என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தமிழக கவர்னரின் செயல்பாடுகள் நேர்மையானதாக இல்லை என்று கருதுகிறோம்.
    • கவர்னர் அரசியல் சட்டம் 200-வது பிரிவின் படி செயல்படுவது நல்லது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    மசோதாக்களை கிடப்பில் போட்ட விவகாரம் தொடர்பாக கவர்னருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பிறகு இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு பல்வேறு அதிரடியான உத்தரவுகளை கொண்டதாக இருந்தது. தமிழக அரசு கோரிக்கைக்கு முழுமையான வெற்றி தரும் வகையில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு அமைந்துள்ளது. அந்த தீர்ப்பு விவரம் வருமாறு:-

    தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களை கிடப்பில் போடுவதற்கு கவர்னருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? கவர்னர் ஒரு தடவை திருப்பி அனுப்பிய மசோதாக்களை தமிழக சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய பிறகு அதன் மீது கவர்னர் 3 விதமான முடிவுகளைதான் எடுக்க முடியும்.

    ஒன்று மசோதாவை ஏற்கலாம். இரண்டு மசோதாக்களை நிராகரிக்கலாம். மூன்றாவது மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கலாம். மசோதாக்களில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் மட்டுமே ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க முடியும்.

    ஆனால் தமிழக கவர்னர் 2 மசோதாக்களை மட்டும் ஜனாதிபதிக்கு அனுப்பி இருக்கிறார். சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றிய பிறகு அந்த மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது தவறானதாகும். 10 மசோதாக்களை கிடப்பில் போட்டது சட்ட விரோதமானது. ஒருதலைபட்சமானது.

    இது ஒரு பக்கமாக தள்ளப்பட வேண்டும். 10 மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்து இருப்பதற்கு கவர்னருக்கு வீட்டோ போன்ற அதிகாரம் ஏதேனும் இருக்கிறதா? கவர்னருக்கு என்று எந்த அதிகாரமும் கிடையாது.

    10 மசோதாக்களை நிலுவையில் வைத்துள்ள விவகாரத்தில் தமிழக கவர்னரின் செயல்பாடுகள் நேர்மையானதாக இல்லை என்று கருதுகிறோம். எந்த ஒரு மசோதாவையும் குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு நிலுவையில் வைத்திருக்க இயலாது.

    கவர்னர் அந்த மசோதாக்களை உடனடியாக ஏற்றுக்கொண்டு இருக்க வேண்டும். அதாவது மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஒரு மாதத்துக்குள் கவர்னர் தனது முடிவை தெரிவித்து இருக்க வேண்டும். நிலுவையில் வைத்து இருந்ததை எப்படி ஏற்க இயலும்.

    தமிழக கவர்னர் மாநில அரசின் உதவி பெற்றே செயல்பட வேண்டும். மாநில அரசின் ஆலோசனை படி செயல்படுவதுதான் சரியானதாகும். சட்ட ரீதிபடி கவர்னர் தன்னிச்சையாக செயல்பட முடியாது.

    தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு கவர்னர் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். எந்தவிதத்திலும் முட்டுக்கட்டையாக இருக்க கூடாது. கவர்னர் அரசியல் சட்டம் 200-வது பிரிவின் படி செயல்படுவது நல்லது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இதனிடையே, ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் நீதிபதிகள் ஒப்புதல் வழங்கினர். இதனால் ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பிய பல்கலைக்கழகங்கள் சட்டத்திருத்த மசோதா, டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்களும் சட்டமாக நடைமுறைக்கு வந்துவிட்டன.

    இதனை தொடர்ந்து, உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தமிழ்நாட்டு அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தராகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    தமிழ்நாடு பல்கலை., சட்டத்திருந்த (2-வது) மசோதா உட்பட 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்திருப்பதால் கவர்னருக்கு பதிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனி பல்கலைக்கழகங்களின் வேந்தராகிறார். 

