என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பள்ளி ஆசிரியரே பாலியல் தொந்தரவு கொடுத்ததைக் கண்டித்து போராட்டம்.
- பாலியல் குற்றங்களைத் தடுக்காத திமுக அரசு, ஜனநாயக ரீதியில் போராடிய பாஜக சகோதர சகோதரிகளை வலுக்கட்டாயமாகக் கைது.
புதுக்கோட்டையில் திமுக அரசை கண்டித்து போராட்டம் நடத்திய பாஜகவினர் கைது செய்யப்பட்டதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-
புதுக்கோட்டை அரசுப் பள்ளி மாணவிகள் ஏழு பேருக்கு, பள்ளி ஆசிரியரே பாலியல் தொந்தரவு கொடுத்ததைக் கண்டித்தும், தமிழகத்தில் பெருகி வரும் பாலியல் குற்றங்களைத் தடுக்காத திமுக அரசைக் கண்டித்தும், தமிழக பாஜக புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத் தலைவர் ஜகதீசன் மற்றும் புதுக்கோட்டை மேற்கு மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில், ஆயிரக்கணக்கான பாஜக சகோதர சகோதரிகள் இன்று போராட்டம் நடத்தினர்.
பாலியல் குற்றங்களைத் தடுக்காத திமுக அரசு, ஜனநாயக ரீதியில் போராடிய பாஜக சகோதர சகோதரிகளை வலுக்கட்டாயமாகக் கைது செய்து சிறையில் அடைத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பாலியல் புகார் வந்ததும் விரைந்து நடவடிக்கை எடுக்கிறது காவல்துறை.
- நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளதாக பாராட்டிய உயர்நீதிமன்றம்.
பாலியல் புகார்களை வைத்து அரசின் மீது அவதூறு பரப்புவதே பழனிசாமிக்கு தொடர் கதையாகிவிட்டது என்று அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
பாலியல் புகார்களை வைத்து அரசின் மீது அவதூறு பரப்புவதே பழனிசாமிக்கு தொடர் கதையாகிவிட்டது. புகார் வந்ததும் விரைவாக விசாரித்து கைது நடவடிக்கை எடுக்கிறது காவல் துறை. ஆனால், பாதுகாப்பில்லை என சொல்லி பெண் குழந்தைகளை அச்சுறுத்துவதே பழனிசாமிக்கு வழக்கமாகிவிட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்ததும் உதவி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், திமுக அரசை கண்டிக்கலாம். ஆனால், நடவடிக்கை எடுத்த பிறகும் பழனிசாமி அரசை விமர்சிப்பது தன்னை முன்நிறுத்தி கொள்ளும் அரசியலுக்குதானே?
பாதிக்கப்பட்ட மாணவிகள் அளித்த புகாரைத் தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமத்தினர், சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பள்ளிக்கு சென்று தனித்தனியாக விசாரணை நடத்தி புகாரை உறுதி செய்தனர். அதன் பிறகு உதவி தலைமை ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து காவல் துறை கைது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற நம்பிக்கை மாணவிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் வந்துள்ளது. அதனால்தான் மாணவிகள் துணிந்து புகார் அளிக்கிறார்கள்.
மும்மொழிக்கொள்கையை பாஜக புகுத்த முயற்சிக்கிறது; தமிழ்நாட்டிற்கு உரிய வரிப்பகிர்வு தருவதில்லை; ஒன்றிய பட்ஜெட்டிலும் தமிழக திட்டங்கள் இல்லை; கல்விக்கு நிதி இல்லை; இப்போது பேரிடர் நிவாரணமும் இல்லை என தொடர்ந்து மோடி அரசு தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது.
இதையெல்லாம் மடைமாற்றி தன்னுடைய பாஜகவின் ராஜ விஸ்வாசத்தை காட்டுகிறார் பழனிசாமி. ஒன்றிய அரசுக்கு அவப்பெயர் வராமால் இருக்க பாலியல் வன்கொடுமை என்று சொல்லி மடைமாற்றும் அரசியல் யுக்தியை செய்கிறார் பழனிசாமி.
ஒருசில குற்றச் சம்பவம் நடப்பதை வைத்து ஒட்டுமொத்தமாக பள்ளிக்கூடங்கள் பாதுகாப்பில்லை என மாணவிகளையும் பெற்றோரையும் பழனிசாமி அச்சுறுத்துவது கேவலமான மனநிலையை காட்டுகிறது.
