என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுவதாக செய்தி வெளியானது.
- TDS தொடர்பாக வழக்கமான சரிபார்ப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது ஒரு வழக்கமான அலுவலக நடைமுறை என விளக்கம்.
சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக செய்தி வெளியானது. இந்த நிலையில் எந்வித வருமான வரி சோதனையும் நடைபெறவில்லை என தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள விளக்க கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
இன்று தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை இணை ஆணையர் தலைமையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு விதமான செலவினங்களில் உரிய வருமான வரி பிடித்தம் (TDS) தொடர்பாக வழக்கமான சரிபார்ப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது ஒரு வழக்கமான அலுவலக நடைமுறை ஆகும்.
ஆகவே தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் எவ்வித வருமான வரி சோதனையும் நடைபெறவில்லை. வருமான வரி சோதனை என்ற செய்தி தவறானது.
இவ்வாறு தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
- சிவகங்கையில் திருடிய பைக்கை, ரூ.1500 பணத்துடன் உரிமையாளர் வீட்டின் முன்பு திருடன் நிறுத்தியுள்ளார்.
- தவறை உணர்ந்து 450 கி.மீ தூரம் பயணித்து பைக்கை கொண்டுவந்துள்ளேன்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே திருடிய பைக்கை, ரூ.1500 பணம் மற்றும் மன்னிப்புக் கடிதத்துடன் உரிமையாளர் வீட்டின் முன்பு திருடன் நிறுத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ப்ளாக் பாண்டா என்ற பெயரிலான அந்த மன்னிப்பு கடிதத்தில், "அவசரத்துக்கு பைக்கை எடுத்துட்டேன். தவறை உணர்ந்து 450 கி.மீ தூரம் பயணித்து பைக்கை கொண்டுவந்துள்ளேன்.
ரூ.1500 பணம் பெட்ரோல் டேங்க்கில் இருக்கு. எப்படியும் கெட்ட வார்த்தை பேசியிருப்பீர்கள். அதற்கு நீங்கள் வருந்த வேண்டும். இல்லையென்றால் நாங்கள் வருந்த வைப்போம்" என எழுதப்பட்டுள்ளது"
- ஞானசேகரனிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
- பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதால் மகிளா நீதிமன்றத்திற்கு மாற்ற கோரிக்கை.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்து செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஞானசேகரனுக்கு எதிராக ஏற்கனவே போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஞானசேகரன் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது குற்றப்பத்திரிகை நகல் அவரிடம் வழங்கப்பட்டது.
ஞானசேகரனுக்கு எதிராக பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்திருந்தனர். இதனால் சைதாப்பேட்டை நீதிமன்றம் வழக்கை மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து உத்தரவிட்டது.
- TDS பிடித்தம் செய்வதில் குளறுபடி இருப்பதாக வருமான வரித்துறைக்கு புகார்.
- பசுமை எரிசக்தி கழக பிரிவு அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டதாக தகவல்.
சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
TDS பிடித்தம் செய்வதில் குளறுபடி இருப்பதாக வருமான வரித்துறைக்கு அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது
பசுமை எரிசக்தி கழக பிரிவு அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
- கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச் சாராயம் குடித்து 67 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
- முக்கிய குற்றவாளிகளான கன்னுக்குட்டி, தாமோதரன் உள்ளிட்ட 21 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு.
