என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mango farmer affect"

    • கர்நாடக மாநில மா விவசாயிகளுக்கு PDPS திட்டத்தின்படி இழப்பீட்டினை மத்திய அரசு அறிவித்துள்ளது.
    • தமிழ்நாட்டு விவசாயிகளுக்கும் இத்தகைய இழப்பீட்டை அறிவித்து வழங்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.

    அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    "மா" விலைச் சரிவால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான குரலாய், கடந்த 20.06.2025 அன்று கிருஷ்ணகிரியில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டமும், திண்டுக்கல்லில் மாபெரும் கண்டன ஆர்பாட்டமும் நடத்தி, "மா" விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றக் கோரியது அதிமுக.

    ஆனால், வழக்கம் போல இங்குள்ள ஸ்டாலின் மாடல் விடியா திமுக அரசு, விவசாயிகளின் கோரிக்கைகளை கண்டுகொள்ளவில்லை. வேளாண்துறை அமைச்சரோ, வெளிநாட்டு சுற்றுலாவில் பிஸியாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

    மத்தியில் கூட்டணியாக 39 எம்.பி.க்களை வைத்திருந்தும், மா விவசாயிகளுக்காக குரல் கொடுத்ததா திமுக? இல்லை. விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்ட அரசு தானே இந்த அரசு? இவர்களிடம் விவசாயிகள் நலன் பற்றி எப்படி எதிர்பார்க்க முடியும்?

    இந்நிலையில், கர்நாடக மாநில மா விவசாயிகளுக்கு PDPS திட்டத்தின்படி இழப்பீட்டினை மத்திய அரசு அறிவித்துள்ளது.

    விவசாயிகள் நலன் காக்கும் நோக்கில் இந்தியப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவை வரவேற்பதுடன், தமிழ்நாட்டு விவசாயிகளுக்கும் இத்தகைய இழப்பீட்டை அறிவித்து வழங்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.

    ஆண்டுக்கு ஒருமுறை விளைவிக்கப்படும் "மா" பயிர்களின் விலை வீழ்ச்சியால் சொல்லொண்ணா துயரில் உள்ள விவசாயிகளுக்கு, இந்த இழப்பீடு பெரும் உதவியாக இருக்கும்.

    அஇஅதிமுக என்றும் விவசாயப் பெருங்குடி மக்களுடன் துணை நிற்கும். அவர்களின் குரலாக என்றென்றும் ஒலிக்கும் என எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறினார்.

    • தமிழகத்திலும் மாம்பழம் டன் ஒன்றிற்கு ரூ.4,000 மானியமாக வழங்க முயற்சிக்காதது ஏன்?
    • போராடும் நிலைக்கு விவசாயிகளைத் தள்ளியிருப்பது தான் திராவிட மாடல் அரசின் சாதனை.

    விளம்பரங்களில் மட்டும் கவனம் செலுத்தும் திமுக அரசு, விளைவித்த பழங்களுக்கு விலையின்றி தவிக்கும் "மா" விவசாயிகளின் நலனை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    தித்திக்கும் மாம்பழங்களின் விளைச்சல் அதிகரித்துள்ளதால் லாபம் கிடைக்கும் என மகிழ்ந்திருந்த விவசாயிகளை உரிய விலையின்றி ஏமாற்றத்தை அளித்து வதைத்து வருகிறது திமுக அரசு.

    தெருவில் இறங்கி விவசாயிகள் போராடி வரும் வேளையில், மாம்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலைகளைக் கொள்முதல் செய்ய ஆணையிட்டு பிரச்சனைக்குத் தீர்வு கண்டு விட்டதாய் முழங்கி வருகிறது திமுக அரசு.

    ஆனால், மொந்த வணிகர்கள் இரகசிய கூட்டணி அமைத்து கொள்முதல் விலையைக் குறைத்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கும் அடிப்படை புகாரைக் கூட திமுக அரசு கண்டுகொள்ளவில்லை என்பதே நிதர்சனம்.

    தொட்டதற்கெல்லாம் அண்டை மாநிலங்களுடன் ஒப்பிட்டு புளகாங்கிதம் அடையும் திமுக அரசு, ஆந்திராவில் வழங்குவது போல தமிழகத்திலும் மாம்பழம் டன் ஒன்றிற்கு ரூ.4,000 மானியமாக வழங்க முயற்சிக்காதது ஏன்?

