என் மலர்tooltip icon

    சென்னை

    • சேர்க்கை கட்டணம் என்பது 10,000 ரூபாயில் துவங்கி 25 ஆயிரம் வரை வசூல் செய்யப்படுகிறது.
    • சிறப்பு வகுப்பு என்ற பெயரில் 25,000 துவங்கி 35 ஆயிரம் வரை வசூல் செய்யப்படுகிறது.

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    முன்பு தமிழக அரசு ஏழை எளிய மக்களும் நல்ல கல்வி முறையை பயில வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அரசு நிதி உதவியுடன் தனியார் பள்ளிகளில் 25% சதவீதம் வரை கல்வி பயின்று பயன் பெறலாம் என்று உத்தரவிட்டிருந்தனர். இந்தத் திட்டத்தை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முறைகேடுகள் நடந்திடா வண்ணம் பார்த்துக் கொள்ளவும் அந்தந்த பள்ளிகள் அமையப்பெற்ற இடங்களின் அந்தந்தப் பகுதி உள்ளாட்சி பிரதிநிதிகள் தலைமையில் 2013 ம் ஆண்டு அமைக்கப்பட்ட குழுக்கள் என்ன ஆனது? அதனை தற்பொழுது முறைகேடாக தனியார் பள்ளிகள் பயன்படுத்தி வருவதை கண்டு மனம் வேதனை அடைகிறது.

    அதோடு மட்டுமல்லாமல் தனியார் பள்ளிகளை பொறுத்தவரை சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் சேர்க்கை கட்டணம் என்ற பெயரிலும், சிறப்பு வகுப்புகள் என்ற பெயரிலும் பெற்றோர்களிடம் தேவையற்ற கட்டணங்களை நவீன முறையில் வசூல் செய்து வருகிறார்கள். கட்டணம் வசூல் செய்யும் முறையினை பொருத்தவரை பள்ளி கல்வித்துறையின் வழிகாட்டு முறையினை ஒரு சிறிது அளவு கூட இவர்கள் பின்பற்றவில்லை என்பது கண்கூடாக தெரிகிறது. அந்த வகையில் சேர்க்கை கட்டணம் என்பது 10,000 ரூபாயில் துவங்கி 25 ஆயிரம் வரை வசூல் செய்யப்படுகிறது.

    அதேபோன்று சிறப்பு வகுப்பு என்ற பெயரில் 25,000 துவங்கி 35 ஆயிரம் வரை வசூல் செய்யப்படுகிறது. பள்ளிக்கு வரும் குழந்தைகள் காலையில் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவும் மாலையில் ஒரு மணி நேரத்திற்கு பிறகும் இல்லத்திற்குச் செல்ல வேண்டும். அப்படி என்றால் 2 மணி நேரம் கூடுதலாக வகுப்பு நடத்துகிறார்கள் 6 மணி நேரத்தில் நடத்திட முடியாத பாடத்தினை இரண்டு மணி நேரத்தில் என்ன நடத்த போகிறார்கள் இவர்கள். இத்தகைய செயல் என்பது முறைகேடாக கல்வி கட்டணங்களை வசூலிப்பதற்காகவே உருவாக்கப்பட்டதாக தெளிவாகத் தெரிகிறது. எனவே இதனை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்திட இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் முதலமைச்சருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.
    • 26-ம் தேதி காலை 9 மணிக்கு ஜோலார்பேட்டை அருகே உள்ளே பொன்னேரியில் பிரமாண்ட அரசு விழா நடைபெறுகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 25-ம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து ரெயில் மூலம் காட்பாடி செல்கிறார். ரெயில் நிலையத்தில் அவருக்கு தி.மு.க. பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    இதனைத் தொடர்ந்து வேலூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியை முதலமைச்சர் திறந்து வைப்பார் என கூறப்படுகிறது.

    அதன் பிறகு வேலூர் அரசு சுற்றுலா மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வெடுக்கிறார். மாலை சுமார் 5 மணிக்கு அணைக்கட்டில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருஉருவ சிலையை திறந்து வைக்கிறார். மேலும் அங்கு கட்டப்பட்டுள்ள அண்ணா அறிவாலய கட்டிடத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு திருப்பத்தூர் மாவட்டத்திற்கு செல்கிறார். திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் அருகே புதிதாக நிறுவப்பட்டுள்ள கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார். அன்று இரவு திருப்பத்தூர் மாவட்டத்தில் தங்குகிறார்.

