search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்தரசன்
    X
    முத்தரசன்

    தி.மு.க. மீது கம்யூனிஸ்டு கட்சிகள் அதிருப்தியா?- முத்தரசன் விளக்கம்

    தொகுதி பங்கீடு விவகாரத்தில் தி.மு.க. மீது கம்யூனிஸ்டு கட்சிகள் அதிருப்தியா? என்பது குறித்து முத்தரசன் விளக்கம் அளித்துள்ளார்.
    சென்னை:

    தமிழக சட்டமன்ற தேர்தைலையொட்டி, தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் தொடங்கியது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தங்களுக்கு குறைந்தபட்சம் 12 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்றும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தரப்பில் குறைந்தபட்சம் 10 தொகுதிகளும் கேட்கப்பட்டன.

    ஆனால், தி.மு.க. தரப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு அதிகபட்சம் 7 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கும் மனநிலையில் இருப்பதாக தெரிகிறது. இதன் காரணமாக முதல்கட்ட பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை.

    இந்தநிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளின் அவசர ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ள பாலன் இல்லத்தில் நேற்று மதியம் நடைபெற்றதாக தெரிகிறது. இந்த கூட்டத்தில் தி.மு.க. கூட்டணியில் எப்படியாவது தாங்கள் கேட்ட தொகுதிகளின் எண்ணிக்கையை பெற்றுவிட வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே தி.மு.க. தலைமை மீது கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியானது, இந்த சூழ்நிலையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில், கம்யூனிஸ்டு கட்சிகள் - தி.மு.க.வுக்கு இடையில் சிக்கல் நிலவுவது போலவும், பேச்சுவார்த்தையில் முறிவு ஏற்படுவது போலவும் முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்திகள் பரப்பப்படுகின்றன.

    அத்தகைய செய்திகளில் உண்மை இல்லை என்பதுடன் அது குழப்பம் ஏற்படுத்தும் உள்நோக்கம் கொண்டது என்பதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுமக்களுக்கு தெளிவுபடுத்திக் கொள்கிறது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக தொடர்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×