    காய், கனி சார்ந்த தோட்டக்கலை விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க முயற்சி எடுக்கப்படும் எனும் 2021 நேர்தல் வாக்குறுதி எண் 35-ஐ நான்காண்டுகளாகியும் நிறைவேற்றாது கிடப்பில் போடுவது தான் நாடு போற்றும் நல்லாட்சியின் சாதனையா?

    தமிழகத்தில் ஒவ்வொரு போகத்தின் போதும், போதிய விலை இல்லாததால் தக்காளியில் துவங்கி மாம்பழம் வரை சிரமப்பட்டு கண்ணுங்கருத்துமாக விளைவித்த பழங்களைத் தெருவில் கொட்டி போராடும் நிலைக்கு விவசாயிகளைத் தள்ளியிருப்பது தான் திராவிட மாடல் அரசின் சாதனை தேவையான குளிர்பதனக் கிடங்குகளையோ, போதிய உணவுத் தொழில்நுட்பத் தொழிற்சாலைகளையோ நிறுவாமல் விவசாயிகளை வதைப்பது தான் உழவர் நலனா?

    "தோளில் பச்சைத் துண்டு அணியும் போலி விவசாயி நான் அல்ல" என்று கூறும் மாண்புமிகு முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள், விவசாயிகள் நலனில் உண்மையான அக்கறை இருந்தால், மானியத்துடன் கூடிய மாம்பழம் கொள்முதல் விலையை ரூ. 20/கி ஆக உயர்த்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • உண்ணாவிரதப் போராட்டம் என்ற பெயரில் அரசின் மீது வீணான அவதூற்றைப் பரப்பியிருக்கிறார்.
    • மா சாகுபடி விவசாயிகள் இடையிலான முரண்பாடுதான் பிரச்சினைக்குக் காரணம்.

    தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    'மா' சாகுபடி விவசாயிகளுக்காக திமுக அரசைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்திருக்கிறது அதிமுக. மா விவசாயிகள் மட்டுமல்ல அனைத்துத் தரப்பு விவசாயிகளின் நலனைக் காப்பாற்றி வருவது திராவிட மாடல் அரசு.

    பழனிசாமி செய்தித் தாள்களைக் கூடப் படிக்காமல் அரைவேக்காட்டுத் தனமாக அறிக்கை விடுகிறார் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கூறியதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார் பழனிசாமி. உண்ணாவிரதப் போராட்டம் என்ற பெயரில் அரசின் மீது வீணான அவதூற்றைப் பரப்பியிருக்கிறார்.

    ஒரு பிரச்சினை எழுந்தால் அதனை உடனடியாகக் கவனித்துத் தீர்வு காணும் நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டு வருகிறது. அப்படிதான் மா சாகுபடி விவசாயிகளின் கோரிக்கை விவகாரத்திலும் தலையிட்டு அரசு நடவடிக்கை எடுத்துவிட்டது. அதன் பிறகும் தன் இருப்பை காட்டிக் கொள்ளப் போராட்டம் அறிவித்து அரசியல் ஆதாயம் தேட முயல்கிறார் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

    கிருஷ்ணகிரி , திண்டுக்கல், தருமபுரி, திருவள்ளூர், தேனி, திருப்பத்தூர், சேலம், வேலூர் மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 1.46 இலட்சம் எக்டரில் மா சாகுபடி மேற்கொள்ளப்பட்டு 9.5 இலட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. வழக்கமாக 5 முதல் 6 மெட்ரிக் டன் அளவிற்கு உற்பத்தியாகும் மா உற்பத்தி இந்த ஆண்டு பருவ நிலையின் சாதகத்தால் 8 மெட்ரிக் டன்னிற்கும் மேலாக அதிகரித்துள்ளது.

    மாம்பழக் கூழ் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் மா சாகுபடி விவசாயிகள் இடையிலான முரண்பாடுதான் பிரச்சினைக்குக் காரணம்.