அண்ணா பல்கலைக் கழக பாலியல் வழக்கு மற்றும் காவல் அதிகாரி மீதான பாலியல் வழக்கில் தமிழக அரசின் செயல்பாட்டை சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதிகள் கடந்த 17ம் தேதி பாராட்டினர்.
அத்துடன், மேலதிகாரிகள் மீது பாலியல் புகார் கொடுத்தால் நியாயம் கிடைக்கிறது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள். நீதிமன்றத்திற்கு தெரிந்து உண்மை கூட எதிர்க் கட்சித் தலைவருக்கு தெரியவில்லை.
பாலியல் வன்கொடுமை என்பது ஒரு சமூகப் பிரச்சினை. மிருகங்கள் மனிதர் போர்வையில் உலவுவதால் அவை கண்களுக்கு எளிதாக தெரியாது. அந்த மிருகம் குற்றம் செய்ததாக புகார் வந்ததும் உடனடியாக அரசும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்கிறது.
பாலியல் குற்றவாளிகளை கைது செய்து தண்டனை பெற்றுத் தருகிறது திமுக அரசு என்பதை மறைத்து, அவதூறு அரசியல் செய்யும் அதிமுகவுக்கு தமிழ்நாட்டு மக்கள் படுதோல்வியையே தருவார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஜப்பானைச் சேர்ந்த முராட்டா நிறுவனம் சென்னையில் கெபாசிட்டர் ஆலை அமைக்கிறது.
- ஆலையில் பல அடுக்கு செராமிக் கெபாசிட்டர்கள் தயாரிக்கப்படவுள்ளன.
ஜப்பானைச் சேர்ந்த முரட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சென்னை ஓஎம்ஆர் சாலையில் தொழிற்சாலை அமைக்க உள்ளது.
மல்டிலேயர் செராமிக் கேபாசிட்டர் என்ற உதிரிபாகத்தை இந்த ஆலையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
முராட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஏற்கனவே ஆப்பிள், சாம்சங் ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் தயாரித்து வருகிறது.
இதுகுறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறுகையில், "ஓராண்டாக நடந்த பேச்சுவார்த்தைக்குப் பயன் கிடைத்துள்ளது. இந்நிறுவனம் 2026ம் ஆண்டில் முழு அளவிலான உற்பத்தியை மேற்கொள்ளும்" என்றார்.
- மார்ச் மாதம் ஒன்றாம் தேதி முதல் அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும்.
- பொதுத்தேர்வை கண்டு மாணவர்கள் அஞ்சக் கூடாது. தைரியமாக தேர்வை அணுக வேண்டும்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு நிதி தரவில்லை என்றாலும் தமிழக அரசு எந்த திட்டத்தையும் நிறுத்தாது. தமிழக அரசின் நிதியை பயன்படுத்தி தொடர்ந்து திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
மார்ச் மாதம் ஒன்றாம் தேதி முதல் அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும்.
பொதுத்தேர்வை கண்டு மாணவர்கள் அஞ்சக் கூடாது. தைரியமாக தேர்வை அணுக வேண்டும்.
பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில் மாணவர்களின் பதட்டத்தை குறைக்க ஆலோசனை வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினோம்.
கடந்த ஓராண்டில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு சம்பந்தமாக 84 புகார்கள் பெறப்பட்டுள்ளது.
90 நாட்கள் கையெழுத்து இயக்கம் நடத்தும் பாஜகவினர் உறுதியாக வருத்தப்படுவார்கள். தமிழக மக்கள் இருமொழிக் கொள்கையையே விரும்புவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மு.க.ஸ்டாலின் மாடல் ஆட்சியின் பங்காளர்கள் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய தருணம்.
- தமிழக வரலாற்றில், இது போன்ற கருப்பு நாட்கள் தொடர்கதையாவது மிகவும் வருத்தத்திற்கும் , கண்டனத்திற்கும் உரியதாகும் .
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 12 பாலியல் சம்பவங்கள் நடந்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக செய்திகள் வருகின்றன. இது மு.க.ஸ்டாலின் மாடல் ஆட்சியின் பங்காளர்கள் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய தருணம்.