    26-ம் தேதி காலை 9 மணிக்கு ஜோலார்பேட்டை அருகே உள்ளே பொன்னேரியில் பிரமாண்ட அரசு விழா நடைபெறுகிறது. இதில் மாவட்டத்தில் முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். விழாவில் 25 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவதையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக வருகிற 25, 26 ஆகிய 2 நாட்கள் வேலூர், திருப்பத்துார் மாவட்டத்தில் டிரோன்கள், விளம்பர பலூன்கள் போன்றவை பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடையை மீறி டிரோன்கள், விளம்பர பலூன்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • விஜய் நேற்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடினார்.
    • அவருக்கு ரசிகர்களும் , அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் நேற்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்களும் , அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில், தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அரசியல் தலைவர்கள், திரைப்படம் மற்றும் ஊடகத் துறை நண்பர்கள் அனைவருக்கும் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பிறந்தநாள் வாழ்த்து கூறிய அரசியல் தலைவர்கள், திரைப்படம் மற்றும் ஊடகத் துறை நண்பர்கள், நலம் விரும்பிகள், என் நெஞ்சில் குடி இருக்கும் உலகம் முழுவதிலும் உள்ள தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

    உங்கள் ஆதரவு மக்களுக்கு சேவை செய்வதற்கான எனது பயணத்தை ஊக்குவிக்கிறது. பிரகாசமான எதிர்காலத்திற்காக ஒன்றாக அணிவகுப்போம்.

    என விஜய் கூறினார்.

    • ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கும், தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம்?
    • மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாடு அரசியல் மாநாடுதான்.

    சென்னையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழ்நாட்டில் 71,000 கோவில்கள் இந்து சமய அறிநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன.

    * ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கும், தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம்?

    * சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் பவன் கல்யாண் போட்டியிட்டு வெல்லட்டும். அதன்பின் பேசட்டும்.

    * பா.ஜ.க.வினருக்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுத்துவிட்டது அ.தி.மு.க.

    * பெரியார், அண்ணா மட்டுமின்றி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆரைதான் அண்ணாமலை வசைபாடி உள்ளார்.

    * அண்ணாவை விமர்சிக்கும் மேடையில் அ.தி.மு.க.வினர் அமர்ந்தது, அவர்களின் அடிமைத்தனத்தை காட்டுகிறது.

    * யார் பலம் வாய்ந்தவர்கள்? என நயினார் நாகேந்திரன், அண்ணாமலை இடையே போட்டி நிலவுகிறது.

    * நயினார் நாகேந்திரன் பச்சைத்துண்டுடனும், அண்ணாமலை காவி துண்டுடனும் சுற்றுகின்றனர்.

    * மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாடு அரசியல் மாநாடுதான்.

    * அறநிலையத்துறை எதற்காக உருவாக்கப்பட்டது என்பது குறித்து புத்தகம் வெளியிட உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதிக விளைச்சல் கண்டாலும் உரிய விலை கிடைக்காமல் நட்டத்திற்கு ஆளாகும் நிலையென்பது மிகப்பெரிய கொடுமையாகும்.
    • தமிழ்நாடு அரசு உடனடியாக, மாம்பழங்களுக்குக் குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்க வேண்டும்.

    சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    நடப்பாண்டில் மாம்பழங்கள் அதிகம் விளைந்தும் போதிய விலை கிடைக்காததால் மாம்பழ விவசாயிகள் பெரிதும் நட்டத்திற்கு ஆளாகியுள்ளது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. மாம்பழங்களுக்குக் குறைந்தபட்ச ஆதாரவிலை அளிக்காமல் ஏமாற்றிவரும் திமுக அரசின் விவசாயிகள் விரோதப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.

    நெல், கரும்பு உள்ளிட்ட ஒரு சில பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்துள்ளதுபோல வேளாண் பெருமக்கள் விளைவிக்கும் அனைத்து விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டுமென வேளாண் பெருங்குடி மக்கள் நெடுங்காலமாகப் போராடி வருகின்றனர். ஆனால் நெல், கரும்புக்கே உரிய ஆதார விலை அளிக்காமல் ஒன்றிய - மாநில அரசுகள் ஏமாற்றி வருகின்றன. ஒரே விளைபொருளுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு கொள்முதல் விலை இருப்பது இந்த நாட்டில் மட்டுமே நிகழும் மாபெரும் அநீதியாகும்.

