மாம்பழ விவசாயிகள் வயிற்றிலடிக்கும் திராவிட மாடல்- நயினார் நாகேந்திரன்

தமிழகத்திலும் மாம்பழம் டன் ஒன்றிற்கு ரூ.4,000 மானியமாக வழங்க முயற்சிக்காதது ஏன்?போராடும் நிலைக்கு விவசாயிகளைத் தள்ளியிருப்பது தான் திராவிட மாடல் அரசின் சாதனை.
மாம்பழ விவசாயிகள் வயிற்றிலடிக்கும் திராவிட மாடல்- நயினார் நாகேந்திரன்
Published on

விளம்பரங்களில் மட்டும் கவனம் செலுத்தும் திமுக அரசு, விளைவித்த பழங்களுக்கு விலையின்றி தவிக்கும் "மா" விவசாயிகளின் நலனை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

தித்திக்கும் மாம்பழங்களின் விளைச்சல் அதிகரித்துள்ளதால் லாபம் கிடைக்கும் என மகிழ்ந்திருந்த விவசாயிகளை உரிய விலையின்றி ஏமாற்றத்தை அளித்து வதைத்து வருகிறது திமுக அரசு.

தெருவில் இறங்கி விவசாயிகள் போராடி வரும் வேளையில், மாம்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலைகளைக் கொள்முதல் செய்ய ஆணையிட்டு பிரச்சனைக்குத் தீர்வு கண்டு விட்டதாய் முழங்கி வருகிறது திமுக அரசு.

ஆனால், மொந்த வணிகர்கள் இரகசிய கூட்டணி அமைத்து கொள்முதல் விலையைக் குறைத்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கும் அடிப்படை புகாரைக் கூட திமுக அரசு கண்டுகொள்ளவில்லை என்பதே நிதர்சனம்.

தொட்டதற்கெல்லாம் அண்டை மாநிலங்களுடன் ஒப்பிட்டு புளகாங்கிதம் அடையும் திமுக அரசு, ஆந்திராவில் வழங்குவது போல தமிழகத்திலும் மாம்பழம் டன் ஒன்றிற்கு ரூ.4,000 மானியமாக வழங்க முயற்சிக்காதது ஏன்?

காய், கனி சார்ந்த தோட்டக்கலை விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க முயற்சி எடுக்கப்படும் எனும் 2021 நேர்தல் வாக்குறுதி எண் 35-ஐ நான்காண்டுகளாகியும் நிறைவேற்றாது கிடப்பில் போடுவது தான் நாடு போற்றும் நல்லாட்சியின் சாதனையா?

தமிழகத்தில் ஒவ்வொரு போகத்தின் போதும், போதிய விலை இல்லாததால் தக்காளியில் துவங்கி மாம்பழம் வரை சிரமப்பட்டு கண்ணுங்கருத்துமாக விளைவித்த பழங்களைத் தெருவில் கொட்டி போராடும் நிலைக்கு விவசாயிகளைத் தள்ளியிருப்பது தான் திராவிட மாடல் அரசின் சாதனை தேவையான குளிர்பதனக் கிடங்குகளையோ, போதிய உணவுத் தொழில்நுட்பத் தொழிற்சாலைகளையோ நிறுவாமல் விவசாயிகளை வதைப்பது தான் உழவர் நலனா?

"தோளில் பச்சைத் துண்டு அணியும் போலி விவசாயி நான் அல்ல" என்று கூறும் மாண்புமிகு முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள், விவசாயிகள் நலனில் உண்மையான அக்கறை இருந்தால், மானியத்துடன் கூடிய மாம்பழம் கொள்முதல் விலையை ரூ. 20/கி ஆக உயர்த்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com