என் மலர்
நீங்கள் தேடியது "Minister Sakkarapani"
- அனைத்து கட்சியினரையும் அரவணைத்து செல்லக்கூடியவர்கள் நாங்கள்.
- எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் தி.மு.க.வின் கொள்கை.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோபால்பட்டி மற்றும் நத்தத்தில் தி.மு.க. சார்பில் டிஜிட்டல் முறையில் உறுப்பினர்கள் சேர்க்கை குறித்த வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் வேடசந்தூரில் செயற்பொறியாளர் மின் கோட்ட அலுவலகம் சமீபத்தில் திறக்கப்பட்டது. இதற்கான திறப்பு விழாவில் நானும், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டோம். இந்த விழாவில் கலந்து கொண்டு வந்தபிறகு, அ.தி.மு.க.வினர் வெளியிட்ட அறிக்கையை பார்த்த பிறகே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் அங்கு குப்பைத்தொட்டியில் போடப்பட்ட சம்பவமே எனக்கு தெரியவந்தது. இதுபோன்ற கீழ்த்தரமான அரசியலை தி.மு.க. என்றுமே செய்யாது. ஒரேயொரு உதாரணத்தை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது, பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய புத்தகப்பைகளில் அன்றைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் ஒட்டப்பட்டிருந்தது. அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருந்தன்மையுடன் அந்த படங்கள் அப்படியே இருக்கட்டும் விட்டுவிடுங்கள். அவர்களது படங்கள் இருந்தாலும் பரவாயில்லை, பள்ளி மாணவர்களுக்கு அந்த பைகளை கொடுங்கள் என்றார். இதனால் அவர் வழியில் வந்த நாங்கள் இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் என்றைக்கும் ஈடுபட மாட்டோம். எல்லோரையும் நாங்கள் மதிக்க கூடியவர்கள். அனைத்து கட்சியினரையும் அரவணைத்து செல்லக்கூடியவர்கள் நாங்கள்.
தி.மு.க. வெற்றிபெற்ற தொகுதிகளை மட்டும் பார்க்கக்கூடாது. 234 தொகுதிகளும் சீராக வளர்ச்சி அடைய வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் தி.மு.க.வின் கொள்கை. இதனால் நாங்கள் பாகுபாடு பார்க்காமல் அனைத்து தொகுதிகளிலும் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். அந்த வகையில் நத்தத்தில் இன்று அரசு கலைக்கல்லூரி கொண்டு வந்திருக்கிறோம். ஆனால் 10 ஆண்டுகள் அமைச்சராக இருந்த நத்தம் விசுவநாதன் தனது தொகுதிக்கு அரசு கல்லூரியை கொண்டு வர முடியாதது ஏன்? இவ்வாறு அவர் கூறினார்.
- உண்ணாவிரதப் போராட்டம் என்ற பெயரில் அரசின் மீது வீணான அவதூற்றைப் பரப்பியிருக்கிறார்.
- மா சாகுபடி விவசாயிகள் இடையிலான முரண்பாடுதான் பிரச்சினைக்குக் காரணம்.
தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
'மா' சாகுபடி விவசாயிகளுக்காக திமுக அரசைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்திருக்கிறது அதிமுக. மா விவசாயிகள் மட்டுமல்ல அனைத்துத் தரப்பு விவசாயிகளின் நலனைக் காப்பாற்றி வருவது திராவிட மாடல் அரசு.
பழனிசாமி செய்தித் தாள்களைக் கூடப் படிக்காமல் அரைவேக்காட்டுத் தனமாக அறிக்கை விடுகிறார் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கூறியதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார் பழனிசாமி. உண்ணாவிரதப் போராட்டம் என்ற பெயரில் அரசின் மீது வீணான அவதூற்றைப் பரப்பியிருக்கிறார்.
ஒரு பிரச்சினை எழுந்தால் அதனை உடனடியாகக் கவனித்துத் தீர்வு காணும் நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டு வருகிறது. அப்படிதான் மா சாகுபடி விவசாயிகளின் கோரிக்கை விவகாரத்திலும் தலையிட்டு அரசு நடவடிக்கை எடுத்துவிட்டது. அதன் பிறகும் தன் இருப்பை காட்டிக் கொள்ளப் போராட்டம் அறிவித்து அரசியல் ஆதாயம் தேட முயல்கிறார் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
கிருஷ்ணகிரி , திண்டுக்கல், தருமபுரி, திருவள்ளூர், தேனி, திருப்பத்தூர், சேலம், வேலூர் மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 1.46 இலட்சம் எக்டரில் மா சாகுபடி மேற்கொள்ளப்பட்டு 9.5 இலட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. வழக்கமாக 5 முதல் 6 மெட்ரிக் டன் அளவிற்கு உற்பத்தியாகும் மா உற்பத்தி இந்த ஆண்டு பருவ நிலையின் சாதகத்தால் 8 மெட்ரிக் டன்னிற்கும் மேலாக அதிகரித்துள்ளது.
