என் மலர்
சென்னை
- நயினார் நாகேந்திரன் அவர்கள் எனது அழைப்பை எடுக்கவில்லை.
- பாரதப் பிரதமர் அவர்களை சந்திக்க அனுமதி கேட்டு 24-07-2025 அன்று நான் கடிதம் எழுதினேன்.
"தன்னிடம் சொல்லி இருந்தால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன் என நயினார் நாகேந்திரன் தெரிவித்ததில் எள்ளளவும் உண்மை இல்லை என்று NDA கூட்டணியில் இருந்து விலகிய ஓ.பன்னீர் செல்வம் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள்,"தன்னிடம் சொல்லியிருந்தால் மாண்புமிகு பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன்"என்று தெரிவித்துள்ளார்.
இதில் எள்ளளவும் உண்மை இல்லை. எனவே, இது குறித்த உண்மை நிலையை தெரிவிப்பது என் கடமை.
நயினார் நாகேந்திரன் அவர்களை ஆறு முறை கைபேசியில் தொடர்புகொள்ள நான் முயற்சித்தேன். ஆனால், நயினார் நாகேந்திரன் அவர்கள் எனது அழைப்பை எடுக்கவில்லை.
எனவே, நயினார் நாகேந்திரன் அவர்களிடம் பேச வெண்டுமென்ற தகவலை குறுஞ்செய்தி மூலம் அவருக்கு அனுப்பியிருந்தேன். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதற்கும், நயினார் நாகேந்திரன் அவர்கள் எந்தவிதப் பதிலும் அளிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து, கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான இரா. வைத்திலிங்கம் மற்றும் கழக துணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பி.எச். மனோஜ் பாண்டியன் ஆகியோரை கலந்தாலோசித்த பின்னர், பாரதப் பிரதமர் அவர்களை சந்திக்க அனுமதி கேட்டு 24-07-2025 அன்று நான் கடிதம் எழுதினேன்.
அந்தக் கடிதம் அனைத்து பத்திரிகைகளுக்கும் அனுப்பப்பட்டது.
உண்மையிலேயே, நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு பிரதமர் அவர்களை நான் சந்திக்க வேண்டுமென்ற விருப்பம் இருக்குமேயானால், நான் கைபேசியில் அழைத்த அழைப்பை பார்த்தோ அல்லது குறுஞ்செய்தியின் அடிப்படையிலோ என்னிடம் பேசியிருக்கலாம்.
அல்லது எனது கடிதம் பத்திரிகைகளுக்கு வெளியிடப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு அதற்கான ஏற்பாட்டினை செய்திருக்கலாம். ஆனால் எதையும் செய்யவில்லை.
இதிலிருந்து, நான் பிரதமர் அவர்களை சந்திப்பதில் அவருக்கு விருப்பமில்லை என்பது தெளிவாகிறது. எனவே, பிரதமர் அவர்களைச் சந்திப்பது தொடர்பாக நான் நயினார் நாகேந்திரன் அவர்களிடம் சொல்லவில்லை என்பது சரியல்ல, உண்மைக்கு புறம்பானது.
நயினார் நாகேந்திரன் அவர்கள் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் என்ற பொறுப்பில் இருக்கிறார். ஆகவே, இனியாவது அவர் உண்மை பேச வேண்டும் என்பதே எனது விருப்பம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமுடன் வீடு திரும்பினார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தார்.
மாநிலங்களவையில் புதிதாக தேர்வான எம்.பி.க்கள் பதவி ஏற்பு விழா கடந்த ஜூலை மாதம் 25ம் தேதி நடைபெற்றது.
அப்போது, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மேல்சபையின் எம்.பியாக, தமிழில் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் எடுத்துக் கொண்டார்.
இதற்கிடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு தலை சுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், சிகிச்சைகள் முடிந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமுடன் வீடு திரும்பினார்.
இந்நிலையில், சென்னை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் கமல்ஹாசன் எம்.பி. சந்தித்துள்ளார்.
அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
- டிஜஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.
- நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனக்கு எதிராக ஆதாரமில்லாத அவதூறு கருத்துகளை தெரிவிக்க சீமானுக்கு தடை விதிக்கக் கோரியும், ரூ.2.10 கோடி மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் வருண் குமார் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது, டிஐஜி வருண்குமாருக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
- சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருது பெறும் பார்க்கிங் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்.
- வாத்தி திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது பெறும் ஜி.வி.பிரகாஷ் அவர்களுக்கு வாழ்த்துகள்.
71வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தேசிய திரைப்பட விருதுகளை வென்ற திரைக்கஞைர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
71-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் மொழிப் படங்களில் இருந்து,
சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருது பெறும் பார்க்கிங் படக்குழுவினருக்கும்,
சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது பெறும் பார்க்கிங் திரைப்பட இயக்குனர் ராம்குமார் அவர்களுக்கும்,
பார்க்கிங் திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெறும் அன்புச் சகோதரர் M. S. பாஸ்கர் அவர்களுக்கும்,
வாத்தி திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது பெறும் ஜி.வி.பிரகாஷ் அவர்களுக்கும்,
லிட்டில் விங்க்ஸ் ஆவணப் படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருது பெறும் சரவணமருது சௌந்தரபாண்டி மற்றும் மீனாட்சி சோமன் ஆகியோருக்கும்,
மேலும் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து மொழிகளைச் சார்ந்த படக்குழுவினருக்கும், திரைக் கலைஞர்களுக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தங்களின் தொடர் கலைப் படைப்புகள் வாயிலாக, மக்களை மென்மேலும் மகிழ்வூட்டவும், விழிப்பூட்டவும் செய்திட வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நமக்கு ஒரே தலைவர் த.வெ.க. தலைவர் விஜய் தான்.
- நம் ஒரே தலைவரான விஜயுடன் கைகோர்த்து தீவிரமாக களப் பணியாற்ற உறுதி ஏற்போம்.
சென்னை:
தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பணிகளை கட்சி தலைவர் விஜய் உத்தரவின் பேரில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தீவிரமாக செய்து வருகிறார்.
இதைத் தொடர்ந்து த.வெ.க. நிகழ்ச்சிகளிலும், பேனர்களிலும் கட்சி தலைவர் விஜய், பொதுச் செயலாளர் என்.ஆனந்த் புகைப்படங்களை த.வெ.க.வினர் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் த.வெ.க. நிகழ்ச்சிகளில் தலைவர் விஜய் படத்தை தவிர வேறு யாருடைய படத்தையும் பயன்படுத்தக் கூடாது என த.வெ.க. வினருக்கு உத்தரவிட்டு உள்ளார்.
இது தொடர்பாக த.வெ.க.வினருக்கு அவர் அனுப்பி உள்ள கடிதத்தில், நமக்கு ஒரே தலைவர் த.வெ.க. தலைவர் விஜய் தான். வருகிற 2026 தேர்தலில் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்து தலைவர் விஜயை தமிழக முதலமைச்சர் அரியாசனத்தில் அமர வைப்பதே நமது குறிக்கோள்.
இதற்காக நம் ஒரே தலைவரான விஜயுடன் கைகோர்த்து தீவிரமாக களப் பணியாற்ற உறுதி ஏற்போம்.
த.வெ.க. நிகழ்ச்சிகளிலோ, விளம்பர பேனர்களிலோ எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் கட்சி தலைவர் விஜய் புகைப்படம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். என்னுடைய படத்தை யாரும் பயன்படுத்தக் கூடாது.
இதை ஏற்கனவே நான் நிர்வாகிகளிடம் வலியுறுத்தி இருக்கிறேன். மீண்டும் தற்போது நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இந்த கடிதத்தின் மூலம் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
மீறி பயன்படுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மீண்டும் நான் சொல்லிக் கொள்வது மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர் விஜய் என்பதை மக்களிடம் கொண்டு சென்று வெற்றி பெறுவோம் என்பதுதான்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது மட்டுமின்றி மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளை செல்போனில் தொடர்பு கொண்டு த.வெ.க. தலைவர் விஜய் படத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.
- முதலமைச்சருக்கு சற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் உடன் பிறப்பே வா நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
- தி.மு.க. வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு ஏற்ப தேர்தல் பணியாற்ற வேண்டும்.
2026 சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வரும் அவர் தி.மு.க. நிர்வாகிகளையும், தொகுதி வாரியாக அழைத்து பேசி வருகிறார்.
உடன் பிறப்பே வா என்ற தலைப்பில் 234 தொகுதிகளிலும் உள்ள ஒன்றிய, நகர, பேரூர் கழக தி.மு.க. நிர்வாகிகளை அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். இதுவரை 42 தொகுதி நிர்வாகிகளை அவர் சந்தித்து உள்ளார்.
இந்தநிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் உடன் பிறப்பே வா நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது.
தற்போது 12 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் உடன் பிறப்பே வா சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் நடைபெற்றது.
இன்று நடந்த சந்திப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்திரமேரூர் தொகுதியில் உள்ள ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். ஒவ்வொரு நிர்வாகியிடமும் அவர் கருத்துக்களை கேட்டறிந்தார்.
தி.மு.க. நிர்வாகிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தகவல்கள் சேகரித்து வைத்திருந்தார். அதன் அடிப்படையில் அவர் நிர்வாகிகளிடம் கேள்விகளை எழுப்பி தொகுதி நிலவரம் பற்றி ஆய்வு செய்தார்.