    • உச்சநீதிமன்றத்தின் இன்றையத் தீர்ப்பு மாநில அரசுகளுக்கு மிகப்பெரிய அதிகாரத்தை வழங்கியுள்ளது.
    • இந்தத் தீர்ப்பு பாட்டாளி மக்கள் கட்சிக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை நியமிக்கலாம் என்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 சட்ட முன்வரைவுகளுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் 142-ஆம் பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வரலாற்று சிறப்பு மிக்கத் தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும்.

    அதுமட்டுமின்றி, சட்டப்பேரவையால் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்ட முன்வரைவுகளை ஆளுநர்கள் காலவரையின்றி நிலுவையில் வைத்திருக்க முடியாது; முதன்முதலில் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்ட முன்வரைவுகள் மீது மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்; ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டு, மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்படும் முன்வரைவுகள் மீது ஒரு மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியிருக்கிறது. இதன் மூலம் மாநில அரசுகள் இயற்றும் சட்டங்களை ஆளுநர்கள் அவர்கள் விருப்பம் போல கிடப்பில் போட்டு வைக்கும் நடைமுறைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது; எந்த ஒரு சட்டமாக இருந்தாலும் அதிகபட்சமாக 4 மாதங்களில் ஒப்புதல் கிடைத்து விடும் என்ற நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது.

    உச்சநீதிமன்றத்தின் இன்றையத் தீர்ப்பு மாநில அரசுகளுக்கு மிகப்பெரிய அதிகாரத்தை வழங்கியுள்ளது. மிகவும் சிக்கலான, மாநில அரசுகளின் நலன் சார்ந்து நிறைவேற்றப்படும் சட்டங்களை ஆளுநர்கள் நிறுத்தி வைக்க முடியாது என்ற நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மாநில அரசின் மாண்பு பாதுகாக்கப்பட்டிருக்கிறது.

    மாநில அரசுகள் சட்டம் இயற்றினால், அதன் மீது ஆளுநர்கள் முடிவெடுக்க காலவரையறை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று நீண்டகாலமாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் விவகாரத்தில் சிக்கல் ஏற்பட்டதால், லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதும், அதனடிப்படையில் இயற்றப்பட்ட சட்டங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காத நிலையில் அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும் என்று யோசனை வழங்கியதும் பாட்டாளி மக்கள் கட்சி தான். அந்த வகையில் இந்தத் தீர்ப்பு பாட்டாளி மக்கள் கட்சிக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

    உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தமிழ்நாட்டு அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தர் முதலமைச்சர் தான் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் காலியாக உள்ள 8 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவிகளை விரைந்து நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதன் மூலம் மாணவர்களின் நலன்களை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும்.

    • புதிய விமான நிலைய கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் கூட்டு நிறுவனத்தை தேர்வு செய்யும் பணியை டிட்கோ விரைவில் தொடங்க உள்ளது.
    • அடுத்த ஆண்டு பரந்தூர் விமான நிலைய கட்டுமான பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சுமார் 5300 ஏக்கரில் அமைய உள்ளது. இதற்காக பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றி உள்ள 13 கிராமங்களில் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. புதிய விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு கிராமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதற்கிடையே பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக திட்ட அனுமதிக்காக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது. இதனை பரிசீலித்த ஆணையம் திட்ட அனுமதிக்கான கொள்கை அளவிலான ஒப்புதலை நேற்று வழங்கியது.

    ஏற்கனவே பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு இடஅனுமதி ஏற்கனவே கிடைத்த நிலையில் தற்போது திட்ட ஒப்புதலும் கிடைத்து உள்ளது. இதைத்தொடர்ந்து புதிய விமான நிலைய கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் கூட்டு நிறுவனத்தை தேர்வு செய்யும் பணியை டிட்கோ விரைவில் தொடங்க உள்ளது.