கடந்த ஆண்டு ஜூன் மாத் 18-ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச் சாராயம் குடித்து 67 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விஷச் சாராய விற்பனை, கடத்தல் தொடர்பாக முக்கிய குற்றவாளிகளான கன்னுக்குட்டி, தாமோதரன் உள்ளிட்ட 21 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
முக்கிய குற்றவாளிகளான கன்னுக்குட்டி மற்றும் தாமோதரன் ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது முக்கிய குற்றவாளியான இருவருக்கும் ஜாமின் வழங்கக் கூடாது. மோசமான மற்றும் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட இருவருக்கும் கருணை காட்டக்கூடாது என என சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து இருவருக்கும் ஜாமின் வழங்க நீதிபதி மறுத்துவிட்டார். மேலும் ஜாமின் மனுவை திரும்பப்பெற அனுமதித்து மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம். இதே வழக்கில் கைது செய்யப்பட்ட பரமசிவம், விஜயாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- இந்தியாவில் 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
- அந்த மாநிலங்கள் எதுவும் அதிகாரிகள் குழுவை அமைத்து அதன் அறிக்கை அடிப்படையில் முடிவெடுக்கவில்லை.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஸ்ரீதர் குழு அறிக்கையை வெளியிட தமிழக அரசு மறுத்திருக்கிறது. அதற்காக தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள காரணம், தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த தி.மு.க. அரசுக்கு எள்ளளவும் விருப்பம் இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.
அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு விரும்பினால், மார்ச் மாதம் ஒன்றாம் தேதியிலிருந்தோ, புதிய நிதியாண்டின் தொடக்கமான ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்தோ செயல்படுத்த முடியும். அதற்காக எந்த ஆய்வும் தேவையில்லை. யாருடைய பரிந்துரையும் தேவையில்லை. இவ்வளவுக்குப் பிறகும் குழு அமைத்து பரிந்துரை பெற்றுத்தான் பழைய ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என்று அரசு நினைத்தால், ஸ்ரீதர் குழு அறிக்கை மீது ஒரு மணி நேரத்தில் முடி வெடுத்து செயல்படுத்தலாம்.
ஆனால், அந்த எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை. மாறாக, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருப்பதால் தான் இத்தகைய முரண்பட்ட அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. அரசின் இந்த ஏமாற்று நாடகம் எடுபடாது.
இன்றைய நிலையில், இந்தியாவில் ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்கண்ட், சத்தீஷ்கார், பஞ்சாப், கர்நாடகம், இமாலயப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த மாநிலங்கள் எதுவும் அதிகாரிகள் குழுவை அமைத்து அதன் அறிக்கை அடிப்படையில் முடிவெடுக்கவில்லை. எனவே, குழு நாடகங்களை நடத்துவதைத் தவிர்த்து, தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஜெயலலிதா காலத்தில் இருந்தே அ.தி.மு.க.வில் இருந்து வருபவர் மருது அழகுராஜ்.
- அவர் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது.
சென்னை:
ஜெயலலிதா காலத்தில் இருந்தே அ.தி.மு.க.வில் இருக்கும் மருது அழகுராஜ் தற்போது ஓ.பி.எஸ். அணியில் இருக்கிறார்.
இதற்கிடையே, கடந்த சில நாளாக விஜயைப் புகழ்ந்து வரும் மருது அழகுராஜ் விரைவில் ஓ.பி.எஸ். அணியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில், ஒரு தலைமையும் ஒரு தலைமுறையும் அரசியலுக்கு வருகிறது. அதுதான் 2026ஐ தீர்மானிக்கப் போகிறது என விஜய் புகைப்படத்துடன் மருது அழகுராஜ் பகிர்ந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், மருது அழகுராஜ் இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளத்தில், 'தி.மு.க. இழந்து வரும் மக்கள் ஆதரவையும், அ.தி.மு.க. இழந்து வரும் தொண்டர்கள் அபிமானத்தையும் த.வெ.க. தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணம் மொத்தமாக அள்ளிக் கொண்டு போகப்போகிறது. 2ம் ஆண்டின் நீட்சியில், 2026-ம் ஆண்டு ஆட்சியில்' என பதிவிட்டுள்ளார்.
- மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- பின் பகுதி வழியாக மர்ம நபர்கள் யாரோ வந்து எழுத்துகளை அழித்தது விசாரணையில் தெரிய வந்தது.
நெல்லை:
மத்திய அரசு மும்மொழி கல்விக் கொள்கை மூலமாக தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக கூறி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
நெல்லையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தி.மு.க. நிர்வாகிகள் பாளையங்கோட்டை ரெயில் நிலையத்தில் நுழைந்து அங்கிருந்த பெயர் பலகையில் இந்தியில் எழுதப்பட்ட வாசகத்தை கருப்பு மையால் அளித்துவிட்டு தமிழ் வாழ்க என அந்த பெயர் பலகையில் எழுதினர்.