சங்க காலம் முதலே பெண் இனத்தை போற்றிப் பாதுகாத்து வந்த தமிழக வரலாற்றில், இது போன்ற கருப்பு நாட்கள் தொடர்கதையாவது மிகவும் வருத்தத்திற்கும் , கண்டனத்திற்கும் உரியதாகும் .
பயங்கரவாதிகள் ஆட்சி நடக்கும் நாடுகளில் கூட இத்தகைய கொடூரம் நடந்ததில்லை என எண்ணும் அளவு இந்த ஸ்டாலின் மாடல் ஆட்சி நடந்து வருகிறது.
இந்த அரசு பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சம்பவங்களை உரிய முறையில் தடுக்காமல், பாலியல் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தவறியதால், இத்தகைய கொடூரங்கள் தினந்தோறும் நிகழ்கின்றன.
இந்த ஆட்சியில் தமிழ்நாடு இப்படி சிக்கிச் சீரழிந்து வருவது குறித்து எந்தக் கவலையுமில்லாத ஸ்டாலின், 'பெண்களுக்கு பாதுகாப்பு' என வாய்சவடால் மட்டும் பேசினால் போதுமா?
திமுக ஆட்சி நீடித்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு அச்சுறுத்தலான நிலைதான் தொடர்கிறது, இனியாவது மு.க.ஸ்டாலின் மாடல் அரசு விழித்து கொண்டு , பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- திருப்பரங்குன்றம் மக்கள் சண்டையிடவில்லை என்றாலும் நீங்கள் சண்டை போட வைத்து விடுவீர்கள் போல என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
- ஏன் இதுபோன்ற வழக்குகளை தாக்கல் செய்கிறீர்கள் எனவும் உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதிகள் கேள்வி கேட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்து ஹிந்து தர்ம பரிஷத் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு தொடரப்பட்டன.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் முன்பு வந்தது.
அப்போது, திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்து அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
வழிகாட்டுத் தலங்கள் குறித்தி வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் மீதான விசாரணையின்போது, திருப்பரங்குன்றம் மக்கள் சண்டையிடவில்லை என்றாலும் நீங்கள் சண்டை போட வைத்து விடுவீர்கள் போல என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
ஏன் இதுபோன்ற வழக்குகளை தாக்கல் செய்கிறீர்கள் எனவும் உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதிகள் கேள்வி கேட்டுள்ளனர்.
- மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் வரை நடைபெற்றது.
- வருகிற 21-ந்தேதி மக்கள் நீதி மய்யத்தின் 8-ம் ஆண்டு தொடக்க விழா கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அமெரிக்காவில் சினிமா தொடர்பான ஏ.ஐ. படிப்பை முடித்து விட்டு சமீபத்தில் சென்னை திரும்பினார். இதன் பின்னர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் சந்தித்து பேசினார்கள். தி.மு.க. சார்பில் கமல்ஹாசன் விரைவில் மேல்சபை எம்.பி.யாக உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளரான முத்தரசன் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் வரை நடைபெற்றது.
இந்த சந்திப்பின்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் அருணாச்சலம் உடனிருந்தார்.
வருகிற 21-ந்தேதி மக்கள் நீதி மய்யத்தின் 8-ம் ஆண்டு தொடக்க விழா கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் கமல்ஹாசன் பங்கேற்று கொடியேற்றி வைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்குகிறார்.
- விடைத்தாளின் முகப்புப் பக்கம் மாணவர்களின் விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.
- விடை தாள்களின் முகப்புப் பக்கத்தை இணைக்கும் பணியை தேர்வு நடக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் மேற்கொண்டனர்.
பொதுத்தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க விடைத்தாள்களின் பராமரிப்புகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் நேரடியாக மேற்கொள்ள உள்ளது.
மதுரையில் கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற +2 பொதுத் தேர்வில் விடைத்தாளின் முகப்புப் பக்கத்தை மாற்றி முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விடைத்தாளின் முகப்புப் பக்கம் மாணவர்களின் விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.
விடை தாள்களின் முகப்புப் பக்கத்தை இணைக்கும் பணியை தேர்வு நடக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் மேற்கொண்டனர்.
தற்போது அரசுத் தேர்வுகள் இயக்ககம், மாவட்டம் தோறும் மையங்கள் அமைத்து விடைத்தாள்களுடன் அதன் முகப்புப் பக்கத்தை இணைக்கும் பணியை மேற்கொண்டுள்ளது.
