search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக தலைவர் முக ஸ்டாலின்
    X
    திமுக தலைவர் முக ஸ்டாலின்

    மக்களுக்கு ரூ.2,500 கொடுப்பதை தடுக்கவில்லை- எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் பதில்

    ‘‘மக்களுக்கு ரூ.2,500 கொடுப்பதை தடுக்கவில்லை. ஏன் குறைவாக கொடுக்கிறீர்கள் என்றுதான் கேட்டேன்’’ என்று எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
    சென்னை:

    அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் நேற்று நடைபெற்ற ‘தமிழகம் மீட்போம்’ 2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டத்தில், கட்சியின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வழியாக பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குத் தனது ஆட்சியின் சாதனை எதையும் சொல்லத் தெரியவில்லை. அப்படி ஏதாவது இருந்தால்தானே சொல்வார். ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் அ.தி.மு.க.வை உடைக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி, திருச்சியில் பேசியிருக்கிறார். அ.தி.மு.க.வை உடைக்க நானோ தி.மு.க.வோ நினைக்கவில்லை, அது அவசியமும் இல்லை. நாங்கள் சொந்த பலத்தில் நிற்பவர்களே தவிர, அடுத்தவர் பலவீனத்தில் குளிர் காய்பவர்கள் அல்ல என்பதை எடப்பாடி பழனிசாமிக்கு சொல்ல விரும்புகிறேன்.

    ஏழைகளுக்கு கொடுப்பதைத் தடுக்கும் இவர் ஒரு தலைவரா என்று கேட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி. கொடுப்பதை நான் தடுக்கவில்லை. ஏன் குறைவாகக் கொடுக்கிறீர்கள் என்று தான் கேட்டேன். ஏப்ரல் மாதம் முதல் ரூ.5 ஆயிரம் கொடுங்கள் என்று சொன்னவன் நான். அப்போதெல்லாம் கொடுக்காத எடப்பாடி பழனிசாமி, இன்று அவர் ஏழைகளுக்கு இரக்கப்பட்டு ரூ.2,500 தரவில்லை; தேர்தலுக்காகக் கொடுக்கிறார். அரசு பணத்தை அ.தி.மு.க. நலனுக்காக கொடுக்கிறார். அ.தி.மு.க. டோக்கன் கொடுத்து அவர்தான் மாட்டிக் கொண்டார்.

    இன்று (நேற்று) 2020-ம் ஆண்டின் இறுதிநாள். நாளை (இன்று) 2021 புத்தாண்டு பிறக்கும்போது அது தமிழகத்துக்கு புதிய விடியலைத் தரும் நாளாக விடியட்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×