    இதையடுத்து அடுத்த ஆண்டு பரந்தூர் விமான நிலைய கட்டுமான பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பரந்தூர் விமான நிலைய கட்டுமான பணியை 4 கட்டமாக பிரித்து 2026-ம் ஆண்டு தொடங்கி 2028-ம் ஆண்டில் முடிக்க திட்டமிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • வேலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த அன்பழகனை தேடி வந்தனர்.
    • கைது செய்யப்பட்ட அன்பழகனிடம் தனிப்படை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூரில் உள்ள ஊரீசு கல்லூரி துணை முதல்வர் அன்பழகன். இவர் அதே கல்லூரியில் பணியாற்றி வந்த பெண் விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இதுகுறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த அன்பழகனை தேடி வந்தனர்.

    கல்லூரி மாணவ, மாணவிகள் அன்பழகனுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக வந்து அன்பழகனை கைது செய்ய கோரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் தனிப்படை போலீசார் ஆந்திர மாநிலம், ராசன பள்ளியில் பதுங்கி இருந்த அன்பழகனை இன்று அதிகாலை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அன்பழகனிடம் தனிப்படை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இதுபோன்ற விஷயம் இனி நடைபெறாது என்று துரைமுருகன் கூறினார்.
    • சபாநாயகர், அவை முன்னவரின் விளக்கத்தில் திருப்தியில்லை என்று கூறி அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.

    சட்டசபையில் சபாநாயகருடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், சட்டசபையில் அ.தி.மு.க.வினர் பேசுவதை திட்டமிட்டு நேரலை செய்ய மறுக்கிறார். சபாநாயகரே மரபை கடைபிடிக்கவில்லை என்றால் நாங்கள் யாரிடம் சென்று முறையிடுவது? சபாநாயகர் சொல்வது எதுவும் உண்மையில்லை. மரபை மீறுகிறார் சபாநாயகர் என்று கூறினார்.

    துரைமுருகன் - இதுபோன்ற விஷயம் இனி நடைபெறாது, எதிர்க்கட்சி தலைவர் இதனை இதோடு விட்டுவிடவும்.

    சபாநாயகர் அப்பாவு - எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ். பேசுவது உண்மைக்கு புறம்பானது. எந்த பாகுபாகும் இல்லாமல் அனைவரும் பேசுவதை நேரலையில் காட்டி வருகிறோம் என்று கூறினார்.

    சபாநாயகர், அவை முன்னவரின் விளக்கத்தில் திருப்தியில்லை என்று கூறி அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.

    • கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • 10-ந் தேதி திருக்கல்யாணம், 11-ந் தேதி பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெற உள்ளது.

    பழனி:

    முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா திருஆவினன்குடி கோவிலில் கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    வருகிற 10-ந் தேதி திருக்கல்யாணமும், 11-ந் தேதி பங்குனி உத்திர தேரோட்டமும் நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து ஊர்வலமாக வந்த வண்ணம் உள்ளனர்.


    குறிப்பாக ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்காவடி எடுத்து அ திக அளவு பக்தர்கள் வருவதால் கிரிவலப்பாதையில் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் அதிகாலை முதலே தீர்த்தக்காவடிகளுடன் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

    அவர்களுக்கு மட்டும் மலைக்கோவிலில் ரூ.300 கட்டண தரிசன பாதை வழியாக இலவசமாக சென்று சுவாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

    பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருஆவினன்குடி கோவில் சாலை, சன்னதி வீதியில் தேர் உலா வரும் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் உத்தரவின்படி நகரமைப்பு அலுவலர் புவனேஸ்குமார் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர் வரும் வழியில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.

    பங்குனி உத்திர திருவிழாவுக்கு இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில் தற்போதே பல்வேறு மாவட்டங்களில் இருந்து பழனிக்கு அதிக அளவு பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். இவ்வாறு வரும் பக்தர்கள் பழனியில் பாரம்பரிய முறையில் பஞ்சாமிர்தம் தயாரித்து சுவாமிக்கு படைத்து வழிபடுவது வழக்கம்.