இது தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தி.மு.க. நிர்வாகிகள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை ஒட்டி ரெயில் நிலையத்தில் யாரும் புகுந்து விடாமல் இருப்பதற்காக மாநகர போலீசார் அங்கு குவிக்கப்பட்டு இருந்தனர். ரெயில் நிலையத்தில் 2 கட்டிட நுழைவு வாயில்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆர்ப்பாட்டம் முடிந்து தி.மு.க.வினர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்ட நிலையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் 4-வது நடைமேடையில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில் உள்ள திருநெல்வேலி சந்திப்பு என எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகளை கருப்பு மையால் அளிக்கப்பட்டிருந்தது. இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக ரெயில் நிலையத்தின் முன் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்த நிலையில் பின் பகுதி வழியாக மர்ம நபர்கள் யாரோ வந்து எழுத்துகளை அழித்தது விசாரணையில் தெரிய வந்தது.
இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- கொள்கை மீது விருப்பம் உள்ளவர்கள் எனது கட்சியில் பயணிப்பார்கள்.
- மொழி குறித்த புரிதல் பா.ஜ.க.விற்கு கிடையாது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த திமிரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் இன்று நடந்தது.
இதில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தற்போது தனியார் பள்ளிகளில் தமிழை எடுத்து விட்டார்கள். அங்கு இந்தி கற்பிக்கப்படுகிறது. இதனால் அந்த பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை சேர்க்கின்றனர். தமிழ் படித்தால் பிச்சை தான் எடுக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கி எங்களை வீழ்த்த நினைக்கிறார்கள்.
ஏற்கனவே தமிழகத்தில் மும்மொழி கொள்கை வந்துவிட்டது. அதனை வெவ்வேறு வழிகளில் செயல்படுத்தி வருகிறார்கள். அதனை எதிர்ப்பதில் அரசுக்கு உறுதி கிடையாது. என்னைத் தாண்டி இந்தியை திணியுங்கள் பார்க்கலாம்.
மக்களின் வாழ்க்கையை பறிப்பதற்காக முதல்வர் மருந்தகம் கொண்டுவரப்பட்டுள்ளது. தேர்தல் வரும்போதுதான் அது தேவைப்படுகிறதா ஏன் இதுவரை மக்களுக்கு நோய் வரவே இல்லையா.
கொள்கை மீது விருப்பம் உள்ளவர்கள் எனது கட்சியில் பயணிப்பார்கள். முரண்பாடு உள்ளவர்கள் மாறி செல்கின்றனர். செல்வது அவர்கள் சொந்த விருப்பம்.
எந்த இலையும் உதிரும்போது அமைதியாக விழாது. வெளியே போகிறவர்கள் நான் நன்றாக செயல்படுகிறேன் என்று சொல்லி விட்டுப் போக மாட்டார்கள். யார் கையிலும் காலிலும் விழுந்து தக்க வைக்க வேண்டிய அவசியம் நாம் தமிழர் கட்சிக்கு இல்லை.
தமிழகத்தில் பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாவது குறித்து அப்பா (முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்) தான் பதில் சொல்ல வேண்டும். இன்றைய முதல்வர் ஒரு பிராண்டாக பார்க்கப்படுகிறார். அரசுக்காக அவர் திராவிட மாடல் என்ற பெயரில் ஆட்சிக்காக நடித்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
2026 தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. அதற்குள் அவசரப்பட வேண்டிய அவசியம் இல்லை.
எங்களுக்கு கூட்டணி அவசியம் இல்லை. எல்லாத்தையும் சொல்ல முடியாது கொஞ்சம் ரகசியம் வையுங்கள்.
மொழி குறித்த புரிதல் பா.ஜ.க.விற்கு கிடையாது.
புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் கல்வித்துறைக்கு நிதி வழங்கப்படவில்லை என்பது சரியல்ல. நிதியைக் கூட கேட்டு பெற முடியாமல் 40 பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு என்ன செய்கிறீர்கள்.
