என் மலர்tooltip icon

    இந்தியா

    பெங்களூருவில் ரூ.28 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்... வெளிநாட்டினர் மூவர் கைது!
    X

    பெங்களூருவில் ரூ.28 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்... வெளிநாட்டினர் மூவர் கைது!

    • புத்தாண்டு நெருங்கிவரும் நிலையில், விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • சாமராஜ்பேட்டை தபால் நிலையத்தில் பார்சலில் வந்த 8 கிலோ ஹைட்ரோ கஞ்சா பறிமுதல்

    புத்தாண்டு நெருங்கிவரும் நிலையில், விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பெங்களூருவில் மூன்று வெவ்வேறு சோதனைகளின்போது ரூ.28.8 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், சம்பிகேஹள்ளி பகுதியில் பெங்களூரு நகர போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது தான்சானிய நாட்டை சேர்ந்த 29 வயதான நான்சி ஓமரியை கைது செய்து, அவர் விற்பனைக்காக வைத்திருந்த 9 கிலோ டையாக்ஸிமெத்தபெட்டமனையும் பறிமுதல் செய்தனர். இவை ரூ.18.5 கோடி மதிப்பு கொண்டவை எனவும் தெரிவித்தனர்.

    2023 ஆம் ஆண்டு சுற்றுலா விசாவில் டெல்லி வந்த நான்சி, பெங்களூருவுக்கு குடிபெயர்ந்து பியூட்டிசியனாக பணிபுரிந்துகொண்டே, போதைப்பொருள் விற்பனையிலும் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது. பெங்களூருவின் சித்தபுராவில் நடந்த மற்றொரு நடவடிக்கையில், 28 வயதான நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இம்மானுவேல் அரின்சே என்பவர் கைது செய்யப்பட்டார். 2021 ஆம் ஆண்டு வணிக விசா மூலம் இந்தியா வந்த அரின்சே 2022 ஆம் ஆண்டு பெங்களூருக்கு குடிபெயர்ந்தார்.

    டெல்லி, கோவா மற்றும் பிற வெளிநாட்டு வியாபாரிகளிடமிருந்து MDMA-வை வாங்கி விநியோகம் செய்துவந்துள்ளார். இவர் முன்னரே போதைப்பொருள் விற்பனை தொடர்பாக கோவிந்தபுரா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது ஜாமினில் வெளிவந்த நிலையில் மீண்டும் கைதாகியுள்ளார்.

    இந்த சம்பவங்களை தொடர்ந்து பெங்களூரு சாமராஜ்பேட்டையில் உள்ள வெளிநாட்டு தபால் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக பார்சல்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 8 கிலோ ஹைட்ரோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக சி.சி.பி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இந்த பார்சலை அனுப்பியது யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×