தி.மு.க. வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு ஏற்ப தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
- நாம் தமிழர் கட்சி மாபெரும் மக்கள் திரள் போராட்டங்களை முன்னெடுக்கும்.
- ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பா.ஜ.க. மக்களாட்சியை குழிதோண்டி புதைக்கிறது.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சிறப்புத் திருத்தம் என்ற பெயரிலான புதிய நடைமுறையின் மூலம், வடமாநிலத்தவரைத் தமிழ்நாட்டு வாக்காளர்களாக மாற்றுவது தமிழர்களின் இன உரிமைப் பறிப்பு ஆகும். இந்த நடவடிக்கையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சீமான் கூறியதாவது:
* வடமாநிலத்தவர் வருகையை ஆதரித்த பெருமக்கள் இப்போது என்ன பதில் கூறப்போகிறார்கள்.
* வாக்காளர் அட்டை என்பது தமிழ்நாட்டின் அரசதிகாரத்தை தீர்மானிக்கும் உரிமை சாசனமாகும்.
* ஆட்சி அதிகாரத்தை கைப்பட்ட பா.ஜ.க. மக்களாட்சியை குழிதோண்டி புதைக்கிறது.
* மக்களிடம் அதிகாரப் பகைமையை மூட்டி நாட்டின் ஒற்றுமையை சிதைக்க வழிவகுக்கும்.
* வாக்காளர் சிறப்பு திருத்தத்திற்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்று திரள வேண்டும்.
* நாம் தமிழர் கட்சி மாபெரும் மக்கள் திரள் போராட்டங்களை முன்னெடுக்கும்.
* வாக்காளர் சிறப்பு திருத்தமானது தேர்தல் நடைமுறையையே வெற்றுசடங்காக மாற்றும் எதேச்சதிகாரம்.
* வடமாநிலத்தவரை தமிழ்நாட்டு வாக்காளராக்கும் இன உரிமை பறிப்பை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அன்புமணி அறிவித்துள்ள பொதுக்குழு கட்சி விதிகளுக்கு எதிரானது.
- அன்புமணி கூட்டியுள்ள பொதுக்குழு செல்லாது.
சென்னை:
பா.ம.க. பொதுக்குழுவுக்கு அதன் நிறுவனர் ராமதாசுக்கு அன்புமணி அழைப்பு விடுத்து இருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் கூறுகையில்,
அன்புமணி அறிவித்துள்ள பொதுக்குழு கட்சி விதிகளுக்கு எதிரானது. அன்புமணி கூட்டியுள்ள பொதுக்குழு செல்லாது. 15 நாட்களுக்கு முன்னர் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அறிவிப்புக் கொடுக்க வேண்டும்.
தந்தையை உளவு பார்த்த ஒரே மகன் அன்புமணி தான். தனது இல்லத்தில் ஒட்டுக்கேட்பு கருவி வைத்தது அன்புமணி தான் என்று குற்றம்சாட்டினார்.
- அன்புமணி ராமதாஸ் வருகிற 9-ந்தேதி மாமல்லபுரத்தில் பொதுக்குழுவை கூட்டியுள்ளார்.
- பா.ம.க. பொதுக்குழு ஆண்டுக்கு ஒரு முறை ஜனவரி மாதம் கூட்டப்படுவது வழக்கம்.
சென்னை:
பா.ம.க.வில் டாக்டர் ராமதாசுக்கும்-அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இருவரும் மாறி மாறி கூட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் பொதுக்குழு கூட்டத்தையும் இருவரும் தனித்தனியாக கூட்டியுள்ளார்கள். டாக்டர் ராமதாஸ் தலைமையில் திண்டிவனத்தில் 17-ந்தேதி சிறப்பு பொதுக்குழு நடக்கிறது.
அன்புமணி ராமதாஸ் வருகிற 9-ந்தேதி மாமல்லபுரத்தில் பொதுக்குழுவை கூட்டியுள்ளார். அதனால் அரசியலில் மேலும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் 'கான்ப்ளுயன்ஸ்' அரங்கில் கூட்டப்படும் பொதுக்குழுவிற்கு தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 3300 பேர் அமர்வதற்கு இருக்கைகள் அமைக்கப்படுகிறது. அந்த 3300 பேருக்கும் டாக்டர் அன்புமணி சார்பில் அழைப்பு அனுப்பப்படுகிறது.
பொதுக்குழுவில் தற்போதைய அரசியல் நிலவரம், கூட்டணி விவகாரம், கட்சியில் ஏற்பட்டு உள்ள குழப்பம் ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படுகிறது. டாக்டர் ராமதாஸ் தலைமையில் செயல்படும் பா.ம.க.விற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த பொதுக்குழு கூட இருக்கிறது.
