search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் பா.ஜனதாவால் ஆட்சியை பிடிக்க முடியாது- டி.டி.வி.தினகரன்
    X

    தமிழகத்தில் பா.ஜனதாவால் ஆட்சியை பிடிக்க முடியாது- டி.டி.வி.தினகரன்

    அரசியலில் நிலைத்து நிற்க எம்.ஜி.ஆரை புகழ்கிறார்கள் எனவும் தமிழகத்தில் பா.ஜனதாவால் ஆட்சியை பிடிக்க முடியாது எனவும் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
    திருச்சி:

    தேனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அ.தி.மு.க. அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திருச்சி வழியாக சென்றார். அப்போது திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடி அருகே தினகரன் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் அவர் நிருபர்களி டம் கூறியதாவது:-

    விளம்பரத்துக்காகவும் தனது இருப்பை காட்டி கொள்ளவும் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா வி‌ஷமத்தனமாக பேசி வருகிறார். சமூக புரட்சி செய்த பெரியார் சிலையை உடைப்பேன் என்று அவர் கூறியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    1975 முதல் எம்.ஜி.ஆரை பற்றி பேசாத ரஜினிகாந்த், அரசியலுக்கு வந்ததால் தற்போது பேசுகிறார். தமிழ் நாட்டு அரசியலில் வெற்றிடத்தை நிரப்ப வந்துள்ளதாக அவர் கூறினாலும், முடிவு மக்கள் கையில்தான் உள்ளது. அதேபோல கமல்ஹாசனுக்கும் தேர்தல் நேரத்தில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.

    எம்.ஜி.ஆர். மாபெரும் சகாப்தம், அவரை சார்ந்து தான் பல்வேறு இயக்கங்கள் செயல்பட்டன. தி.மு.க.வே எம்.ஜி.ஆரை ஒரு கட்டத்தில் புகழ்ந்து பேசியது. தற்போது அரசியலுக்கு வருபவர்கள் அரசியலில் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக எம்.ஜி.ஆரை புகழ்ந்து பேசுகின்றனர்.

    நாடு முழுவதும் பா.ஜ.க. ஆட்சியை பிடித்தாலும், தமி ழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது. ஏனெனில் இது திராவிட மண். திரிபுராவில் லெனின் சிலை இடித்து அப்புறப்படுத்தப்பட்ட செயல் அநாகரிகம். நாட்டில் பொதுவுடைமை கொள்கை அவசியம். ஒரு தேர்தலில் தோற்றுவிட்டதற்காக அந்த கட்சியை அழிக்க வேண்டும் என்று பா.ஜ.க. நினைப்பதை ஏற்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக பெரம்பலூரில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், இந்திய அளவில் 3-வது அணியை அமைக்க மம்தா பானர்ஜி முயற்சி செய்து வருகிறார். அதில் இணைய அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுஉள்ளது . அந்த அணியில் இப்போது நாங்கள் இணையமாட்டோம். தேர்தல் நேரத்தில் அரசியல் சூழலுக்கு ஏற்ப முடிவு செய்வோம் என்றார். #tamilnews
    Next Story
    ×