search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாராயணசாமி
    X
    நாராயணசாமி

    மத்திய மோடி அரசை எதிர்த்து சிறை செல்லவும் தயார்- நாராயணசாமி ஆவேசம்

    மக்களுக்காக சிறை செல்லவும் தயார் என ராகுல் காந்தி சொல்லி இருந்தார். அதேபோல மோடி அரசை எதிர்த்து நானும் சிறை செல்ல தயங்கமாட்டேன் என்று நாராயணசாமி கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அம்பேத்கர் நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. அமைச்சர் கந்தசாமி தலைமை வகித்தார். முதல்-அமைச்சர் நாராயணசாமி அம்பேத்கார் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி பேசினார்.

    அம்பேத்கார் கொண்டுவந்த இந்திய அரசியலமைப்பு சட்டம் இன்று எந்த நிலைமைக்கு ஆளாகியுள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நேரு, இந்திரா, ராஜீவ், நரசிம்மராவ், மன்மோகன்சிங் என ஏராளமான பிரதமர்கள் இருந்துள்ளனர்.

    அவர்கள் எல்லாம் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக சென்றதில்லை. ஆனால் தற்போது மத்தியில் ஆளும் பா.ஜனதா ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே ரே‌ஷன்கார்டு என்ற வகையில் செயல்படுகிறது.

    தற்போது குடியுரிமை சட்டத்தை புதுப்பித்து பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இதில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50 ஆண்டிற்கு முன்பு வெளியேற்றப்பட்ட பார்சி, சீக்கியர்களை இந்தியாவில் குடியுரிமை தொடர அனுமதித்தும், இஸ்லாமியர்களுக்கு மட்டும் குடியுரிமை கிடையாது என்ற வகையிலும் சட்டத்தை கொண்டுவந்துள்ளனர். இது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஆணிவேரை அசைக்கும் செயல்.

    பிரதமர் மோடி.

    அதேபோல் மத்திய அரசை யார் எதிர்த்து பேசினாலும், எழுதினாலும் வழக்கு தொடரப்படுகிறது. விமர்சனம் செய்தால் சிறையில் அடைக்கப்படுகின்றனர். முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மத்திய பா.ஜனதா அரசை தொடர்ந்து எதிர்த்து பேசி வந்தார். அவர் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லாமல் பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தனர். இன்று அதை நிரூபிக்க முடியாததால் ப.சிதம்பரம் வெளியே வந்துள்ளார்.

    கடந்த 6 ஆண்டுகளாக மக்களை திசை திருப்பி மோடி ஆட்சி செய்து வருகிறார். இனி இது பலிக்காது என்று நமது இளம் தலைவர் ராகுல்காந்தி பேசியுள்ளார். கனவுலகில் மோடியும், அமித்ஷாவும் பறந்துகொண்டிருக்கின்றனர் என கூறியுள்ளார்.

    மக்களுக்காக சிறை செல்லவும் தயார் என ராகுல்காந்தி கூறியுள்ளார். அதேபோல மத்திய பா.ஜனதா, மோடி அரசை எதிர்த்து நானும் சிறை செல்ல தயங்கமாட்டேன்.

    சிறையில் தூக்கி போட்டாலும் கவலையில்லை. புதுவையில் தொல்லை தர ஒரு அம்மா உள்ளார். தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி பயில நிதி ஒதுக்கினால், அதை தடுக்கிறார்.

    இதனை தடுக்க அவர் யார்? ஏற்கனவே நீதிமன்றம் கவர்னருக்கு உரிய அதிகாரம் குறித்து தீர்ப்பளித்துள்ளது. கோர்ட்டு அதிகாரிகளை நேரில் அழைத்து கவர்னரின் அதிகாரம் குறித்து தெரிவித்துள்ளனர். அதிகாரிகளுக்கு உத்தரவிடும் அதிகாரம் கவர்னருக்கு இல்லை என்றும் கூறினர்.

    இருப்பினும் தொடர்ந்து கவர்னர் அதிகாரிகளை அழைத்து பேசி வருகிறார். வழக்கில் 11-ந் தேதி தீர்ப்பு வரவுள்ளது. நமக்கெல்லாம் விடிவுகாலம் பிறக்கிறது. மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தபிறகு நாட்டின் நிலைமை மாறி வருகிறது. 

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் கமலகண்ணன், எம்.எல்.ஏ. விஜயவேணி, ஆதிதிராவிடர் பிரிவு தலைவர் வீரமுத்து, பொதுச்செயலாளர் கருணாநிதி, செயலாளர் சாம்ராஜ், ரகுமான், கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×