    வேளாண் பொருட்களுக்கு உரிய ஆதார விலை நிர்ணயிக்க மறுத்து, விவசாயிகளை நட்டத்திற்கு ஆளாக்கி, அவர்களது குடும்பத்தை வறுமையில் வாடவிடும் திமுக அரசு, வேளாண்மைக்குத் தனிநிதிநிலை அறிக்கை வெளியிடுவதையே பெரும் சாதனை போல் விளம்பரம் செய்வது வெட்கக்கேடானது.

    ஆந்திர மாநில அரசு மாம்பழங்களுக்குக் குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயித்து அம்மாநில மாம்பழ விவசாயிகளைப் பெரும் நட்டத்திற்கு ஆளாகாமல் காத்துள்ளது. அதுமட்டுமின்றி, அங்குள்ள மாம்பழக்கூழ் தொழிற்சாலைகளிடம் பிற மாநில மாம்பழங்களைக் கொள்முதல் செய்யக்கூடாது என்றும் ஆணையிட்டுள்ளது. இதனால், அங்குள்ள மாம்பழக்கூழ் தயாரிப்பு நிறுவனங்கள் ஆதார் அட்டை, வங்கி முகவரியை சோதித்து தமிழ்நாட்டு மாம்பழங்களைத் திருப்பி அனுப்புகின்றன.

    ஆனால், தமிழ்நாட்டில் அப்படியான எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை; மாம்பழங்களுக்குக் குறைந்தபட்ச ஆதாரவிலையும் திமுக அரசு நிர்ணயிக்கவில்லை. இதனால் மாம்பழங்கள் அதிகம் விளைந்தும்கூட, உரிய விலை கிடைக்காமல் தமிழக மாம்பழ விவசாயிகள் பெரும் நட்டத்திற்கு ஆளாகி, இழப்பீடு கேட்டு வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.

    திமுக அரசு அந்த இழப்பீட்டையும் வழங்க மறுப்பதால் மாம்பழங்களை வீதியில் கொட்டிவிட்டு வேளாண் பெருங்குடி மக்கள் செய்வதறியாது தவித்து நிற்கின்றனர்.

    விளைச்சல் குறைந்தால் உற்பத்தி செலவைக்கூட ஈடுசெய்ய முடியாமல் நட்டத்திற்கு ஆளாகும் விவசாயிகள், அதிக விளைச்சல் கண்டாலும் உரிய விலை கிடைக்காமல் நட்டத்திற்கு ஆளாகும் நிலையென்பது மிகப்பெரிய கொடுமையாகும்.

    கடுமையான உழைப்பும், அந்த உழைப்புக்கேற்ற விளைச்சலும் கிடைத்த பின்னும் விவசாயிகள் வறுமையில் வாடி, பட்டினியாகப் படுத்துறங்க நேர்ந்தால் இந்த நாடு மாபெரும் பஞ்சத்தை எதிர்கொள்வதை எவராலும தடுக்க முடியாது என எச்சரிக்கிறேன்.

    ஆகவே, தமிழ்நாட்டு மாம்பழ விவசாயிகளை நட்டத்திலிருந்து காத்திட தமிழ்நாடு அரசு உடனடியாக, மாம்பழங்களுக்குக் குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்க வேண்டும். விலை குறைவால் பாதிக்கப்பட்டுள்ள மாம்பழ விவசாயிகளுக்கு உரிய இழப்பீடும் வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

    தமிழ்நாடு மாம்பழங்களுக்குக் குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்கக்கோரியும், உரிய இழப்பீடு வழங்கக்கோரியும் வேளாண் பெருங்குடி மக்கள் முன்னெடுக்கும் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தோள் கொடுத்துத் துணை நிற்கும் என்று உறுதியளிக்கின்றேன்.

    • தங்கம் விலை நேற்று ஒரு கிராம் ரூ.9,235-க்கும் ஒரு சவரன் ரூ.73,880-க்கும் விற்பனையானது.
    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.

    தங்கம் விலை கடந்த 14-ந்தேதி ஒரு பவுன் ரூ.74 ஆயிரத்து 560-க்கு விற்பனை ஆகி இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்தது. அதன் பின்னர் விலை குறையத் தொடங்கி, கடந்த 17-ந்தேதி ஒரு பவுன் ரூ.74 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. அதற்கு மறுநாளும், அதற்கடுத்த நாளும் விலை அதிகரித்து மீண்டும் ரூ.74 ஆயிரத்தை தாண்டியது.