    பஞ்சாமிர்தம் தயாரிக்க மலை வாழைப்பழங்களை அதிக அளவில் வாங்கி பயன்படுத்துவார்கள். இதற்காக கொடைக்கானல், தாண்டிக்குடி, ஆடலூர், பாச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மலை வாழைப்பழங்கள் இங்கு அதிக அளவில் கொண்டு வரப்பட்டுள்ளன.

    பழனி அய்யம்புள்ளி சாலை, அருள்ஜோதி வீதியில் சாலையோரங்களில் தற்காலிக வாழைப்பழ கடைகள் அமைத்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். வரத்து குறைவால் விலை அதிகரித்து ஒரு பழம் ரூ.8 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    பக்தர்கள் மொத்தமாக வாழைப்பழங்களை வாங்கி பஞ்சாமிர்தம் தயாரித்து பிரசாதமாக வழங்குகின்றனர். இந்த ஆண்டு வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளதாகவும், தற்போது 50 டன் வாழைப்பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இது தவிர கோவில் நிர்வாகம் சார்பில் தட்டுப்பாடின்றி பஞ்சாமிர்தம் கிடைக்கவும், அனைத்து ஸ்டால்களிலும் அதிக அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    • தேர்தல் வருவதற்கு முன்பு ஒரு பேச்சு... தேர்தல் முடிந்தவுடன் ஒரு பேச்சு... என தி.மு.க. இரட்டை வேடம்.
    • சபாநாயகர் சொல்வது எதுவும் உண்மையில்லை. மரபை மீறுகிறார் சபாநாயகர்.

    சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தேர்தல் வருவதற்கு முன்பு ஒரு பேச்சு... தேர்தல் முடிந்தவுடன் ஒரு பேச்சு... என தி.மு.க. இரட்டை வேடம்.

    * கேஸ் மானியமாக ரூ.100 தருவோம் என தேர்தல் வாக்குறுதி அளித்தனர், இதுவரை நிறைவேற்றவில்லை.

    * மக்கள் பிரச்சனை பற்றி பேச அனுமதி மறுக்கப்படுகிறது. நாங்கள் வெளியேறி பின்னர் முதல்வரை பேச வைத்து சிறுமைப்படுத்துகின்றனர்.

    * இன்னும் 9 மாதங்கள்தான் இருக்கிறது. தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் எதிர்க்கட்சியாக மாறப்போவது வெகு தொலைவில் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மங்கள வாத்தியங்கள் முழங்க அரோகரா கோஷத்துடன் நடைபெற்றது.
    • வழி நெடுகிலும் பக்தர்கள் சாமிக்கு மலர்மாலை அணிவித்து வழிபாடு.

    தென்காசி:

    தென்காசியில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயமான காசி விஸ்வநாதர் கோவிலின் கும்பாபிஷேக விழா நேற்று விமர்சையாக நடைபெற்றது. இதில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு பிரம்மாண்ட அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்நிலையில் மாலையில் சிறப்பு சொற்பொழிவுடன் காசி விஸ்வநாதர் உலகம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி கோவிலின் உள்பகுதி பிரகாரத்தில் நடைபெற்றது.

    அலங்கரிக்கப்பட்ட நந்தி வாகனத்தில் உலக அம்மன் மற்றும் காசி விஸ்வநாதர் எழுந்தருளி பக்தர்கள் முன்னிலையில் திருக்கல்யாண வைபவம் வெகுவிமரிசையாக வேத மந்திரங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க அரோகரா கோஷத்துடன் நடைபெற்றது.

    திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்ற போது கோவில் முழுவதும் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதனைத் தொடர்ந்து உலகம்மன் காசி விஸ்வநாதர் சப்பரத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் உலா வந்து காட்சி அளித்தனர். வழி நெடுகிலும் பக்தர்கள் சாமிக்கு மலர்மாலை அணிவித்து வழிபாடு செய்தனர்.