மாம்பழக் கூழ் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் மா சாகுபடி விவசாயிகள் இடையிலான முரண்பாடுதான் பிரச்சினைக்குக் காரணம்.
இது தொடர்பாகக் கடந்த 16-ம் தேதி வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் தலைமையில், தோட்டக்கலைத் துறை இயக்குநர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தருமபுரி, திருவள் ளூர், தேனி, திருப்பத்தூர், சேலம், வேலூர், மதுரை ஆகிய மாவட்ட தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் மற்றும் மாம்பழக்கூழ் பதப்படுத்தும் நிறுவனங்கள் இடையே ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாம்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் கடந்த ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட மாம்பழக்கூழ் கையிருப்பு அதிகம் உள்ளதால், மாம்பழங்களைக் கொள்முதல் செய்யும் தேவை குறைந்துள்ளதாகப் பதப்படுத்தும் நிறுவனங்கள் சார்பில் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
தேவை குறைந்துள்ளதாலும் மா உற்பத்தி அதிகமானதாலும் விவசாயிகளிடமிருந்து உரிய விலைக்கு மா கொள்முதல் செய்ய இயலாத நிலை உள்ளது என்றும் சொன்னார்கள். ஜூன் 20-ம் தேதிக்கு மேல் விவசாயிகளிடமிருந்து மாம்பழங்களைக் கொள்முதல் செய்து கொள்வதாக பதப்படுத்தும் நிறுவனங்கள் அரசு அதிகாரிகளிடம் உறுதி அளித்துள்ளன.
மா சாகுபடி விவசாயிகளின் நலன் கருதி மாம்பழக்கூழ் தயாரிக்கும் பணிகளை உடனடியாகத் தொடங்கவும், மாம்பழக்கூழ் தயாரிக்க பெங்களூரா ரகத்தினை விவசாயிகளிடம் இருந்து நியாயமான விலையில் கொள்முதல் செய்யவும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள்.
வேளாண்மை உற்பத்தி ஆணையரும் அரசு செயலாளருமான தட்சிணாமூர்த்தி மாம்பழக் கூழ் நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட செய்தி நேற்றும் இன்றும் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இத்தனைக்கும் பிறகு போராட்டத்தை அதிமுக நடத்துகிறது என்றால் அதற்கு அரசியல் காரணம் தவிர வேறு என்ன இருக்க முடியும்?
பிரச்சினைக்கு அரசு தீர்வு காணாவிட்டால் அதை எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக் காட்டலாம். ஆனால், தீர்வு கண்ட பிறகும் நடவடிக்கை எடுத்துவிட்ட பிறகும் உண்ணா விரதப் போராட்டத்தை அறிவிப்பது எதற்காக? மாம்பழங்கள் கொள்முதல் செய்யப்படும் எனச் சொல்லப்பட்ட 20-ம் தேதியில் உண்ணாவிரதப் போராட்டத்தை பழனிசாமி அறிவித்தது அரசியல் ஆதாயம் பெறத்தானே!
'இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என பழனிசாமி அறிக்கையில் பச்சைப் பொய் சொல்வதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
'மாம்பழக் கூழுக்கான GST வரியை 12 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாகக் குறைக்க வேண்டும்' என திமுக அரசை பழனிசாமி வலியுறுத்துவது எல்லாம் விந்தையிலும் விந்தை.
அதற்கான அதிகாரத்தை வைத்திருக்கும் ஒன்றிய பாஜகவைப் பற்றி ஒரு வார்த்தை கூடக் குறிப்பிடாமல் அறிக்கை வெளியிடுவதன் மூலம் விவசாயிகளை வஞ்சிக்கும் மோடி அரசைக் காப்பாற்றி தனது அடிமை விசுவாசத்தைக் காட்டியிருக்கிறார்.
ஒன்றிய அரசு என்றால் கொஞ்சல், மாநில அரசு என்றால் எரிச்சல் என இரட்டை வேடம் போடும் கபட வேடதாரிதான் பழனிசாமி!
மா விவசாயிகளின் நலனை மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு விவசாயிகளின் நலனைக் காப்பாற்றி வருவது திராவிட மாடல் அரசுதான்.
