என் மலர்
செய்திகள்
- டியூட் பட விவகாரத்தில் இளையராஜாவுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டது
- டைட்டில் கார்டில் இளையராஜாவுக்கு நன்றி தெரிவிக்கப்படும்.
நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்த 'டியூட்' திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்த 'கருத்த மச்சான்', '100 வருஷம்' ஆகிய பாடல்கள் அனுமதியில்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் இளையராஜா வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில், இந்த பாடல்கள் மீதான உரிமையை எக்கோ நிறுவனத்திடம் இருந்து சோனி நிறுவனம் பெற்றுள்ளது. சோனி நிறுவனத்திடம் இருந்து தாங்கள் அனுமதி பெற்றோம் என்று கூறப்பட்டது.
அதற்கு இளையராஜா தரப்பு, ''படம் வெளியானதும் தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது" என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, நீதிபதிகள், இளையராஜா பாடல்களின் புனிதத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 'கருத்த மச்சான்' பாடலை நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில் டியூட் பட விவகாரத்தில் இளையராஜாவுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டது என்றும் டைட்டில் கார்டில் நன்றி தெரிவிக்கப்படும் என மைத்திரி மூவி மேக்கர் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் பதில் அளித்தது.
இரு தரப்பினரும் சமரசத்திற்கு ஒப்புக்கொண்டதால், வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
- இணைய உலகில் உள்ள மோசடியாளர்களிடம் இருந்து குடிமக்களுக்கு உதவுவதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இதுவரை 1.4 கோடி பயனர்கள் இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்
இந்தியாவின் அனைத்து மொபைல் உற்பத்தி நிறுவனங்களும் புதிய சாதனங்களில் சஞ்சார் சாத்தி செயலியை முன்கூட்டியே நிறுவ வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. சஞ்சார் செயலியை கட்டாயம் பதிவிறக்க வேண்டும் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் இந்த முடிவு திரும்ப பெறப்பட்டுள்ளது. ஆனால் செயலிக்கு கிடைத்த வரவேற்பு காரணமாகவே "கட்டாயம்" என்ற முடிவை திரும்ப பெற்றதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய தொலைத்தொடர்பு துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:
"அனைத்து குடிமக்களுக்கும் இணைய பாதுகாப்பை வழங்கும் நோக்கத்துடன், அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் சஞ்சார் சாத்தி செயலியை முன்கூட்டியே நிறுவ வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிட்டது. இந்த செயலி பாதுகாப்பானது மற்றும் இணைய உலகில் உள்ள மோசடியாளர்களிடம் இருந்து குடிமக்களுக்கு உதவுவதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது மக்கள் பங்கேற்புடன் அனைத்து பயனர்களையும் பாதுகாப்பதோடு, சைபர் மோசடி பற்றிய புகார் அளிக்க உதவுகிறது. எப்போது வேண்டுமானாலும் இந்த செயலியை நீக்கலாம் என்று அரசால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதுவரை 1.4 கோடி பயனர்கள் இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர் மற்றும் ஒரு நாளைக்கு 2,000 மோசடி சம்பவங்கள் குறித்த தகவல்கள் கிடைக்கின்றன. கடந்த ஒருநாளில் 6 லட்சம் குடிமக்கள் இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்ய பதிவு செய்துள்ளனர். இதன் பயன்பாடு 10 மடங்கு அதிகரித்துள்ளது. இது இந்த செயலியில் குடிமக்கள் நம்பிக்கையுடன் இருப்பதை உறுதிப்படுத்துகிறது.
சஞ்சார் சாத்தி செயலிக்கு வரவேற்பு அதிகரித்து வருவதால், செல்போன் உற்பத்தியாளர்களுக்கு முன் நிறுவலை கட்டாயமாக்க வேண்டாம் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சஞ்சார் சாத்தி என்றால் என்ன?
கடந்த 2023ஆம் சஞ்சார் சாத்தி என்ற வெப் போர்ட்டலை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. தற்போது அதே பெயரில் செயலியில் தொடங்கப்பட்டுள்ளது. சஞ்சார் செயலி டிஜிட்டல் மோசடிக்கு எதிரான பாதுகாப்பு கருவி என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொலைபேசியின் ஐஎம்இஐ எண், மொபைல் எண் மற்றும் நெட்வொர்க் தொடர்பான தகவல்களின் உதவியுடன் வாடிக்கையாளரின் பாதுகாப்பை உறுதி செய்வதாகக் கூறப்படுகிறது. சஞ்சார் சாத்தி இணையதளத்தின் தகவல்படி, இந்த செயலி நமக்கு தெரியாமல் நமது தனிப்பட்ட தகவல்களை சேகரிக்காது.
