, திருப்பத்தூர், சேலம், வேலூர், மதுரை ஆகிய மாவட்ட தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் மற்றும் மாம்பழக்கூழ் பதப்படுத்தும் நிறுவனங்கள் இடையே ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாம்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் கடந்த ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட மாம்பழக்கூழ் கையிருப்பு அதிகம் உள்ளதால், மாம்பழங்களைக் கொள்முதல் செய்யும் தேவை குறைந்துள்ளதாகப் பதப்படுத்தும் நிறுவனங்கள் சார்பில் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
தேவை குறைந்துள்ளதாலும் மா உற்பத்தி அதிகமானதாலும் விவசாயிகளிடமிருந்து உரிய விலைக்கு மா கொள்முதல் செய்ய இயலாத நிலை உள்ளது என்றும் சொன்னார்கள். ஜூன் 20-ம் தேதிக்கு மேல் விவசாயிகளிடமிருந்து மாம்பழங்களைக் கொள்முதல் செய்து கொள்வதாக பதப்படுத்தும் நிறுவனங்கள் அரசு அதிகாரிகளிடம் உறுதி அளித்துள்ளன.
மா சாகுபடி விவசாயிகளின் நலன் கருதி மாம்பழக்கூழ் தயாரிக்கும் பணிகளை உடனடியாகத் தொடங்கவும், மாம்பழக்கூழ் தயாரிக்க பெங்களூரா ரகத்தினை விவசாயிகளிடம் இருந்து நியாயமான விலையில் கொள்முதல் செய்யவும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள்.
வேளாண்மை உற்பத்தி ஆணையரும் அரசு செயலாளருமான தட்சிணாமூர்த்தி மாம்பழக் கூழ் நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட செய்தி நேற்றும் இன்றும் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இத்தனைக்கும் பிறகு போராட்டத்தை அதிமுக நடத்துகிறது என்றால் அதற்கு அரசியல் காரணம் தவிர வேறு என்ன இருக்க முடியும்?
பிரச்சினைக்கு அரசு தீர்வு காணாவிட்டால் அதை எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக் காட்டலாம். ஆனால், தீர்வு கண்ட பிறகும் நடவடிக்கை எடுத்துவிட்ட பிறகும் உண்ணா விரதப் போராட்டத்தை அறிவிப்பது எதற்காக? மாம்பழங்கள் கொள்முதல் செய்யப்படும் எனச் சொல்லப்பட்ட 20-ம் தேதியில் உண்ணாவிரதப் போராட்டத்தை பழனிசாமி அறிவித்தது அரசியல் ஆதாயம் பெறத்தானே!
'இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என பழனிசாமி அறிக்கையில் பச்சைப் பொய் சொல்வதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
'மாம்பழக் கூழுக்கான GST வரியை 12 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாகக் குறைக்க வேண்டும்' என திமுக அரசை பழனிசாமி வலியுறுத்துவது எல்லாம் விந்தையிலும் விந்தை.
அதற்கான அதிகாரத்தை வைத்திருக்கும் ஒன்றிய பாஜகவைப் பற்றி ஒரு வார்த்தை கூடக் குறிப்பிடாமல் அறிக்கை வெளியிடுவதன் மூலம் விவசாயிகளை வஞ்சிக்கும் மோடி அரசைக் காப்பாற்றி தனது அடிமை விசுவாசத்தைக் காட்டியிருக்கிறார்.
ஒன்றிய அரசு என்றால் கொஞ்சல், மாநில அரசு என்றால் எரிச்சல் என இரட்டை வேடம் போடும் கபட வேடதாரிதான் பழனிசாமி!
மா விவசாயிகளின் நலனை மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு விவசாயிகளின் நலனைக் காப்பாற்றி வருவது திராவிட மாடல் அரசுதான்.
வேளாண் துறைக்குத் தனிப் நிதிநிலையை அறிவித்து உழவர் குடி மக்களின் வாழ்வை உயர்த்தப் பாடுபட்டு வரும் திராவிட மாடல் அரசை இந்த அபத்தப் பொய்களால் எல்லாம் அசைத்துக் கூடப் பார்க்க முடியாது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் மாம்பழ சீசன் தொடங்கியுள்ளது. பொதுமக்கள் மாம்பழங்களை விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
திண்டுக்கல் அருகே நத்தம் செங்குறிச்சி, வேம்பார்பட்டி, சாணார் பட்டி, கோபால்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் மா சாகுபடி செய்து வருகின்றனர்.
கடந்த 4 ஆண்டுகளாகவே போதிய அளவு மழைப் பொழிவு இல்லாததால் மா சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக விவசாயிகள் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வந்தனர். இருந்தபோதும் அவர்கள் தொடர்ந்து மா விவசாயம் செய்து வருகின்றனர்.
இங்கிருந்து திண்டுக்கல், காந்தி மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டும் மழைப் பொழிவு குறைவாக இருந்ததால் மாம்பூக்கள், பிஞ்சுகள் உதிர்ந்து விட்டன. இதனால் வரத்து குறைந்துள்ளது. ஆனால் முதல் தரமான செந்தூரம் ஓரளவு தாக்குபிடித்து வரத்து அதிகரித்துள்ளது.
திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு நத்தம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் செந்தூரம் மாம்பழங்களை கொண்டு வந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு வகையான மாம்பழங்களும் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், வறட்சி மற்றும் கஜா புயலால் மா விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விளைச்சல் ஓரளவு இருந்த போதும் விலை குறைவாகவே கேட்கப்படுகிறது.
இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் மாம்பழங்களை பதப்படுத்தி வைக்க குளிர்பதன கிட்டங்கி அமைக்க வேண்டும். மேலும் விவசாயிகளிடம் இருந்து அரசே நேரடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். ஒரு கிலோ மாம்பழம் தரத்துக்கேற்ப ரூ.30-ல் இருந்து ரூ.40 வரை விற்பனை செய்து வருகின்றனர். கோடை காலத்தில் பொதுமக்கள் மாம்பழங்களை விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.