பொதுத் தேர்வு நடைபெறும் போது மாணவர்களுக்கு வழங்கப்படும் விடைத்தாளில் அனைத்துப் பக்கங்களும் முழுமையாக இணைக்கப்பட்டிருக்கும் வகையில் வழங்கப்பட உள்ளது.
- முன்னாள் அமைச்சர் உதயகுமார் போன்றவர்களுக்கு எல்லாம் எந்த நேரத்திலும் நான் பதில் சொல்ல தேவையில்லை.
- கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வினர் வாக்குகளை பெற தவறி விட்டார்கள்.
கோவை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அ.தி.மு.க.வில் எதையும் எதிர்பார்க்காமல் எம்ஜி.ஆர். காலத்தில் இருந்து கட்சிக்காக உழைப்பவர். கட்சிக்காக பல நிலைகளில் இருந்து நானும், அவரும் இணைந்து பணியாற்றி உள்ளோம். அந்த வகையில் எதையும் எதிர்பார்க்காமல் கட்சிக்கு உழைக்க கூடிய ஒரு உன்னத தொண்டராக தான் அவர் இருக்கிறார்.
முன்னாள் அமைச்சர் உதயகுமார் போன்றவர்களுக்கு எல்லாம் எந்த நேரத்திலும் நான் பதில் சொல்ல தேவையில்லை. அவர் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளட்டும். அதனை மக்கள் கவனித்து கொள்வார்கள்.
கட்சி இணைய வேண்டும் என்பது அனைவருடைய கருத்தாகவும் இருக்கிறது. அ.தி.மு.க.வில் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவியின் விசுவாசமிக்க தொண்டர்கள், கட்சி இணைய வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். கட்சி மீண்டும் இணைந்தால் தான் அ.தி.மு.க. ஆட்சிக்கு வர முடியும் என்ற சூழல் உருவாகி உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் நாட்டுக்கு செய்த சேவையை, நலப்பணிகளை எண்ணி பார்க்கிறார்கள். மக்களும் அ.தி.மு.க. இணைய வேண்டும் என்றே விரும்புகிறார்கள்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வினர் வாக்குகளை பெற தவறி விட்டார்கள். 7 தொகுதிகளில் டெபாசிட் தொகை இழந்தனர். 13 தொகுதிகளில் 3-ம் இடத்தில் இருக்கிறார்கள்.
அ.தி.மு.க. தொண்டர்களின் உரிமையை மீட்கின்ற குரலாக இருக்கின்ற நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்று விசுவாசமிக்க அ.தி.மு.க. தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் மக்களும் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்பதை நிரூபிப்பதற்காக தான் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி யில் நான் போட்டியிடும் சூழல் ஏற்பட்டது. அந்த தொகுதியில் என்னை யாரெல்லாம், எப்படியெல்லாம் தோற்கடிப்பதற்கு சதி செய்தனர் என்பது அனைவருக்கும் தெரியும். அங்கு 3 லட்சத்துக்கும் மேல் வாக்குகளை மக்கள் எனக்கு அளித்தனர். பதிவான வாக்குகளில் 33 சதவீத வாக்குகள் எனக்கு கிடைத்தது.
இதில் இருந்து மக்களும், தொண்டர்களும் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்து இருக்கிறோம்.
அவர்கள் இன்றைக்கு நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் கூட போட்டியிட முடியாத பய உணர்வுடன் இருக்கிறார்கள். பிரிந்து இருக்கின்ற அ.தி.மு.க. சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்தால் தான் வெற்றி பெற முடியும் என்பது தான் உண்மையான கருத்து ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கட்சியை விட்டு விலகிய கோ. தமிழரசன் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
- தன்னை முன்னிறுத்திக் கொள்பவர்கள் கட்சியில் இருந்து விலகிச் செல்கிறார்கள் என்றார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அதிருப்தி அடைந்த நிர்வாகிகள் பலர் அக்கட்சியில் இருந்து விலகி மாற்றுக்கட்சியில் இணைந்து வருவது தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் கோ.தமிழரசன் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
கட்சியை விட்டு விலகிய கோ. தமிழரசன் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
அப்போது அவர், " ஜாதி பெருமை பேசுவோரை கண்டிக்காமல் ஜாதி வெறியை சீமான் தூண்டுகிறார். அழிவுப்பாதையை நோக்கி நாம் தமிழர் கட்சியை சீமான் நடத்திக்கொண்டிருக்கிறார்" என்றார்.
