என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தேனி மாவட்டத்தில் கனமழை- சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கால் தடை
    X

    தேனி மாவட்டத்தில் கனமழை- சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கால் தடை

    • கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • அணையில் இருந்து 1319 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. புயல் காரணமாக 2 நாட்கள் சற்று ஓய்ந்திருந்த மழை நேற்று இரவு முதல் மீண்டும் வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு தொடங்கிய மழை இன்று காலையிலும் நீடித்தது. இதனால் ஜக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோவில் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியை மழை நீர் சூழ்ந்தது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாததால் மாணவ-மாணவிகள் சிரமத்துடன் வகுப்பறைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.

    கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 63.65 அடியாக உள்ள நிலையில் நீர்வரத்து 2215 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 1319 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4337 மி. கனஅடியாக உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 139.20 அடியாக உள்ளது. வரத்து 884 கன அடி. திறப்பு 1600 கன அடி. இருப்பு 6924 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.30 அடி. வரத்து 38 கன அடி. இருப்பு 292.15 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 என அதன் முழு கொள்ளளவில் தொடர்ந்து நீடிக்கிறது. இதனால் அணைக்கு வரும் 181 கன அடி முழுவதும் வெளியேற்றப்படுகிறது.

    சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 43.10 அடியாக உள்ளது. வரத்து 15 கன அடி. திறப்பு 14.47 கன அடி.

    கனமழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். சபரிமலை சீசன் என்பதால் தினந்தோறும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சுருளி அருவியில் நீராடி செல்வது வழக்கம். ஆனால் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

    ஆண்டிபட்டி 43, அரண்மனைபுதூர் 16.8, வீரபாண்டி 2.2, மஞ்சளாறு 3, சோத்துப்பாறை 17.4, வைகை அணை 30, உத்தமபாளையம் 3, தேக்கடி 3.4 என ஒரே நாளில் 119.8 மி.மீ. மழை அளவு பதிவானது.

    Next Story
    ×