search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ADMK Ministers"

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் தத்து எடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் ஆலோசனை வழங்கியுள்ளார். #GajaCylone #Congress #Elangovan
    சென்னை:

    கஜா புயல் பாதித்த பட்டுக்கோட்டை பகுதியை தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார். புயல் பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து அவர் கூறியதாவது:-

    பட்டுக்கோட்டை சுற்று வட்டாரத்தில் 8 கிராமங்களை நேரில் சென்று பார்த்தேன். விமானத்தில் குண்டு வீசி அழிக்கப்பட்டது போல் அழிந்துகிடக்கிறது.

    உட்புற கிராமங்களுக்கு இன்னும் யாரும் செல்லவில்லை. மின்சார வசதி கிடைக்க ஒரு மாதம் ஆகலாம் என்கிறார்கள்.

    அமைச்சர்களும், அதிகாரிகளும் மெயின் ரோடுகள் வழியாக செல்கிறார்கள். கிராமங்களுக்குள் செல்ல வேண்டும். இதனால்தான் மக்கள் கோபப்படுகிறார்கள். எங்களையும் சில இடங்களில் வழிமறித்தார்கள். அவர்களிடம் நாங்கள் காங்கிரஸ்காரர்கள் என்று சொன்ன பிறகுதான் விட்டார்கள்.

    மிகப்பெரிய துயரில் மக்கள் சிக்கி கிடக்கிறார்கள். அவர்களை உடனடியாக மீட்க வேண்டியது அவசியம்.

    மத்திய குழு வருகை, நிவாரணம் வழங்குதல் ஒரு புறம் நடக்கட்டும். அமைச்சர்கள் எல்லோரும் வசதியாகத்தானே இருக்கிறார்கள். ஒவ்வொரு யூனியனையும் ஒன்றிரண்டு அமைச்சர்கள் சேர்ந்து தத்தெடுங்கள். அங்கேயே போய் முகாமிடுங்கள். நிவாரண பணிகளை செய்யுங்கள். ஒரு இடைத்தேர்தல் வந்தால் எப்படி தெரு தெருவாக முகாமிட்டு முழு வீச்சில் பணிகளை செய்கிறார்கள். அதே போல் இந்த பணியையும் மேற்கொண்டால் மக்களை விரைவாகமீட்டு விடலாம்.

    முக்கியமாக ஒரு வி‌ஷயத்தை பார்த்தேன். காமராஜர், கருணாநிதி காலத்தில் நடப்பட்ட பல மின்கம்பங்கள் தாக்கு பிடித்துள்ளன.

    ஆனால் ஜெயலலிதா காலத்து மின்கம்பங்கள்தான் பெருமளவு உடைந்து விழுந்துள்ளது. அந்த அளவுக்கு உறுதி தன்மையோடு அமைத்து இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    பாதிக்கப்பட்ட 8 கிராமங்களில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை இளங்கோவன் வழங்கினார்.

    இதில் காங்கிரஸ் மாநில பொருளாளர் நாசே ஜே ராமச்சந்திரன், நிர்வாகிகள் வி.ஆர்.சிவராமன், நாசே ஆர்.ராஜேஷ், கே. மகேந்திரன், ஜெரோம் ஆரோக்கியராஜ், ராஜதம்பி, வைரக்கன்னு, ஏ.ஜி.சிதம்பரம், திருச்சி வேலுசாமி, மற்றும் பலர் உடன் சென்றனர்.

    மேலும் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சொந்த ஊரான செங்கப்படுத்தான்காடு, சேண்டாக் கோட்டை, குடிசை வீடு இடிந்து நான்கு பேர் உயிரிழந்த சிவக்கொல்லை கிராமங்களில் ஆறுதல் தெரிவித்து நிவாரண பொருட்களை வழங்கினார். #GajaCylone #Congress #Elangovan
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் முழுமையாக சென்றடையாததால் பொதுமக்களை நேரடியாக சந்திக்க அமைச்சர்கள் தயங்குவதாக டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். #TTVDhinakaran #GajaCyclone
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பார்வையிட்டார். அப்போது பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி சேதமடைந்த விவரங்களை கேட்டறிந்தார்.

    சோழகன்பட்டியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமத்தில் உள்ள மக்களை அமைச்சர்கள் யாரும் இதுவரை நேரில் சென்று சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறவில்லை. ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் 24 மணி நேரமும் அதிகாரிகளையும் பணியாற்ற விடவில்லை. நிவாரண பணிகள் முழுமையாக மக்களை சென்றடையவில்லை. எனவே தான் பொதுமக்களை நேரடியாக சந்திப்பதற்கு அமைச்சர்கள் தயங்குகின்றனர்.

