search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, கோவையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுகிறது
    X

    கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, கோவையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுகிறது

    டெங்கு காய்ச்சல் பாதிப்பு தற்போது கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, கோவையில் அதிகமாக இருப்பதால் அங்கு கூடுதலாக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
    சென்னை:

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை தீவிர தடுப்பு மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் இந்த வருடம் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    அனைத்து மாவட்டங்களிலும் சுகாதார அதிகாரிகள் டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    தமிழக-கேரள எல்லையிலும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளில் மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் மத்தியில் டெங்கு குறித்து அதிக விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

    ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் 4654 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு பாதிப்பு அதிகரித்த போதிலும் சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு, தடுப்பு நடவடிக்கையால் உயிர் இழப்பு மிகவும் குறைவாக 1 என்ற அளவில் உள்ளது.

    கடந்த மாதத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருந்தது. தூத்துக்குடியில் 2292 பேரும், சங்கரன்கோவிலில் 2036 பேரும் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

    அனைத்து மாவட்டங்களிலும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவின்பேரில் முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தை சாமி ஆகியோர் தீவிர நடவடிக்கையில் இறங்கியதால் டெங்கு உயிர் இழப்பு குறைக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு 2531 பேர் டெங்குவினால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் 5 பேர் உயிர் இழந்தனர். இந்த வருடம் இதுவரையில் டெங்குவால் 3 பேர் உயிர் இழந்துள்ளனர்.

    தற்போது டெங்கு கன்னியாகுமரி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் தர்மபுரி மாவட்டங்களில் வேகமாக பரவுகிறது. விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களிலும் பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறை கண்டறியப்பட்டுள்ளது.

    அதனை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கையை சுகாதாரத்துறை முடுக்கி உள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தை சாமி கூறியதாவது:-

    டெங்கு காய்ச்சல் பாதிப்பு தற்போது கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, கோவையில் அதிகமாக இருப்பதால் அங்கு கூடுதலாக கவனம் செலுத்தி வருகிறோம். தேவையான அளவு மருந்து, மாத்திரைகள் இருப்பு உள்ளன. டெங்கு பாதிப்பு அதிகமாவதற்கு தற்போது ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சனை ஒரு முக்கிய காரணமாகும்.

    மக்கள் குடிநீரை தொட்டியில் சேர்த்து வைக்கும் போது அதனை மூடாமல் விட்டு விடுகின்றனர். இதனால் கொசு உற்பத்தி அதிகமாகிறது. மேலும் தற்போது பெய்த மழையால் டயர், சிரட்டை, பிளாஸ்டிக் கழிவுகளில் தேங்கி நிற்கும் மழை நீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகின்றன. அவற்றை கண்டறிந்து அப்புறப்படுத்த துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×