    இது தொடர்பாகக் கடந்த 16-ம் தேதி வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் தலைமையில், தோட்டக்கலைத் துறை இயக்குநர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தருமபுரி, திருவள் ளூர், தேனி, திருப்பத்தூர், சேலம், வேலூர், மதுரை ஆகிய மாவட்ட தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் மற்றும் மாம்பழக்கூழ் பதப்படுத்தும் நிறுவனங்கள் இடையே ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    மாம்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் கடந்த ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட மாம்பழக்கூழ் கையிருப்பு அதிகம் உள்ளதால், மாம்பழங்களைக் கொள்முதல் செய்யும் தேவை குறைந்துள்ளதாகப் பதப்படுத்தும் நிறுவனங்கள் சார்பில் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    தேவை குறைந்துள்ளதாலும் மா உற்பத்தி அதிகமானதாலும் விவசாயிகளிடமிருந்து உரிய விலைக்கு மா கொள்முதல் செய்ய இயலாத நிலை உள்ளது என்றும் சொன்னார்கள். ஜூன் 20-ம் தேதிக்கு மேல் விவசாயிகளிடமிருந்து மாம்பழங்களைக் கொள்முதல் செய்து கொள்வதாக பதப்படுத்தும் நிறுவனங்கள் அரசு அதிகாரிகளிடம் உறுதி அளித்துள்ளன.

    மா சாகுபடி விவசாயிகளின் நலன் கருதி மாம்பழக்கூழ் தயாரிக்கும் பணிகளை உடனடியாகத் தொடங்கவும், மாம்பழக்கூழ் தயாரிக்க பெங்களூரா ரகத்தினை விவசாயிகளிடம் இருந்து நியாயமான விலையில் கொள்முதல் செய்யவும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள்.

    வேளாண்மை உற்பத்தி ஆணையரும் அரசு செயலாளருமான தட்சிணாமூர்த்தி மாம்பழக் கூழ் நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட செய்தி நேற்றும் இன்றும் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இத்தனைக்கும் பிறகு போராட்டத்தை அதிமுக நடத்துகிறது என்றால் அதற்கு அரசியல் காரணம் தவிர வேறு என்ன இருக்க முடியும்?

    பிரச்சினைக்கு அரசு தீர்வு காணாவிட்டால் அதை எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக் காட்டலாம். ஆனால், தீர்வு கண்ட பிறகும் நடவடிக்கை எடுத்துவிட்ட பிறகும் உண்ணா விரதப் போராட்டத்தை அறிவிப்பது எதற்காக? மாம்பழங்கள் கொள்முதல் செய்யப்படும் எனச் சொல்லப்பட்ட 20-ம் தேதியில் உண்ணாவிரதப் போராட்டத்தை பழனிசாமி அறிவித்தது அரசியல் ஆதாயம் பெறத்தானே!

    'இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என பழனிசாமி அறிக்கையில் பச்சைப் பொய் சொல்வதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

    'மாம்பழக் கூழுக்கான GST வரியை 12 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாகக் குறைக்க வேண்டும்' என திமுக அரசை பழனிசாமி வலியுறுத்துவது எல்லாம் விந்தையிலும் விந்தை.

    அதற்கான அதிகாரத்தை வைத்திருக்கும் ஒன்றிய பாஜகவைப் பற்றி ஒரு வார்த்தை கூடக் குறிப்பிடாமல் அறிக்கை வெளியிடுவதன் மூலம் விவசாயிகளை வஞ்சிக்கும் மோடி அரசைக் காப்பாற்றி தனது அடிமை விசுவாசத்தைக் காட்டியிருக்கிறார்.

    ஒன்றிய அரசு என்றால் கொஞ்சல், மாநில அரசு என்றால் எரிச்சல் என இரட்டை வேடம் போடும் கபட வேடதாரிதான் பழனிசாமி!

    மா விவசாயிகளின் நலனை மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு விவசாயிகளின் நலனைக் காப்பாற்றி வருவது திராவிட மாடல் அரசுதான்.