    தங்கம் விலை நேற்று ஒரு கிராம் ரூ.9,235-க்கும் ஒரு சவரன் ரூ.73,880-க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில் தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.9,230-க்கும் சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.73,840-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    22-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,880

    21-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,880

    20-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,680

    19-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,120

    18-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,000

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    22-06-2025- ஒரு கிராம் ரூ.120

    21-06-2025- ஒரு கிராம் ரூ.120

    20-06-2025- ஒரு கிராம் ரூ.120

    19-06-2025- ஒரு கிராம் ரூ.122

    18-06-2025- ஒரு கிராம் ரூ.122

    • சுமார் 2½ கோடி போலி ஐ.ஆர்.சி.டி.சி. இணையதள கணக்குளை ரெயில்வே நிர்வாகம் நீக்கி அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது.
    • ஓ.டி.பி.யை பதிவு செய்ததும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்துடன் ஆதார் இணைக்கப்படும்.

    சென்னை:

    ரெயில் முன்பதிவு டிக்கெட்டை பெறுவதற்கு பெரும்பாலானோர் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதள கணக்கை பயன்படுத்தி வருகின்றனர். போலி ஐ.ஆர்.சி.டி.சி. இணையதள கணக்குகளால் தட்கல் முன்பதிவு டிக்கெட் பெறுவதில் பயணிகள் பெரும் சிக்கலை சந்தித்து வந்தனர். இதைத்தொடர்ந்து சுமார் 2½ கோடி போலி ஐ.ஆர்.சி.டி.சி. இணையதள கணக்குளை ரெயில்வே நிர்வாகம் நீக்கி அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது.

    அதேவேளையில், வருகிற 1-ந் தேதி முதல் ஆதார் ஓ.டி.பி. அடிப்படையில் மட்டுமே தட்கல் முன்பதிவு டிக்கெட்டுகளை பெற முடியும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது.

    அதன்படி, ஐ.ஆர்.சி.டி.சி. இணையதள கணக்குகளை வைத்துள்ள பயனாளர்கள் தங்களது ஆதாரை இணைக்க ரெயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டு உள்ளது.

    இதுகுறித்து ரெயில்வே நிர்வாகம், ஒவ்வொருவருக்கும் மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பி உள்ளது.

    அதன்படி, ஐ.ஆர்.சி.டி.சி. இணையதள கணக்கு வைத்துள்ளவர்கள் தங்களது யூசர் ஐ.டி. (பயனாளர் கணக்கு) மற்றும் பாஸ்வேர்டு மூலம் ஐ.ஆர்.சி.டி.சி. முன்பதிவு இணையதளத்துக்குள் சென்று 'மை அக்கவுன்ட்' என்ற தலைப்பின் கீழ் இருக்கும் 'ஆத்தென்டிகேட் யூசர்' (பயனாளரை அங்கீகரிக்கவும்) என்பதை தேர்வு செய்து ஆதார் அட்டையில் இருப்பது போன்று பெயரை பதிவு செய்ய வேண்டும்.

    அவ்வாறு பதிவு செய்ததும், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போனுக்கு ஓ.டி.பி. அனுப்பப்படும். அந்த ஓ.டி.பி.யை பதிவு செய்ததும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்துடன் ஆதார் இணைக்கப்படும். ஆதார் அட்டையில் இருக்கும் பெயரும், இணையதளத்தில் பதிவு செய்யும் பெயரும் ஒரே மாதிரியாக இருந்தால் மட்டுமே ஆதார் இணைக்கப்படுகிறது. கடைசி நேர சிக்கலை தவிர்க்க பயனாளர்கள் தங்களது இணையதள கணக்குடன் ஆதாரை முன்கூட்டியே இணைக்க ஐ.ஆர்.சி.டி.சி. நிர்வாகம் கேட்டுக்கொண்டு உள்ளது.

    • தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவம் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 22-ந் தேதி அரங்கேறியது.
    • இதுபோன்ற வழக்குகளில் ஒரே நீதிபதி மூலம் விசாரணையை மேற்கொண்டால் தான் விரைவில் நீதி கிடைக்கும்.