    இதனால்தான் காரிலேயே அவர்கள் வலம் வருகின்றனர். இத்தனைக்கும் இடையே பொதுமக்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அனைத்து கிராமங்களிலும் திண்டாடி வருகின்றனர். இதனை தமிழக அரசும் கண்டுகொள்ளவில்லை, மத்திய அரசும் கண்டு கொள்ளவில்லை. மத்திய அரசு உடனடியாக தேசியப் பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவித்து உடனடியாக முதற்கட்டமாக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.

    கஜா புயலால் நான்கு மாவட்டங்களில் மட்டும் 30 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கும். முகாம்களிலும், பள்ளிகளிலும் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

    இயல்பு நிலை திரும்பிவிட்டது என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற செயலில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. அவர்கள் உடனடியாக களத்திற்கு வந்து பணியாற்ற வேண்டும்.


    புயலால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய நிவாரணங்களை அரசு உடனடியாக கணக்கிட்டு வழங்க வேண்டும். தற்போதுதான் கிராமங்களில் வி.ஏ.ஓ.க்கள் கணக்கெடுக்கும் பணியை தொடங்கி உள்ளதாக தகவல் வந்துள்ளது. உங்களது பணிகளை உடனடியாக முடித்து, இழப்பீடு தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #GajaCyclone #TNMinisters
    ஜெயலலிதா சிறைக்கு செல்ல காரணமாக இருந்த தினகரனின் திருட்டுத்தனம் திருப்பரங்குன்றத்தில் எடுபடாது என்று அமைச்சர்கள் பேசினர். #ADMK #TNMinisters #TTVDhinkaran #Thirupparankundram
    மதுரை:

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் ஜெயலலிதா பேரவை சார்பில் 5 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்கும் அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி இன்று நடைபெற்றது.

    அமைச்சர் ஆர்.பி.உதய குமார் தலைமையில் புறப்பட்ட சைக்கிள் பேரணியை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்கள் மதுரை தனக்கன்குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பேசியதாவது:-

    எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க.வில் அவ்வப்போது சில சேதாரங்கள் ஏற்பட்டது உண்டு. ஆனால் அ.தி.மு.க. சேதம் அடையவில்லை. தினகரன், ரஜினி, மு.க.ஸ்டலின், கமல் போன்றவர்கள் முதல்வர் நாற்காலிக்காக கனவு காண்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது.

    இவர்களால் அ.தி.மு.க. சிறிதளவுகூட மக்கள் செல்வாக்கை இழக்காது. திருப்பரங்குன்றம் தொகுதியில் கடந்த 1977-ல் இருந்து அ.தி.மு.க. வெற்றி பெற்று வருகிறது. தொடர்ந்து மக்கள் அ.தி.மு.க.வை வெற்றி பெற வைப்பார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    திருப்பரங்குன்றம் தொகுதியில் எப்போது இடைத்தேர்தல் நடந்தாலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். இந்த வெற்றிக்கு பிறகு தி.மு.க.வின் தலைவராக மு.க.ஸ்டாலின் இருக்கமுடியாது. அதுமட்டுமின்றி தமிழகத்தில் முளைத்துள்ள சிறுசிறு கட்சிகளும் காணாமல் போய்விடும்.


    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 20 ரூபாய் தாளை காட்டி திருட்டுத்தனமாக டி.டி.வி. தினகரன் வெற்றி பெற்றுவிட்டார். அதுபோல திருப்பரங்குன்றத்திலும் திருட்டுத்தனத்தை காட்டலாம் என்று நினைக்கிறார். இங்கே அவரது மாயாஜாலம் வெற்றி பெறாது. இனி வரும் எந்த தேர்தலிலும் தினகரன் போன்றவர்களுக்கு வேலை இருக்காது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. இதுவரை வெற்றி சரித்திரமே படைத்துள்ளது. புரட்சித்தலைவி அம்மா இன்னும் நூறு ஆண்டுகள் தமிழக மக்களுக்கு இந்த கட்சி மக்கள் பணியாற்றும் என்ற லட்சியத்தை கூறியிருக்கிறார். அதே நிறைவேற்றுகின்ற வகையில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வெற்றி அமையும். அதற்கு இங்கு திரண்டுள்ள இளைஞர் பட்டாளமே சாட்சியாக இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.முக. வெற்றி உறுதியாகிவிட்டது. எதிர்த்து நிற்கும் அனைத்து கட்சிகளும் டெபாசிட் இழப்பார்கள் என்பதற்கு இங்கே திரண்டுள்ள கூட்டமே சாட்சியாக இருக்கிறது.

    எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கியபோது அவரை ஆதரித்தது மதுரை மாவட்ட மக்கள் தான். எம்.ஜி.ஆர். தந்த தொகுதி திருப்பரங்குன்றம்.

    தன்னை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்ற அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்தார் தினகரன். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிறைக்குச் செல்ல காரணமாக இருந்தவர் தான் தினகரன்.

    அ.தி.மு.க.வில் உற்சாகமான தொண்டர்கள் உள்ளனர். எனவே இந்த இயக்கத்திற்கு ஒருபோதும் வீழ்ச்சி இல்லை என்றார்.

    அமைச்சர் ஆர்.பி.உதய குமார் பேசியதாவது:-

    அம்மா பேரவை தமிழகம் முழுவதும் அரசின் சாதனைகளை எடுத்துரைக்கும் வகையில் இளைஞர் பட்டாளம் சைக்கிள்களில் சென்று மக்களை சந்தித்து வருகிறது.

    திருப்பரங்குன்றம் தொகுதி முழுவதும் புறப்பட்டுள்ள இளைஞர் பட்டாளம் வாக்காளர்களை நேரில் சந்தித்து அரசின் சாதனைகளை விளக்கி உள்ளது.

    திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். இந்த வெற்றியின் மூலம் அ.தி.மு.க.வை வீழ்த்த யாராலும் முடியாது என்ற வரலாற்றை ஏற்படுத்துவோம்.

    இவ்வாறு அவர் பேசினார். #ADMK #TNMinisters #TTVDhinkaran #Thirupparankundram
    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதி உடல்நலம் மீது அக்கறை செலுத்தும் அ.தி.மு.க. அமைச்சர்கள், ‘‘தமிழுக்காக பாடுபட்டவர்’’ என புகழாரம் சூட்டியிருப்பது அரசியல் வரலாற்றில் வரவேற்பை பெற்றுள்ளது. #Karunanidhi
    சென்னை:

    உடல்நல குறைவு காரணமாக காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதி நலம் பெற வேண்டி, தமிழகம் முழுவதும் வழிபாடுகள் நடந்து வருகின்றன.

    துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி ஆகியோர் கோபாலபுரத்தில் உள்ள வீட்டுக்கு சென்று கருணாநிதியின் உடல்நிலை பற்றி விசாரித்தனர்.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்த ஓ.பன்னீர் செல்வமும் அமைச்சர்களும், கருணாநிதியின் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், அவர் விரைவில் மீண்டும் தனது அரசியல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்தனர்.


    அரசியல் களத்தில் ஜெயலலிதாவும், கருணாநிதியும், எதிரும் புதிருமாக கோலோச்சிக் கொண்டிருந்த நேரத்தில், அ.தி.மு.க.வினரும், தி.மு.க.வினரும் எலியும், பூனையும் போலவே இருந்தனர். 2 கட்சிகளின் நிர்வாகிகளும், நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டாலும், வணக்கம் சொல்வதற்கு கூட அச்சப்படும் நிலையே காணப்பட்டது.

    ஜெயலலிதாவின் மரணம் அரசியல் களத்தில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் அ.தி.மு.க. அமைச்சர்களின் நடவடிக்கையில் இப்போது பெரிய அளவில் வரவேற்கத்தக்க வகையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அரசியல் வேறுபாடுகளை மறந்து, நலம் விசாரிப்பது வட மாநிலங்களில் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படுவது இல்லை. ஆனால் தமிழகத்தில் அதுபோன்ற நிலை காணப்படுவதில்லை. இப்போதுதான் அதனை பார்க்க முடிகிறது.

    கருணாநிதி பூரண நலம் பெறவேண்டும் என்றும், அவருக்காக வேண்டிக் கொள்வதாகவும் அமைச்சர்கள் கூறி வருகிறார்கள். இதன் மூலம் தமிழகத்திலும் அரசியல் நாகரீகம் துளிர் விட்டுள்ளது.


    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், கருணாநிதியை பெரியவர் என்று குறிப்பிட்டார். கருணாநிதிக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும், அவர் விரைவில் பூரண குணம் அடையவேண்டும் என்றும் தெரிவித்தார்.