    முன்னதாக திருக்கல்யாண நிகழ்ச்சியை முன்னிட்டு கோபுர வாயிலின் முகப்பு பகுதியில் பிரம்மாண்ட அத்த பூக்கோலம் போடப் பட்டிருந்ததை பக்தர்கள் தங்களின் செல்போன்களில் படம் பிடித்து உற்சாக மடைந்தனர்.


    கும்பாபிஷேக நிகழ்ச்சி முடிந்த பின்பும் இன்று காலை வரையில் காசி விஸ்வநாதர் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    தென்காசியில் காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டு எவ்வித அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் சிறப்பாக பாதுகாப்பு பணியை மேற்கொண்டிருந்த னர்.

    அவர்களுக்கு கோவிலின் அறங்காவலர் குழு தலைவர் வல்லம் பாலகிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்கள் பக்தர்கள் பொதுமக்கள் சார்பில் தங்களின் நன்றியை தெரிவித்தனர். 

    • தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை
    • ஆடியோ ஒன்று தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    கோவை:

    கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ் (வயது37). இவரது சொந்த ஊர் நெல்லை. ஜான் ஜெபராஜ் கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் செயல்பட்ட கிறிஸ்தவ சபையின் மத போதகராக இருந்தார். ஜான் ஜெபராஜ் பாப் இசையின் மூலம் பாடல்களை பாடி இளைஞர்களை கவர்ந்து வந்தார்.

    இவர் தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநி லங்ளுக்கும் சென்று பாப் இசை நிகழ்ச்சி நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் கோவை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது 2 சிறுமிகள் பாலியல் புகார் கொடுத்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜான் ஜெபராஜ் கடந்த ஆண்டு மே மாதம் 21-ந் தேதி அவரது வீட்டில் நிகழ்ச்சி ஒன்றினை நடத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியில், கோவையை சேர்ந்த 17 மற்றும் 16 வயதுடைய 2 சிறுமிகளும் பங்கேற்றுள்னர்.

    அப்போது, ஜான் ஜெபராஜ் அந்த சிறுமிகளை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.

    மதபோதகர் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானதை தொடர்ந்து, மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    அவரை கைது செய்வதற்காக ஜி.என்.மில்சில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர். ஆனால் அவர் இல்லை.போலீசார் வழக்குப்பதிவு செய்து தன்னை தேடுவதை அறிந்ததும் அவர் தலைமறைவாகி விட்டார்.

    தலைமறைவான அவரை பிடிக்க இன்ஸ்பெக்டர் ரேணுகா தேவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் தலைமறைவான ஜான் ஜெபராஜ் பெங்களூருவில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்துள்ளனர். பெங்களூர் நகர் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் ஜான் ஜெபராஜின் சொந்த ஊர் நெல்லை என்பதால் அவர் நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பதுங்கியிருக்க வாய்ப்புள்ளது என்பதால் போலீசார் அங்கும் முகாமிட்டு, அவரை தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே தலைமறைவாக உள்ள மதபோதகர் ஜான் ஜெபராஜ் பேசி முன்பு வெளியிட்ட ஆடியோ ஒன்று தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அதில், அவர் தனது மனைவியிடம், என்ன நடந்தது என்று உனக்கும் தெரியும். உனக்கும், எனக்கும் இடையே உள்ள சிறிய பிரச்சினையை வைத்து, ஒருவர் நம்மிடம் விளையாண்டு விட்டார்.உனக்கு ஒரு விஷயம் புரிய வேண்டும். இந்த மாதிரி பிரச்சினைகள் நடக்கிறபோது எல்லா மனிதருக்கும் முதலில் தோன்றுவது தற்கொலை எண்ணம் தான்.

    எனக்கும் அதுபோன்று தோன்றியது. நான் 4-5 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளேன். 3 மாதம் மன அழுத்தத்தில் இருந்தேன். சாப்பிடவில்லை. 9 கிலோ வரை குறைந்து விட்டேன்.