பா.ம.க. பொதுக்குழு ஆண்டுக்கு ஒரு முறை ஜனவரி மாதம் கூட்டப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்டது. ஆனால் தற்போது 2-வது முறையாக பொதுக்குழுவை கூட்டி தொண்டர்கள், நிர்வாகிகளை வரவழைத்து பேசி கட்சியை வலுப்படுத்த அன்புமணி திட்டமிட்டு உள்ளார்.
- கவின் கடந்த 27-ந்தேதி சுர்ஜித் என்பவரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
- கவின் திருவுடலுக்கு மலர் வணக்கம் செலுத்தி, அவரை இழந்து ஆற்ற முடியா துயரத்தில் வாடும் பெற்றோருக்கு சீமான் ஆறுதல் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகரின் மகனான கவின் செல்வகணேஷ் (27). ஐ.டி. ஊழியரான கவின் கடந்த 27-ந்தேதி பாளை கே.டி.சி. நகர் பகுதியில் வைத்து அதே பகுதியை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தம்பதியான சரவணன்-கிருஷ்ணகுமாரியின் மகன் சுர்ஜித் (24) என்பவரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்த ஆணவக்கொலை சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுர்ஜித், அவரது தந்தை சரவணன் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
பட்டப்பகலில் வெட்டி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் தம்பி கவின் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வில் பங்கேற்று, தம்பியின் திருவுடலுக்கு மலர் வணக்கம் செலுத்தி, தம்பியை இழந்து ஆற்ற முடியா துயரத்தில் வாடும் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்து, உரிய நீதியைப் பெற்றுத்தர நாம் தமிழர் கட்சி துணை நிற்கும் என்று உறுதி அளித்தேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- என்னை பொறுத்தவரை அரசின் திட்டங்களை ஒவ்வொரு தனிநபரையும் சென்றடைய வேண்டும்.
- கிராமப்புறங்களில் உள்ள ஏழைகளுக்கும் சிறந்த மருத்துவம் கிடைக்க வேண்டும்.
சென்னை:
'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம் என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* உடல் நலமாக இருந்தால் தான் மகிழ்ச்சியோடு வாழ முடியும்.
* இன்று தொடங்கப்பட்ட நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் மாற்றுத்திறனாளி, மனநல பாதிப்பு, இதய நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
* எந்த ஒரு திட்டம் கொண்டு வந்தாலும் அதில் ஒருவர் கூட விடுபடக்கூடாது என்பது தான் எங்களது நோக்கம்.
* என்னை பொறுத்தவரை அரசின் திட்டங்களை ஒவ்வொரு தனிநபரையும் சென்றடைய வேண்டும்.
* கிராமப்புறங்களில் உள்ள ஏழைகளுக்கும் சிறந்த மருத்துவம் கிடைக்க வேண்டும்.
* நகர்ப்புறங்களில் கிடைக்கும் மருத்துவ சேவை கிராமப்புற மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் புதிய திட்டம்
* மருத்துவமனைக்கு செல்ல முடியாதவர்களுக்கும் மருத்துவ சேவை அளிக்கவே நலன் காக்கும் ஸ்டாலின்
*முகாமிற்கு வருவோரை உங்கள் குடும்பத்தில் ஒருவராக பாவித்து சிகிச்சை வழங்க வேண்டும் என்றும் மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
- தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது கொரோனா உச்சக்கட்டத்தில் இருந்தது.
- கொரோனா காலத்தில் அனைத்து அமைச்சர்களும், சுகாதாரத்துறை அமைச்சர்களாக மாறி பணியாற்றினர்.
சென்னை:
'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம் என்ற புதிய திட்டத்தை சென்னை சாந்தோம் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பின் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
மருத்துவமனையில் இருந்தபோதும் அரசு பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினேன். உங்களுடன் ஸ்டாலின் முகாம் எப்படி நடக்கிறது என்பது குறித்த ஆட்சியர்கள், அதிகாரிகளுடன் பேசிக்கொண்டே இருந்தேன்.
நாட்டு மக்களின் நலனே எனது நலன். மருத்துவமனையில் இருந்தாலும் மக்கள் பணி ஆற்றுவதே என் விருப்பம்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது கொரோனா உச்சக்கட்டத்தில் இருந்தது. கொரோனா காலத்தில் அனைத்து அமைச்சர்களும், சுகாதாரத்துறை அமைச்சர்களாக மாறி பணியாற்றினர்.
கல்விக்காகவும், மருத்துவத்திற்காகவும் பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு கொண்டு வந்துள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை ஐ.நா. சபையை விருது கொடுத்து பாராட்டி உள்ளது.
என்னை பொறுத்தவரை அரசின் திட்டங்கள் ஒவ்வொரு தனிநபரையும் சென்றடைய வேண்டும். மக்களை சந்தித்தால் தான் எனக்கு உற்சாகம் என்றார்.