    சென்னை:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் ஆகிய 2 பேர் போலீசாரின் கொடூர தாக்குதலில் உயிரிழந்தனர்.

    தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவம் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 22-ந் தேதி அரங்கேறியது.

    இந்த சம்பவத்தில் அப்போதைய சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கொலை வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், சி.பி.ஐ. விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டது. 105 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்ட சி.பி.ஐ., துரிதமாக செயல்பட்டு 3 மாதத்துக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

    இந்த வழக்கு விசாரணை மதுரையில் உள்ள முதலாவது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. சம்பவம் நடந்து 5 ஆண்டுகள் ஆகியும் இந்த வழக்கின் விசாரணை முடிவடையாதது ஜெயராஜ்-பெனிக்ஸ் குடும்பத்தினரிடம் மிகுந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து ஜெயராஜ்-பெனிக்ஸ் குடும்பத்தினர் தரப்பில் ஆஜராகி வரும் வக்கீல்கள் கூறியதாவது:-

    இந்த வழக்கை 6 மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என மதுரை கோர்ட்டுக்கு 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.

    ஒவ்வொரு முறையும் சி.பி.ஐ. தரப்பில் காலஅவகாசம் கோரப்பட்ட நிலையில், கடந்த வாரம் இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு கிளை, 3 மாதத்துக்குள் வழக்கை விசாரித்து முடிக்க மதுரை கோர்ட்டுக்கு உத்தரவிட்டு உள்ளது.

    இதுவரை இந்த வழக்கை 4 நீதிபதிகள் விசாரித்து உள்ளனர். தற்போது 5-வது நீதிபதி இந்த வழக்கை விசாரித்து வருகிறார். தற்போது இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி, ஜெயராஜ்-பெனிக்ஸ் கொலை வழக்கை விசாரித்து வரும் கோர்ட்டுக்கு பொறுப்பு நீதிபதியாகவே இருந்து வருகிறார்.

    இது ஒரு முக்கியமான வழக்கு. இதுபோன்ற வழக்குகளில் ஒரே நீதிபதி மூலம் விசாரணையை மேற்கொண்டால் தான் விரைவில் நீதி கிடைக்கும்.

    ஆனாலும், இதை ஒரு உரிமையாக கோர முடியாது என்பதால் எங்களால் இந்த விவகாரத்தில் வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

    அதேவேளையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 9 பேருக்கும் தனித்தனியாக 9 வக்கீல்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் 9 பேரும் தனித்தனியாக சி.பி.ஐ. தரப்பு சாட்சிகள் 105 பேரிடமும் குறுக்கு விசாரணை மேற்கொள்வதால் மிகுந்த காலதாமதம் ஏற்படுகிறது.

    இது, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கான உரிமை. இதை எந்தவிதத்திலும் தடுக்க முடியாது. அதேவேளையில் இதை விரைந்து முடிக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை.

    இந்த வழக்கின் விசாரணையை தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் சிலர் செயல்படுவதும் தெரிகிறது. அவ்வாறு செயல்படுவதையும் நீதிமன்றம் கண்டறிந்து தடுக்க வேண்டும்.

    தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமமாகும். இந்த வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு நிரந்தர நீதிபதியை நியமித்து வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை.

    இவ்வாறு வக்கீல்கள் கூறினர்.

    பல்வேறு குற்ற வழக்குகளில் நீதிமன்றங்கள் விரைந்து தீர்ப்பு வழங்கி வரும் நிலையில் ஜெயராஜ்-பெனிக்ஸ் கொலை வழக்கின் தீர்ப்பையும் விரைந்து வழங்க வேண்டும் என்பது அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாமல் பொதுமக்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது.
    • சென்னையில் சில இடங்களில் நேற்று மழை பெய்தது.

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வருகிற 28-ந் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளை தவிர பிற பகுதிகளில் வெப்பசலனம் காரணமாக மழை பெய்து வருகிறது.

    அதிலும் சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. கோடை காலத்தில்கூட இந்த அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் இல்லாத நிலையில், இம்மாதம் தொடக்கத்தில் இருந்து கொளுத்துகிறது. இடையில் மாலை அல்லது இரவு நேரங்களில் ஆங்காங்கே மழை பெய்து ஓரளவுக்கு வெப்பத்தை குறைக்கிறது.

