search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- பா.ஜனதா வலியுறுத்தல்
    X

    போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- பா.ஜனதா வலியுறுத்தல்

    கோவில் அருகே பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கிய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜனதா வலியுறுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு மத ரீதியான மோதல்களை உருவாக்கும் வகையில் திராவிடர் கழக பொதுக்கூட்டத்தை நடத்த கோவில் அருகே திட்டமிட்டு அனுமதி அளித்து உள்ளது.

    கடந்த சனிக்கிழமை பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும் வில்லியனூர் புகழ் பெற்ற திருக்காமீஸ்வரர் ஆலயம் அருகில் திட்டமிட்டு திராவிடர் கழக கூட்டத்திற்கு அனுமதி வழங்கி உள்ளது.

    கூட்டத்தின் நோக்கப்படி மதவழிபாடுகளையும், இந்து கடவுளையும் இழிவுபடுத்தி பேசி உள்ளனர்.

    இதைக் கேட்ட பொதுமக்கள் மீது, கம்யூனிஸ்ட், தி.மு.க., திராவிடர் கழகம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சேர்ந்து தாக்கியதால் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து காவல் துறை துணையுடன் ஆளும் காங்கிரஸ் அரசு இந்து மக்களுக்கு எதிராக செயல் பட்டு மத மோதல்களை உருவாக்கி வருகிறது. தற் போது புதுவையில் பல தேச விரோத சக்திகள் ஒன்று இணைந்துள்ளன. உயர் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட கூம்பு ஒலி பெருக்கியை திராவிடர் கழகம், கம்யூனிஸ்டு போன்ற கட்சிகள் பயன்படுத்தி வருகின்றன.

    நீதி மன்ற ஆணைப்படி வழிபாட்டு தளங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அருகே கூட்டம் நடத்த அனுமதி இல்லை. புதுவை நீதிமன்றம் ஆணைப்படி இந்த அனுமதி அளித்த காவல் துறை அதிகாரிகள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆளும் காங்கிரஸ் அரசு பா.ஜ.க. மீது பொய் வழக்கு போட பல்வேறு வகையில் முயற்சி செய்து வருகிறது. நாராயணசாமி அரசு தொடர்ந்து வளர்ச்சி திட்டங்களுக்கு, எந்தவித முக்கியத்துவமும் கொடுக்க இயலாமல் பொதுமக்கள் பிரச்சினைகளை திசை திருப்ப இது போன்ற செயல்களை செய்து வருகிறது.

    எனவே இந்த வன்முறை சம்பவத்திற்கு அந்த காவல் நிலையத்தின் ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளர் பொறுப்பு ஏற்க வேண்டும். இதற்கு காரணமானவர்கள் மீது காவல் துறை உடனடியாக வழக்கு தொடுக்க வேண்டும்.

    இவ்வாறு சாமிநாதன் அறிக்கையில் கூறியுள்ளார்.

    Next Story
    ×