என் மலர்tooltip icon

    இந்தியா

    சஞ்சார் சாத்தி கட்டாயமில்லை - மத்திய அரசு!
    X

    'சஞ்சார் சாத்தி' கட்டாயமில்லை - மத்திய அரசு!

    • இணைய உலகில் உள்ள மோசடியாளர்களிடம் இருந்து குடிமக்களுக்கு உதவுவதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • இதுவரை 1.4 கோடி பயனர்கள் இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்

    இந்தியாவின் அனைத்து மொபைல் உற்பத்தி நிறுவனங்களும் புதிய சாதனங்களில் சஞ்சார் சாத்தி செயலியை முன்கூட்டியே நிறுவ வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. சஞ்சார் செயலியை கட்டாயம் பதிவிறக்க வேண்டும் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் இந்த முடிவு திரும்ப பெறப்பட்டுள்ளது. ஆனால் செயலிக்கு கிடைத்த வரவேற்பு காரணமாகவே "கட்டாயம்" என்ற முடிவை திரும்ப பெற்றதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக மத்திய தொலைத்தொடர்பு துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:

    "அனைத்து குடிமக்களுக்கும் இணைய பாதுகாப்பை வழங்கும் நோக்கத்துடன், அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் சஞ்சார் சாத்தி செயலியை முன்கூட்டியே நிறுவ வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிட்டது. இந்த செயலி பாதுகாப்பானது மற்றும் இணைய உலகில் உள்ள மோசடியாளர்களிடம் இருந்து குடிமக்களுக்கு உதவுவதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இது மக்கள் பங்கேற்புடன் அனைத்து பயனர்களையும் பாதுகாப்பதோடு, சைபர் மோசடி பற்றிய புகார் அளிக்க உதவுகிறது. எப்போது வேண்டுமானாலும் இந்த செயலியை நீக்கலாம் என்று அரசால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

    இதுவரை 1.4 கோடி பயனர்கள் இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர் மற்றும் ஒரு நாளைக்கு 2,000 மோசடி சம்பவங்கள் குறித்த தகவல்கள் கிடைக்கின்றன. கடந்த ஒருநாளில் 6 லட்சம் குடிமக்கள் இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்ய பதிவு செய்துள்ளனர். இதன் பயன்பாடு 10 மடங்கு அதிகரித்துள்ளது. இது இந்த செயலியில் குடிமக்கள் நம்பிக்கையுடன் இருப்பதை உறுதிப்படுத்துகிறது.

    சஞ்சார் சாத்தி செயலிக்கு வரவேற்பு அதிகரித்து வருவதால், செல்போன் உற்பத்தியாளர்களுக்கு முன் நிறுவலை கட்டாயமாக்க வேண்டாம் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சஞ்சார் சாத்தி என்றால் என்ன?

    கடந்த 2023ஆம் சஞ்சார் சாத்தி என்ற வெப் போர்ட்டலை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. தற்போது அதே பெயரில் செயலியில் தொடங்கப்பட்டுள்ளது. சஞ்சார் செயலி டிஜிட்டல் மோசடிக்கு எதிரான பாதுகாப்பு கருவி என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொலைபேசியின் ஐஎம்இஐ எண், மொபைல் எண் மற்றும் நெட்வொர்க் தொடர்பான தகவல்களின் உதவியுடன் வாடிக்கையாளரின் பாதுகாப்பை உறுதி செய்வதாகக் கூறப்படுகிறது. சஞ்சார் சாத்தி இணையதளத்தின் தகவல்படி, இந்த செயலி நமக்கு தெரியாமல் நமது தனிப்பட்ட தகவல்களை சேகரிக்காது.

    Next Story
    ×