    வேளாண் துறைக்குத் தனிப் நிதிநிலையை அறிவித்து உழவர் குடி மக்களின் வாழ்வை உயர்த்தப் பாடுபட்டு வரும் திராவிட மாடல் அரசை இந்த அபத்தப் பொய்களால் எல்லாம் அசைத்துக் கூடப் பார்க்க முடியாது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கூழ் தொழிற்சாலைகள் தென்மாவட்ட விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக உள்ளது.
    • முதலமைச்சர் ஸ்டாலின் 'விவசாயி' வேடமிட்டு போலியாக திரிவதைக் கண்டு உண்மையான விவசாயிகள் கொதிப்படைந்து போயுள்ளனர்.

    தென் மாவட்ட 'மா' பயிரிடும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமல், விவசாயிகளின் துயரத்தை துச்சமென நினைக்கும் விடியா திமுக ஆட்சியாளர்களைக் கண்டித்து, அதிமுக ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பில் ஜூன் 20ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும், அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நத்தம் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழக தென் மாவட்டங்களில், குறிப்பாக திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 'மா' விவசாயிகள் பயன்பெறும் வகையில், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள மாம்பழக் கூழ் தொழிற்சாலையில் நாளொன்றுக்கு 150 முதல் 250 வாரி வரை, அதாவது 1500 மெட்ரிக் டன் முதல் 2000 மெட்ரிக் டன் வரை மாம்பழக் கூழ் தயாரிக்கப்படுகிறது.

    இப்பகுதியில் அமைந்துள்ள கூழ் தொழிற்சாலைகள் தென்மாவட்ட விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக உள்ளது.

    'மா' உற்பத்தி ரகங்களான காதர் (அல்போன்சார், செந்தூரம், கல்லாமை (ஜோத்தாபுரி), கான, மங்கனப்பள்ளி, கிரேப் மல்கோவா, இமாம்சந்த் காணாப்பாடி குமேனியா, சேலம் குண்டு, நாட்டுக்காய் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    கடந்த 4 ஆண்டுகால நிர்வாகத் திறனற்ற திமுக ஸ்டாலின் மாடல் அரசால், தமிழகத்தின் அனைத்து விவசாயிகளும் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டு வருவதும், நெல்லானாலும், கரும்பானாலும், பயிர் வகைகளானாலும், மஞ்சள் ஆனாலும் உரிய விலை கிடைக்காமல் பெரும் நஷ்டத்தையே அடைந்து வருகின்றனர்.

    பயிர்க் காப்பீடு முதல் வறட்சி மற்றும் வெள்ள காலங்களில் உரிய நிவாரணம் அளிப்பது வரை, எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்காமல் இந்த அரசு விவசாயிகளை வாட்டி வதைத்து வருகின்றது.

    உழவன் கணக்குப் பார்த்தால். உழக்குக்கூட மிஞ்சாது என்பதையும், 'விவசாயி சேற்றில் கால் வைக்கவில்லை என்றால், நாம் சோற்றில் கை வைக்க முடியாது' என்பதையும் மறந்துவிட்டு, முதலமைச்சர் ஸ்டாலின் 'விவசாயி' வேடமிட்டு போலியாக திரிவதைக் கண்டு உண்மையான விவசாயிகள் கொதிப்படைந்து போயுள்ளனர்.

    தென் மாவட்ட "மா" விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ. 15-ஐ நிர்ணயித்து, விவசாயிகளிடம் இருந்து மாம்பழங்களை தமிழக அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்றும்; தனியார் மாம்பழக் கூழ் தொழிற்சாலைகள் கிலோ ஒன்றுக்கு ரூ. 15-க்கு மேல் கொள்முதல் செய்த நிலையில், தற்போது 1 கிலோ மாம்பழத்திற்கு ரூ. 5 மட்டுமே விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்கிறார்கள் என்றும், எனவே, 'மா' விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 25,000 முதல் 30,000 வரை மானியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இந்த அரசிடம் வைத்தும், இதுவரை எந்தவித பதிலும் வரவில்லை என்று விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