    நான் தவறு செய்து விட்டு, அது செய்தேன். இது செய்தேன் என கூறுகிறாய் என நினைக்கலாம். என்ன நடந்தது என்று நமக்கு தெரியும். நான் தவறு செய்திருந்தால், அதனை கடவுள் பார்த்துக்கொள்வார்.

    இவ்வாறு அந்த ஆடியோவில் அவர் பேசியுள்ளார்.

    இதேபோல மேலும் சில ஆடியோக்களையும் ஜான்ஜெபராஜ் பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த ஆடியோ விவரங்களையும் கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • உச்சநீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பு தமிழகம் மட்டுமின்றி பிற மாநில அரசுகளுக்கும் கிடைத்த வெற்றி.
    • தமிழக அரசின் வாதத்தையும் நியாயத்தை ஏற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

    மசோதாக்களை கிடப்பில் போட்ட விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், தன்னிச்சையாக செயல்பட மாநில ஆளுநர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்கினர்.

    இதனால் ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பிய பல்கலைக்கழகங்கள் சட்டத்திருத்த மசோதா, டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்களும் சட்டமாக நடைமுறைக்கு வந்துவிட்டன.

    மேலும் மாநில அரசின் செயல்பாடுகளுக்கு கவர்னர் முட்டுக்கட்டையாக இருக்கக்கூடாது என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

    இந்த தீர்ப்பை அடுத்து சட்டசபையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

    * ஆளுநருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

    * வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை தமிழக அரசு பெற்றுள்ளது.

    * உச்சநீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பு தமிழகம் மட்டுமின்றி பிற மாநில அரசுகளுக்கும் கிடைத்த வெற்றி.

    * தமிழக அரசின் வாதத்தையும் நியாயத்தை ஏற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

    * மாநில சுயாட்சி, மத்திய கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்ட தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்று கூறினார்.

    • சாமானிய மக்களைப் பெரிதும் பாதிக்கும் சமையல் எரிவாயு விலையேற்றத்தை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
    • தேர்தல் அறிக்கையில் அறிவித்த சமையல் எரிவாயு மானிய வாக்குறுதியை உடனே நிறைவேற்ற வேண்டும்.

    சென்னை:

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ள சமையல் எரிவாயு (Gas Cylinder) விலை உயர்வு, சாமானிய மக்கள் மீதான நேரடித் தாக்குதலாகும். மக்களின் அன்றாட வாழ்வே போராட்டமாக இருக்கின்ற சூழலில், ஒன்றிய அரசின் இந்த விலையேற்றம், மக்களை மேலும் வாட்டி வதைப்பதாகவே அமைந்துள்ளது.

    ஒவ்வொரு முறையும் சமையல் எரிவாயு வாங்கும் போது, அதற்கான மானியத் தொகை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற அறிவிப்பைக் காற்றில் பறக்கவிட்ட ஒன்றிய ஆட்சியாளர்கள், மக்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் என்ற நினைப்பில் உள்ளனர்.

    தற்போது அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்ந்து விட்ட நிலையில், மக்களுக்குப் பொருளாதாரச் சுமையை ஏற்றும் வகையில் சமையல் எரிவாயு விலையை ஒன்றிய அரசு அதிரடியாக உயர்த்தியிருப்பது ஏற்கத்தக்கது இல்லை.

    தேர்தல் நெருங்கும் நேரத்தில் சமையல் எரிவாயு விலையைக் குறைப்பதையும், தேர்தலுக்குப் பின்னர் விலையை ஏற்றுவதையும் வாடிக்கையாக வைத்துள்ள ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு மக்கள் பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள்.

    உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை, முன்னெப்போதும் இல்லாத அளவிற்குச் சரிந்திருக்கிறது. அதன் பயனை 'ஒருசிலர்' மட்டுமே அனுபவிக்க அனைத்துச் சலுகைகளையும் வழங்கி வரும் ஒன்றிய அரசிற்கு, மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போது வரும்? தேர்தல் நேரத்தில் மட்டும்தான் மக்கள் மீது கரிசனம் வருமா?