- இம்ரான்கானை சந்திக்க குடும்பத்தினருக்கு சில மாதங்களாக அனுமதி மறுக்கப்பட்டது.
- இம்ரான் கான் நலமுடன் இருப்பதாக சிறைத்துறை தெரிவித்தது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கானுக்கு ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு ராவல் பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2 ஆண்டுகளாக சிறையில் உள்ள இம்ரான்கானை சந்திக்க குடும்பத்தினருக்கு சில மாதங்களாக அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் அவர் சிறையில் கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து இம்ரான்கானின் சகோதரிகள் மற்றும் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இம்ரான் கான் நலமுடன் இருப்பதாக சிறைத்துறை தெரிவித்தது.
இதற்கிடையே இம்ரான்கானை சந்திக்க அவரது சகோதரி உஸ்மாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறைக்கு சென்று இம்ரான்கானை சந்தித்தார். பின்னர் வெளியே வந்த உஸ்மா கூறும்போது,"இம்ரான்கான் நலமுடன் உள்ளார். ஆனால் அவருக்கு மனரீதியான துன்புறுத்தல் அளிக்கப்படுகிறது" என்றார்.
இந்தநிலையில் தனது சகோதரியை சந்தித்த பிறகு இம்ரான்கான் அளித்த அறிக்கையை அவரது கட்சி வெளியிட்டது.
அதில் கூறியிருப்பதாவது:-
எனக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது. அவர்களுக்கு தற்போது என்னைக் கொலை செய்வதுதான் பாக்கி இருக்கிறது. எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதியைப் போன்ற சூழ்நிலையில் நான் அடைக்கப்பட்டுள்ளேன். எனக்கு ஏதாவது நடந்தால், ராணுவத் தலைவரும், உளவுப்பிரிவு டி.ஜி.யும் பொறுப்பாவார்கள்.
நான் ஒரு கூண்டில் அடைக்கப்பட்டு விலங்குகளை விட மோசமாக நடத்தப்பட்டேன். 5 நாட்கள் என் அறைக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 10 நாட்கள் நான் அறையில் அடைக்கப்பட்டேன். இங்குள்ள நிலைமைகள் மனிதாபிமான மற்றவைகளாக உள்ளன.
ராணுவ தளபதி அசிம் முனீர் வரலாற்றில் மிகவும் கொடுங்கோல் சர்வாதிகாரி. மனநிலை சரியில்லாதவர். எனக்கு அளிக்கப்படும் சித்ரவதைக்கு அசிம் முனீர் தான் காரணம்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
மேலும், மின்சாரம் அல்லது சூரிய ஒளி, உணவு, சுத்தமான குடிநீர், மருத்துவ உதவி மற்றும் கைதிகளுக்கு பொதுவாகக் கிடைக்கும் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் இம்ரான் கான் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று அவரது கட்சி குற்றம்சாட்டி உள்ளது.
- இன்று மாலை 6 மணி அளவில் அண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படவுள்ளது.
- தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் உருவான 'டிட்வா' புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னைக்கு 100 கி.மீ. தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கார்த்திகை தீப விழா நடைபெறும் திருவண்ணாமலையில் தற்போது மிதமான மழை பெய்து வருகிறது
மழை பெய்து வரும் நிலையில் திருவண்ணாமலையில் குடையுடன் பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர். இன்று மாலை 6 மணி அளவில் அண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படவுள்ளது.
- ஒருநாள் கிரிக்கெட்டில் ருதுராஜ் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ராஞ்சியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் 14 ரன்களிலும் ஜெய்ஷ்வால் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்ததாக ஜோடி சேர்ந்த விராட் கோலி - ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது.
அதிரடியாக விளையாடிய ருதுராஜ் 77 பந்துகளில் சதமடித்து அசத்தினார். 12 பவுண்டரிகள், 2 சிக்சருடன் ஒருநாள் கிரிக்கெட்டில் ருதுராஜ் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 105 ரன்கள் அடித்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து ருதுராஜ் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய கோலி தனது 53 ஆவது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்து புதிய சாதனை படைத்தார். 90 பந்துகளில் கோலி சதமடித்தார்.
38 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் அடித்துள்ளது.