    எனவே, தென் மாவட்ட 'மா' விவசாயிகளின் நியாமான கோரிக்கைகளை உடனடியாகத் தீர்த்துவைக்க, விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்தி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பில், 20.6.2025 வெள்ளிக் கிழமை காலை 9.30 மணி அளவில், நத்தம் பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழகப் பொருளாளகும். திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னான் அமைச்சருமான திரு. திண்டுக்கல் C. சீனிவாசன், M.L.A. அவர்கள் தலைமையிலும்; கழக துணைப் பொதுச் செயலாளரும், திண்டுக்கள் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. நத்தம் இரா. விசுவநாதன், M.LA.அவர்கள் முன்னிலையிலும் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழக அமைப்புச் செயலாளரும், திண்டுக்கல் மாநகராட்சி முன்னாள் மேயருமான திரு. V. மருதராஜ், கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் டாக்டர் V.P.B. பரமசிவம், Ex. M.L.A., திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழக இணைச் செயலாளர் திருமதி S. தேன்மொழி, MLA., கழக புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர் திரு. R.V.N. கண்ணன் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்; திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், மாநகராட்சி, நகர, பேரூராட்சி மன்ற இந்நாள், முன்னாள் வார்டு உறுப்பினர்கள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    நிர்வாகத் திறனற்ற விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், 'மா விவசாயிகள்', வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    தமிழக மாங்காய்களுக்கு திடீர் தடை தொடர்பாக சித்தூர் கலெக்டருடன் தமிழக மா விவசாயிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். #TamilNaduMangoban

    குடியாத்தம்:

    தமிழக மாம்பழங்களுக்கு ஆந்திராவில் மவுசு அதிகம். இங்குள்ள மாம்பழங்களில் அதிக சாறு கிடைப்பதால் சித்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் ஜூஸ் தயாரிப்பு நிறுவனங்கள் தமிழக மாம்பழங்களை அதிக அளவில் கொள்முதல் செய்கின்றன.

    இதனால் ஆந்திர மாம்பழங்கள் விலை வீழ்ச்சியை சந்தித்தது. இப்பிரச்சினை தொடர்பாக, ஆந்திர மாநில விவசாயிகள் கோரிக்கையை ஏற்று தமிழக மாம்பழங்கள், மாங்காய்களுக்கு சித்தூர் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

    தமிழகத்தில் இருந்து மாம்பழங்கள், மாங்காய்கள் ஏற்றிச்சென்ற 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வேலூர் காட்பாடியை அடுத்த சித்தூர் எல்லையான பரதராமி உள்ளிட்ட பகுதிகளிலேயே ஆந்திர போலீசாரால் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டன.

    தடையை மீறி கொண்டு செல்லப்பட்ட மாம்பழங்கள், மாங்காய்களை போலீசார் திருப்பி அனுப்புகின்றனர். இதனால் தமிழக மாம்பழ விவசாயிகள் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். தடையை நீக்க வலியுறுத்தி பரதராமி சோதனை சாவடியில் தமிழக விவசாயிகள் மாங்காய்களை தரையில் கொட்டி போராட்டம் செய்தனர்.

    இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு கிடைக்காவிட்டால், ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வரும் தக்காளி உள்ளிட்ட காய்கறி வாகனங்கள், பால் கொண்டு வரும் லாரிகளையும் மறித்து தடை செய்யும் போராட்டம் செய்வோம் என்று தமிழக மாங்காய் விவசாயிகள் எச்சரித்தனர்.

    இதைத்தொடர்ந்து, தமிழக மாங்காய் விவசாயிகளுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்த சித்தூர் மாவட்ட கலெக்டர் பிரதியும்ணா அழைப்பு விடுத்துள்ளார். சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடக்கிறது.

    இருமாநில அதிகாரிகள் மற்றும் இருமாநில மாங்காய் விவசாயிகள் கலந்து கொண்டு விவாதிக்கின்றனர். பேச்சுவார்த்தையின் போது, தமிழக மாங்காய்களுக்கு ஆந்திராவுக்குள் கொண்டுச் செல்ல ஒரு மாதம் அனுமதிக்க வேண்டும். இந்தாண்டு விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் விலை வீழ்ச்சி ஏற்பட்டு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் மாங்காய்களுக்கு தடை விதித்துள்ளதால், தமிழக மா விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பல கோடி மதிப்பிலான பலநூறு டன் மாங்காய்கள் தேங்கி கிடந்து அழுகி வருவதை எடுத்து கூற உள்ளதாகவும் வேலூர் மாவட்ட மா உற்பத்தியாளர் சங்க தலைவர் வெங்கடேஷ் கூறினார். #TamilNaduMangoban

    ×