வேளாண் துறைக்குத் தனிப் நிதிநிலையை அறிவித்து உழவர் குடி மக்களின் வாழ்வை உயர்த்தப் பாடுபட்டு வரும் திராவிட மாடல் அரசை இந்த அபத்தப் பொய்களால் எல்லாம் அசைத்துக் கூடப் பார்க்க முடியாது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழகம் முழுவதும் 13 திறந்தவெளி நெல் சேமிப்பு கிட்டங்கிகள் உள்ளன.
- நெல் மூட்டைகள் மழையால் சேதம் அடைவதை தவிர்க்க ரூ.238 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2 லட்சத்து 86 ஆயிரத்து 450 டன் நெல் சேமிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை:
மதுரை மாவட்டம் சாணம்பட்டியில் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் 2 கோடியே 10 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, ரொக்க பணம் வழங்கப்படும். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் 100 சதவீதம் அரசியல் தலையீடு எதுவும் இருக்காது. தமிழகம் முழுவதும் 13 திறந்தவெளி நெல் சேமிப்பு கிட்டங்கிகள் உள்ளன.
நெல் மூட்டைகள் மழையால் சேதம் அடைவதை தவிர்க்க ரூ.238 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2 லட்சத்து 86 ஆயிரத்து 450 டன் நெல் சேமிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் விவசாயிகள் தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
இவர் அவர் கூறினார்.
- பயோமெட்ரிக் வேலை செய்யாத இடங்களில் கண் கருவிழி மூலம் பொருட்களை பொதுமக்கள் வாங்கிக் கொள்ளும் வகையில் விரைவில் மாற்றி அமைக்கப்படும்.
- பயோமெட்ரிக் வேலை செய்யாத இடங்களில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பொருட்களை பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை:
அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து அமைச்சர் சக்கரபாணி கூறுகையில், "சுகாதாரம், எடை ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் நியாயவிலை கடைகளில் பாக்கெட்டுகள் மூலமாக அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும். மேலும், பயோமெட்ரிக் வேலை செய்யாத இடங்களில் கண் கருவிழி மூலம் பொருட்களை பொதுமக்கள் வாங்கிக் கொள்ளும் வகையில் விரைவில் மாற்றி அமைக்கப்படும்.
தற்போது பரிசோதனை முயற்சியாக, நகர்புறத்தில் ஒரு கடையிலும், கிராமப்புறத்தில் ஒரு கடையிலும் இது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டு உள்ள நிலையில், விரைவில் டெண்டர் விடப்பட்டு தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கடைகளிலும் கருவிழி மூலம் பொருட்களை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம். அதுவரை பயோமெட்ரிக் வேலை செய்யாத இடங்களில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பொருட்களை பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும்."
இவ்வாறு அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
- முதலமைச்சர் அறிவித்தபடி தேர்தல் வாக்குறுதிகளில் 80 சதவீதம் நிறைவேற்றி உள்ளார்.
- ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகளில் பா.ஜ.க.வால் ஒரு இடத்தை கூட பிடிக்க முடியவில்லை.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட கருங்கல்பாளையம் கே.எஸ்.நகர். பகுதியில் அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் சேகர்பாபு ஆகியோர் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தனர். அவர்களுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அமைச்சர் சக்கரபாணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
முதலமைச்சர் அறிவித்தபடி தேர்தல் வாக்குறுதிகளில் 80 சதவீதம் நிறைவேற்றி உள்ளார். இது மக்களுக்கான பொற்கால ஆட்சியாக திகழ்கிறது. இதனால் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி.
வேட்பாளரை அறிவித்து தனித்து நிற்க முடியாமல் திணறும் பாரதிய ஜனதா கட்சி, தமிழகத்தில் காலூன்ற முடியாததால் அ.தி.மு.க.வை பிளவுபடுத்தி குளிர்காய நினைக்கிறது.
ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகளில் பா.ஜ.க.வால் ஒரு இடத்தை கூட பிடிக்க முடியவில்லை. எத்தனை அண்ணாமலை அ.தி.மு.க.வுடன் கூட்டணியாக வந்தாலும் இந்த தொகுதியில் வெற்றி பெற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மக்களுக்கு தரமான பொருட்கள் கிடைக்கின்றதா என்பதை அதிகாரிகள் மூலம் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றோம்.
- அரிசி கருப்பு, பழுப்பு நிறத்தில் இருக்க கூடாது என்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.
கோவை:
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் இன்று நடந்தது.
