search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கேஎஸ் அழகிரி
    X
    கேஎஸ் அழகிரி

    ஏற்றுமதி செய்வதை நிறுத்தி வைத்து அத்தியாவசிய பொருள் பட்டியலில் பருத்தியை சேர்க்க வேண்டும்- கே.எஸ்.அழகிரி

    பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதியை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

    ஆடை தயாரிப்பு சந்தையில் சர்வதேச கவனம் பெற்ற திருப்பூர் பின்னலாடை துறையில், ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி வரை ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரலாறு காணாத நூல் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. பின்னலாடை உற்பத்திக்கு அதிகம் பயன்படுத்தும் பருத்தி நூல் கிலோ ரூ.  200க்கு விற்கப்பட்டது. தற்போது ரூ.480 வரை உயர்ந்துள்ளது.

    பருத்தி நூல் விலையை செயற்கையாக உயர்த்திவிட்டு, செயற்கை நூலிழை சந்தை திருப்பூரில் அடி எடுத்து வைக்க மத்திய அரசு காரணமாக இருக்கிறது. 7 மெகா ஜவுளித்திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்த திட்டம் செயற்கை நூலிழை உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவே உள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் பின்னலாடைத் துறையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. நேரடியாகவும் மறைமுகமாகவும் 10 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பருத்தி நூல் விலை உயர்வு காரணமாக அனைவரும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

    மத்திய அரசு

    எனவே, பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதியை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். பருத்தியை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் சேர்த்து பதுக்கல் காரர்களை கட்டுப்படுத்தி ஜவுளித் தொழிலை காக்க முன்வரவேண்டும். ஏற்கனவே மோடி அரசின் அவசர, அலங்கோல ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட கொங்கு மண்டலம் அதிலிருந்து இன்னும் மீளாத நிலையில், பருத்தி நூல் விலை உயர்வால் தொழில்துறை அழிந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்திலும் தமிழகம் தானே என்று மோடி அரசு அலட்சியப்போக்கை கடைபிடித்தால், அதற்கான விலையை நிச்சயம் தர வேண்டியிருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×