search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க.
    X
    அ.தி.மு.க.

    பாராளுமன்ற மேல்சபை தேர்தல்- அ.தி.மு.க. வேட்பாளர் தேர்வில் இழுபறி நீட்டிப்பு

    வேட்புமனு தாக்கல் தொடங்குவதற்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் மேல்சபை எம்.பி. பதவிக்கான வேட்பாளர்களை விரைவில் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் ஏற்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தை சேர்ந்த மேல்சபை எம்.பி.க்களான தி.மு.க.வை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், அ.தி.மு.க.வை சேர்ந்த நவநீத கிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், விஜயகுமார் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து புதிய எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 10-ந்தேதி நடக்கிறது.

    இதற்கான வேட்புமனு தாக்கல் 24-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    தி.மு.க. சார்பில் மேல்சபை எம்.பி. தேர்தலில் தஞ்சை கல்யாண சுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், வக்கீல் கிரிராஜன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    ஒரு இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் சார்பில் போட்டியிடுபவர் யார்? என்கிற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

    எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் அ.தி.மு.க. சார்பில் 2 பேரை மேல்சபை எம்.பி.க்களாக தேர்வு செய்ய முடியும் என்பதால் அந்த கட்சி தலைமை தீவிர வேட்பாளர் தேர்வில் ஈடுபட்டுள்ளது. ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க. இரட்டை தலைமையின் கீழ் இயங்கி வருகிறது.

    ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராக வும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து கட்சியை வழிநடத்தி வருகிறார்கள். இதனால் எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும், 2 தலைவர்களின் ஆதரவாளர்களும் ஒன்று கூடி ஆலோசனை நடத்த வேண்டியுள்ளது.

    அந்த வகையில் மேல்சபை எம்.பி. தேர்தல் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் கூடி 2 நாட்களுக்கு முன்னர் ஆலோசனை நடத்தினர்.

    இந்த கூட்டத்தில் மேல்சபை எம்.பி. வேட்பாளர்களாக யாரை அறிவிப்பது என்பது பற்றி விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

    2 எம்.பி. பதவிகளை பிடிக்க கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆதரவாளர்கள் பலர் தங்களுக்குத்தான் மேல்சபை எம்.பி. பதவியை வழங்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.

    எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் யாரை வேட்பாளர்களாக நிறுத்தலாம் என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

    இதில் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்களான முன்னாள் எம்.எல்.ஏ. வக்கீல் இன்பதுரை, ராஜன்செல்லப்பாவின் மகனான சத்யன், ராமநாதபுரத்தை சேர்ந்த கிருத்திகா முனியசாமி ஆகியோரின் பெயர்கள் முன் நிறுத்தப்பட்டன. தஞ்சை மாவட்டத்தில் இருந்து ஒருவரை தேர்வு செய்யலாம் என்கிற கோரிக்கையும் எழுந்தது.

    முன்னாள் அமைச்சர்களான சி.வி.சண்முகம், ஜெயக்குமார், கோகுல இந்திரா, செம்மலை மற்றும் சையதுகான் ஆகியோரது பெயர்களும் முன் நிறுத்தப்பட்டுள்ளன.

    இப்படி அ.தி.மு.கவில் மேல்சபை எம்.பி. பதவிகளை பிடிக்க 10 பேர் வரை போட்டி போட்டு களம் இறங்கி இருக்கிறார்கள். இதனால் வேட்பாளர்களை தேர்வு செய்யும் விஷயத்தில் அ.தி.மு.க. தலைமை திணறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக வேட்பாளர்கள் தேர்வில் கடும் இழுபறி நீடித்து வருகிறது.

    2 பதவிக்கு பலர் மல்லுக்கட்டுவதால் வேட்பாளர்கள் தேர்வில் சிக்கல் நீடித்து வருகிறது.

    வேட்புமனு தாக்கல் தொடங்குவதற்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் மேல்சபை எம்.பி. பதவிக்கான வேட்பாளர்களை விரைவில் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் ஏற்பட்டுள்ளது.

    மேல்சபை எம்.பி. பதவியை கேட்கும் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள், தாங்கள் இதுவரை கட்சியில் ஆற்றியுள்ள பணிகள், தற்போது செய்து வரும் வேலைகள் ஆகியவற்றை எடுத்துக்கூறி சீட்டு கேட்டு வருகிறார்கள்.

    இதையெல்லாம் மனதில் வைத்து அ.தி.மு.க. தலைமை மேல்சபை எம்.பி. வேட்பாளர்களை இன்னும் சில தினங்களில்தேர்வு செய்து அறிவிக்க உள்ளது. நாளை மறுநாள் மேல்சபை வேட்பாளர்கள் யார் என்பது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் தொடர்ந்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    Next Story
    ×