search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புயல் பாதித்த பகுதிகளை அமைச்சர்கள் தத்து எடுக்க வேண்டும்- இளங்கோவன் ஆலோசனை
    X

    புயல் பாதித்த பகுதிகளை அமைச்சர்கள் தத்து எடுக்க வேண்டும்- இளங்கோவன் ஆலோசனை

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் தத்து எடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் ஆலோசனை வழங்கியுள்ளார். #GajaCylone #Congress #Elangovan
    சென்னை:

    கஜா புயல் பாதித்த பட்டுக்கோட்டை பகுதியை தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார். புயல் பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து அவர் கூறியதாவது:-

    பட்டுக்கோட்டை சுற்று வட்டாரத்தில் 8 கிராமங்களை நேரில் சென்று பார்த்தேன். விமானத்தில் குண்டு வீசி அழிக்கப்பட்டது போல் அழிந்துகிடக்கிறது.

    உட்புற கிராமங்களுக்கு இன்னும் யாரும் செல்லவில்லை. மின்சார வசதி கிடைக்க ஒரு மாதம் ஆகலாம் என்கிறார்கள்.

    அமைச்சர்களும், அதிகாரிகளும் மெயின் ரோடுகள் வழியாக செல்கிறார்கள். கிராமங்களுக்குள் செல்ல வேண்டும். இதனால்தான் மக்கள் கோபப்படுகிறார்கள். எங்களையும் சில இடங்களில் வழிமறித்தார்கள். அவர்களிடம் நாங்கள் காங்கிரஸ்காரர்கள் என்று சொன்ன பிறகுதான் விட்டார்கள்.

    மிகப்பெரிய துயரில் மக்கள் சிக்கி கிடக்கிறார்கள். அவர்களை உடனடியாக மீட்க வேண்டியது அவசியம்.

    மத்திய குழு வருகை, நிவாரணம் வழங்குதல் ஒரு புறம் நடக்கட்டும். அமைச்சர்கள் எல்லோரும் வசதியாகத்தானே இருக்கிறார்கள். ஒவ்வொரு யூனியனையும் ஒன்றிரண்டு அமைச்சர்கள் சேர்ந்து தத்தெடுங்கள். அங்கேயே போய் முகாமிடுங்கள். நிவாரண பணிகளை செய்யுங்கள். ஒரு இடைத்தேர்தல் வந்தால் எப்படி தெரு தெருவாக முகாமிட்டு முழு வீச்சில் பணிகளை செய்கிறார்கள். அதே போல் இந்த பணியையும் மேற்கொண்டால் மக்களை விரைவாகமீட்டு விடலாம்.

    முக்கியமாக ஒரு வி‌ஷயத்தை பார்த்தேன். காமராஜர், கருணாநிதி காலத்தில் நடப்பட்ட பல மின்கம்பங்கள் தாக்கு பிடித்துள்ளன.

    ஆனால் ஜெயலலிதா காலத்து மின்கம்பங்கள்தான் பெருமளவு உடைந்து விழுந்துள்ளது. அந்த அளவுக்கு உறுதி தன்மையோடு அமைத்து இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    பாதிக்கப்பட்ட 8 கிராமங்களில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை இளங்கோவன் வழங்கினார்.

    இதில் காங்கிரஸ் மாநில பொருளாளர் நாசே ஜே ராமச்சந்திரன், நிர்வாகிகள் வி.ஆர்.சிவராமன், நாசே ஆர்.ராஜேஷ், கே. மகேந்திரன், ஜெரோம் ஆரோக்கியராஜ், ராஜதம்பி, வைரக்கன்னு, ஏ.ஜி.சிதம்பரம், திருச்சி வேலுசாமி, மற்றும் பலர் உடன் சென்றனர்.

    மேலும் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சொந்த ஊரான செங்கப்படுத்தான்காடு, சேண்டாக் கோட்டை, குடிசை வீடு இடிந்து நான்கு பேர் உயிரிழந்த சிவக்கொல்லை கிராமங்களில் ஆறுதல் தெரிவித்து நிவாரண பொருட்களை வழங்கினார். #GajaCylone #Congress #Elangovan
    Next Story
    ×