- புத்தாண்டு நெருங்கிவரும் நிலையில், விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- சாமராஜ்பேட்டை தபால் நிலையத்தில் பார்சலில் வந்த 8 கிலோ ஹைட்ரோ கஞ்சா பறிமுதல்
புத்தாண்டு நெருங்கிவரும் நிலையில், விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பெங்களூருவில் மூன்று வெவ்வேறு சோதனைகளின்போது ரூ.28.8 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், சம்பிகேஹள்ளி பகுதியில் பெங்களூரு நகர போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது தான்சானிய நாட்டை சேர்ந்த 29 வயதான நான்சி ஓமரியை கைது செய்து, அவர் விற்பனைக்காக வைத்திருந்த 9 கிலோ டையாக்ஸிமெத்தபெட்டமனையும் பறிமுதல் செய்தனர். இவை ரூ.18.5 கோடி மதிப்பு கொண்டவை எனவும் தெரிவித்தனர்.
2023 ஆம் ஆண்டு சுற்றுலா விசாவில் டெல்லி வந்த நான்சி, பெங்களூருவுக்கு குடிபெயர்ந்து பியூட்டிசியனாக பணிபுரிந்துகொண்டே, போதைப்பொருள் விற்பனையிலும் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது. பெங்களூருவின் சித்தபுராவில் நடந்த மற்றொரு நடவடிக்கையில், 28 வயதான நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இம்மானுவேல் அரின்சே என்பவர் கைது செய்யப்பட்டார். 2021 ஆம் ஆண்டு வணிக விசா மூலம் இந்தியா வந்த அரின்சே 2022 ஆம் ஆண்டு பெங்களூருக்கு குடிபெயர்ந்தார்.
டெல்லி, கோவா மற்றும் பிற வெளிநாட்டு வியாபாரிகளிடமிருந்து MDMA-வை வாங்கி விநியோகம் செய்துவந்துள்ளார். இவர் முன்னரே போதைப்பொருள் விற்பனை தொடர்பாக கோவிந்தபுரா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது ஜாமினில் வெளிவந்த நிலையில் மீண்டும் கைதாகியுள்ளார்.
இந்த சம்பவங்களை தொடர்ந்து பெங்களூரு சாமராஜ்பேட்டையில் உள்ள வெளிநாட்டு தபால் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக பார்சல்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 8 கிலோ ஹைட்ரோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக சி.சி.பி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இந்த பார்சலை அனுப்பியது யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- நீர் இருப்பு 3,168 மில்லியன் கன அடியாக உள்ளது.
- தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 750 கன அடியில் இருந்து 1,500 கன அடியாக அதிகரித்துள்ளது.
கனமழையால் நீர் வரத்து அதிகரித்ததால் புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், புழல் ஏரிக்கான நீர்வரத்து 2,930 கன அடியில் இருந்து 4,460 ஆக அதிகரித்துள்ளது. இதனால், நீர் இருப்பு 3,168 மில்லியன் கன அடியாக உள்ளது.
புழல் ஏரியில் இருந்து 1500 கனஅடி நீர் திறக்கப்படுவதால் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புழல் ஏரியில் இருந்து கால்வாய் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- 2006 - 16 காலக்கட்டத்தில் சிங்காநல்லூர் எம்எல்ஏவாக இருந்தார்
- 2018-ல் ஓபிஎஸ் - இபிஎஸ்-ஆல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. ஏற்கனவே கூட்டணியில் இருந்த கட்சிகள் விலகி, புதிய கூட்டணி குறித்து விவாதித்து வருகின்றன. இருக்கின்ற நிர்வாகிகள் இருக்கும் கட்சிகளை விட்டு, மாற்றுக் கட்சிக்கும் தாவும் நிகழ்வுகளும் தொடர்ந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக அதிமுகவில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் கட்சி தாவி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி திமுகவில் இணைந்துள்ளார். கோவை சிங்காநல்லூர் முன்னாள் எம்எல்ஏ -வாக இரண்டு முறையும், அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க பேரவையின் செயலாளராகவும் இருந்தவர் சின்னசாமி. இதில் அண்ணா தொழிற்சங்க பணத்தை கையாடல் செய்ததாக கடந்த 2018ஆம் ஆண்டு இவர்மீது புகார் எழுந்தது. இதனால் இவரை கட்சியில் நீக்கம் செய்து அப்போதைய அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், இபிஎஸ்அறிவிப்பு வெளியிட்டனர்.
தன்னைக் அதிமுகவிலிருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் சின்னசாமி வழக்கும் தொடர்ந்தார். மேலும் ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் துரோகிகள் எனவும் பல விமர்சனங்களை முன்வைத்தார். அதன் பின்னர் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக அணியில் சேர்ந்து அங்கும் தொழிற்சங்க பேரவை செயலாளராக பொறுப்பேற்றார். இந்த நிலையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார்.
- முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- இந்த போட்டியின் இந்திய வீரர் ஹர்ஷித் ராணா ஐசிசி விதிகளை மீறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில் ஒருநாள் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகிறது.
இதில் அணிகளுக்கு இடையே நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது பிரெவிஸ் விக்கெட்டை இந்திய வீரர் ஹர்ஷித் ராணா வீழ்த்துவார். வீழ்த்திய வேகத்தில் அவரை முறைத்தபடி வெளியே செல்லுமாறு கை சைகை காட்டுவார்.
இந்நிலையில் டெவால்ட் பிரெவிஸை அவுட்டாக்கிய போது ஹர்ஷித் ராணா செய்த சைகைக்கு ஐசிசி கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் விதியை மீறியதாக கூறி அவருக்கு ஒரு Demerit புள்ளியும் சேர்க்கப்பட்டுள்ளது.
ஏஐ தொழில்நுட்பத்தில் பெண்களின் மார்பிங் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்படுவது குறித்து நடிகை ராஷ்மிகா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் கூறிய அவர்," கண்ணியமான, முற்போக்கான சமூகத்தை உருவாக்க ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துங்கள்.
மக்கள் மனிதர்களை போல் செயல்படாவிட்டால் அவர்களுக்கு மன்னிக்க முடியாத கடுமையான தண்டனைகள் தரப்பட வேண்டும்.
முன்னேற்றத்திற்கான மிகப்பெரிய சக்தியான ஏஐ-ஐ தவறாக பயன்படுத்தி பெண்களை குறிவைப்பது தார்மீக வீழ்ச்சியை காட்டுகிறது" என்றார்.
- 'ஆண் பாவம் பொல்லாதது' படம் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
- ராம் இன் லீலா படத்தின் மூலம் வர்திகா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
2023-ஆம் ஆண்டு அறிமுக இயக்குநரான ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்த ''ஜோ'' திரைப்படம் வெளியாகி மக்களிடையே விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத்தொடர்ந்து ''ஜோ'' பட ஜோடி அடுத்து மீண்டும் ஒன்றாக இணைந்து நடித்த 'ஆண் பாவம் பொல்லாதது' படம் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், நடிகர் ரியோ ராஜ் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று முன்தினம் விஜய் சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்.
இந்த படத்திற்கு "ராம் in லீலா" என பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் ராமசந்திரன் கண்ணன் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இந்தப் படத்தின் மூலம் வர்திகா கதாநாயகியாக அறிமுகமாகிறார்
இந்நிலையில், ராம் in லீலா படத்தின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக விஜய் சேதுபதி கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
- கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
- அணையில் இருந்து 1319 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. புயல் காரணமாக 2 நாட்கள் சற்று ஓய்ந்திருந்த மழை நேற்று இரவு முதல் மீண்டும் வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு தொடங்கிய மழை இன்று காலையிலும் நீடித்தது. இதனால் ஜக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோவில் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியை மழை நீர் சூழ்ந்தது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாததால் மாணவ-மாணவிகள் சிரமத்துடன் வகுப்பறைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.
கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 63.65 அடியாக உள்ள நிலையில் நீர்வரத்து 2215 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 1319 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4337 மி. கனஅடியாக உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 139.20 அடியாக உள்ளது. வரத்து 884 கன அடி. திறப்பு 1600 கன அடி. இருப்பு 6924 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.30 அடி. வரத்து 38 கன அடி. இருப்பு 292.15 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 என அதன் முழு கொள்ளளவில் தொடர்ந்து நீடிக்கிறது. இதனால் அணைக்கு வரும் 181 கன அடி முழுவதும் வெளியேற்றப்படுகிறது.
சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 43.10 அடியாக உள்ளது. வரத்து 15 கன அடி. திறப்பு 14.47 கன அடி.
கனமழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். சபரிமலை சீசன் என்பதால் தினந்தோறும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சுருளி அருவியில் நீராடி செல்வது வழக்கம். ஆனால் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.
ஆண்டிபட்டி 43, அரண்மனைபுதூர் 16.8, வீரபாண்டி 2.2, மஞ்சளாறு 3, சோத்துப்பாறை 17.4, வைகை அணை 30, உத்தமபாளையம் 3, தேக்கடி 3.4 என ஒரே நாளில் 119.8 மி.மீ. மழை அளவு பதிவானது.