கூட்டத்திற்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் சக்கரபாணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் முடிந்து 3-வது ஆண்டை நோக்கி செல்கிறோம். மக்களுக்கு தரமான பொருட்களை கொடுக்க முதலஅமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
மக்களுக்கு தரமான பொருட்கள் கிடைக்கின்றதா என்பதை அதிகாரிகள் மூலம் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றோம். அரிசி கருப்பு, பழுப்பு நிறத்தில் இருக்க கூடாது என்பதில் இந்த அரசு கவனம் செலுத்தி வருகிறது.
2 வருடங்களில் 16 லட்சம் பேருக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டு இருக்கிறது. குடும்ப அட்டை தொலைந்து விட்டால், ரூ.45 செலுத்தி அதன் நகலை பெற முடியும். தகுதியுள்ள அனைவருக்கும் குடும்ப அட்டை கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது.
சிறுதானிய உணவு திருவிழா அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட உள்ளது.
அனைத்து நியாய விலை கடைகளிலும் கியூஆர் கோடு முறை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். இனி பொருட்களை கியூ ஆர் கோடு முறையில் வாங்கி கொள்ளலாம். அதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்க உள்ளது.
கோவை மாவட்டத்தில் 536 நியாய விலை கடைகள் வாடகை கட்டிடத்தில் இருக்கின்றது, அவற்றிக்கு சொந்த கட்டிடம் கட்டப்படும்.
கோதுமையை பொறுத்தவரை 23 ஆயிரம் மெட்ரிக் என்பதை 8 ஆயிரம் டன்னாக மத்திய அரசு குறைத்து விட்டனர். இது தொடர்பாக மத்திய அரசுடன் பேசி கூடுதல் ஒதுக்கீடு கேட்க இருக்கின்றோம்.
நியாயவிலை கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்குவது அரசின் பரீசிலனையில் இருக்கிறது. கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் முதல்கட்டமாக வழங்க திட்டமிடப்பட்டு இருக்கின்றது. மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை அதிகரிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தி இருக்கின்றோம். இந்த விவகாரத்தில் தமிழக அரசை மத்திய அரசு வஞ்சிக்கின்றது.
பருப்பு, பாமாயில், சக்கரை போன்றவற்றை எவ்வளவு விலை கொடுத்தும் அரசால் வாங்கி விட முடியும். எதிர்கட்சி என்பதால் மத்திய அரசு தமிழக அரசை வஞ்சிக்கின்றது. கோதுமை, மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு குறைத்து இருக்கின்றது.
ரேஷன் கடைகளில் இரு விதமான அரிசி விநியோகம் செய்யப்பட்டாலும், மக்கள் எந்த அரிசியை விரும்புகின்றனரோ அதை மட்டுமே கொடுப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- குடும்ப உறுப்பினர்களுக்கு இடையூறு இன்றி பணியைச் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- கார்டுதாரர்கள் அவர்களுடைய வசதிக்கேற்ப விவரங்களை புதுப்பித்துக் கொள்ளலாம்.
சென்னை:
தமிழக சட்டசபையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசும்போது கூறியதாவது:-
மத்திய அரசு முன்னுரிமை உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு மாதந்தோறும் 5 கிலோ அரிசியை வழங்குகிறது. அந்த அரிசியை பெறும் ரேஷன் கார்டுதாரர்களின் விவரங்களை புதுப்பிக்க 'இ.கே.ஒய்.சி.' என்ற இணைய வழியை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி ரேஷன் கார்டு உள்ள அனைத்து உறுப்பினர்களும் பொது வினியோக திட்ட அங்காடியில் உள்ள கருவி மூலம் கைரேகை பதிவுகள் மூலம் தங்களின் விவரங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதுநடைமுறைப்படுத்தப்பட்டு 45 சதவீத ரேஷன் கார்டுதாரர்களின் விவரங்கள் புதுப்பிக்கப்பட்டு உள்ளன.
குடும்ப உறுப்பினர்களுக்கு இடையூறு இன்றி இந்த பணியைச் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அந்த வகையில் அவர்கள் ஓய்வாக இருக்கும் போதோ, பொருட்கள் வாங்க கடைகளுக்கு வரும் போதோ கைவிரல் ரேகை பதிவு மூலம் புதுப்பிக்க கூறப்பட்டு இருந்தது.
சில இடங்களில் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் வந்தால்தான் பொருட்களை பெற முடியும் என தவறுதலாக தகவல்கள் வந்தன. உடனே அப்படி செய்யக்கூடாது என்று கடுமையாக எச்சரிக்கப்பட்டது. கார்டுதாரர்கள் அவர்களுடைய வசதிக்கேற்ப விவரங்களை புதுப்பித்துக் கொள்ளலாம். இது தொடர்பாக பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. ரேஷன் கார்டுகள் இதனால் ரத்து செய்யப்பட மாட்டாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாடு ஊக்கத்தொகையை உயர்த்தியதன் காரணமாக சன்னரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2450/- என்ற விலை.