    ஒன்றிய அரசு இவ்வாறிருக்க, கடந்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக, 'கேஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் கொடுப்போம்' என்று சொல்லி ஆட்சிக்கு வந்த திமுக அரசும், நான்கு ஆண்டுகளைக் கடந்தும் எதுவும் செய்யவில்லை. தேர்தல் வெற்றிக்காக, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து, பின்னர் மக்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் ஏமாற்றி வருகிறது. இந்தப் போக்கைத் திமுக அரசு எப்போது நிறுத்தும்? என்று மக்கள் கேட்கிறார்கள்.

    பொய் வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றி, வாட்டி வதைப்பதில் ஒன்றிய பாஜக அரசும் திமுக அரசும் இணைந்த கைகளாகவும், இரட்டைக் குழல் துப்பாக்கியாகவும் செயல்படுகின்றன.

    சாமானிய மக்களைப் பெரிதும் பாதிக்கும் சமையல் எரிவாயு விலையேற்றத்தை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இந்த விஷயத்தில் ஒன்றிய அரசு மீது பழிபோட்டுவிட்டுத் தப்பித்து விடலாம் என்ற நினைப்பில் இருக்கும் திமுக அரசு, இந்த நேரத்திலாவது மனசாட்சிப்படி, தேர்தல் அறிக்கையில் அறிவித்த சமையல் எரிவாயு மானிய வாக்குறுதியை உடனே நிறைவேற்ற வேண்டும்.

    மீண்டும் மீண்டும் பொய் சொல்லி, ஏமாற்றும் வழக்கத்துடன் செயல்படும் ஒன்றிய பாஜக அரசு மற்றும் திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக, மக்கள் போராட்டத்தின் எதிர்வினை மிகத் தீவிரமாக இருக்கும். மக்களோடு தமிழக வெற்றிக் கழகம் களத்தில் நிற்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.



    • எருமை மாடுகள் ஒரே நேரத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றன.
    • ரெயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

    ஜோலார்பேட்டை:

    ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் நள்ளிரவு சென்னையில் இருந்து ஈரோடு நோக்கி புறப்பட்டது.

    ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ரெயில் நிலையத்திற்கு இன்று அதிகாலை 2.28 மணியளவில் வந்தது. பயணிகள் இறங்கிய பின்பு மீண்டும் சிறிது நேரத்தில் ஈரோடு நோக்கி ரெயில் புறப்பட்டு சென்றது.

    திருப்பத்தூர்-மவுகாரம்பட்டி ரெயில் நிலையத்திற்கு இடையே சு.பள்ளிப்பட்டு என்ற இடத்தில் 6 எருமை மாடுகள் ஒரே நேரத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றன.

    அப்போது ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் எருமை மாடுகள் மீது மோதியது. இதில் எருமை மாடுகள் அடிபட்டு இறந்தன. எருமை மாடுகள் உடல் சக்கரத்தில் சிக்கிக்கொண்ட தால் உடனடியாக நடுவழியில் ரெயில் நிறுத்தப்பட்டது.

    தகவல் அறிந்த திருப்பத்தூர் ரெயில் நிலைய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரெயிலில் சிக்கிய 6 எருமை மாடுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் சுமார் 2 மணி நேரம் தாமதமாக 4.55 மணியளவில் ஈரோடு நோக்கி புறப்பட்டு சென்றது.

    இதன் காரணமாக ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் ரெயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம், ஆலப்புழை வரை செல்லும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் கேரள மாநிலம் செல்லும் திருவனந்தபுரம் சபரி எக்ஸ்பிரஸ் ஆகிய 2 ரெயில்களும் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் சுமார் அரை மணி நேரம் நிறுத்தப்பட்டன.

    அதன்பிறகு ரெயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் ரெயில் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். 

    ×