    அந்த வகையில் கடந்த ஒரு வாரமாக சென்னையில் வெப்பத்தின் அளவு இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்பட்டது. பகலில் உஷ்ணத்தால் அசவுகரியத்தை உணர முடிந்தது. நேற்று அதற்கு ஒரு இடைவெளி கொடுக்கும் வகையில் இரவில் சென்னையில் சில இடங்களில் மழை பெய்தது. அதிலும், இடி, மின்னல், காற்றுடன் மழை வெளுத்து வாங்கியது. இதனால் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக சுட்டெரித்த வெயிலுக்கு மத்தியில் இதமான சூழலை மழை ஏற்படுத்தியதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த நிலையில் 11 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, திருப்பத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    • முருக பக்தர்கள் மாநாட்டில் தான் திராவிட இயக்கமாய் உருவான அதிமுக பங்கேற்றுள்ளது.
    • முருகன் பெயரை பயன்படுத்தி தமிழ்நாட்டை பலியிடுவதை எப்படி ஆதரிக்க முடியும்?

    "ஆர்எஸ்எஸ் அமைப்பின் சதிச்செயலைக் கூட புரிந்து கொள்ளாமல் அதிமுக தொண்டர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் இரண்டகம் செய்யும் அதிமுகவை தமிழ்நாடும் மக்களும் மன்னிக்க மாட்டார்கள்" என விசிக துணை பொதுச்செயலாளர்

    வன்னிஅரசு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    சூரனை வதம் செய்த முருகா திராவிடத்தை அழிக்க வேலெடுத்து வா என மதுரை மாவட்டம் முழுக்க இந்து முன்னணியினர் சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.

    இந்த மாநாட்டில் தான் திராவிட இயக்கமாய் உருவான அதிமுக பங்கேற்றுள்ளது.

    ஆரியத்தின் ஆபத்து குறித்தும் அதை அழித்தொழிக்க வேண்டிய தேவை குறித்தும் அறிஞர் அண்ணா அவர்கள் எச்சரித்துள்ளார்.

    அந்த பேரறிஞர் அண்ணாவின் பெயரிலான இயக்கம் இப்படி ஆரியத்திடம் மண்டியிடுவது அறிஞர் அண்ணாவுக்கு மட்டும் செய்யக்கூடிய துரோகமல்ல; தமிழ்நாட்டுக்கே செய்யக்கூடிய துரோகமாகும்.

    முருகனை வழிபடுவது என்பது வேறு; ஆனால் முருகன் பெயரை பயன்படுத்தி தமிழ்நாட்டை பலியிடுவதை எப்படி ஆதரிக்க முடியும்?

    RSS அமைப்பின் சதிச்செயலை கூட புரிந்து கொள்ளாமல், அதிமுக தொண்டர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் இரண்டகம் செய்யும் அதிமுகவை தமிழ்நாடும் மக்களும் மன்னிக்க மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • விளம்பர வெற்றிகளில் மிதக்கும், நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சருக்கு கண்டனம்.
    • விளம்பரங்கள் செய்து, 4 முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு ஈர்த்த முதலீடுகள் எவ்வளவு ?

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வௌியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    அந்நிய முதலீட்டில் ஆமை வேகம்; ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக ஆட்சியில் குறையும் முதலீடுகள்; விளம்பர வெற்றிகளில் மிதக்கும், நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சருக்கு கண்டனம்!

    பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, உலக நாடுகளுக்கு முதலீட்டை ஈர்க்கச் செல்கிறேன் என்று கூறி சுற்றுலா சென்று, தமிழ் நாடு "நம்பர் ஒன்" மாநிலம் என்று வெற்று விளம்பரங்களில் உயர்த்திப் பிடிக்கும் உங்கள் குடும்ப ஆட்சி, அந்நிய முதலீடுகளில் (FDI) மாநிலத்தை பின்னடைவின் பிடியில் தள்ளியுள்ளது என்பதை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் (DPIIT) 2024-25 நிதியாண்டு தரவுகள் அம்பலப்படுத்துகின்றன.

    ஆட்சிக்கு வந்தவுடன் முதலீட்டை ஈர்க்கிறேன்' என்று பொம்மை முதலமைச்சர் 2022-ல் துபாய் மற்றும் ஐக்கிய அரேபிய எமிரேட்ஸ் நாடுகளுக்குச் சென்று ஈர்த்த முதலீடுகள் என்ன ? லூலூ மால், நோபுள் ஸ்டீல் என தொடக்கமே ஏமாற்று மாடல்தான்.. 2023-ல் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகள், 2024 பிப்ரவரியில் ஸ்பெயின், 2024 செப்டம்பரில் அமெரிக்கா சுற்றுப் பயணம் என்று விளம்பரங்கள் செய்து, 4 முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு ஈர்த்த முதலீடுகள் எவ்வளவு ?