- பிப்ரவரி முதல் வாரத்தில் அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் அளவு 10 லட்சம் மெட்ரிக் டன்னைத் தாண்டியது என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2002-2003 கொள்முதல் பருவத்திலிருந்து அக்டோபர் முதல் நாள் முதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. விவசாயிகளின் நலன் கருதி முதலமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியின் காரணமாக செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் விவசாயிகள் கோரிக்கை எதும் வைக்காமலேயே அரசு வழங்கும் தமிழ்நாடு ஊக்கத்தொகையை உயர்த்தியதன் காரணமாக சன்னரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2450/- என்ற விலையிலும் பொதுரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2405/- என்ற விலையிலும் 1.9.2024 முதல் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
01.09.2024 முதல் 04.02.2025 வரை, தமிழ்நாடு முழுவதும் 2444 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுச் செயல்படுத்தி, 1,44,248 விவசாயிகளிடமிருந்து 10.41,583 மெட்ரிக் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகை ரூ.2.247.52 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் மின்னணு பணப்பரிமாற்ற முறையில் செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் பிப்ரவரி முதல் வாரத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் அளவைவிட, இந்த ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில் அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு 4.2.2024 வரை 7,42,335 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆண்டில் 4.2.2025 வரை 10,41,583 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 2,99,248 மெட்ரிக் டன் அதிகமாகும்.
நெல் விவசாயிகள் தங்கள் நெல்லினைக் கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு வந்து விற்றுப் பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், அரிசி கடத்தலை தடுக்க அண்டை மாநில அதிகாரிகளுடன் தமிழக அதிகாரிகள் இணைந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்தியாவில் மாதிரி சமுதாய சமையல் கூடம் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை, நுகர்வோர் பாதுகாப்பு, உணவு மற்றும் பொது விநியோகத் துறை மற்றும் கைத்தறித் துறை மந்திரி பியூஸ் கோயல் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி கலந்து கொண்டார்.
கூட்டத்தில், உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது:-
தமிழ்நாடு அரசு அனைத்து தரப்பு மக்களுக்கும் வருமானம் மற்றும் சமூக பாகுபாடின்றி உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்திட கடந்த 40 ஆண்டுகளாக அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.
இந்த அரசு பதவியேற்ற உடன் தமிழ்நாட்டில் உள்ள 2 கோடியே 9 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை ரூ.978 கோடி செலவிலும், தலா ரூ.4 ஆயிரம் ரொக்கத்தையும் கொரோனா பேரிடர் நிவாரணமாக வழங்கியது. வருகின்ற தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு, 21 உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1161 கோடி செலவில் வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு 650 சமூக உணவகங்களை அம்மா உணவகம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாக நடத்தி வருகிறது. தரமான உணவை மானிய விலையில் ஏழை, எளிய மக்களுக்கும் தேவைப்படுவோர்க்கும் இதன் மூலம் வழங்கி வருகிறது.
இந்த திட்டத்திற்காக செப்டம்பர் மாதம் வரை 2021-22-ம் நிதியாண்டில் 3,227 டன் அரிசியும் 362 டன் கோதுமையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு உணவகம் நடத்த சராசரியாக மாதம் ஒன்றுக்கு ரூ.3.5 லட்சம் செலவிடப்படுகிறது. இத்திட்டத்தை வெற்றிகரமாகவும் தொடர்ந்து நடத்திடவும் தேவையான அனைவருக்கும் விரிவுபடுத்திடவும் மத்திய அரசு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ன் கீழ் 100 சதவீதம் நிதியுதவி வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.
21-9-2021 அன்று மத்திய மந்திரியை நேரில் சந்தித்தபோது கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தை அதிகப்படுத்திட வேண்டும் என்று விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டமைக்காக தமிழ்நாடு விவசாயிகளின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு தலைமை மற்றும் வழிகாட்டுதலின்படி மத்திய அரசுடனும், பிற மாநில அரசுகளுடனும் இணைந்து செயல்பட்டு இந்தியாவை பட்டினி மற்றும் சத்துக்குறைவில்லா நாடாக மாற்ற தமிழ்நாடு துணை நிற்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும், இக்கூட்டத்தில் தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் துறை கமிஷனர் வி.ராஜாராமன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