கொ.ப.செ. தமிழரசன் விலகல் குறித்து மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான் கூறியதாவது:-
தன்னை முன்னிறுத்திக் கொள்பவர்கள் கட்சியில் இருந்து விலகிச் செல்கிறார்கள்.
நாதகவில், கட்சிக்காக நான் என செயல்பட வேண்டும். சீமானுக்கு பின் யார் தலைவர் எனும் போட்டியால் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். நேர்மையாக கட்சி நடத்த வேண்டுமானால் சர்வாதிகாரியாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பா.ஜ.க. அரசு தமிழக மக்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.
- தமிழக மக்கள் வாரி வழங்கிய நிதியைத்தான் திரும்ப கேட்கிறோம்.
திருச்சி:
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருச்சியில் ரூ.3 கோடி செலவில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்க அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். திருச்சி சிந்தாமணியில் நடைபெற்ற திருமண விழாவில் அவர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி பேசியதாவது:-
பா.ஜ.க. அரசு தமிழக மக்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. தமிழகத்தில் வெள்ள பாதிப்பின்போது 6 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி கோரிய நிலையில் 900 கோடியை மட்டும் மத்திய அரசு வழங்கியது.
இந்தி படித்தால் மட்டுமே தமிழகத்திற்கு நிதி வழங்குவோம் என மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் நேரடியாக கூறுகிறார். இதனை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் சென்னையில் பிரமாண்ட கண்டன ஆர்ப்பாட்டத்தை நேற்று நடத்தினோம்.
இருமொழிக் கொள்கை என்பது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அல்லது இந்தியா கூட்டணியின் தனிப்பட்ட பிரச்சனை இல்லை. ஒட்டுமொத்த தமிழக மக்களின் கொள்கை . தமிழக மாணவர்களின் கொள்கை.
தமிழக மக்கள் வாரி வழங்கிய நிதியைத்தான் திரும்ப கேட்கிறோம். எந்த நிலையிலும் கல்வி, நிதி பெறும் உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம். அதற்காக போராடி வருகிறோம்.
பொதுமக்களும் தயாராக இருக்க வேண்டும். மணமக்கள் இருவரும் ஒருவரை புரிந்து கொண்டு, விட்டு கொடுத்து சுயமரியாதையோடு வாழ வேண்டும். மணமக்கள் தாங்கள் பெற்றெடுக்கும் குழந்தைக்கு அழகிய தமிழில் பெயர் சூட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- அழிவுப்பாதையை நோக்கி நாம் தமிழர் கட்சியை சீமான் நடத்திக்கொண்டிருக்கிறார்.
- பா.ஜ.க. மனிதகுலத்தின் எதிரி என சொல்லிவிட்டு தற்போது அக்கட்சியின் தலைவர்களை சீமான் புகழ்ந்து பேசுவது முரணாக உள்ளது.
சென்னை:
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அதிருப்தி அடைந்த நிர்வாகிகள் பலர் அக்கட்சியில் இருந்து விலகி மாற்றுக்கட்சியில் இணைந்து வருவது தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் கோ.தமிழரசன் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
கட்சியை விட்டு விலகிய கோ. தமிழரசன் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அவர் கூறியதாவது:-
சமீப காலமாக சீமானின் பேச்சும் செயலும் தமிழ் தேசிய கருத்துகளுக்கு முரணாக உள்ளது. பிழையான தத்துவத்தை நோக்கி பயணப்படும் சீமான், பா.ஜ.க.விடம் நாம் தமிழர் கட்சி தொண்டர்களை விற்றுவிடுவார் போல் தோன்றுகிறது.
ஜாதி பெருமை பேசுவோரை கண்டிக்காமல் ஜாதி வெறியை சீமான் தூண்டுகிறார். அழிவுப்பாதையை நோக்கி நாம் தமிழர் கட்சியை சீமான் நடத்திக்கொண்டிருக்கிறார்.
பா.ஜ.க. மனிதகுலத்தின் எதிரி என சொல்லிவிட்டு தற்போது அக்கட்சியின் தலைவர்களை சீமான் புகழ்ந்து பேசுவது முரணாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தமிழரசன் கட்சி தொடங்கிய ஆரம்ப காலம் முதல் நாம் தமிழர் கட்சியுடைய மாநில கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.