    விடியா திமுக அரசு வெற்று விளம்பரங்கள் மூலம் உண்மைகைளை மறைக்கும் அரசு என்பதை தமிழக மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர்.

    நான்காண்டுகளில் தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் பின்னுக்குத் தள்ளி, கடன் வாங்குவதில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக்கியதுதான் பொம்மை முதலமைச்சர்

    மு.க.ஸ்டாலினின் சாதனை.

    இந்தச் சாதனையை பல கோடி அரசு செலவில் விளம்பரப்படுத்துவது வேதனை. இரு நாட்களுக்கு முன்பு விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் திரு. பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள், மதுரையில் இந்திய தொழில் கூட்டமைப்பு நடத்திய கருத்தரங்கில் பேசும்போது ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் தொழில்துறை பின்தங்கியுள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளார். இதுவே, பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலினின் ஆட்சியில் தொழில்துறை பின்தங்கியுள்ளது என்பதற்கு சான்று.

    இந்தக் கொடுமையை அனுபவிக்கும் தமிழக மக்கள், 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஸ்டாலின் திமுக-விற்கு 'தோல்வி'யை பரிசளித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் அமர்த்துவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விரிவான திட்ட அறிக்கை, வடிவமைப்பு தயார் செய்ய டெண்டரை தமிழ்நாடு அரசு கோரியுள்ளது.
    • வண்ணத்துப்பூச்சி தோட்டம் உள்ளிட்ட 25 வகையான வசதிகளுடன் உருவாகிறது.

    ஆக்கிரமிப்புகளால் வேளச்சேரி ஏரியின் பரப்பு பெருமளவு குறைந்திருப்பது குறித்தும், கழிவுநீர் கலப்பதாலும், குப்பைகள் கொட்டப்படுவதாலும் ஏரி மாசடைந்துள்ளது குறித்தும், வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்கத்தின் துணைத் தலைவர் குமரதாசன் என்பவர் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.

    இதை விசாரித்த தீர்ப்பாயம், 'வெள்ள பாதிப்பிலிருந்து வேளச்சேரியை பாதுகாக்க, கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் நீர்நிலையுடன் கூடிய பூங்கா அமைக்கலாம்' என, யோசனை தெரிவித்தது. இது தொடர்பாக தமிழக அரசின் கருத்தையும் கேட்டது.

    மழை பெய்தால் வெள்ளத்தாலும், மழை பொய்த்தால் வறட்சியையும் எதிர்கொள்ளும் சென்னையில், பசுமை பூங்கா அமைப்பதை விட புதிய நீர்நிலைகளை உருவாக்குவதே சிறந்த முடிவாக இருக்கும் என தீர்ப்பாயம் தெரிவித்து இருந்தது.

    இதனை தொடர்ந்து, தமிழக அரசின் தலைமை செயலர், சம்பந்தப்பட்ட அரசு துறைகளின் செயலர்களுடன் ஆலோசனை நடத்தி, கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் நீர்நிலை அமைக்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தி, முடிவெடுக்க வேண்டும் என அவகாசம் கேட்டிருந்தது.

    தொடர்ந்து, கிண்டி ரேஸ் கிளப்பில் மழை நீரை சேகரிக்கும் வகையில் 4 குளங்களை அமைக்கும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டது.

    இந்நிலையில், கிண்டி ரேஸ் கிளப்பிடம் இருந்து மீட்கப்பட்ட 118 ஏக்கரில் பசுமை பூங்கா அமைகிறது. இதற்காக, விரிவான திட்ட அறிக்கை, வடிவமைப்பு தயார் செய்ய டெண்டரை தமிழ்நாடு அரசு கோரியுள்ளது.

    வண்ண மலர் படுகைகள், மலர் சுரங்கப் பாதை, தோட்டங்கள், கண்ணாடி மாளிகை, பறவைகள் இடம், வண்ணத்துப்பூச்சி தோட்டம் உள்ளிட்ட 25 வகையான வசதிகளுடன் உருவாகிறது.

    ×