என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தராகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- தமிழக கவர்னரின் செயல்பாடுகள் நேர்மையானதாக இல்லை என்று கருதுகிறோம்.
- கவர்னர் அரசியல் சட்டம் 200-வது பிரிவின் படி செயல்படுவது நல்லது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
சென்னை:
மசோதாக்களை கிடப்பில் போட்ட விவகாரம் தொடர்பாக கவர்னருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பிறகு இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு பல்வேறு அதிரடியான உத்தரவுகளை கொண்டதாக இருந்தது. தமிழக அரசு கோரிக்கைக்கு முழுமையான வெற்றி தரும் வகையில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு அமைந்துள்ளது. அந்த தீர்ப்பு விவரம் வருமாறு:-
தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களை கிடப்பில் போடுவதற்கு கவர்னருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? கவர்னர் ஒரு தடவை திருப்பி அனுப்பிய மசோதாக்களை தமிழக சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய பிறகு அதன் மீது கவர்னர் 3 விதமான முடிவுகளைதான் எடுக்க முடியும்.
ஒன்று மசோதாவை ஏற்கலாம். இரண்டு மசோதாக்களை நிராகரிக்கலாம். மூன்றாவது மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கலாம். மசோதாக்களில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் மட்டுமே ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க முடியும்.
ஆனால் தமிழக கவர்னர் 2 மசோதாக்களை மட்டும் ஜனாதிபதிக்கு அனுப்பி இருக்கிறார். சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றிய பிறகு அந்த மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது தவறானதாகும். 10 மசோதாக்களை கிடப்பில் போட்டது சட்ட விரோதமானது. ஒருதலைபட்சமானது.
இது ஒரு பக்கமாக தள்ளப்பட வேண்டும். 10 மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்து இருப்பதற்கு கவர்னருக்கு வீட்டோ போன்ற அதிகாரம் ஏதேனும் இருக்கிறதா? கவர்னருக்கு என்று எந்த அதிகாரமும் கிடையாது.
10 மசோதாக்களை நிலுவையில் வைத்துள்ள விவகாரத்தில் தமிழக கவர்னரின் செயல்பாடுகள் நேர்மையானதாக இல்லை என்று கருதுகிறோம். எந்த ஒரு மசோதாவையும் குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு நிலுவையில் வைத்திருக்க இயலாது.
கவர்னர் அந்த மசோதாக்களை உடனடியாக ஏற்றுக்கொண்டு இருக்க வேண்டும். அதாவது மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஒரு மாதத்துக்குள் கவர்னர் தனது முடிவை தெரிவித்து இருக்க வேண்டும். நிலுவையில் வைத்து இருந்ததை எப்படி ஏற்க இயலும்.
தமிழக கவர்னர் மாநில அரசின் உதவி பெற்றே செயல்பட வேண்டும். மாநில அரசின் ஆலோசனை படி செயல்படுவதுதான் சரியானதாகும். சட்ட ரீதிபடி கவர்னர் தன்னிச்சையாக செயல்பட முடியாது.
தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு கவர்னர் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். எந்தவிதத்திலும் முட்டுக்கட்டையாக இருக்க கூடாது. கவர்னர் அரசியல் சட்டம் 200-வது பிரிவின் படி செயல்படுவது நல்லது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் நீதிபதிகள் ஒப்புதல் வழங்கினர். இதனால் ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பிய பல்கலைக்கழகங்கள் சட்டத்திருத்த மசோதா, டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்களும் சட்டமாக நடைமுறைக்கு வந்துவிட்டன.
இதனை தொடர்ந்து, உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தமிழ்நாட்டு அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தராகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாடு பல்கலை., சட்டத்திருந்த (2-வது) மசோதா உட்பட 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்திருப்பதால் கவர்னருக்கு பதிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனி பல்கலைக்கழகங்களின் வேந்தராகிறார்.