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறும்போது, கருணாநிதி தமிழுக்காக பாடுபட்டவர். அவரது உடல்நிலை தேறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார். பெரியார், அண்ணா வழியில் அரசியல் களம் கண்ட கருணாநிதியுடன் எங்களுக்கு கருத்து வேறுபாடு உண்டு. எப்போதுமே காழ்ப்புணர்ச்சி இருந்தது இல்லை என்றும் கூறினார்.

    அமைச்சர் காமராஜ் அளித்த பேட்டியில், திருவாரூரில் இருந்து சென்று இந்திய அளவில் புகழ் பெற்றவர் என்று கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினார். அரசியலில் அவரது பயணம் நீண்ட பயணமாகும். மூத்த அரசியல்வாதியான அவர் நலம் பெற வேண்டும் என்பதே எல்லோருடைய எண்ணமுமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

    அமைச்சர் செல்லூர் ராஜூ, கருணாநிதி நலம் பெற மீனாட்சி சுந்தரேஸ்வரரை வேண்டிக்கொள்வதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, இளைஞர்களுக்கு வழிகாட்டியாக உள்ள கருணாநிதி நீடூழி வாழ வேண்டும். அவர் ஒரு அரசியல் சாணக்கியர் என்றும் தெரிவித்தார்.

    இவரை போல அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மா.பா.பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோரும் கருணாநிதியை புகழ்ந்து பேசி இருப்பதுடன் அவர் விரைவில் நலம் பெறுவார் என்றும் கூறி உள்ளனர். அ.தி.மு.க. அமைச்சர்களின் இந்த நிலைப்பாடு அரசியல் களத்தில் வரவேற்பை பெற்றுள்ளது. #Karunanidhi #KarunanidhiHealth
    காங்கிரசை பற்றி தேவை இல்லாமல் விமர்சித்தால் அமைச்சர்கள் குறித்து தானும் பேசுவேன் என்று சென்னை விமான நிலையத்தில் திருநாவுக்கரசர் கூறினார். #Congress #Thirunavukkarasar
    ஆலந்தூர்:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    1967-லேயே தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு சமாதி கட்டப்பட்டுவிட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். 1991-ல் காங்கிரசுடன் கெஞ்சி கூத்தாடி ஜெயலலிதா கூட்டணி வைத்தார். ராஜீவ் காந்தி உயிர்தியாகத்தால் ஜெயலலிதா மீண்டும் முதல்- அமைச்சர் ஆனார்.

    எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க.வுக்கு, ஜெயலலிதாவுடன் சேர்த்து சமாதி கட்டி விட்டார்கள். தற்போது பா.ஜனதாவின் பினாமி ஆட்சி, நிழல் ஆட்சிதான் நடைபெறுகிறது. பா.ஜனதாவை சந்தோ‌ஷப்படுத்துவதற்காக அமைச்சர் ஜெயக்குமாரும், அ.தி.மு.க.வினரும் காங்கிரசை விமர்சிக்கிறார்கள்.

    இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் நடைபெறும் ஆட்சியில்தான் அதிக ஊழல் நடந்திருப்பதாக பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கூறி இருக்கிறார். எனவே, இனி பா.ஜனதா தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்காது என்று கருதுகிறேன்.

    தமிழ்நாட்டுக்கு கடந்த 4 ஆண்டுகளில் மத்திய பா.ஜனதா அரசு அதிக நிதி கொடுத்து இருப்பதாக அமித்ஷா கூறியுள்ளார். இது வெறும் ஏட்டளவில் உள்ள புள்ளி விவரம் தான். கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவிலும் எந்த பெரிய தொழிற்சாலைகளும் வரவில்லை. நாட்டில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை.


    தமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றி இருக்கிறார்கள். முக்கிய அம்சங்கள் இதில் இடம் பெறவில்லை.

    அனைத்து கட்சி தலைவர்கள், சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி சட்டத்தை நிறைவேற்றி இருக்க வேண்டும். இப்போது நிறைவேற்றியுள்ள லோக் ஆயுக்தா சட்டத்தால் எந்த பயனும் ஏற்படாது.

    தமிழ்நாட்டில் அ.தி.மு.க. பற்றியும், அமைச்சர்கள் பற்றியும் எனக்கு நன்றாக தெரியும். காங்கிரசை பற்றி தேவை இல்லாமல் விமர்சித்தால் அமைச்சர்கள் குறித்து நான் பேசுவேன்.

    இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார். #Congress #Thirunavukkarasar
    ×