search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "apology letter"

    பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் பகிரங்கமாக வாக்களித்த விவகாரத்தில் அந்நாட்டின் வருங்கால பிரதமர் இம்ரான் கான் தேர்தல் கமிஷனிடம் இன்று மன்னிப்பு கடிதம் அளித்தார். #ImranKhan #ImranKhanapology
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் 25-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ- இன்சாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.

    அதை தொடர்ந்து அக்கட்சியின் தலைவரான இம்ரான்கான் பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். இவர் இஸ்லாமாபாத் எம்.பி. தொகுதி உள்பட 5 தொகுதிகளில் போட்டியிட்டு மூன்றில் வெற்றி பெற்றார்.

    தேர்தல் தினத்தன்று இஸ்லாமாபாத்  தொகுதியில் வாக்களித்த இம்ரான் கான் அனைவரும் பார்க்கும்படி பகிரங்கமாக தனது வாக்கை பதிவு செய்த போட்டோ மற்றும் வீடியோ அனைத்து பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பாகிஸ்தான் தேர்தல் கமி‌ஷனில் புகார் செய்யப்பட்டது.

    தேர்தல் கமி‌ஷனின் 4  உயரதிகாரிகள் கொண்ட அமர்விடம் பதில் அளிக்கும்படி இம்ரான் கானுக்கு தலைமை தேர்தல் கமி‌ஷனர் நோட்டீஸ் அனுப்பினார்.

    அதற்கு இம்ரான் கான் சார்பில் அவரது வழக்கறிஞர் பாபர் அவான் நேரில் ஆஜராகி எழுத்து மூலம் பதில் அளித்தார். அதில், இம்ரான்கான் வாக்குப்பதிவு செய்த போட்டோவும், வீடியோவும் அவரது அனுமதியின்றி எடுக்கப்பட்டது.

    இம்ரான்கான் வாக்களித்த போது தொண்டர்களின் கூட்ட நெரிசலால் வாக்கை பதிவு செய்வதை மறைப்பதற்கு அமைக்கப்பட்டிருந்த திரை கீழே விழுந்துவிட்டது. எனவே பகிரங்கமாக வாக்களித்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை என கூறப்பட்டிருந்தது.

    ஆனால், அவரது பதிலை தேர்தல் கமி‌ஷன் ஏற்றுக் கொள்ளவில்லை மாறாக பகிரங்கமாக வாக்களித்தற்காக இம்ரான்கான் மன்னிப்பு கேட்டு தனது கையொப்பத்துடன் பிரமாண பத்திரம்  தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

    இதைதொடர்ந்து, தேர்தல் கமிஷனின் 4 உயரதிகாரிகள் கொண்ட அமர்வின் முன்னர் இம்ரான் கானின் கையொப்பத்துடன் கூடிய பிரமாண பத்திரத்தை அவரது வழக்கறிஞர் இன்று தாக்கல் செய்தார்.

    பாகிஸ்தான் அரசியலமைப்பு சட்டத்தின்படி, வெளிப்படையாக வாக்களிப்பது குற்றமாகும். இதற்கு அதிகபட்சமாக ஆறுமாத சிறை காவல் அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இவை இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. #ImranKhan #ImranKhanapology 
    ×