அரசு ஊழியர்கள் நாள்தோறும் ஒவ்வொரு கோரிக்கைகளை முன்வைத்து போராடும் சூழல் உள்ளது. அவர்கள் அரசு அழைத்து பேசினாலும் தங்களது போராட்டத்தில் உறுதியாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மார்ச் 4-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் உத்தரவிட்டுள்ளார்.
- கோவில் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திற்கு வரும் மார்ச் 4-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் உத்தரவிட்டுள்ளார்.
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் மார்ச் 4-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- உயர்மட்ட குழுவின் கீழ், பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்கான ஆலோசனை குழு அமைக்க வேண்டும்.
- ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை எடுப்பதோடு, குழு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
மதுரை:
தேனி மாவட்டத்தை சேர்ந்த சப்னா, ஐகோர்ட்டு மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், "உயர்மட்ட குழுவின் கீழ், பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்கான ஆலோசனை குழு அமைக்க வேண்டும். இந்த குழு ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை எடுப்பதோடு, அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
இது தொடர்பாக கடந்த 2021-ல் தமிழக அரசு அரசாணை பிறப்பித்து அதன் தொடர்பான வழிகாட்டுதல்களையும் பிறப்பித்தது. இருப்பனும் பள்ளிகளில் பள்ளி மாணவர்களுக்கான பாதுகாப்பு அறிவுரை குழு முறையாக இயங்குவதில்லை.
ஆகவே அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கான பாதுகாப்பு அறிவுரை குழுமம் சரியாக இயங்கி பள்ளி மாணவர்களிடையே பாலியல் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்த உத்தரவிட வேண்டும்" என அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வு, "அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் பாதுகாப்பு அறிவுரை குழு அமைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்த நிலை அறிக்கையை தமிழக அரசுத்தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
- பணம் படைத்தவர்களுக்கு ஒரு நீதி, ஏழை எளியவர்களுக்கு ஒரு நீதி என்ற தி.மு.க.வின் சாயம் வெளுக்கத் தொடங்கிவிட்டது.
- பெயிண்ட் டப்பாவுடன் சுற்றி வரும் உங்கள் கட்சியினருக்கு, இந்தி எது ஆங்கிலம் எது என்பதை, உங்கள் அறிக்கை விளக்க மறந்து போனது உள்ளபடி வருத்தமே.
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கருப்பு பெயிண்ட் டப்பாவுடன் சுற்றி வரும் கழகக் கண்மணிகளுக்கு கடிதம் ஒன்று எழுதியிருப்பதாக அறிந்தேன்.
அதில் அவர், நாம் எந்த மொழிக்கும் எதிரியில்லை. யார் எந்த மொழியைக் கற்பதற்கும் தடையாக நிற்பதில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மும்மொழி கற்கும் வாய்ப்பு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மறுக்கப்படுவது ஏன் என்ற கேள்விக்கு, இதுவரை பதில் அளிக்க மறுத்து வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
மும்மொழி கற்கத் தடை இல்லை, ஆனால் நீங்கள் கற்கவேண்டும் என்றால் தி.மு.க.வினர் நடத்தும் சிபிஎஸ்இ அல்லது மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் உங்கள் குழந்தைகளைச் சேர்த்துவிடுங்கள் என்கிறாரா மு.க.ஸ்டாலின்?
உங்கள் போலி நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப்போவதில்லை. பணம் படைத்தவர்களுக்கு ஒரு நீதி, ஏழை எளியவர்களுக்கு ஒரு நீதி என்ற தி.மு.க.வின் சாயம் வெளுக்கத் தொடங்கிவிட்டது.
மேலும், பெயிண்ட் டப்பாவுடன் சுற்றி வரும் உங்கள் கட்சியினருக்கு, இந்தி எது ஆங்கிலம் எது என்பதை, உங்கள் அறிக்கை விளக்க மறந்து போனது உள்ளபடி வருத்தமே என்று தெரிவித்துள்ளார்.






